சுடச்சுட

  
  sk6


  உட்கார்ந்தே இருந்தால் என்ன வேலை நடக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டு, முதலில் போக வேண்டிய இடங்களைத் தேர்வு செய்ய ஆரம்பித்தேன். ஒவ்வொரு பிரச்னையும் மலை போல் வந்து பனி போல் தீர்ந்தது மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. அதாவது வராமல் இருந்த எனது சூட்கேஸ் யாரும் தேடாமல் எங்கள் விமானத்தின் கடைசிப் பொருளாக வந்து விழுந்ததைப் போல என்று சொல்லலாம். 

  இந்த துபாய் ஷாப்பிங் திருவிழா ஆரம்பித்த இடத்திற்கே முதலில் செல்லலாம் என்று வெளியே வந்து "குலோபல் வில்லேஜ்' என்ற இடத்திற்கு முதலில் செல்ல பல்வேறு யோசனைக்குப் பிறகு முடிவு செய்து ஒரு டாக்ஸியை பிடித்தேன். டாக்ஸி என்னை அந்த இடத்தில் இறக்கி விட்டுச் சென்றது.  

  இந்த "குலோபல் வில்லேஜ்' ஒரு மிகப் பிரம்மாண்டக் கண்காட்சி திடல் என்றுதான் கூறவேண்டும். இங்கு சுமார் 75 நாடுகள் தங்களது பெவிலியன்களை அமைத்திருந்தன. நாம் காலார நடந்தால், சிலமணி நேரத்தில் பல்வேறு நாட்டின் கலாசாரம், பண்பாடு, உணவு, பழக்க வழக்கங்கள், அவர்கள் செய்த பல்வேறு கைவினைப் பொருள்கள் குவிந்து கிடந்தன. 

  ஒருவர் லண்டன் புகழ் ‘Big Ben' னை அண்ணாந்து பார்க்கலாம். இத்தாலியின் பீசா கோபுரத்தை பார்த்து ரசிக்கலாம். நமது இந்தியாவின் தாஜ் மகாலின் முன்பு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். அந்தக் கால எகிப்தின் அழகை ரசித்து உணரலாம். இது மட்டும் அல்ல, ஒவ்வொரு நாளும் சில குறிப்பிட்ட நேரங்களில் கண்கவர் ஊர்வலங்களும் நடக்கும்.

  பல்வேறு நாடுகளின் இசை நடனங்கள் இந்த "குலோபல் வில்லேஜில்' தினந்தோறும் நடந்தேறும். இது சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பித்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நிறைவடைகிறது. இது மட்டுமல்லாமல் பல்வேறு வகையான விளையாட்டுக்கள், rides என்று அசத்தி விட்டார்கள். இப்படி ஒவ்வோரு வருடமும் சுமார் 6 மாதம் இந்த "குலோபல் வில்லேஜ்" திறந்திருக்கும்.

  அன்று மாலையே "டோவ் க்ரூஸ்' (Dhow Cruise) செல்ல முடிவு செய்தோம். துபாயில் அனைத்தும் பாலைவனம் என்பதால் எல்லாமே மனிதர்களால் அமைக்கப்பட்டவை தான். க்ரூஸ் என்று ஆங்கிலத்தில் சொன்னால் தமிழில் அதற்கான அர்த்தம் கப்பல்.

  சின்னதாக ஒரு கப்பலில் கேளிக்கை நிகழ்ச்சிகளோடு சுமார் 2 மணி நேரம் தண்ணீரில் சுற்றி வந்து இரவு உணவு பரிமாறி மக்களை மகிழ்விப்பதுதான் இந்த Dhow Cruise. இதில் உள்ள சிறப்புப் பற்றி அதன் மேலாளர் செüகான் பல்வேறு வகையான தகவல்களைக் கூறினார். ""எங்கள் அரசர் தொலை நோக்கு பார்வையுடன் எல்லாமே பெரியதாக, மக்கள் மகிழும் வண்ணம் செய்ய விரும்பினார்.  இந்த நாட்டிற்குப் பல்வேறு நாட்டு மக்கள் வர விரும்புகிறார்கள். அவர்கள் வந்தால் பாதுகாப்பாக இருப்பது மட்டும் அல்லாமல், மகிழ்ச்சியாக இங்கு இருக்கும் நாட்களைக் கழிக்க வேண்டும். 

  இந்த இடத்திற்குப் பெயர் துபாய் கிரீக். மேலே தண்ணீர். இந்த தண்ணீருக்கு அடியில் இரண்டு வகையான ரயில்கள் ஓடுகின்றன. ஒன்று ரெட் லைன் மற்றொன்று க்ரீன் லைன். (நம் சென்னையில் ஓடும் மெட்ரோ போல்) இங்கே சுமார் 40 கப்பல்கள் இந்த தண்ணீரில் மிதக்கின்றன. சில சிறிய கப்பல்கள் தேரா துபாய்க்கும், பர் துபாய்க்கும் இடையே மிதக்கின்றன. இவைகளில் சில மக்களையும், சில பொருள்களையும் ஏற்றிக் கொண்டு செல்கின்றன.  

  எங்கள் அரசருக்கு எல்லாமே சிறப்பாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு முறை இந்த கிரீக்கை சுற்றிவர  அதாவது 14.5 கிமீ தூரம் இந்த கிரீக்கை சுற்றி வர 2 மணிநேரம் பிடிக்கும்'' என்றார்.

  அவர் சொன்னது போல் ""எல்லாமே இருக்கு. நல்லாவே இருக்கு. ஆனால்,  என்னை போன்று சுத்தமான சைவப் பிரியர்களுக்கு சைவ உணவில் பெரிதாக ஒன்றும் இல்லையே'' என்ற குறையை அவரிடம் சொல்லி நான் திருப்தி  அடைந்தேன். 

  அடுத்த நாள் காலையில் சீக்கிரமாகவே எழுந்து, இரண்டு நாட்கள் பஸ் பயணம் என்பதால் அறைக்கு விரைவாகவே வந்து,  இரவு 11 மணிக்கு தூங்கினோம். 

  இரண்டு நாள் "பிக் பஸ்' பாஸ் வாங்கிவிட்டதால் எங்கு வேண்டுமானாலும் ஏறி எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி துபாய் ஷாப்பிங் திருவிழா நடக்கும் இடமெல்லாம் பார்க்க முற்பட்டோம். "பிக் பஸ்' அரைமணி நேரத்திற்கும் குறைவாக ஒரு நிறுத்தத்திற்கு வருகிறது. குறிப்பிட்ட சில இடங்களில் நிற்கிறது. சிவப்பு நிறத்தில் உள்ள இந்த பஸ் துபாயை ஒரு நாளில் பலமுறை வலம் வருகிறது. 

  அதிலும் குறிப்பாக இதில் உள்ள சிறப்பு என்னவென்றால்,  நகரை சுற்றிப் பார்க்க இதைவிடச் சிறந்த ஒரு போக்குவரத்து  சாதனம் இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப இது அமைந்துள்ளது. இதில் நானும் என் குடும்பமும் ஏறி தங்கச் சுரங்கம் (Gold Souk) உள்ள இடத்திற்கு முதலில் சென்றோம். காரணம், தங்கம் வாங்காமல் சென்னை வரவேண்டும் என்பது என் மனைவியின் சபதங்களில் ஒன்று. அதை உடைக்க வேண்டும் என்று நான் முதலில் இங்கு அழைத்துச் சென்றேன். 

  ஆனால் மனம் ஒரு குரங்கு என்று பெரியவர்கள் கூறியிருந்ததை எல்லோரும் மறந்து விட்டனர். அங்கு இருக்கும் தங்க நகைகளைப் பார்த்தவுடன் சாதாரணமாக எல்லோருக்குமே ஆசை வரும். பெண்கள் என்றால் கேட்கவா வேண்டும். அதிலும் ஒவ்வொரு கடைக்கும் முன் நாம் நின்றாலே, கடைக்காரர் நம்முடன் வரும் பெண்மணிகளுக்குக் கடையில் உள்ள பெரிய நகைகளை (இதை எல்லாம் அணிவார்களா  என்ன?) அணிவித்து அவர்களின் ஆசையைத் தூண்டி விடுகின்றனர். 

  அவ்வப்போது அவரின் சபதத்தை நினைவூட்டிக் கொண்டே வந்தேன். கடையைப் பார்த்தார். விலையைக் கேட்டார். தானே தனது கைபேசியினால் கணக்கும் போட்டார். சமீபத்தில் துபாய் அரசாங்கம் 5 சதவிகிதம் வரியும் போடுகிறது. 

  ஆனால், அந்த வரியை நாம் அங்கு கட்டி விட்டு, சென்னைக்கு வர துபாய் விமான நிலையத்தில் ரசீதை காட்டினால், நாம் சென்னைக்கு வந்த சில நாட்களிலேயே நமது பணம் நாம் கொடுத்த வங்கிக் கணக்கில் வந்து விழுந்து விடுகிறது. 

  அந்த சில நாட்களில் நமது பணத்தின் மதிப்பு உயர்ந்தால் நமக்கு லாபம், தாழ்ந்தால் நஷ்டம். கூட்டி கழித்துப் பார்த்தால் பெரிதாக ஒன்றும் இல்லை என்று கூறியவாறு (இந்த பழம் புளிக்கும் என்று சொல்வது போல்) நடையைக் கட்டினார் என் மனைவி. 

  நான் சந்தோஷத்துடன் "பிக் பஸ்' நிற்கும் இடம் நோக்கி மெல்ல நடந்தேன். பஸ்ஸýம் வந்தது. ஏறி உள்ளே உட்கார்ந்த பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது. அது என்ன?    

  (அடுத்த இதழில்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai