கலைஞன் மாசிலாமணி, ஏ.நடராஜன் - சா. கந்தசாமி

சென்னை பாண்டிபஜாரில் "கலைஞன் பதிப்பகம்' இருந்தது. அதனை ஜி.மாசிலாமணி என்பவர் நடத்தி வந்தார். நல்ல படிப்பாளி.
 கலைஞன் மாசிலாமணி, ஏ.நடராஜன் - சா. கந்தசாமி

என்றும் இருப்பவர்கள்! 5
சென்னை பாண்டிபஜாரில் "கலைஞன் பதிப்பகம்' இருந்தது. அதனை ஜி.மாசிலாமணி என்பவர் நடத்தி வந்தார். நல்ல படிப்பாளி. ரசனை கொண்டவர். தரமான புத்தகங்களை வெளியிட்டு வந்தார். ஏ.கே. செட்டியார், ஆர். சண்முக சுந்தரம். க.நா. சுப்பிரமணியம், லா.ச. ராமாமிர்தம், திருலோக சீதாராம், எம்.வி. வெங்கட்ராம் என்று பல எழுத்தாளர்கள் கலைஞன் பதிப்பகத்திற்கு வந்து பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் எல்லோரும் ஒரே நேரத்தில் வர மாட்டார்கள். எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ அப்போது வந்து இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் போல பேசிக்கொண்டு இருப்பார்கள். எதிரே இருக்கும் கீதா ஓட்டலில் காபி குடித்துவிட்டு சிலர் செல்வார்கள். பலர் மறுபடியும் கலைஞன் அலுவலகத்திற்கு வந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.
 நானும் அவ்வப்போது கலைஞன் அலுவலகத்திற்குச் செல்வேன். திருலோக சீதாராம் இருந்தால் பாரதியின் பாட்டுக்கள் பாடியபடி இருப்பார். அவர் பாரதி பித்தர். நல்ல குரல் வளம் கொண்டவர். அவர் இசையில் சாகித்தியம் இணைந்து போய்விடும். ஒரு பாட்டைப் பாடிவிட்டு இன்னொரு பாட்டைத் தொடர்ந்து பாட மாட்டார். "செந்தமிழ் நாடெனும் போதினிலே-' என்ற பாட்டைப் பாடினால் அது பற்றி வியாக்கியானம் செய்வார். பாரதிப்பாடல்கள் முழுவதையும் மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டிருந்தார்.
 நான் எழுத்தாளர்கள் பேச்சைக் கேட்கவும், பழைய எழுத்தாளர்கள் பற்றித் தெரிந்து கொள்ளவும், இலக்கிய அரசியல், விமர்சனம் கேட்கவும் அடிக்கடி கலைஞன் பதிப்பகம் சென்று கொண்டிருந்தேன். "சாயாவனம்' வெளிவந்திருந்தது. சில எழுத்தாளர்கள் அதனைப் பார்த்திருந்தார்கள். ஆனால் படித்ததாக யாரும் சொல்லவில்லை.

 கலைஞன் மாசிலாமணி "சாயாவனம்' நாவலை படித்திருந்தார். தனக்குப் பிடித்திருக்கிறது என்றார். பிறகு, "கலைஞன் பதிப்பகத்திற்கு இருபத்தைந்தாவது ஆண்டு விழா வருகிறது. இருபத்தைந்து புதுப் புத்தகங்களை வெளியிடலாம் என்று இருக்கிறேன். ஒரு நாவல் எழுதிக் கொடுங்கள்'' என்றார். என்னிடம் நாவல் கேட்ட முதல் பதிப்பாளர் அவர்தான். பத்திரிகைகள், பதிப்பகங்கள் கேட்காமலேயே சிறுகதைகள், நாவல்கள் எழுதும் ஆள் நான். ஆகையால் எழுதிக் கொண்டிருந்த "அவன் ஆனது' என்ற நாவல் கையெழுத்துப் பிரதியை அவரிடம் கொடுத்தேன். கே.எம். ஆதிமூலம், முகப்போவியம் வரைந்தார். தமிழ் வட்டெழுத்துப் பாணியைப் பின்பற்றி "அவன் ஆனது' என்று எழுதி இருந்தார். அது தமிழ்ப் புத்தகங்களின் முகப்பை மாற்றியது போல் இருந்தது. "அவன் ஆனது' எனது இரண்டாவது நாவல். அது 1981-ஆம் ஆண்டில் வெளிவந்தது. க.நா.சுப்பிரமணியம் "அவன் ஆனது' நாவலுக்கு புதுதில்லியில் இருந்து வெளிவரும் "ஃபைனான்ஸியல் எக்ஸ்பிரஸ்' என்ற ஆங்கில தினசரியில் ஒரு விமர்சனம் எழுதியிருந்தார். என் எழுத்துகளுக்கு அவர் எழுதிய முதல் விமர்சனம் அது. அப்பொழுது அவர் புதுதில்லியில் வாழ்ந்தார்.
 என் மூன்றாவது நாவல் "தொலைந்து போனவர்கள்'. சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் அமர்ந்து எழுதினேன். முதல் அத்தியாயத்தை ஏழெட்டு முறைக்கு மேல் மறுபடியும் மறுபடியும் எழுதினேன். பெரிய மாற்றம் இல்லை. ஆனால் முதல் வரியில் இருந்து கடைசி வரி வரையில் இழையறாமல் வர வேண்டும் என்பதற்காகத்தான்.
 தொலைந்து போனவர்கள் நாவலை எழுதி முடித்ததும் கலைஞன் மாசிலாமணியிடம், " புதிய நாவல் இருக்கிறது. பெயர் தொலைந்து போனவர்கள்''என்றேன்.
 "நாவலைக் கொடுங்கள். பிரசுரித்துவிடலாம்'' என்றார்.
 நான் "தொலைந்து போனவர்கள்' நாவல் கையெழுத்து பிரதியை கலைஞன் மாசிலாமணியிடம் கொடுத்து விட்டு மைசூருக்குப் போய்விட்டேன். மூன்று மாதங்கள் கழித்து கலைஞன் பதிப்பகம் சென்றேன். அது காலைப் பொழுது. நாங்கள் மைசூர் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
 முருகன் என்ற பெயர் கொண்ட புத்தகம் அச்சிட்டுக் கொடுக்கிறவர் உள்ளே வந்தார். பையில் இருந்து "தொலைந்து போனவர்கள்' அச்சிட்டப் பிரதி ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.
 மாசிலாமணி அதனை வாங்கிக் கொண்டு, புரட்டிப் பார்த்துக்கொண்டே இருந்தார். முருகன் தொண்டையைக் கணைத்துக் கொண்டார்.
 "சார். இது நாவலே இல்லை! புத்தகமாகப் போட்டால் யாரும் படிக்க மாட்டார்கள். கதையில் ஒன்றுமே இல்லை. நான் நூறு புத்தகங்களுக்கு மேல் அச்சிட்டு கொடுத்து இருக்கிறேன். எனக்குக் கதை என்றால் என்னவென்று கொஞ்சம் தெரியும். அதனால் சொல்லுறேன். இந்த மாதிரி புத்தகத்தை எல்லாம் அச்சில் போட்டு நஷ்டமடையக் கூடாது சார்'' என்று சொல்லிக் கொண்டே போனார்.
 கலைஞன் மாசிலாமணி குறுக்கிட்டார். "முருகன் இலக்கிய அபிப்ராயம் சொல்லுறது எல்லாம் உங்கள் வேலையில்லை. அச்சிட்டுக் கொடுக்கறது மட்டுந்தான் செய்யணும். அதை விட்டு விட்டு அதிகப்பிரசங்கித்தனமா அபிப்பிராயம் சொல்லக்கூடாது'' என்றார்.
 "உங்கள் நல்லதுக்குத்தான் சொல்லுறேன். நீங்கள் நல்லா இருந்தா தானே சார், எங்களுக்கு அச்சிட இரண்டு புத்தகங்கள் வரும்''
 "அதெல்லாம் சரி தான் நீ கிளம்பு'' என்று ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தார். அப்புறம் என்னைக் காட்டி "இவர் தான் ஆசிரியர்'' என்றார். அவர் மிரண்டு போய்விட்டார். "நான் தப்பா சொல்லி இருந்தால் மன்னித்துவிடுங்கள் சார்'' என்றபடி விரைவாக வெளியில் போய்விட்டார்.
 அது எனக்கு நல்ல விமர்சனமாகவே பட்டது. படிக்கிறவர்கள் ஒவ்வொருவரும் ஒரு படைப்புப் பற்றிச் சொல்ல அதிகாரம் கொண்டவர்கள் தான். நல்ல அபிப்பிராயம் சொல்லும் போதோ-மாறுபட்ட அபிப்பிராயம் சொல்லப்படும் போதோ- எழுதப்படும் போதோ எழுத்தாளர் வருத்தமடையக்கூடாது. எழுதி முடிக்கப்பட்டது. பொதுவில் இருப்பது. அது பற்றி என்ன சொன்னாலும் கேட்டுக்கொண்டு தான் இருக்க வேண்டும. அதற்கு விளக்கமோ, மறுப்போ சொல்லிக் கொண்டு இருக்கக்கூடாது என்ற இலக்கிய விதி நினைவிற்கு வந்தது.
 தொலைந்து போனவர்களுக்கு மதிப்புரைகள் ஒன்று கூட வெளிவரவில்லை. நாவலைப் படித்த சில நண்பர்கள் தங்களின் பால்ய காலத்தை நினைவு கூற வைக்கிறது என்றார்கள்.
 சென்னை வானொலி நிலைய உதவி இயக்குநராக இருந்த ஏ.நடராஜன் "தொலைந்து போனவர்கள்' நாவலைப் படித்துவிட்டு பாராட்டினார். "என் சொந்த வாழ்க்கை நாவலில் பல இடங்களில் இடம் பெற்று உள்ளது. நாடகமாக எழுதி கொடுங்கள். ஒலி பரப்பலாம். நாடகத் தயாரிப்பாளர் புனிதவதி இளங்கோவன். அனுபவசாலி. நன்கு தயாரிப்பார்'' என்றார்.
 ஒரு மாத காலத்தில் "தொலைந்து போனவர்கள்' நாவலை வானொலி நாடகமாக எழுதிக் கொண்டு போய் கொடுத்தேன். இரண்டு மாதத்திற்குப் பிறகு ஒலிபரப்பானது. நானும், என் மனைவி ரோகிணியும் கேட்டோம். ஒலியிலேயே நாவலின் உணர்ச்சியைக் கொண்டு தயாரிக்கப்பட்டது தெரிந்தது.
 பதினைந்து நாட்கள் கழித்துச் சென்னை வானொலி அலுவலகத்திற்கு ஏ.நடராஜனைப் பார்க்க மாலைப் பொழுதில் சென்றேன். அவர் நாடகத் தயாரிப்பாளர் புனிதவதி இளங்கோவனைப் பார்த்து வர அனுப்பி வைத்தார். அவர் அறைக்குச் சென்றேன். என்னவோ எழுதிக் கொண்டிருந்தவர், என்னை ஏறெடுத்துப் பார்த்து, "நீங்கள் யார்? என்ன வேண்டும்?'' என்று கேட்டார்.
 "தொலைந்து போனவர்கள் ஆசிரியர் கந்தசாமி'' என்றேன்.
 "உட்காருங்கள்'' என்று நாற்காலியைக் காட்டினார். உட்கார்ந்தேன்.
 "உங்களை ஒரு வாரமாகவே தேடிக் கொண்டிருக்கிறேன். தொலைந்து போனவர்கள் நாடக ஆக்கத்தைப் படித்தேன். அதில் ஒலிபரப்புக்கான எந்த அம்சமும் இல்லை. திருப்புமுனை கிடையாது. கவர்ச்சிகரமான வசனங்கள் இல்லை. கதையும் இல்லை. எனவே உதவி இயக்குநர் ஏ.நடராஜனிடம் சொன்னேன். அவர் "அப்படியா?'' என்று கேட்டுவிட்டு கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தார். சாதாரணமாக ஒரு நாடகம் வானொலி ஒலிபரப்புக்கு ஏற்றதாக இல்லை என்றால் அவர் சரி. வேறு நாடகத்தைப் போடுங்கள் என்பார். ஆனால் தொலைந்து போனவர்கள் விஷயத்தில் கொஞ்சம் யோசித்தார். அது ஆச்சரியமாக இருந்தது.
 பிறகு சொன்னார். "உங்கள் முடிவு சரிதான். ஆனால் நான் உதவி இயக்குநர். என் பரிந்துரையின் மேல் நாடகம் ஒலிபரப்பப்படுகிறது என்று ஃபைலில் எழுதி விடுங்கள். எல்லாவற்றுக்கும் நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன்'' என்றார்.
 ஒரு நாளும் அவர் இப்படிச் சொன்னது இல்லை. எனவே, "நீங்கள் சொன்னால் சரியாக இருக்கும். நான் தயாரித்து ஒலி பரப்பி விடுகிறேன்'' என்றேன்.
 "தொலைந்து போனவர்கள்' நாடகத்தில் நமக்குப் பிடிபடாதது என்னவோ இருக்கிறது என்றுபட்டது. நல்ல குரல்
 வளம் கொண்ட வானொலி நடிகர்களைக் கொண்டு நாடகத்தைத் தயாரித்து ஒலி பரப்பினோம்.
 நாடகம் ஒலி பரப்பானதும் பலர் டெலிபோன் செய்து பாராட்டினார்கள். சிலர் கடிதம் மூலம் பாராட்டுத் தெரிவித்தார்கள். நாடகத்தில் முக்கியமான கதாபாத்திரங்கள் எல்லாம் ஆண்கள். ஆண் மக்களின் பள்ளிப் பருவ வாழ்க்கையைச் சொல்லியது. ஆனால் ஒரு மாணவி எழுதியிருந்தார், "எங்கள் பால்ய வாழ்கையும் பின்னால் இப்படித்தான் போகப் போகிறது என்று சொல்வது போல் இருந்தது என்று. உங்களுக்கு என் பாராட்டுகள். இதைச் சொல்லத்தான் உங்களைத் தேடிக் கொண்டே இருந்தேன். உதவி இயக்குநரிடமும் சொல்லி வைத்திருந்தேன்'' என்றார்.
 நான் அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு நடராஜன் அறைக்கு வந்தேன். அவர் உடனே என்னைக் காசோலை வாங்கிக் கொள்வதற்கு அனுப்பி வைத்தார்.
 ஏ.நடராஜன், சென்னை தூர்தர்ஷன் இயக்குநராக இருந்தார். அகில இந்திய தூர்தர்ஷன் டைரக்டர் ஜெனரல் சென்னைக்கு, தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்கள், ஆவணப்பட இயக்குநர்களைச் சந்திக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் ஐம்பது பேர்களுக்கு மேல் கூடியிருந்தார்கள். அதில் பிரபலமானவர்கள் அதிகம். என்னைப் போன்ற சிறிய தயாரிப்பாளர்கள் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்று கொண்டிருந்தார்கள்.
 கூட்டத்தை ஒரு முறை அப்படியும், இப்படியும் பார்த்தேன். மணி பதினொன்றாகிக் கொண்டிருந்தது. இன்னும் யாரும் அழைக்கப்படவில்லை. யார் முதலில் அழைக்கப்படுவார்கள் என்பதும் தெரியவில்லை. ஆனால் எல்லோரையும் பார்க்க முடியாது என்றுபட்டது. பார்க்க முடியாமல் போகும் தயாரிப்பாளர்களில் நானும் ஒருவனாக இருப்பேன் என்று பட்டது.
 சுஜாதா முதலில் அழைக்கப்பட்டார். கூட்டம் பரபரப்பு அடைந்தது. சிலர் கையில் இருந்த ஃபைல்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்னிடம் ஃபைலில் எனது வாழ்க்கை, சாதனை பற்றிய விவரம் ஒன்றும் இல்லை. கைகளைக் கட்டியபடி நின்று கொண்டிருந்தேன்.
 ஐந்து நிமிடங்கள் சென்றது. சுஜாதா வெளியில் வந்தார். தூர்தர்ஷன் இயக்குநரின் உதவியாளர் கூட்டத்தின் முன்னே வந்து ""சா.கந்தசாமி'' என்றழைத்தார்.
 நான் இயக்குநரின் அறைக்குள் சென்றேன்.
 (தொடரும்)
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com