Enable Javscript for better performance
என்றும் இருப்பவர்கள்! - 7: ஆர்.கே.நாராயண்- Dinamani

சுடச்சுட

  

  என்றும் இருப்பவர்கள்! - 7: ஆர்.கே.நாராயண்

  By - சா. கந்தசாமி  |   Published on : 17th March 2019 01:47 PM  |   அ+அ அ-   |    |  

  sk2

  ஆர்.கே.நாராயண்


  மைசூர் த்வன்யாலோகாவில் இலக்கியக் கருத்தரங்குகள் நடைபெறும். நான் இருந்த போது நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்கள் தாக்கம் பற்றிய கருத்தரங்கிற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன. கருத்தரங்குத் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அமெரிக்காவில் இருந்து ஏ.கே. ராமானுஜன், சிங்கப்பூரில் இருந்து எட்வின் தம்பு. இவர் சிங்கப்பூர் தமிழர். ஆனால் தமிழ் அறியாதவர். இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தின் இயக்குநர் டி.பி. பட்நாயக், கன்னட எழுத்தாளர் சதுரங்கா மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள், இலக்கியம் படிக்கிறவர்கள் என்று பலரும் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். 

  ஆர்.கே.நாராயண் வேட்டி கட்டிக் கொண்டு கையில் வெற்றிலைப் பெட்டியோடு வந்தார். ஏ..கே.ராமானுஜன் எழுந்து போய் அவரை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்தார். நான் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தேன். ஆர்.கே. நாராயண் என்பது ராசிபுரம் கிருஷ்ணசாமி ஐயர் நாராயணசாமி என்பதின் சுருக்கம். இவர் சென்னை புரசைவாக்கத்தில் பிறந்தவர். அவரின் ஒரு சகோதரர் ஆர்.கே. லட்சுமணன் பிரபலமான கார்ட்டூனிஸ்ட். "டைம்ஸ் ஆப் இந்தியா' வில் பல ஆண்டுகள் கார்ட்டூன்கள் போட்டு புகழ் பெற்றவர்.  நாராயணின் பல நாவல்களுக்கு முகப்போவியம் வரைந்துள்ளார். 

  "சுவாமியும் சிநேகிதர்களும்' என்ற ஆர்.கே. நாராயண் நாவல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு மிகவும் பாராட்டப்பட்டது. அவர் தமிழர்களின் வாழ்க்கையை ஆங்கில மொழியில் எழுதியவர். மைசூரில் பல ஆண்டுகள் வாழ்ந்த அவர் "மால்குடி' என்ற கற்பனையாக ஒரு சிறிய நகரத்தை உருவாக்கி கொண்டு அங்கு வாழும் வாழ்க்கையைச் சொல்லும் "மால்குடி நாட்கள்' என்ற நாவலை எழுதினார். பல முறைகள் நோபல் பரிசுக்கு அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

  அவர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டதும் மற்றவர்களை அமரும்படி கை காட்டினார். எல்லோரும் அடக்கமாக உட்கார்ந்து கொண்டார்கள். அவரைச் சுற்றியிருந்தவர்கள் எல்லாம் அவருக்குப் பழக்கமானவர்கள்தான். நான் தான் புதிய ஆள். அவர் என்னை நிமிர்ந்துப் பார்த்தார். மடியில் வைத்திருந்த எவர்சில்வர் வெற்றிலைப் பெட்டியைத் திறந்தார்.

  ஏ.கே.ராமானுஜன் தலையை அவர் பக்கமாக நீட்டி, ""இது கந்தசாமி. தமிழ் எழுத்தாளர். நம் சி.டி. யின் விருந்தினர்'' என்றார். 

  அவர் வெற்றிலைப் பெட்டியைத் திறந்து ஒரு வெற்றிலையை எடுத்துக் கொண்டு காம்பை கிள்ள ஆரம்பித்தார்.

  ""லட்சுமி கிருஷ்ணமூர்த்தி இவருடைய நாவல் "சாயாவனம்'  என்பதை வெளியிட்டு இருக்கிறார்'' என்றார், ஏ.கே.ராமானுஜன்.

  ""அப்படியா?''  என்று கேட்டுவிட்டு கையைப் பிடித்துக் கொண்டு நலம் விசாரித்தார். பின்னர் வெற்றிலை போட்டுக் கொண்டே ""தமிழ்ப் பத்திரிகைகள் எப்படி இருக்கின்றன. நல்ல கதைகள் எல்லாம் வெளியிடுகின்றனவா? வாசகர்களின் தரம் எப்படி இருக்கிறது'' என்று கேட்டார்.
  ""தமிழ்ப் பத்திரிகைகள் நன்றாக விற்பனையாகின்றன. அதிகமானவர்கள் படிக்கிறார்கள். ஆனால் விமர்சகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.''

  ""விமர்சனம் நல்லது தான். அது வாசகர்கள், பத்திரிகையாசிரியர்கள், எழுத்தாளர்கள் என்று எல்லோரையும் ஒரு நேர்க்கோட்டில் கொண்டு வரச் செய்யும்'' என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது சி.டி. நரசிம்மையா வந்தார்.

  ""நம் சி.டி என் பெரிய விமர்சகர். முப்பது வருடங்களுக்கு மேலாக இலக்கிய விமர்சனம் செய்து  வருகிறார். விமர்சனத்தின் பயன், பயன் இன்மை பற்றி அவர்தான் சொல்லத் தகுதியானவர்.''

  ""கருத்தரங்கம் தொடங்கப் போகிறது. உள்ளே போகலாம்'' என்றார் பேராசிரியர். எல்லோரும் எழுந்து கருத்தரங்க அறைக்குள் சென்றோம். 

  விவேகானந்தர் தெருவில் இருந்த ஆர்.கே. நாராயண் வீட்டிற்கு பேராசிரியர்அழைத்துச் சென்றார். மாடி வீடு. பால்கனியில் அமர்ந்திருந்த அவர் எங்களைப் பார்த்ததும் எழுந்து நின்று கையசைத்தார். நாங்கள் படியேறி சென்றோம். வணக்கம் தெரிவித்தோம். நாற்காலியில் அமர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தோம். அவர் வீட்டிற்கு எதிராக ஒரு பெரிய ஓட்டல் கட்டப்பட்டு வந்தது. லாரியில் மணல், சிமெண்ட், இரும்புக் கம்பிகள் என்று பலவிதமான வீடு கட்டுமானப் பொருட்களைக் கொண்டு வந்து இறக்கிக் கொண்டிருந்தார்கள். அதனால் அவர் அதிகமாகப் பாதிக்கப்பட்டவராக இருந்தார்.

  முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ் வரையில் கடிதம் எழுதி பார்த்தார். காரியம் ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் ஓட்டல் கட்டடம் வேகமாக வளர்ந்து கொண்டு இருந்தது.

  ""எங்கள் பூர்வீகம் ராசிபுரம். தாத்தா காலத்தில் சென்னைக்குக் குடி பெயர்ந்தோம். நான் புரசைவாக்கத்தில் பிறந்தேன். அப்பா மைசூருக்கு ஆசிரியர் பணி நிமித்தம் வந்தார். எங்கள் குடும்பம் மைசூருக்கு குடி பெயர்ந்து வந்தது. சகோதரர்கள் வளர்ந்து, சென்னை, மும்பை என்று பறந்து போய்விட்டார்கள். நான் மட்டும் வாழ்வதற்கும், எழுவதற்கும் ஏற்ற ஊரென மைசூரை எண்ணிக் கொண்டிருக்கிறேன். அதற்கும்  ஒரு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.'' என்று எதிரே காட்டினார்.

  தொடர்ந்து ""மக்கள் வாழ்க்கையைப் பணமும், அரசியல் அதிகாரமும் தான் தீர்மானிக்கின்றன. அந்த இரண்டிற்கும் மேல் ஒன்றுமே இல்லை. இது தோல்வியால் சொல்லப்படுவது இல்லை. யதார்த்தமாக இருக்கிறது'' என்றார்.
  ஆர்.கே. நாராயணன் ஆரம்ப காலத்தில் இருந்தே, ஆங்கில மொழியில் சிறுகதைகள் நாவல்கள் எழுதியவர். "இந்து' பத்திரிகை  அவரது  சிறுகதைகளை வெளியிட்டது. அவரின் புகழ் பெற்ற நாவலான
  "சுவாமியும் சிநேகிதர்களும்' ஆனந்த விகடனில் தொடராகப் பிரசுரிக்கப்பட்டது, மொழி பெயர்ப்பு செய்தவர் பரணீதரன்.
  அவருடனான முதல் சந்திப்பு அவ்வளவு உற்சாசமாகச் சொல்லக்கூடியதாக இல்லையென்றாலும் , பின்னர் நடந்த சந்திப்புகள் சுவாரசியமானவையாகும்.
  "குங்குமம்' பத்திரிகைக்காக அவரை மைசூரில் சந்தித்து நேர்காணல் கண்டேன். உற்சாகமாக இரண்டு மணி நேரம் பேசினார்.  

  அமெரிக்காவில் இருந்து வந்த டெலிபோனைக் கூட தவிர்த்துவிட்டார்:

  ""ஏதாவது அழைப்பாக இருக்கும். நான் வெளிநாடெல்லாம் போவது இல்லை என்று முடிவு செய்துவிட்டேன்'' என்றார்.

  அவர் "மிஸ்டர் சம்பத்' என்ற பெயரில் எழுதிய நாவல் இந்தியில் ஜெமினி எஸ்.எஸ். வாசனால் "மிஸ். மாலிக்' என்று சினிமா படமாக எடுக்கப்பட்டது. அதே ஜெமினி வாசானால் தமிழில் "முன்று பிள்ளைகள்' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது.  அதன்  திரைக்கதை வசனத்தை ஆர்.கே. நாராயண் எழுதினார்.

  நடிகர் தேவ் ஆனந்த் "கெய்டு' என்ற நாவலைப் படமாக எடுத்தார். அது அவருக்கு நிறைவே அளிக்காத  ஓரு சினிமா படம். ""சினிமாகாரர்களுக்குக் கதைப் பற்றிய புரிதலே இல்லை'' என்றார். படைப்பாளி என்ற நோக்கில் அவரது அபிப்ராயமாக இருந்தாலும் ரசிக நோக்கில் சிறந்த படங்கள் வரிசையில் உள்ள படமாகும். கன்னடத்தில் "பேங்கர் மார்க்கையா' எடுக்கப்பட்டது. அதைப் பார்த்துவிட்டு ""எழுத்தாளன் நாவலை படமாகவே எடுக்க முடியாது'' என்று சொன்னார். 

  க.நா.சுப்பிரமணியம் என்னுடைய "சூரியவம்சம்' என்ற நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இருந்தார். அவர் ""உனக்குத்தான் நாராயணிடம் நல்ல பழக்கம் இருக்கிறதே. சூரியவம்சத்திற்கு ஒரு முன்னுரை கேள். அவர் எழுதி கொடுத்தால் பிரசுரம் எளிதாக இருக்கும். ஆனால் அவர் முன்னுரை எழுத மாட்டார்'' என்றும் சொன்னார். 
  அப்பொழுது  மைசூரில் இருந்தார். தமிழில் ஒரு முன்னுரைக் கேட்டு கடிதம் எழுதினேன். இருபது நாட்களுக்குப் பிறகு பதில் கடிதம் வந்தது. அதில் குறிப்பிட்டு இருந்தார்:

  ""கந்தசாமி நான் இப்பொழுது ஒரு நாவலைப் படிக்கக்கூடிய நிலையிலும், முன்னுரை எழுதக்கூடிய நிலையிலும் இல்லை. நீ புரிந்து கொள்வாய்''என்று எழுதியிருந்தார்.

  நான் அதனை க.நா.சுப்பிரமணியத்திடம் தெரிவித்தேன். 

  "கிரஹாம் கிரீன்' என்ற ஆங்கிலேய எழுத்தாளர் தான் இவர் நாவலைப் படித்துப் பிரமித்துப் போய் தன்னுடைய பதிப்பாளர்களைக் கொண்டு இங்கிலாந்தில் வெளியிட வைத்தார். இவர் ""கிரஹாம் கிரீன் இல்லை'' என்றார். 
  நான் பதிலொன்றும் சொல்லவில்லை. 

  அவர் மைசூர் வீட்டின் முன்னே பெரிய ஓட்டல் வந்துவிட்டது. எனவே விவேகானந்தா தெருவில் வாழ முடியாது என்று சென்னைக்கு வந்து எல்டாம்ஸ் சாலையில் வசித்தார். ஆனால் பெரும்பாலும் லட்சுமி கிருஷ்ணமூர்த்தியின், தியாகராய நகர், தணிகாசலம் தெரு வீட்டில் தான் இருந்தார். நான் அவரை அடிக்கடி சென்று சந்தித்தேன். அவர் என்னோடு நெருக்கமாகவே இருந்தார்.

  ஒரு நாள் ""நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள்'' என்று கேட்டார்.

  ""கையால் காமா பேனாவால் எழுதுகிறேன்'' என்றேன்.

  ""நான் கையால் எழுதியவன். கையால் எழுதினால் தான் மனம் காகிதத்தில் இறங்குவது தெரிகிறது. என் கையெழுத்து பிரதிகளுக்கு அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பெரிய ராயல்டி கிடைத்தது'' என்றார்.

  ஒரு முறை அவரது ராஜ்யசபா அனுபவங்கள் பற்றி விசாரித்தேன்.

  ""நான் எப்படி, யார் சிபாரிசால் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டேன் என்பது தெரியவில்லை. புதுதில்லிக்கும் போனதும் சிலர் பிரதமர் இந்திரா காந்தியால் நான் நியமிக்கப்பட்டதாகச் சொன்னார்கள். அவர்களே ஒரு முறை அவரைப் பார்த்து நன்றி தெரிவித்து விட்டு வாருங்கள் என்று ஆலோசனையும் கூறினார்கள். அது சரியாகவே பட்டது. பிரதமர் அலுவலகத்திற்குப் போன் செய்து நேரம் கேட்டேன். அதிகமான காலம் காக்க வைக்கவில்லை. நான்கைந்து நாட்களிலேயே சந்திக்க நேரம் கொடுத்தார்கள்.''

  ""ராஜ்யசபா நியமன உறுப்பினர்கள் பேச அதிகமாக நேரம் கொடுக்கமாட்டார்கள். அதோடு அரசாங்கத்தை எதிர்த்தும் பேசக்கூடாது. ஆதரவாக மட்டும் தான் பேச  வேண்டும். எதிர்த்து வாக்களிக்க முடியாது, என்றால் பேசாமல் இருக்க முடியவில்லை. இதையும் மீறி ஒரு தடவை மாநிலங்களவையில் "சிறுவர்களுக்கு புத்தகம் என்ற பெயரில் முதுகில் மூட்டைத்தூக்க வைக்கிறார்கள்' என்று பேசினேன்'' என்றார்.

  நான் பிரதமரின் அறைக்குள் சென்றதும், எழுந்து நின்று கரம் கூப்பி ""வாருங்கள் ஆர்.கே. என்.  நான் என் மாணவ பருவத்தில் இருந்தே உங்கள் வாசகி.  உங்கள் எல்லாப் புத்தகங்களையும் படித்திருக்கிறேன்'' என்றார். 

  நன்றி தெரிவித்துக் கொண்டேன். பொதுப்படையாக இரண்டு நிமிடங்கள் உடல் நிலையைப் பற்றி விசாரித்துக் கொண்டோம். பெரிய நாட்டின் பிரதமர் கூட அதிக நேரம் இருக்கக்கூடாது என்று எழுந்து புறப்படத் தயாரானேன்.

  ""ஆர்.கே.என் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் என்னைச் சந்திக்கலாம். பிரதமர் என்று ஒதுக்க வேண்டாம். நீங்கள் வருவதை முன்னதாகத் தெரிவித்துவிட்டால், நான் உங்களை வரவேற்க தயாராகி விடுவேன்'' என்றார்.

  ""நான் பிரதமருக்கு நன்றி தெரிவித்துவிட்டு வெளியில் வந்தேன்'' என்றார்.

  ""பின்னர் எத்தனை முறைகள் பிரதமரைச் சந்தித்தீர்கள்?'' என்று கேட்டேன்.  

  அவர் தலையசைத்தது சிரித்த படி ""ஒரு முறை கூட தனிப்பட்ட முறையில் சந்தித்தது இல்லை. ராஜ்ய சபாவில் பார்த்துக் கொள்வதோடு சரி'' என்றார்.

  ஒரு பெரிய எழுத்தாளரோடு உட்கார்ந்து அதிகநேரம் பேசிக் கொண்டிருப்பது சரியில்லை என்று பட்டது.  அவசர அவசரமாக எழுந்து அவரிடம்  விடை பெற்றுக் கொண்டு வெளியில் வந்தேன். 

  ""தமிழ் புத்தகங்கள் படிக்கிறீர்களா?'' என்று ஒரு முறை கேட்டேன்.

  சென்னைக்கு வந்த பிறகு அதிகமாகத் தமிழ்ப் படிக்கிறேன். லட்சுமி கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டு உள்ள சில புத்தகங்களைப் படித்தேன். தி.ஜானகிராமன் "அம்மா வந்தாள்"  என்னும் நாவல் படிக்க லட்சுமி சிபாரிசு செய்தார். ஆனால் எனக்குப் பிடிக்க வில்லை. ஆனால் "நடந்தாய் வாழி காவேரி' பிடித்தது.  உங்களின் "தொலைந்து போனவர்கள்'  படித்தேன். கவிச்சி நாற்றம் அடிக்கிறது. நாவல் பிடித்திருந்தது.

  தொடர்ந்து "கம்பராமாயணம்' இரண்டு மூன்று பாட்டுக்கள் படித்துவிட்டுத்தான் தூங்கப் போவது வழக்கம். அது நெடுநாள் பழக்கம். என் தாய் மாமா கலாநிலையம் சேஷாசலம் வழியாக ஏற்பட்டது. அவர் பெரிய தமிழறிஞர். புரசைவாக்கத்தில் ஹரிக்கேன் விளக்கு வைத்துக் கொண்டு தமிழ் கற்றுக் கொடுத்து வந்தார். அவரிடம் தமிழ்ப் படித்தவர் மே.வி. வேணுகோபால் பிள்ளை. பின்னர் சிறந்த புலவராகிப் பலர்க்கும் தமிழ் கற்பித்தார். நான் கூட சிறிது காலம் அவரிடம் தமிழ் கற்றேன்.

  "ஆனந்த விகடனில்'   பரணீதரன் என்ற பெயரில் எழுதிய ஸ்ரீதரின் தகப்பனார் தான் "கலா நிலையம்' சேஷாசலம். அவர் "கலா நிலையம்' என்றப்  பெயரில் ஒரு தமிழ்ப் பத்திரிகை நடத்தினார். அதனால் ""கலாநிலையம் சேஷாசலம் என்றழைக்கப்பட்டார்'' என்றார்.

  (தொடரும்)
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai