இறைவனுக்கு நன்றி சொல்லும் திருவிழா! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

ஜப்பானுக்கு ஒவ்வொரு முறையும் போகும் பொழுது, அந்த மக்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் இறைநம்பிக்கை, நம் கலாசாரத்தோடு ஒத்துப்போவதை பலமுறை கவனித்து வியந்திருக்கிறேன்.
இறைவனுக்கு நன்றி சொல்லும் திருவிழா! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் 57
"ஜப்பான் என்னை மயக்கும் இடமாக
இருக்கிறது. ஜப்பானியர்களுடைய
கலாசாரம் என்னை வசீகரிக்கிறது:
உணவு, உடை, நடத்தை, பாரம்பரியம். இங்கே என்னுடைய பயண அனுபவங்களே என்னை மிகவும் கவர்ந்தது.
- ரோமன் கோப்போலா
(Roman Coppola)

ஜப்பானுக்கு ஒவ்வொரு முறையும் போகும் பொழுது, அந்த மக்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் இறைநம்பிக்கை, நம் கலாசாரத்தோடு ஒத்துப்போவதை பலமுறை கவனித்து வியந்திருக்கிறேன். ஷின்டோ (Shinto) என்கின்ற ஜப்பானியர்களின் மதத்தின் அடிப்படையில், மரம், பாறைகள், ஆறுகள், மிருகங்கள், இடங்கள் மேலும் மனிதர்களை தெய்வமாக வணங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நாமும் மலைகள், மரங்கள், மிருகங்களை வணங்குகிறோம். மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்று வாழ்கின்றவனையும், மறைந்தவனையும் தெய்வமாக நினைத்து சிலைகளாக்கி, கோயில்கள் கட்டி கும்பிடுகிறோம்.
ஏன் இவற்றை எல்லாம் இங்கே சொல்கின்றேன் என்றால், அன்று கராட்சு நகரத்தின் வீதிகளில், ஜப்பானிய மக்கள், பக்தியோடு இழுத்து வந்த மிதவைகளைக் கண்டு, மலைத்தேன். கராட்சு குன்சி திருவிழாவின்போது, கராட்சு கோயிலுக்குக் காணிக்கைகளாகக் கொடுத்த பதினான்கு மிதவைகளைத் தாம்புக் கயிறுகள் கொண்டு கட்டி, முதியவர்கள், இளைஞர்கள், நடுவயதினர், நான்கு வயதிலிருந்து பத்து வயதுக்குள் உள்ள பெண் மற்றும் ஆண் பிள்ளைகள், ஜன சமுத்திரத்தின் நடுவே இழுத்து வந்தபொழுது, எனக்கு நம்நாட்டில் தேர்த்திருநாளில் பக்தர்களால் இழுத்து வரப்படும் தேர்களின் ஞாபகமே வந்தது.
இதைத்தவிர, உற்சவத்தின்பொழுது வாகனங்களில், உற்சவரை எழுந்தருளச் செய்து வீதி உலா வரும்பொழுது மேள தாளத்துடன் தூக்கி வருவதுபோலவே இங்கும் செய்கிறார்கள். ஒரே வித்தியாசம், இங்கே வாகனங்கள் அதாவது மிதவைகள் மட்டுமே பயபக்தியோடு இழுத்து வரப்படுகின்றன.
400 வருடங்களாக நடைபெற்று வரும் இந்தக் கராட்சு குன்சி திருவிழா இலையுதிர் காலம் தொடங்குவதற்குச் சற்று முன்னால் பெரும் அளவில் அறுவடை செய்யப்பட்ட தானியங்களுக்கும், இதனைச் சாத்தியமாக்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது.
காந்தத்தால், இழுக்கப்படும் இரும்பினைப்போல, இந்த மிதவைகள் பின்னால் ஓடி, ஒரு சந்தில், அணிவகுத்து வரும் ஹிக்கியாமா (Hikiyama) அதாவது மிதவைகளை, (இப்படித்தான் இவைகளை ஜப்பானியர்கள் அழைக்கின்றனர்) பார்க்கச் செüகரியமாக நின்றுகொண்டோம்.
ஐந்து நிமிட இடைவெளிக்கு நடுவில், ஒவ்வொரு மிதவைகளாக வந்தன. ஏழு மீட்டர்கள் உயர்ந்து, மரத்தினால் செய்யப்பட்டு, கண்களைக் கவரும் வகையில் வேலைப்பாடுகளை தன்னகத்தே கொண்டு, லேக்கரினால் சாயம் பூசப்பட்டு, தங்கம், வெள்ளித் தகடுகளினால் அலங்காரம் செய்யப்பட்ட அந்த மிதவைகளின் அழகில் மதிமயங்கி நின்றோம்.
பறக்கும் டிராகன், சிங்கம், சாமுராய் என்று அழைக்கப்படும் போர்வீரன், அவன் அணியும் ஹெல்மெட், ஆமையும் மீனவன் டாரோவும், பீனிக்ஸ் படகு, பந்தின் மீது பாலன்ஸ் செய்யும் லையன் என்று நீளும் பட்டியலையும், அந்தந்த மிதவைகளுக்கு ஏற்ப அந்த உருவங்களைத் தாங்கிய டீஷர்ட்டுகளைஅணிந்துகொண்டு, "ஓய்சா' (Yoisa) என்று ஓங்கிக் குரல் கொடுத்துக் கொண்டு, மிதவைகளை இழுத்துச் சென்றனர்.
ஏன் இப்படி ஒவ்வொருவரும் ஓய்சா என்று சொல்லுகின்றனர் என்று எங்களுக்கு விளங்கவில்லை. அங்கிருந்து நகர்ந்து மற்றொரு சந்துக்குச் சென்று ஒரு கடையின் முன்னால் நின்று கொண்டோம். கையில் பிடித்திருந்த காமிராவினால் என் கணவர் புகைப்படங்களை எடுத்துத் தள்ள, நான் அந்த நிகழ்ச்சிகளை வீடியோவில் பதிவு செய்தேன்.
நாங்கள் வெளியே நின்றிருந்த கடையில் இருந்து ஒரு மனிதர் வெளியே வந்தார். அழகான ஆங்கிலத்தில் எங்களைக் கடையினுள் வருமாறு அழைத்தார். நாங்கள் தயங்கினோம். அந்தச் சமயத்தில் அழகிய பெண்மணி ஒருவரும் வெளியே வர, அவளைத் தன் மனைவி என்று அறிமுகப்படுத்தினார். அர்ஜெண்டினாவைச் சேர்ந்த அந்தப் பெண்ணை 10 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டாராம்.
இந்தக் குன்சி பண்டிகையின்போது, நண்பர்கள், உறவினார்கள், அயல்நாட்டைச் சேர்ந்தவர்கள், உல்லாசப் பயணிகள் என்ற வித்தியாசம் பாராமல் அனைவரையும் சாப்பிடச் செய்து, நடனமாடி, பீர் மற்றும் (Shochu)'சோசு' என்பது அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் மதுவை அருந்தச் செய்து மகிழ்விப்பார்களாம்.
அவர்களுடைய வற்புறுத்தலுக்காக உள்ளே சென்று சிறிது பழரசத்தைக் குடித்தோம், மிகப்பெரிய ஆப்பிள் ஒன்றை அந்தப் பெண் என் கைகளில் திணித்து வழிஅனுப்பி வைத்தாள்.
திருவண்ணாமலை தீபம் மற்றும் அறுபத்து மூவர் திருவிழாக்களின்போது தண்ணீர்ப்பந்தல் அமைத்து, சுக்குக்காப்பி, நீர்மோர் மற்றும் உணவு வகைகளைப் பரிமாறும் நம்ம ஊர் பழக்கம் போலவே இருந்தது.
நவம்பர் மாதம் இரண்டாம் தேதி தொடங்கும் இந்தத் திருவிழாவின்பொழுது, இரவில் இதே மிதவைகள், பலவிதமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வீதிஉலா வருமாம். மூன்றாம் தேதி, மிக முக்கியமான நிகழ்வுகளாக இந்த மிதவைகளை இழுத்துச் சென்று நிசிநோஹாமா (Nishinohama) என்று அழைக்கப்படுகின்ற பீச் அதாவது கடற்கரை மண்ணில் வரிசையாக நிற்க வைக்கிறார்கள். சில சடங்குகளுக்குப் பிறகு கைநிறைய சாக்லேட்டுகளையும், உலர்ந்த பழங்களையும் மக்கள் மீது வீச, அதை அவர்கள் காட்ச் பிடித்து பெருமகிழ்ச்சி அடைகிறார்கள்.
நவம்பர் நான்காம் தேதி மீண்டும் இந்த மிதவைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுப் பிறகு கராட்சு கோயிலுக்கு அருகே இருக்கும் பெரிய கண்காட்சி ஹாலில், வரிசையாக நிற்க வைக்கப்பட்டு, அடுத்த வருடம் கராட்சு திருவிழா வரும் வரையில் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.
"ஓய்சா', ஓங்கிக் குரல் கொடுத்து கஷ்டப்பட்டு மிதவைகளை இழுத்துச் சென்று மணலில் நிற்கவைத்தது, எனக்கு சென்னை மெரீனா பீச்சில் மாசிமகம் அன்று பல கோயில்களில் இருந்து உற்சவர்களைச் சுமந்து வந்து நாம் நிற்க வைப்பதை நினைவூட்டியது. அறுபத்துமூவர் விழாவின்போது, சாக்லெட்டுகளையும், பிஸ்கெட் பாக்கெட்டுகளையும் வீசுவது என்பது எல்லாம் இந்தக் கராட்சு குன்சி மிதவைகள் திருவிழாவோடு ஒத்துப்போகிறது.
"ஓய்சா' என்பதின் அர்த்தத்தையும் தெரிந்துகொண்டோம், கனமான பொருட்களை இழுக்கும்பொழுது நாம் ஐலேசா என்கிறோம் அல்லவா அப்படித்தான் ஓய்சாவும் என்று அறிந்து ஆச்சரியத்தில் மூழ்கினோம்.
மிதவைகளைச் சுமக்கும் பலகைகளில் டிரம்களை வாசித்துக் கொண்டும், புல்லாங்குழல்களை ஊதிக்கொண்டும் வாத்தியக்காரர்கள் அமர்ந்திருக்க, நம் ஊரில் பூசாரிகள், சுவாமியுடன் நின்றுகொண்டோ, உட்கார்ந்துகொண்டோ வருவார்கள், ஆனால் அங்கு ஒரு மிதவைக்கும், மற்றொரு மிதவைக்கும் நடுவில் தனியாக அழகிய ஊர்திகளில், குருமார்கள், சின்முத்திரையுடனும், புன்முறுவல் பூத்த முகத்துடனும் வலம் வந்தனர். மொத்தத்தில் கராட்சு குன்சி மிதவைகள் திருவிழா எங்களை நம் நாட்டு திருவிழாக்களோடு ஒப்பிட்டு நோக்கி உள்ளம் பூரிக்க வைத்து, ஆனந்தத்தில் மிதக்கவிட்டது.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com