சுடச்சுட

  

  எப்போதும் எளிமையை விரும்புவார் எம்ஜிஆர்

  By - கே.பி.ராமகிருஷ்ணன்  |   Published on : 17th March 2019 01:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sk5

  எம்ஜிஆருடன் ஸ்டண்ட் குழுவினர்


  சென்ற இதழ் தொடர்ச்சி...

  பொது இடங்களில் எம்ஜிஆர் யாரையாவது அடித்துள்ளாரா?

  எம்ஜிஆர்  தேவையில்லாமல் யாரையும் பொது இடங்களில் அடித்ததில்லை. 1962-ஆம் ஆண்டு கோவையில் சாண்டோ சின்னப்பா தேவரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட பின், அடுத்துள்ள சத்திரத்தில் கட்சி சார்பில் நடைபெற்றக் கூட்டம் ஒன்றில் எம்ஜிஆர் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கூட்டத்தில் ஓர் இளைஞன்,  இளம்பெண் ஒருவரிடம் வெகுநேரம் சேட்டைகள் செய்வதைக் கண்டார்.  அந்த வாலிபரின் சேட்டை பொறுக்க முடியாமல் இருப்பினும் எம்ஜிஆரின் பேச்சுக்கு இடையூறு ஏற்படக்கூடாது எனும் எண்ணத்தில் அந்த பெண் அதைப் பொறுத்து கொண்டார்.  பேச்சுக்கு இடையே இதை கவனித்த எம்ஜிஆர், என்னிடம் அந்த நபரைப் பிடித்து வைக்கும்படி சைகை காட்டினார்.  இறுதியில் அந்த நபருக்கு ஒரு அறை கொடுத்து கண்டித்து அனுப்பினார். பிரச்னையின் வீரியம் கண்டு பொறுக்க முடியாமல் தன்னையும் மறந்து வெளியில் ஒருவரை எம்ஜிஆர் அடித்தது அதுவே முதலும் கடைசியும்.   
                      
  எம்ஜிஆரின் வாழ்வில் எப்படியான எளிமை உங்களுக்குப் பிடித்தது?

  எம்ஜிஆரே எளிமையானவர் என்பதால் அவரது அனைத்து விதமானச் செயல்பாடுகளும் எளிமை தான். குறிப்பாக எம்ஜிஆர் வீட்டில் மட்டுமின்றி வெளியில் எங்குச் சென்றாலும் உணவருந்தும் போது தரையில் அமர்ந்தே உணவு உட்கொள்வார். அவரது படுக்கையறை கட்டில் மற்றும்  வீட்டிலுள்ள பொருட்களும் மிகச் சாதாரணமானவைகளே. விலையுயர்ந்த வெளிநாட்டு ரகக்  கார்களை அவர் மீது அன்பு கொண்டிருந்த சிலர் பரிசளிக்க முன் வந்தனர்.  ஆனால் தனது அம்பாசிடர் காரிலேயே இறுதிவரைப் பயணித்தார். இப்படி எம்ஜிஆரின் எளிமையைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

  முதல்வராக எம்ஜிஆர் இருந்த போது உங்களை நெகிழச் செய்த நிகழ்வு ஏதேனும்?

  எத்தனையோ நிகழ்வுகள் உண்டு. இருப்பினும் ஓரிரு நிகழ்வுகளைக் கூறலாம். 1979-ஆம்  ஆண்டு காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சாலையிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கத்  தியாகராயநகர் அலுவலகத்திலிருந்து எம்ஜிஆர் சென்று கொண்டிருந்த போது, ராணி சீதை ஹால் அருகே சாலையின் ஓரத்தில் நடைமேடையில் ஒருவர் காக்காய் வலிப்பால் துடித்துக் கொண்டிருந்தார்.  அதனைக் கண்ட  எம்ஜிஆர் உடனே காரை நிறுத்தச் சொல்லி அவருக்கு முதலுதவி செய்து மருத்துவ மனைக்கு அனுப்பி உதவினார். 

  அடுத்து தனது கார் ஓட்டுநர் கோவிந்தன் சாலை விபத்தில் மரணமடைந்த போது அவரது இறுதி ஊர்வலத்தில் நடந்து சென்றார். அதே போல் தனது உதவியாளர் சபாபதி மரணமடைந்த போதும் அவரது இறுதி யாத்திரையில் நடந்துச் சென்றது போன்ற இன்னும் பல நிகழ்வுகள் என்னை நெகிழச் செய்துள்ளன.     இது போன்ற செயற்கரியச் செயல்களைத் தமிழகத்தில் வேறு எந்த முதல்வரும் செய்தது இல்லை.

  எம்ஜிஆர் எப்போதாவது உங்களை கோபத்துடன் கடிந்து கொண்டிருக்கிறாரா?
  என்னை மட்டுமல்ல உடனிருக்கும் எவர் ஒருவரையும் கோபத்துடன் திட்டியதில்லை. கோபம் வரும் போது மூக்கை வருடுவது அவரது இயல்பு. அதிகபட்சமாக ஏலேய்,  மண்டு எனும் சொற்களையே பயன்படுத்துவார். வயதில் மூத்தவர்கள் மட்டுமல்ல இளையவர்களிடமும் மரியாதையுடனேயே பேசுவார்.  

  ஸ்டண்ட் குழுவில் இருந்தவர்கள், எம்ஜிஆரை விட மூத்தவர்களா,  இளையவர்களா ?

  ஓரிருவரை தவிர அனைவரும் அவரை விட வயதில் இளையவர்களே. நான் அவரை விட 13 வயது இளையவன். அது போலவே ஒவ்வொருவரும்  10 வயது முதல் 15 வயது வரை இளையவர்கள். இவர்களில் புத்தூர் நடராஜன் மற்றும் ஸ்டண்ட் இயக்குனர் சியாம்சுந்தர் போன்றவர்கள் எம்ஜிஆரை விட வயதில் மூத்தவர்கள். இதில் நடராஜனை, "அண்ணன்' என்றும் சியாம்சுந்தரை "சார்' என்றுமே அழைப்பார் எம்ஜிஆர்.

  (தொடரும்)
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai