அன்பான மக்கள்.. அழகான இடங்கள்..! எஸ்.ஆர்.அசோக்குமார்

டெசர்ட் சஃபாரி யில் அந்தக் கார் டிரைவர் மொஹம்மத் ஷகீல் சொன்னது என்ன தெரியுமா? "இந்தக் காரில் நீங்கள் நான்கு பேர்தான் இருக்கிறீர்கள்.
அன்பான மக்கள்.. அழகான இடங்கள்..! எஸ்.ஆர்.அசோக்குமார்

டெசர்ட் சஃபாரி (Desert safari) யில் அந்தக் கார் டிரைவர் மொஹம்மத் ஷகீல் சொன்னது என்ன தெரியுமா? "இந்தக் காரில் நீங்கள் நான்கு பேர்தான் இருக்கிறீர்கள். வண்டி மிகவும் வேகமாகப் போகும். காரில் நீங்கள் வாயில் எடுத்தால் அபராதக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஒரு தொகை குறிப்பிட்டார். அதைக் கேட்டதும் எனக்குத் தலை சுற்ற ஆரம்பித்து விட்டது. அது மட்டும் அல்லாமல் அவர் ஒவ்வொருவருக்கும் பிளாஸ்டிக் பை ஒன்றையும் அன்பளிப்பாக அளித்தார். சுமார் ஒரு டஜன் கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து மேலும் கீழுமாகச் செல்ல உண்மையிலேயே வயிறு கலங்கியது. காரில் உட்கார்ந்ததால் பதினைந்து நிமிடத்தில் நமக்கு வேகமான கார் ஓட்டம் என்ன என்று காட்டி விட்டு ஒர் இடத்தில் இறக்கி விட்டார்.

 அங்குப் பார்த்த ஒரு காட்சி எனக்கு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த "ஜென்டில்மன்' படத்தின் ஒரு பாடல்தான் நினைவிற்கு வந்தது. அந்தப் பாடல் "ஒட்டகத்தை கட்டிக்கோ' என்ற பாடல்தான். காரணம் ஒட்டகத்தின் மீது எல்லோரும் இலவசமாக ஒரு ரவுண்ட் வரலாம் என்று கூற, அதற்கும் ஒரு நீளமான வரிசை அங்கே ஏற்பட்டுவிட்டது. இதில் மிகவும் கஷ்டமான ஒன்று என்ன வென்றால், அந்த ஒட்டகத்தை நெருக்கினாலே ஒரு வாடை வந்தது, அதில் ஏற மக்கள் படும் கஷ்டம் எல்லாம் பார்த்துவிட்டு நானும் எங்கள் குடும்பமும் இந்தப் பழம் புளிக்கும் என்ற சொல்லுக்கு ஏற்ப, ஒட்டகத்தை மறந்து விட்டு, கேளிக்கை நடத்தும் இடத்திற்குச் சென்றோம். பல்வேறு வகையான கேளிக்கைகள் நிறைந்த மாலை பொழுதை கழித்து விட்டு ஓட்டலை சென்றடைந்த போது இரவாகி விட்டது.

 துபாய் வந்தால் உலகிலேயே உயரமான கட்டடத்தைப் பார்க்காமல் போகலாமா என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். புர்ஜ் கலிஃபா தான் உலகத்திலேயே மிக உயரமான கட்டடம். அதில் 163 மாடிகள் உள்ளன. ஆனால் மக்களை 124 மாடிவரை மட்டுமே அழைத்துப்போகிறார்கள். கீழே இருந்து மேலே செல்ல சுமார் 2 நிமிடங்கள் ஆகிறது. நீங்கள் டிக்கெட் வாங்கி விட்டால் நீங்கள் எந்த நாள், என்ன நேரம் என்று அதில் தெளிவாகப் போட்டு விடுகிறார்கள். அந்த நேரத்திற்குச் சரியாகச் சென்றால் போதும். உங்களைப் பத்திரமாக மேலே அழைத்துச் சென்று காண்பித்து விட்டு கீழே இறக்கி விடுகிறார்கள். அதற்கு முன் அந்தக் கட்டடம் எப்படிக் கட்டப்பட்டது என்றும், என்று திறந்து வைக்கப் பட்டது என்பன போன்ற செய்திகளைக் காணொளிக் காட்சியாக நாம் லிப்டிற்குள் செல்வதற்கு முன் நமக்குத் தெளிவாகக் காண்பித்து விடுகிறார்கள்.

 2004-ஆம் ஆண்டு இந்த கட்டடம் கட்ட ஆரம்பித்தார்கள். ஜனவரி மாதம் 4-ஆம் தேதி 2010-ஆம் ஆண்டுத் திறக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு புத்தாண்டு அன்று வானவேடிக்கை நடக்குமாம். இந்த ஆண்டு வான வேடிக்கைக்குப் பதிலாக விளக்குக் கண்காட்சி நடைபெற்றது. சமீபத்தில் நியூசிலாந்தில் உள்ள மசூதியில் 40 மேற்பட்ட மக்களைச் சுட்டு வீழ்த்திய சம்பவத்தில் நியூசிலாந்து மக்களும், அதன் பிரதமரும் நடந்து கொண்ட முறையினைப் பாராட்டி பிரதமரின் உருவம் வண்ண விளக்குகளால் வரையப்பட்டுக் காட்சிபடுத்தப்பட்டது. இந்த புர்ஜ் கலீபா வில். At the top என்ற வாக்கியம் இந்த புர்ஜ் கலிப்பாவின் வாக்கியமானது.

 கீழே பல்வேறு கடைகள், மற்றும் உணவு விடுதிகள், ஒரு அக்வேரியம் (பல்வேறு வகையான மீன்வகைகள்- திடீர் என்று ஒரு மிகப்பெரிய ஷார்க் நீந்தி வந்து நம்மைப் பயமுறுத்தியது. அது மட்டும் இல்லாமல் இசை நீருற்று ஒன்றும் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை பார்வையாளர்களை மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது. இவை மட்டும் அல்லாமல் கீழே இருந்து மேலே போகும் பலரையும் நிறுத்தி வைத்து ஒரு கூட்டம் புகைப்படம் எடுக்கிறது. மேலேயும் உங்களை நிற்கவைத்தும், உட்கார வைத்தும் இதே புகைப்படம் எடுப்பது நடக்கிறது. ""நீங்கள் மேலே போய்விட்டு வந்தவுடன் உங்கள் படங்களை நாங்கள் தருகிறோம்'' என்கிறார்கள். அதற்குப் பணம் கேட்கிறார்கள். அதாவது, ஒட்டி வெட்டுவது என்று கூறலாம். சென்னையிலேயே நீங்கள் துபாய் போகாமல் புர்ஜ் கலிப்பாவின் அருகில் நிற்பது போல் படங்களைப் பலவும் நம் புகைப்பட நிபுணர் போட்டுக் கொடுப்பார். அதற்கு நம் நாட்டுப் பணத்திற்கு 2500 ரூபாய் என்று என் மனைவி என் காதில் கூறியது எனக்குக் கேட்டது.

 அடுத்த நாள் காலை இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் அதிகமாக வாழும் அல் கரமா இடத்திற்குச் சென்றோம். அந்த இடம்தான் நம் சென்னையில் உள்ள பாரீஸ் போல் உள்ளது என்று சொல்லலாம். துபாய் வாழ் கார்த்திக் மற்றும் அவரது மனைவி ரஞ்சனி எங்களுடன் எல்லா இடங்களுக்கும் வந்து உதவினார்கள். அது மட்டும் அல்லாமல் முதல் நாள் ஓட்டலில் எங்களுக்குப் பணம் கொடுத்து காப்பாற்றியவர்களும் இவர்கள்தான். துபாய் எப்படி இருக்கிறது என்று கேட்டபோது கார்த்திக் கூறியது என்னைச் சிந்திக்கச் செய்தது. "துபாய் சிறப்பான இடம், அன்பான மக்கள். சென்னையில் உங்களுக்கு என்ன கிடைக்குமோ அத்தனையும் இங்கும் கிடைக்கிறது. பிரச்னை ஏதும் இல்லை. இன்னும் சொல்லபோனால் எனது தம்பி மற்றும் அவரது குடும்பம் கூட இங்கு தான் இருக்கிறார்கள்.

என் தாயார் கூட இங்கு வந்து என்னுடன் சில நாட்களும், என் தம்பியுடன் சில நாட்களும் தங்கி வருகிறார்கள். நம் சென்னையில் உள்ள புகழ் பெற்ற சைவ ஓட்டல்கள் கூட இங்கு தங்களது கடையைத் திறந்துள்ளன. எல்லாம் இருந்தும் ஏன் சென்னைக்கு போக வேண்டும் என்ற நினைப்பு வந்து கொண்டே இருக்கிறது. சென்னை போக வாய்ப்பு கிடைத்தால் ஏனோ மனம் குதூகலிக்கிறது. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மட்டும் அல்ல தமிழர்கள் எல்லோருக்கும் இந்த ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது என்று மட்டும் புரிந்தது. துபாய் ஷாப்பிங் திருவிழா களை கட்ட தொடங்கும் போது நாங்கள் கிளம்ப வேண்டிய வேளை வந்து விட்டது.
 

எந்த ஒரு நாட்டிற்குச் சென்றாலும், ஒரு சில நாட்களுக்குள் அனைத்து இடங்களையும் பார்க்க முடியாது. ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று இடங்களைப் பார்த்தாலே அதிகம். அதே போல்தான் துபாயும். 50கும் மேற்பட்ட இடங்களைப் பார்க்கவும், ரசிக்கவும், அனுபவிக்கவும் பல உள்ளன. நேரம் ஒத்துழைக்காததால் பல இடங்களைப் பார்க்க முடியவில்லை. எங்களுடன் இருந்து கவனித்துக் கொண்ட கார்த்திக் குடும்பத்தினருக்கும், தங்க நாடான துபாய்க்கும் நன்றி சொல்லிவிட்டு சென்னைக்கு விமானம் ஏறினோம்.
 (நிறைவு பெற்றது)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com