
"நாங்கள் "லுயிட்' நதிக்கரையின் இளைஞர்கள், எங்களுக்குச் சாவைப் பற்றிய பயம் கிடையாது.'
- ஜோதி பிரசாத் அகர்வாலா
அசாமியர்கள் மூன்று விதமான திருவிழாக்களை வருடம்தோறும் கொண்டாடி மகிழ்கிறார்கள். "பிகு' என்றால் திருவிழா என்று பொருள். நம்முடைய தமிழ்ப்புத்தாண்டு போலவே ஏப்ரல் 14 -15 தேதிகளில் போஹாக் பிகு (Bohag Bihu) என்று வசந்த காலத்தையும், அசாமிய புத்தாண்டையும் ஒரு சேர வரவேற்கும் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
ஏழு நாட்கள் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவில் முதல்நாள் "பசுபிகு' என்று பசுமாடுகளைக் குளிப்பாட்டி, அலங்கரித்து, பூஜிக்கிறார்கள். "மானவ்' (Manuh) பிகு என்று மக்கள் குளித்து , புதிய ஆடைகளை அணிந்து, புதுவருடத்தை வரவேற்கும் விதமாக பலவிதமான பாடல்களைப் பாடி, நடனங்களை ஆடி மகிழ்கிறார்கள். இத்தகைய பாடல்களை பிகு பாடல்கள் என்று அழைக்கிறார்கள். பலவிதமான மிகச்சுவையான அசாமிய உணவு வகைகளை, தயாரித்து சுற்றம் மற்றும் நண்பர்களுடன் சாப்பிட்டு மகிழ்வார்கள். மூன்றாவது நாள் கோசை (Gosai) அதாவது கடவுள்களுக்கான பிகு, அன்று வீட்டில் இருக்கும் எல்லாக் கடவுள்களுக்கும், அபிஷேகம் ஆராதனை செய்து வருகின்ற புதுவருடம் மிக நல்ல முறையில் அமைய பிரார்த்தனை செய்வார்களாம்.
இதையெல்லாம் எங்களுடைய கைட் நிர்மல், சொன்னபொழுது ஆச்சரியத்தில் மூழ்கினேன்.
""நிர்மல், நானும் என் கணவரும் ஜனவரி மாதத்தில் நடைபெற இருக்கின்ற போகாலி பிகுவில் கலந்து மகிழ உங்கள் ஊருக்கு வந்திருக்கிறோம். நீங்கள் சொல்கின்ற பசுக்கான பூஜைகள், நாட்டுப்புறப் பாடல்களையும் நடனங்களையும் ஆடி மகிழ்வது, சூரிய பகவானை கும்பிட்டு, ஏகபோக விளைச்சலுக்கு நன்றி சொல்வது என்பதெல்லாம், எங்கள் ஊரில் ஜனவரியில் நடக்கும் பொங்கல் கொண்டாட்டங்களின்போதுதான் அரங்கேறும்.''
""அப்படியா மேடம், இங்கு இரண்டு மாதங்கள் கழித்து நடக்கிறது அவ்வளவுதான் வித்தியாசம் என்று சிரித்தார். நீங்கள் அடுத்தமுறை போஹாக் பிகுவையும் காண வரவேண்டும். அந்தச் சமயத்தில் பெண்களும், ஆண்களும் பலவிதமான அசாமிய ஆபரணங்களையும், உடைகளையும் அணிந்துகொண்டு, டோல் (டிரம்), தாள், எருமைமாட்டின் கொம்பு கொண்டு செய்யப்படும் பிபா என்கின்ற கருவி, டோகா, பான்ஹி என்கின்ற புல்லாங்குழல், கோகோனா, ஜீடுலி (லன்ற்ன்ப்ண்) போன்ற பாரம்பரிய அசாமிய இசைக்கருவிகளைக் கொண்டு இசைக்கப்படும், இன்னிசைக்கு ஆடும் ஆட்டத்தைக் கண்டால் மதிமயங்கி போவீர்கள்'' என்றார்.
""நிர்மல், எனக்கும் என் கணவருக்கும் கடி பிகுவைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்'' என்றேன்.
""கடி திருவிழாவின்போது கொண்டாட்டங்கள் அடக்கி வாசிக்கப்படும்'' என்று நிர்மல் சொன்னதுமே,
""ஏன்?'' என்று கூவினேன்.
""மேடம், இந்த கடி பிகு அக்டோபர் மாதத்தின் நடுவில் கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில் இங்கே வயல்களில் நெற்கதிர்கள் எல்லாம் வளர்ந்துவரும் நிலையில் இருக்கும். விவசாயிகளின் களஞ்சியங்கள் எல்லாம் காலியாகி கிடக்கும். திருஷ்டி கழிவதற்கும், பூச்சிகளின் தொல்லை இல்லாமல் பயிர்கள் செழித்து வளர்வதற்கு மூங்கில் துண்டுகளை நிலத்தில் வீசி, ரோவா-கோவா (rowa khowa) என்கின்ற மந்திரங்களை ஓதுவார்கள். களிமண்ணால் செய்யப்பட்ட சகி (Saki) என்று அழைக்கப்படுகின்ற விளக்குகளை ஏற்றி, வீட்டில் உள்ள துளசி மாடம், தோட்டம், வயல்கள் மற்றும் களஞ்சியங்களுக்கு அருகில் ஏற்றி வைப்பார்கள்.''
""கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறதே'' என்றார் என் கணவர்.
""இதுமட்டும் அல்ல, மாடுகளுக்கு அசாமியர்களின் மிகச் சுவையான உணவான பிடாவை (Pitha) தயாரித்து உண்ணத் தருவார்கள்.''
""நிர்மல் இந்த பிடா எதனால் செய்யப்படும்'' என்றேன்.
""அரிசி மாவினால் செய்யப்படும் இந்த அதிசுவையான உணவு பண்டத்தை, நீங்கள் கலந்து மகிழப்போகும் போகாலி பிகுவின்போதும் செய்து மகிழ்வார்கள். தாங்கள் அந்தப் பண்டத்தைக் கட்டாயம் சுவைக்க வேண்டும் என்றவர், மேலும் தொடர்ந்தார், இந்த கடி பிகுவின்போது உயரமான மூங்கில் கொம்புகளை நட்டு அதன் அடியிலும் விளக்குகளை ஏற்றி வைப்பார்கள்.''
""இது எதற்கு?'' என்று வியப்புடன் கேட்டேன்.
""இது, இறந்துபோன சொந்தங்களின் ஆன்மாக்களுக்கு, சொர்க்கத்துக்குப் போகும் வழியைக் காட்ட'' என்று நிர்மல் சொல்லி முடித்தார்.
அடடா, எத்தனை விதமான நம்பிக்கைகளையும், அதன் அடிப்படையில் கொண்டாடப்படும் விழாக்களையும் இந்த பூமி தன்னகத்தே கொண்டுள்ளது என்று ஆச்சரியத்தில் மூழ்கினேன்.
""மேடம்'' என்றார் நிர்மல்.
""சொல்லுங்கள்'' என்றேன்.
கண்களில் ஒளியை ஏந்தி, முகத்தில் பெருமிதம் தவழ, நிர்மல் சொன்னார்.
""அசாமியர்களின் இந்தச் செழிப்பான வாழ்விற்கும், வளத்திற்கும், காரணகர்த்தா இங்கே பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் லுயிட் நதி (Luit) தான்'' என்றதும், ""லுயிட் நதியா, அப்படியென்றால்'' என்றேன்.
பிரம்மபுத்திரா நதியைத்தான் நாங்கள் லுயிட் நதி என்கிறோம். இந்தியாவின் ஆண் பெயரைக் கொண்டு ஓடுகின்ற ஒரே நதி பிரம்மபுத்திராதான்.
""அதுசரி அதை ஏன் நீங்கள் "லுயிட்' என்று அழைக்கிறீர்கள்'' என்றேன். சாங்போ (Tsangpo) என்ற பெயரை திபெத்தில் தாங்கி அங்கே பிறந்து, பிறகு லுயிட், பிரம்மபுத்திரா என்று இந்தியாவுக்குள் பாய்ந்து, ஜமுனா என்று வங்கதேசத்தில் அழைக்கப்பட்டு முடிவில் அந்த தேசத்தில் வங்கக்கடலில் கலக்கும் இந்த நதியின் நீளம் 2,900 கி.மீ.
அம்மாடி என்று அசந்தேன். ""இப்பொழுது மணி பகல் மூன்றுதான் ஆகிறது. இங்கே கெüகாத்தியில் ஓடும் பிரம்மபுத்திரா நதியின் நடுவே (Peacock) பீகாக் தீவு என்கின்ற மிகச் சிறிய தீவு இருக்கிறது. அங்கே உமாநந்தா என்கின்ற புகழ்மிக்க சிவன் கோயில் இருக்கிறது. கோயிலுக்குச் செல்ல மோட்டார் படகைத்தான் உபயோகப்படுத்த வேண்டும். இப்பொழுதே புறப்பட்டுச் சென்றால், ஐந்து மணிக்குள் மூடிவிடும் கோயிலுக்கு ஒரு தடங்கலும் இல்லாமல் சென்று சுவாமியின் தரிசனத்தையும் பெறலாம், பிரம்மபுத்திரா நதியின் அழகிய தோற்றத்தையும் கண்டு மகிழலாம். பிறகு போகாலி பிகுக்காகவே, புற்றீசல்களாக முளைத்திருக்கும், மார்க்கெட்டுகளையும், அங்கே விற்கப்படும் பலவிதமான பலகாரங்களையும், வாங்கி, உண்டு மகிழலாம்'' என்று நிர்மல் நிறுத்த, பேஷாக என்று அவரைத் தொடர்ந்தோம்.
(தொடரும்)