நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு
By DIN | Published On : 04th March 2019 09:51 AM | Last Updated : 04th March 2019 09:51 AM | அ+அ அ- |

பல அரசியல் குழப்பங்கள், பொருளாதாரச் சிக்கல்கள், வாழ்வாதாரத்துக்கான போராட்டங்கள் எனத் தொடர்ந்து தமிழ்நாடு சிக்கல்களைச் சந்தித்து வரும் வேளையில், இதனைப் பிரதிபலிக்கும் வகையில் "நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு'" என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி நல்.செந்தில்குமார் இயக்குகிறார். அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு கிராமத்தில் இதுவரை எந்தத் தலைமுறையும் சந்திக்காத, பார்க்காத பல்வேறு மர்மமான சம்பவங்களும், பிரச்னைகளும் அடுத்தடுத்துத் தொடர்ந்து நடக்கின்றது. ஒரு கட்டத்தில் பிரச்னைகள் தீவிரமடைந்து மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டுபிடித்து தனது கிராமத்தையும், மக்களையும் கதாநாயகன் எப்படிக் காப்பாற்றினார் என்பதைச் சொல்லுவதே திரைக்கதை.
ஜி.எஸ். ஆர்ட்ஸ் சார்பில் பூக்கடை ஜி.சேட்டு தயாரிக்கிறார். கதாநாயகனாக மகேந்திரன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மியாஸ்ரீ நடித்திருக்கிறார். ஆர். சுந்தர் ராஜன், மனோஜ் குமார், "பசங்க' சிவக்குமார், அப்புக் குட்டி, தவசி, பெஞ்சமின், லொள்ளு சபா உதயா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களை ஏற்கின்றனர். ஒளிப்பதிவு- ஜெ.ஆர்.கே. படத்தொகுப்பு - கம்பம் மூர்த்தி. நடனம் - தினா, ரமேஷ், சண்டை பயிற்சி - மிரட்டல் செல்வா. பாடல்கள் - ஜீவன் மயில், மோகன்ராஜ். இசை - ஸ்ரீகாந்த் தேவா.