பிடித்த 10: முகநூலை கவனமாகக் கையாள வேண்டும்

இவரின் துப்பறியும் நாவல்கள் எப்போதும் ஸ்பெஷல் தான். சினிமா சின்னத்திரை இரண்டிலும் தடம் பதித்தவர் பட்டுக்கோட்டை பிரபாகர்.
பிடித்த 10: முகநூலை கவனமாகக் கையாள வேண்டும்

இவரின் துப்பறியும் நாவல்கள் எப்போதும் ஸ்பெஷல் தான். சினிமா சின்னத்திரை இரண்டிலும் தடம் பதித்தவர் பட்டுக்கோட்டை பிரபாகர்.

னக்குப் "பிடித்த பத்து' பற்றிக் கூறுகிறார்:

குடும்பம்: என் குடும்பத்தினருடன் இணைந்தே எந்த வெற்றியையும் கொண்டாடுவேன். அவர்களுக்கு உரிய நேரமும், அவர்களின் விருப்பங்களுக்கு மரியாதையும், கருத்துகளுக்கு முழு சுதந்திரமும் கொடுத்து கலந்தாலொசித்து முக்கிய முடிவுகள் எடுப்பேன். அலுவல் சம்பந்தமான வேலைகள் வெளியே முடிந்துவிட்டால் அடுத்த நிமிடம் என் குடும்பத்துடன் கலந்து விடுவேன். 

நட்பு: பள்ளி, கல்லூரி, தொழில், முகநூல் என்று பல வகைகளில் எனக்கு ஏராளமான நண்பர்கள் உண்டு. யார் மனமும் நோகாமல் முடிந்த அளவு என் நண்பர்களின் மனம் குளிர... மகிழ... நான் காரணமாய் இருக்க முடியுமா என்று அன்புடன் யோசித்து செயல்படுவதுண்டு. என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்களில் விளக்கம் சொல்லி நட்பின் விரிசலை சரி செய்து விடுவேன்.

கதை: கதை எழுத அவ்வளவு பிடிக்கும். கதை எழுதுவதில் இன்று வரை அயர்ச்சியோ, சோர்வோ, சலிப்போ துளி கூட எட்டிப் பார்த்ததில்லை. படிக்கிறவர்களுக்கு கதைகள் பலவிதமான நன்மைகளைச் செய்கின்றன. தகவலறிவை வளர்க்கின்றன. அன்பு, அறம், நாகரிகம், பண்பு என்று பல நல்ல விஷயங்களைக் கற்றுத் தருகின்றன. பலவிதமான மனிதர்களை அறிமுகப்படுத்தி பலவிதமான வாழ்க்கையைப் பதிவு செய்கின்றன. நல்ல கதைகள் ஒரு வகையில் மன நல மருத்துவ மருந்து! ஒவ்வொரு கதையும் ஒரு விதத்தில் ஒரு கால கட்டத்தின் வரலாற்று ஆவணப்பதிவே!

பத்திரிகை: எனக்கு "ஜர்னலிசம்' மிகவும் பிடித்த மற்றொரு விஷயம். ஒரு பத்திரிகை எப்படி தயாரிக்கப்படுகிறது என்று அறிய சின்ன வயதிலேயே ஆர்வம் ஏற்பட்டது. சாவி மூலம் அவர் துவங்கிய "திசைகள்' வார இதழில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு "உங்கள் ஜுனியர்', "உல்லாச ஊஞ்சல்' என்ற இரண்டு மாத இதழ்களை நண்பர்களுடன் சேர்ந்து பத்தாண்டுகள் வெளியிட்ட போது ஒவ்வொரு இதழின் தயாரிப்பிலும் கிடைக்கும் அனுபவத்தை ரசிப்பேன். 

சினிமா: கல்லூரி நாட்களில் தான் நான் மிக அதிகமாக சினிமாக்கள் பார்த்தேன். இந்தியில் ராஜ்கபூர் படங்களும், தமிழில் இயக்குநர் பாலசந்தர் படங்களும் என்னை ஈர்த்தன. பிறகு நண்பர்கள் சிபாரிசு செய்த எல்லாப் படங்களையும் எல்லா மொழிகளிலும் ரசிக்கத் துவங்கினேன். சினிமா என்கிற அழகான வலிமையான கலை வடிவத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் இயக்குநர் கே. பாக்யராஜ் உதவியாளராக சில படங்களில் பணியாற்றி இயக்கம் பற்றி கற்றுக்கொண்டேன். திரைக்கதை, வசனம் என்று சினிமாவில் இயங்கியும் வருவதால் சினிமா மீதான ஆர்வம் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.

வாசிப்பு: பள்ளி விடுமுறை நாட்களில் துவங்கியது என் வாசிப்புப் பழக்கம். தமிழில் நகைச்சுவைப் படைப்புகளும், ஆங்கிலத்தில் துப்பறியும் நாவல்களும் என்னை முதலில் ஈர்த்தன. பிறகு ஜெயகாந்தன், சுஜாதா, கல்கி, சாண்டில்யன், சாவி, ஆதவன், பாலகுமாரன் போன்ற சிறந்த படைப்பாளிகளின் சிறந்த படைப்புகளை தேடித் தேடிப் படித்ததோடு வீட்டில் ஒரு குட்டி நூலகமும் அமைத்தேன். வாசிப்பு என்பது ஒரு மனிதனை அவன் எண்ணங்களை செதுக்கி வடிவமைக்கக்கூடியவை.

கடிதம்: வாட்ஸ் அப், குறுஞ்செய்தி என்று கடிதங்கள் காணாமல் போய்விட்ட இந்தக் காலத்திலும் இன்னும் கடிதங்கள் எழுதும் நபர் நான். மனதின் எண்ணங்களை பேச்சை விடவும் வெகு நேர்த்தியாக, அப்பட்டமாக, நளினமாகச் சொல்ல கடிதங்களே சிறந்த வழி. பல பிரச்னைகளை கடிதங்களால் தீர்த்திருக்கிறேன். பல அன்பு நெஞ்சங்களில் கடிதங்களால் நட்பு வளர்த்திருக்கிறேன்.

பயணம்: உல்லாசப் பயணங்கள் பிடிக்கும். நண்பர்களுடன் குடும்பத்துடன் என்று இரண்டு வகையாகப் பிரித்துக் கொண்டு செல்வேன். பல வெளிநாட்டுப் பயணங்கள் என் பட்டியலில் பாக்கியிருக்கிறது. தொடர்ந்து பத்திரிகை, எழுத்து, டிவி, சினிமா என்று 40 ஆண்டுகளாக இடைவெளியில்லாமல் இயங்கி வருவதால் பயணத்திற்கு நாட்கள் ஒதுக்குவதுதான் பிரச்னை.

ஷாப்பிங்: இளம் வயதிலிருந்தே பலவிதமான கடைகளுக்கும் சென்று பல விதமான பொருள்களை வாங்குவது எனக்குப் பிடித்த மற்றொரு விஷயம். பொருட்காட்சி, ஷாப்பிங், கண்காட்சிகள் இப்போது சகலவிதமான மால்கள் என்று சுற்றித் திரிந்து புதுவிதமான பொருள்களை வாங்குவேன். அடிக்கடி உடைகள் வாங்குவதும் பிடிக்கும். 

முகநூல்: தற்போதைய நவீன மீடியாவான முகநூல் மிகவும் பிடித்திருக்கிறது. அடிக்கடி என் சிந்தனைகளையும், கருத்துகளையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களின் பல விதமான பார்வைகளை அறிந்து கொள்ளவும் எனக்கு உதவியாக இருக்கிறது. இதில் இயங்குவதில் சில சாதனங்களுடன் சில பாதகங்கள் இருந்தாலும், கவனமாகக் கையாண்டால் முகநூல் ஒரு நல்ல தொடர்புச் சாதனமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com