கருணாநிதியின் நகைச்சுவையைக் கேட்டு ரசிப்பார்- கே.பி.ராமகிருஷ்ணன்

அப்படி யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அந்தக் குணம் அவருக்கு இயற்கையாகவே அமையப் பெற்றது.
கருணாநிதியின் நகைச்சுவையைக் கேட்டு ரசிப்பார்- கே.பி.ராமகிருஷ்ணன்

சென்ற இதழ் தொடர்ச்சி...
எம்ஜிஆர் தனது கொடைத்தன்மைக்கு யாரையாவது உதாரணமாகக் கொண்டிருந்தாரா? 
அப்படி யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அந்தக் குணம் அவருக்கு இயற்கையாகவே அமையப் பெற்றது. அவருக்கு மட்டுமல்ல; அவரது பெற்றோருக்கும் இயல்பாகவே அமைந்த குணம் அது. ஒருவர் ஏராளமான பொருட் செல்வங்களுடன் இருக்கும் போது செய்யும் தான தர்மங்களை விட தன்னிடம் பொருள் இல்லாத நிலையிலும் மனம் கொள்வது தானே சிறப்பு. அது எம்ஜிஆரிடம் இயல்பாகவே அமைந்த ஒன்று. 
1945-ஆம் ஆண்டுகளில் அவ்வளவாக வசதி வாய்ப்புகள் இல்லாத சூழல். சென்னை வால்டாக்ஸ் சாலையில் இருந்த அவரைக் காணச் சென்ற போதே உணவும் அளித்து பணமும் கொடுத்தவர், அவரது தாயார். சிலர் எம்ஜிஆரின் கொடைத்தன்மைக்கு, என்.எஸ்.கிருஷ்ணன் காரணம் என்று கூறுகிறார்கள். 
என்.எஸ்.கே. மிகப்பெரிய கொடை வள்ளல். இது உலகம் அறிந்த ஒன்று. என்.எஸ்.கே. வின் கொடை தன்மையைப் பார்த்து எம்ஜிஆரே பிரமித்துப்போயுள்ளார். .தனது இறுதிகாலம் வரை கொடுத்துக்கொண்டே இருந்தவர் என்எஸ்கே. அது வேறு விஷயம். ஆனால், அதை முன்னிலைப்படுத்தி அவரால் இவர் என்று கூறுவது சரியானது அல்ல.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியுடனான தொடர்பு குறித்து?
எம்ஜிஆர் திமுகவில், சேர்ந்த பின் 1957-ஆம் ஆண்டு மேற்கொண்ட முதல் தேர்தல் சுற்றுப்பயணத்தின் போது பாதுகாப்பு பணிக்காக நாங்கள் சென்றோம். அப்போது முதல் கருணாநிதியுடன் அறிமுகம் உண்டு. எம்ஜிஆருடன் நான் சென்றுள்ள ஏராளமான நிகழ்ச்சிகளின் போதும், பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்ட நேரத்திலும் கருணாதியைக் கண்டு பேசியது மறக்க முடியாதவைகள். 
குறிப்பாக மேகலா பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட "எங்கள் தங்கம்' படத்தின் இறுதி சண்டைக்காட்சி ஒன்றில் மனோகருக்காக ஓரிரு காட்சிகளில் டூப்பாக நான் நடித்தேன். பின் நான் கேட்ட சம்பளத் தொகையை தயாரிப்பு நிர்வாகி ஏற்கவில்லை. இது தொடர்பாக மேகலா பிக்சர்ஸ் அலுவலகத்தில், நான் விவாதம் செய்த சமயத்தில் அங்கு வந்தார் கருணாநிதி. விஷயத்தைக் கேட்ட உடன் தயாரிப்பு நிர்வாகியிடம், "ராமகிருஷ்ணன் சினிமாவில் சண்டையை தொழிலாகக் கொண்டவர். அவரிடமே சண்டையா?' என தமாஷாக கூறி, நான் கேட்டத் தொகையை அப்படியே கொடுக்கும்படி நிர்வாகியிடம் கூறினார். இந்தச் சம்பவத்தை எம்ஜிஆரிடம் கூறினேன். கருணாநிதியின் நகைச்சுவையைக் கேட்டு சிரித்துக்கொண்டார்.
எம்ஜிஆர்-கருணாநிதி நட்பின் தொடக்கம் எப்போது என்று அறிவீர்களா?
"மருதநாட்டு இளவரசி' படத்திற்கு முன்னரே இருவருக்கும் பழக்கம் உண்டு என்றாலும் அப்படத்தின் மூலமாகவே நட்பு பலப்பட்டது. "மருதநாட்டு இளவரசி' படத்திற்கு கதை வசனம் எழுத யாரைப் போடலாம் என கோவிந்தன் கம்பெனி சார்பில் பேச்சு நடைபெற்றது. 
அப்போது படத்தின் இயக்குநர் ஏ.காசிலிங்கம் "இதயகீதம்' படத்திற்கு வசனம் எழுதிய நாஞ்சில் ராஜப்பாவைப் போடலாம் என்றார். தயாரிப்பு நிர்வாகமும் ஒப்புக்கொண்டது. இடைமறித்த எம்ஜிஆர், "டைரக்டர் ஏ.எஸ்.ஏ.சாமியிடம் உதவியாளராக இருக்கிறாரே கருணாநிதி அவரைப் போடலாமே, நன்றாக எழுதுவார்' என்று சொல்ல, காசிலிங்கமும் சரி என்றார். உடனடியாக திருவாரூரில் இருந்த கருணாநிதிக்கு எம்ஜிஆர் தந்தி கொடுத்தார். 
பின் எம்ஜிஆரும் அவரது அண்ணன் சக்ரபாணியும் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு நேரில் சென்று கருணாநிதியை வரவேற்றனர். அங்கிருந்த நாடார் ஓட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தனர். பின்னர் ஜட்கா வண்டியில் கருணாதியை அழைத்துச்சென்று காசிலிங்கத்திடம் அறிமுகம் செய்தனர். பின்னர் கோவிந்தன் கம்பெனிக்கு அழைத்துச் சென்று அட்வான்ஸ் பெற்றுக் கொடுத்தனர். அப்படம்தான் கருணாநிதி முதன் முதலாக கதை வசனம் எழுதியபடம். அதைத் தொடர்ந்து இருவரும் ஆழ்ந்த நட்புடனேயே, பழகி வந்தனர்.
1972 -ஆம் ஆண்டு திமுகவிலிருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்டது வரை.
திமுகவிலிருந்து எம்ஜிஆரைநீக்கிய பின் அது குறித்து அவர் நிஜத்தில் வருத்தப்பட்டதுண்டா?
நிச்சயம் கிடையாது. "இதயவீணை' படப்பிடிப்பிலிருந்த போது தகவலை கேட்ட மாத்திரத்தில் மகிழ்ச்சி கொண்டாரே தவிர சிறிதும் கவலை கொள்ளவில்லை. மாறாக அங்கு அனைவருக்கும் பாயாசம் கொடுக்கும்படி கூறினார் . ஆனால் சுற்றியிருந்த அனைவரும் பதட்டமும் கவலையும் கொண்டிருந்தனர்.
எம்ஜிஆரோ சற்றும் பதட்டமின்றி வழக்கம்போல் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவரது அண்ணன் சக்ரபாணி கூட ஒரு வித பதட்டத்துடன் ஓடி வந்து "என்ன தம்பி இப்படிப் பண்ணிட்டாங்களே?' என்ற போதும் அவரை சமாதானப்படுத்தினார் எம்ஜிஆர். உண்மையில் ஏதோ ஒரு பாரம் தன்னிடமிருந்து இறக்கி விடப்பட்டதாகவே உணர்ந்தார். 
அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டுத் திரைத்துறையில் தீவிரமாக ஈடுபட்டு அதிலிருந்தே இன்னும் அதிகமாக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றே அவர் நினைத்தார். ஆனால் அதன்பின் தமிழகமே இதனால் கொந்தளித்ததும் ஆங்காங்கே எம்ஜிஆரின் தொண்டர்கள் தாக்கப்பட்டதுமே எம்ஜிஆரின் மனமாற்றத்திற்கு காரணமாக அமைந்தது.

எம்ஜிஆரின் ஏராளமான பயணத்திட்டங்களில் உங்களால் என்றென்றும் மறக்க முடியாத அபூர்வ நிகழ்வு?
எம்ஜிஆருடன் பயணம் செய்யும் போது ஏற்படும் அபூர்வ நிகழ்வுகளுக்கு பஞ்சமே இல்லை. ஒவ்வொன்றும் மறக்க முடியாதவை. நாங்கள் மட்டுமல்ல எம்ஜிஆரே அதிசயித்து போன நிகழ்வு உண்டு. அது 1973-ஆம் ஆண்டு மதுரைக்கு வருகை புரிந்த பிரதமர் இந்திரா அம்மையாரை சந்தித்து மனு ஒன்றினை அளிக்க ரயிலில் பயணப்பட்டார் எம்ஜிஆர். 
உடன் அவரது பாதுகாவலர்களான நாங்கள், உதவியாளர் சபாபதி கே.ஏ.கே. அனகாபுத்தூர் ராமலிங்கம் மற்றும் "இதயம்பேசுகிறது' மணியன், போன்றோரும் சென்றிருந்தோம். எம்ஜிஆர் மதுரைக்கு ரயிலில் வரும் செய்தி மதுரை வரை காட்டுத்தீயாக பற்றிக் கொள்ள ஒவ்வொரு ஊரின் நிறுத்தத்தில் ரயில் நிற்கும் போது கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம். 
ஒருவரையொருவர் முண்டியடித்து எம்ஜிஆரை காணவும் அவரைத் தொட்டு விடவும் முயன்றனர். இதனால் ரயில் புறப்பட காலதாமதம் ஆனதை அறிந்த எம்ஜிஆர் தன்னால் மற்ற பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இடையில் ரயிலிலிருந்து இறங்கி காரில் பயணம் செய்து விடலாம் என தீர்மானித்தார். 
இதனை அறிந்த ரயிலின் ஓட்டுநர் எம்ஜிஆரிடம் வந்தார். "ஐயா தற்போது மதுரை வரை ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உங்களை காணும் ஆவலில் காத்திருப்பதாக செய்தி வந்துள்ளது. இப்போது நீங்கள் இவ்வண்டியிலிருந்து இறங்கி போய் விட்டால் உங்களை காணாத வருத்தத்தில் மக்கள் பதட்டமடைந்து விபரீதம் ஏற்படலாம். வண்டி நல்லபடியாக மதுரை போய் சேர வேண்டும் காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை. தயவுசெய்து இந்த வண்டியிலேயே மதுரை வரை வந்து விடுங்கள்'' என்று வேண்டுகோள் விடுத்தார். 
ரயில் ஓட்டுநரின் தர்ம சங்கடத்தை உணர்ந்த எம்ஜிஆரும் சரி, என்று சொல்ல மதுரை வரை ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் எம்ஜிஆரை காணும் ஆவலில் தங்களை மறந்து ரயிலின் உள்ளேயே பாய்தோடி வந்த நிகழ்வும் அவர்களைக் கட்டுப்படுத்த நாங்கள் பட்ட சிரமமும் சொல்லிமாளாது. 
மக்களின் வாழ்த்து கோஷங்கள் ரயில் நிலையத்தை ஸ்தம்பிக்கச் செய்தது. சுமார் 16 மணி நேரம் பிரயாணம் செய்து ஒரு வழியாக மதுரை வந்து சேர்ந்தார். இதில் குறிப்பாகச் சொல்ல வேண்டியது எம்ஜிஆர் மீது மக்கள் கொண்டிருந்த அன்பை கண்டு வியந்து போன பயணிகள் நேரம் நீண்டது பற்றி கவலை கொள்ளாது நிகழ்வினை கண்டுரசித்தனர். இது போன்ற சம்பவம் தியாகராஜபாகவதருக்கும் வடக்கே காந்தியடிகளுக்கும் ஏற்பட்டுள்ளது என்றாலும் நிகழ்வின் தன்மை வித்தியாசப்பட்டது பயணநேரம் மாறுபட்டது. 16 மணி நேரம் என்பது எம்ஜிஆருக்கு மட்டுமே ஏற்பட்ட ஒன்று என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். 
(அடுத்த இதழில் முடியும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com