சுடச்சுட

  

  சிந்தை கவர்ந்த  திருவிழாக்கள் - 59: பிரமிக்க வைத்த பிரம்மபுத்திரா

  By - சாந்தகுமாரி சிவகடாட்சம்  |   Published on : 17th March 2019 01:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sk3


  "ஒரு மீனானது, தூண்டிலில் மாட்டிக் கொள்வது, மீனவனின் திறமையினால் அல்ல, மீனுடைய பேராசையினால்தான்.'

  - அஸாமிய பழமொழி

  என்னுடைய கண்கள் பிரம்மபுத்திரா நதியின் மீது பட்ட அந்தத் தருணத்திலே, என் உடலும், மனமும்  சிலிர்த்து அடங்கியது. இந்த நதியின் பிரம்மாண்டம் எவரையும் ஒரு கணம் தன் நிலை மறக்கச் செய்யும்.

  சான்போ, பிரம்மபுத்திரா, ஜமுனா என்று மூன்று பெயர்களைக் கொண்ட, ஒரு நதி.  திபெத், இந்தியா, வங்கதேசம் என்று மூன்று நாடுகளுக்குள் பாய்ந்து ஓடும் நதி, பெüத்த மதம், இந்து மற்றும் இஸ்லாம் என்று மூன்று மத நம்பிக்கைகளைக் கொண்ட மக்களைச் சந்திக்கும் ஒரே நதி, இந்த பிரம்மபுத்திராவாக இருக்கிறது. அதைத் தரிசிக்கும் பாக்கியத்தை எனக்குத் தந்த இறைவனை என் மனம் வணங்கி மகிழ்ந்தது.

  ""மேடம்'', என்றார் நிர்மல்.

  பிரம்மபுத்திரா நதியின் மீது, அந்த மோட்டார் படகு வேகம் எடுத்துச் சென்று கொண்டிருந்தது. நதியின் மீது பதிந்திருந்த என் கண்களை, இடம் மாற்றாமல் ""என்ன நிர்மல் சொல்லுங்க, இந்த நதியின் விஸ்தாரம் என்னை மலைக்க வைக்கிறது'' என்றேன்.

  ""மேடம், இங்கே அஸாமில் பிரம்மபுத்திரா நதி பல இடங்களில் 10 கி.மீ அகலம் கொண்டது.''

  அம்மாடி என்று அசந்தேன். ""இங்கே திப்ரூகட் என்ற இடத்தில் இந்த நதி இரண்டாகப் பிரிகிறது. இப்படிப் பிரிந்த இவ்விரு கிளைகளும் நூறு கிலோமீட்டருக்கு அப்பால் மீண்டும் ஓன்றாக இணைகின்றன. இதனால் உருவாகிய தீவு "மஜிலித்தீவு' என்று அழைக்கப்படுகிறது. இது உலகில் இரண்டாவது பெரியதாகும். இதன் குறுக்கே 4940 மீட்டர் நீளமும் 125 மீட்டர் அகலமும் உள்ள "போகிபல' பாலம் 2002-இல் திறக்கப்பட்டது. 2017-இல் பயன்பாட்டுக்கு வந்த 15 கி.மீ நீளமும், 12.9மீ அகலமும் உடைய "தோலா-சாதியா' பாலம் அஸாமையும்,  அருணாச்சல பிரதேசத்தையும் இணைக்கிறது. இது இந்தியாவின் நீளமான பாலம்'' என்றார்.

  ""நிர்மல், வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த தோலா-சாதியா பாலத்தின் மீது பயணிக்க என் மனம் துடிக்கிறது''என்றேன்.

  ""நிர்மல், அடுத்தப் பயணத்திற்கு நீங்கள் வித்திட்டு விட்டீர்கள்'' என்று என் கணவர் சொல்ல, நாங்கள் அவர் சிரிப்பில் கலந்தோம்.

  ""சார், இங்கேயும் ஒரு அசாதரணமான பாலம் இருக்கிறது. 2284 மீ நீளமுடைய "நாரநாராயண் சேது பாலம்'. இரட்டை அடுக்கு பாலமான இதன் கீழ் தளத்தில் தண்டவாளமும், மேல் தளத்தில் சாலையும் உள்ளது.  இது 1998-இல்                              திறக்கப்பட்டது.''
  ""பிரம்மபுத்திரா நதியின் ஆழம் எவ்வளவு இருக்கும் என்றேன்.''

  ""சராசரி ஆழம் 38 மீட்டர், அதிகபட்ச ஆழம் 120 மீட்டர். மழைக்காலத்தில், வெள்ள பாதிப்புக்கு ஏற்றார் போல பிரம்மபுத்திரா தன் ஓட்டத்தைத் திசை மாற்றிக் கொள்ளும். விநாடிக்கு 19,000 கனமீட்டர் நீரை வெளியேற்றும்'' என்று நிர்மல் சொல்லி முடித்தார்.

  மாலை, மணி நான்கு. சூரியனின் ஒளிர்கதிர்கள் பட்டு பிரம்மபுத்திரா, உருக்கிய வெள்ளியும், தங்கமும் கலந்த நிறத்தில் பளபளத்தது. நீர்க்காக்கைகள் தலைமுழுகிக் கொண்டிருந்தன. வீசிய தென்றல் காற்று என் கேசத்தைக் கலைத்துக் கொண்டிருந்தது. இந்தியாவின் பல பாகங்களிலிருந்து வந்திருந்த உல்லாசப் பயணிகள் அனைவருமே பேச்சடங்கி, பிரம்மபுத்திராவின் அழகில் தங்கள் சிந்தையைத் தொலைத்திருந்தனர்.

  பிரம்மாவின் ஒரு துளி இரத்தம், யாகத் தீயில் விழ, அதிலிருந்து சிவபெருமானின் விருப்பத்தினால், உருவான ருத்திரன், கருப்பு நிறத்தோடு, ஐந்து தலைகள், பத்துக் கரங்கள், பதினைந்து கண்களோடு உதித்தான். இப்படிப்பட்ட தன் மகனைக் கண்ட பிரம்மன், "புத்திரனே நீ என்னையும் வணங்கவேண்டும்" என்று சொல்ல "யாருடைய விருப்பத்தினால் உருவானேனோ அவரைத் தவிர வேறு யாரையும் வணங்க முடியாது' என்று சொல்லி சிவலோகம் சென்று விட்டானாம்.

  பிரம்மனின், மகனான பிரம்மபுத்திராவைப் பற்றி நிலவி வரும் இந்தப் புராணக் கதையைக் கேட்டவுடனேயே, சிரித்தேன்.

  உடனே நிர்மல் ""மேடம், இந்தக் கதைக்கும், பிரம்மபுத்திரா நதியின் நிலைப்பாட்டிற்கும் விஞ்ஞானப் பூர்வமான ஒற்றுமை இருக்கிறது'' என்றார்.

  ""அப்படியா'' என்றதும்,

  ""ஆமாம் மேடம். பல தலைமுறைகளாகக் கொண்டாடப்படும் இந்த நம்பிக்கைகள் எப்படி வந்திருக்கும் தெரியுமா? பிரம்மபுத்திரா நதியின் ஐந்து மூலங்கள், பத்து கிளை நதிகள், அது கடந்துவரும் திபெத்தின் 15 பனிபடர்ந்த மலைச் சிகரங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது என்று தெரிய வந்திருக்கிறது. பிரம்மாவின் புத்திரன் கருப்பு நிறம் என்பதைப் போலவே வண்டலை வாரி வரும் பிரம்மபுத்திராவும் விளங்குகிறது. சிவனைப் போலவே பொங்கிப் புறப்பட்டு வெள்ளமாக வரும்பொழுது அழிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.''

  ஆகா, புராணக் கதையும், உண்மை நிகழ்வுகளும் எப்படி கைகோர்த்துக் கொள்கின்றன என்று எண்ணி ஆச்சரியத்தில் மூழ்கினேன். உமாநந்தா கோயிலில் குடிகொண்டிருக்கும் உமாநந்தரை வணங்கித் திரும்பினோம்.

  அடுத்து நிர்மல் எங்களை அழைத்துச் சென்ற இடம், போகாலி பிகுவுக்காக ஸ்பெஷலாக முளைத்திருந்த உணவு பஜார்கள். நம்ம ஊர் கதையேதான். முன்பெல்லாம் பெண்கள் தங்கள் இல்லங்களில், தங்கள் கைகளாலேயே செய்து, உற்றாருக்கும், நண்பர்களுக்கும் பரிமாறிய அதிகச் சுவையான தின்பண்டங்கள், இன்று கடைகளில் விற்கப்படுகின்றன. வேலைக்குப் போகும் பெண்கள் அதிகரித்து விட்டதினால் வந்த நிலைமை இது என்றார்கள்.

  நியான் விளக்கு வெளிச்சத்தில் கடை விரிக்கப்பட்டிருந்த பொருட்களைப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிப் போனேன். ""இத்தனை விதமான பட்சணங்களா'' என்றதும், அங்கே பொருட்களை வாங்க வந்திருந்த எழுபது வயது, ஓய்வு பெற்ற அஸாமிய அரசு அதிகாரி சிரித்துக் கொண்டே சொன்னார்.
  ""மகளே! இது "போகாலி பிகு' இதன் அர்த்தம் என்ன தெரியுமா? "நைட் ஆஃப் ஃபீஸ்ட்' விருந்துகளின் இரவு. இந்த பட்சணக் கடைகளின் முடிவில் உள்ள மீன் கடைகளில் இருந்து சிடல் மீனை (இட்ண்ற்ஹப்) ஆயிரம் ரூபாய்களுக்கு விலைபேசி வாங்கி இருக்கிறேன். இதே மீன் நாளைக்கு பஜார்களில் ஆயிரத்து ஐநூறு ரூபாய்களுக்கு விற்பார்கள் என்றார்.''

  ""ஓ போகாலி பிகுவின்போது மீனைக் கூடச் சமைப்பீர்களா?''

  ""என் அன்னை பிரம்மபுத்திரா பலவகையான மீன்களை எங்களுக்கு வாரி, வாரி வழங்குகிறாள். ரோகு, ஹில்சா, பராலி, போகுவா, சிடல் என்று பலவகைகள். மீன்களைக் கொண்டு செய்யும் உணவு வகைகள் மாசார் டென்கா, காலியா, முரி கான்டோ'' என்று பெரியவர் அடுக்கிக்கொண்டே போக, மீன் பிரியையான எனக்கு நாக்கில் எச்சில் ஊறியது.

  மீன் இல்லாமல் போகாலி பிகு முழுமையடையாது என்று அவர் சொல்லி முடிக்க நாளைக்கு போகாலி பிகுவின்பொழுது பிரம்மபுத்திராவின் மீனை சாப்பிட்டே  தீர்வது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன்.

  (தொடரும்)
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai