என்றும் இருப்பவர்கள்! 9 - சா. கந்தசாமி

சில எழுத்தாளர்கள் எழுதி படிக்கிறவர்களைப் பரவசமடைய வைக்கிறார்கள். எழுதுவதற்குத் தூண்டுதலாக இருக்கிறார்கள். வேறு சிலர் தன் மொழிக்கும், நாட்டிற்கும் நற்பெயர் கொண்டு வருகிறார்கள்.

க.நா.சுப்ரமணியம்
 சில எழுத்தாளர்கள் எழுதி படிக்கிறவர்களைப் பரவசமடைய வைக்கிறார்கள். எழுதுவதற்குத் தூண்டுதலாக இருக்கிறார்கள். வேறு சிலர் தன் மொழிக்கும், நாட்டிற்கும் நற்பெயர் கொண்டு வருகிறார்கள். இன்னும் சிலரோ மற்ற எழுத்தாளர்களைப் பதற வைக்கிறார்கள். தன் பட்டியலில் இடம் கொடுக்காமல் உதறி தள்ளிவிடுகிறார்கள். அவர்களுக்குத் தரம் என்பது தான் முக்கியம். வேண்டியவர், வேண்டாதவர் என்று பார்ப்பது இல்லை. பெரும்பான்மையான மக்கள் விரும்பிப் படித்து ரசிப்பது தான் சிறந்ததொரு படைப்பென அவர்கள் கொள்வது கிடையாது. வாசகர்கள், விமர்சனங்கள், அபிப்பிராயம் இலக்கியம் பற்றிய வரையில் பொருட்படுத்தக்கூடியது இல்லை. இலக்கியப் படைப்பு என்பதில் முதலும், கடைசியும் படைப்பின் ஆளுமையும், வசீகரமும் மொழியுந்தான் முக்கியம். ஆனால் மொழி பெயர்ப்புக்கு ஒரு படைப்பு உள்ளாகும் போது, முதலில் காவு கொடுக்கப்படுவது மொழி தான். எழுதப்பட்ட மொழியின் வழியாகவே ஒரு படைப்பிலக்கியம் மொழியைக் கடந்து போய்விடுகிறது. மகத்தான இலக்கியம் என்பது மொழி பெயர்ப்பால் மட்டமானதாகிவிடுகிறது என்பது கிடையாது.
 சரியாகத் திறமையாக மொழி பெயர்க்கப்பட்டதால் சரியான மொழி பெயர்ப்புக்காகப் பல இலக்கியம் படைப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன என்று சொல்லி பல சர்வதேச படைப்புகளைத் தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்தவர் க.நா. சுப்பிர
 மணியம் என்றழைக்கப்படும் கந்தாடையான் நாராயணசாமி ஐயர் சுப்ரமணியம்.
 அவர் நிறைய இலக்கியம் படித்தார். ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டிருந்த படைப்புகள்; ஆங்கில மொழியிலேயே சொந்தமாக எழுதப்பட்டிருந்தவை சம்ஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கப்பட்டிருந்தவை. இப்படியாக தமிழ் இலக்கியத்தைத் தமிழிலேயே படித்தார். படிப்பு அவருக்கு விசாலமான பார்வையைக் கொடுத்தது. அவர் படிப்பில் படைப்பிலக்கியம் இருந்தது போலவே விமர்சனங்களும் இருந்தன.
 ஒரு படைப்பு என்பது விமர்சிக்கப்பட வேண்டும். ஏனெனில் படைப்பு என்பது தரம் கொண்டது. படைப்பான எழுத்து எப்பொழுதும் தரமானது இல்லை. எல்லாப் படைப்பாளர்களாலும் ஒரே மாதிரியான சீரான தரத்தில் எப்பொழுதும் எழுத முடிவதில்லை. சிலருக்கு முதல் படைப்பே முதல் தரமான படைப்பாக அமைந்துவிடுகிறது. சிலருக்கு நான்காவது ஐந்தாவது படைப்பு அசலானதாக இருக்கிறது.
 பெரும்பான்மையானவர்களுக்கு எத்தனை தான் எழுதினாலும் கலையென்னும் அம்சம் கைவசப்படாமல் போய்விடுகிறது. அதன் காரணமாகவே எத்தனைத்தான் திட்டம் போட்டுக் கொண்டு குறிப்புகள் எழுதி வைத்துக் கொண்டு கவிதை, சிறுகதை, நாவல் எழுதினாலும் அதற்குள்ளேயே திட்ட வரையறைக்குட்பட்டு எழுத முடியாமல் போய் விடுகிறது.
 அது மனம் எழுதுகிறது; எழுத்து எழுதவில்லை என்பது தான். எழுத்து கண்டறியப்பட்டது. மனம் உடம்பின் உள்ளே இருக்கிறது. அது எழுத வைக்கிறது. மனத்தால் எழுதப்பட்டப் படைப்புகள்- எழுதுகிறவன் கெட்டவனா, நல்லவனா, சீலத்தோடு வாழ்கின்றவனா, வஞ்சகனா என்றெல்லலாம் பார்ப்பது இல்லை. அறிந்து கொண்டு மூளையால் எழுதியவர்களை அறியாமல் எழுதியவர்கள் ஜீவிதமாக இருக்கிறார்கள்.
 உலக இலக்கியம் முழுவதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்திய இலக்கியத்தை- குறிப்பாகத் தமிழ் இலக்கியத்தைப் பார்த்தவர் க.நா. சுப்ரமணியம். அவருக்கு இலக்கியத்துறையில் யாரும் வழிகாட்டி இல்லை. பல நூல்களைப் படித்துப் படித்து படைப்பிலக்கியம் என்றால் என்ன? ஒரு படைப்பு எவ்வாறு இலக்கியமாக மாறுகிறது என்பதைத் தன்னளவில் சொன்னவர். தமிழ் மரபில் அது புதிதாக இருந்தது. உரைநடை கதைகளைப் பத்திரிகைகளில் படித்துவிட்டு, பாராட்டி மகிழ்ந்து கொண்டிருந்த தமிழர்கள் மத்தியில், தரம் இருக்கிறது என்று முதலில் சொன்னவர் புதுமைப்பித்தன். அவர் தன் காலத்தில் பிரபலமாக இருந்த "கல்கி' உட்பட பலரைப் பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் விமர்சகர் என்பதைத் தாண்டி தரமான கதைகள் எழுதினார்; அசலான கதைகள் என்று சர்வதேச கதைகளை மொழி பெயர்த்துக் கொடுத்தார்.
 நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஒரு விமர்சன மரபு அதன் பழமையின் தொடர்ச்சியாகவே வருகிறது என்று சொல்லி விமர்சனக் கட்டுரைகள் தொடர்ந்து எழுதியவர் க.நா.சுப்பிரமணியம். அவருக்கு எதிராகப் பலர் பேசியும் எழுதியும் வந்தார்கள். ஆனால், அவையெல்லாம் பொது வெளியில் மதிப்பிழந்து போய்விட்டன. அவர் அலசல் விமர்சனத்தை விட வாசகர்கள் படிக்க வைக்கும் அபிப்பிராயம் போதுமென்று நம்பினார். "எனக்குச் சிறப்பானதாகச் சிலப்பதிகாரம் படுகிறது; காரைக்கால் அம்மையார் பாடல்கள் தமிழ்த் தத்துவ மரபில் வருகிறது. திருக்குறள் முதல் இரண்டு அத்தியாயங்கள் நீதியைச் சொல்கின்றன. இன்பத்துப் பால் இலக்கியமாக இருக்கிறது'' என்றார். அது பலருக்குப் பிடிக்கவில்லை. அவரைக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். விமர்சனத்தைப் புதுக்கவிதைகள் வென்றெடுத்து முன்னே சென்றன.

என்னைப் பற்றிய விமர்சனங்களுக்குப் பதில் சொல்வது இல்லை என்றே சொல்லிக் கொண்டு தொடர்ந்து எழுதி வந்தார். சிலப்பதிகாரத்தைத் தமிழர்கள் அறியாத இலக்கியம் என்றுரைத்து, ஆங்கிலத்தில் வசனமாக மொழி பெயர்த்தார்.
 மொழி பெயர்ப்புக்கென்று ஒரு கொள்கை வைத்துக் கொண்டிருந்தார். அது வரிக்கு வரி மொழி பெயர்க்க வேண்டியது இல்லை என்பது.
 நூலின் ஆத்மாவை-சொல்லப்பட்டதன் வழியாகச் சொல்லப்படாத அம்சங்களைச் சொன்னால் போதும் என்பது தான். அந்த அடிப்படையில் தான் அவர் நட்ஹம்சன் - "நிலவளம்' செல்மா லாக்கர் லெவ்- "மதகுரு', பேர் லஸ்கர் குவிடு- "பாரபாஸ்', வில்லியம் சரோயன்- "மனுஷ்ய நாடகம்', ஆல்பர்ட் காமு- "விருந்தாளி', ஜார்ஜ் ஆர்வெல்- "விலங்கு பண்ணை', 1984-இல் ஸ்டீபன் கிரேன்- " நீல நிற ஓட்டல்' உட்படப் பல நாவல்களை மொழி பெயர்த்தார். அவர் நாவல்களின் மொழி பெயர்ப்பு பற்றி நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால், நாவலில் சொல்ல வந்ததை அவர் போல் மொழி பெயர்ப்பில் யாராலும் கொண்டு வர முடியவில்லை.
 அவருக்குத் தமிழ்ப்படைப்புகள் சிலவற்றின் மீது அபரிமிதமான ஈடுபாடு இருந்தது. ""பாரதியாரைத் தான் தமிழ் மறுமலர்ச்சியின் தொடக்கமாகக் கொள்ள வேண்டும்'' என்றார். பழந்தமிழ்க் கவிதைகள் சிறப்பாக இருக்கின்றன. ஆனால் அதற்காகவே அவற்றை வைத்துக் கொண்டு கொண்டாடிக் கொண்டிருக்க முடியாது. பழைய மொழி. பழைய சொல்லில் புதுக்கவிதைப் படைக்க வேண்டுமென்றார். எழுபதாண்டுகளுக்கு முன்பே புதுக்கவிதைகள் எழுதினார். அவரது புதுக்கவிதை முயற்சிக்குக் கடும் எதிர்ப்பு இருந்தது. தமிழ்ப் பேராசிரியர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள் எல்லாம் எதிர்த்தார்கள். அவர் தமிழ் வெகுஜன பத்திரிகைகளை எதிர்த்து எழுதி வந்தார். அவை அசலான இலக்கியத்தின் பக்கம் வர வேண்டும். உலகம் முழுவதிலும் பத்திரிகைகள் தான் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்கின்றன. "மணிக்கொடிக்கு ஏதாவது சிறப்பு இருக்கிறது என்றால், அது தனக்கு வந்த அசலான படைப்புகளை நிராகரிக்கவில்லை. அவற்றைப் புரிந்தோ, புரியாமலோ தான் வெளியிட்டது. எத்தனைத் தரமான சிறுகதைகளை மணிக்கொடி வெளியிட்டதோ, அதைவிட அதிகமான மட்டமான சிறுகதைகளை வெளியிட்டு இருக்கிறது. பத்திரிகைகள் கதைகளை உருவாக்கிக் கொள்ள முடியாது. ஆனால் கதைகளை அறிந்துகொள்ள இலக்கியம் பற்றி புரிதல் வேண்டும்'' என்றார்.
 ""பி.எஸ். ராமையாவிற்கு தரமாகக் கதைகளைத் தெரிந்து கொள்ளவும், அவற்றை வெளியிடவும் தைரியம் இருந்தது. அதன் காரணமாகவே ராமையா "மணிக்கொடி' கொண்டாடப்பட்டு வருகிறது'' என்றார். க.நா. சுப்ரமணியம் தன் இலக்கியக் கோட்பாட்டின்படி "சூறாவெளி', "சந்திரோதயம்' என்று இரண்டு பத்திரிகைகள் நடத்தினார். பணம் நிர்வாகத்திறன் இல்லாத படியால் இரண்டு பத்திரிகைகளும் நின்று போய்விட்டன. "சந்திரோதயம்' பத்திரிகையில் சி.சு. செல்லப்பா உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். அவரின் புகழ் பெற்ற நாவலான "வாடிவாசல்' 1947-ஆம் ஆண்டு "சந்திரோதயம்' பத்திரிகையில் தான் வெளிவந்தது. ஒரு பத்திரிகை நின்று போனால் அவர் சோர்ந்து போவதில்லை. இன்னொரு பத்திரிகையைத் தொடங்கி ஆறு மாதமோ, ஒரு வருடமோ நடத்துவார். "இலக்கியத் பத்திரிகை என்பது இரண்டு மூன்றாண்டுகளுக்கு மேல் நடத்தக்கூடாது. ஏனெனில் ஆரம்ப உற்சாகம், தொணி குறைந்து போய்விடும். எனவே வேகம் குறைவதற்குள் அது நின்று போக வேண்டும். இல்லாவிட்டால் நிறுத்தி விட வேண்டும்' என்பார்.
 1963-ஆம் ஆண்டில் அவர் "இலக்கிய வட்டம்' என்ற இதழை ஆரம்பித்தார். பத்திரிகை என்று சொல்ல எந்தவொரு அம்சமும் அதில் கிடையாது. ஆனால், வளமான கட்டுரைகள் சிறந்த நாவல்கள் அறிமுகம், மேல் நாட்டு, இந்திய எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகள் இருக்கும். குறிப்பாக ஊடாக விமர்சனத்தையும் சேர்த்து எழுதி இருப்பார். ஏனெனில் விமர்சனத்தை அவர் ஒரு கலையாகக் கருதினார். "விமர்சனப் பார்வை கூடக்கூடப் படைப்பு இலக்கியம் மேலான ஒரு தரத்தை அடையும்' என்று சொல்லிக் கொண்டு எழுதி வந்தார்.
 1964-ஆம் ஆண்டில் சென்னை மத்திய நூலகத்தில் பல பத்திரிகைளுக்கு இடையில் இலக்கிய வட்டத்தைப் பார்த்தேன். அங்கேயே அமர்ந்து படித்தேன். கட்டுரைகளின் தொணி பிடித்திருந்தது. புதுக்கவிதைகள் பலவற்றையும் படித்துக்கொண்டு வந்தேன். எழுத்து, இலக்கியவட்டம் கவிதைகள் வேறுபட்டிருந்தன. ஆகையால் தமிழ்ப் புதுகவிதைகள் பற்றிய ஒரு விமர்சன கட்டுரை எழுதி, புனைப் பெயரில் அனுப்பினேன்.

பதினைந்து நாட்கள் கழித்து நூலகத்திற்குச் சென்ற போது இலக்கிய வட்டத்தில் கட்டுரை வெளியாகி இருந்தது. ஆனால் நான் அது பற்றி யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. சி.சு. செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையில் ஒரு கடுமையான எதிர் விமர்சனம் எழுதப்பட்டிருந்தது. தலையங்கத்திலும் விமர்சனம் எழுதியிருந்தார்கள். க.நா.சுப்ரமணியம் அடிக்கடி புனைப் பெயரில் எழுதக்கூடியவர். எனவே அவர் தான் எழுத்து வெளியிடும் கவிதைகள் பற்றி எழுதி இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டார்கள்.
 பின்னால் எனக்கு க.நா.சுப்ரமணியம், சி.சு. செல்லப்பா அறிமுகமானதும் கூட நான் சொல்லவில்லை. சொல்ல வேண்டாம் என்று விட்டுவிட்டேன். ஆனால் 2000-ஆம் ஆண்டில் கி.அ. சச்சிதானந்தம் எழுத்து சிறுகதைகள், கவிதைகள், விமர்சன கட்டுரை கொண்ட தொகுப்பு ஒன்றைக் கொண்டு வந்தார். அதில் என் கட்டுரையும் இருந்தது. பல ஆண்டுகள் சென்றுவிட்டன. க.நா.சுப்பிரமணியம் இல்லை. சி.சு. செல்லப்பாவும் மரணமடைந்து விட்டார். எனவே அந்தக் கட்டுரையை எழுதியது நான்தான் என்று போட்டு உடைத்தேன். "நாங்கள் க.நா.சுப்ரமணியம் கட்டுரை என்று நினைத்துவிட்டோம்' என்றார்.
 க.நா.சுப்ரமணியத்தை சென்னை, பெங்களூர், மைசூர், திருவனந்தபுரம், சிதம்பரம் என்று பல ஊர்களிலும் சந்தித்து உரையாடி இருக்கிறேன். அவர் நாம் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொள்வார். கடுமையான வார்த்தைகளால், கோபமாகப் பதில் சொல்லமாட்டார். மென்மையாக "எனக்கு இப்படி தான் படுகிறது' என்பார். அது விவாதங்களில் அவருக்குப் பெரிய ஈடுபாடு இல்லை என்பதைத்தான் காட்டியது. தமிழ் இலக்கியம் பூராவையும் சர்வதேச அரங்கிற்குக் கொண்டு போக வேண்டும் என்பது அவர் பெருங்கனவாக இருந்தது. சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். கலித்தொகைப் பாடல்கள், திருக்குறள் இன்பத்துப்பாலில் சில பாடங்களை மொழி பெயர்த்தார். தமிழ் நாவல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்ட வேண்டும் என்ற ஆவலில் யுனஸ்கோவிற்காக ராஜமையரின் (Rajam Iyer) "கமலாம்பாள் சரித்திரத்தை' மொழி பெயர்த்தார். மொழி பெயர்ப்பில் ஏற்பட்டப் பிரச்னையில் புத்தகம் வெளிவராமல் போய்விட்டது.
 நீல-பத்மநாபன் "தலைமுறைகள்' வெளிவந்ததும், அது தமிழில் மிகச்சிறந்த நாவல். பலரும் படிக்க வேண்டியது. எழுதப்பட்ட மொழியைக் கடந்து வாழுமென்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தனக்கு வேண்டிய பதிப்பகத்தின் வழியாக புத்தகமாக வெளிவர ஏற்பாடு செய்தார். இந்தியாவின் சிறந்த பத்து நாவல்கள் என்று ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையில் தலைமுறைகளுக்கு இடமளித்தார். எனது "சூரியவம்சம்' நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். மொழி பெயர்ப்பை என்னிடம் கொடுத்து" பதிப்பாளரைக் கண்டுபிடி'' என்றார். பல ஆண்டுகள் கழித்து "சூரியவம்சம்' நாவல் கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடாகப் பிரசுரமானது.
 தமிழ்ச் சிறுகதைகள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தமிழ்ப் புத்தகங்கள், தமிழ் இலக்கியச் சுழல், தமிழ்ப் பத்திரிகைகள் பற்றி எல்லாம் ஆங்கிலத்தில் எழுதினார். அது பலரையும் பாதித்தது.
 அவர் புதுமைப்பித்தன் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் தமிழ்ச் சிறுகதையை உலகத்தரத்திற்குக் கொண்டு போனவர் என்று சொல்லிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார். சாகித்ய அகாதெமி சார்பில் புதுமைப்பித்தன் கருத்தரங்கு ஒன்றை நடத்தினார். அதில் வல்லிக்கண்ணன், வெங்கட் சாமிநாதன், வலம்புரிஜான் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன். நா.பார்த்தசாரதி, சுந்தர ராமசாமி பெயர்கள் அழைப்பிதழில் இருந்தன. ஆனால் அவர்கள் கலந்து கொள்ள இயலாமல் போய்விட்டது.
 புதுமைப்பித்தன் பெரிய மேதைதான். ஆனால் அவரின் பல சிறுகதைகள் முழுமையடையாமல், அவசர கதியில் எழுதப்பட்டதாகவே இருக்கிறது. அவரின் கோபம் கதைகளில் தெரிகிறது. கதைகள் கோபத்தில், கோபத்தை வெளிப்படுத்தவே எழுதப்படுவதில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். கருத்தரங்கம் முடிந்ததும் க.நா.சுப்பிரமணியம் சொன்னார்:
 "நீ சொல்வது சரி தான். அதாவது இலக்கியத்தில் ஒரு பார்வை- ஒரு நோக்குத்தான் சொல்லப்பட வேண்டும் என்பது இல்லை. எவ்வளவு சிறந்த ஆசிரியராக இருந்தாலும் அவருக்கு எதிராக மாறுபட்ட வற்றையும் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்வது தான் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லும்'' என்றார். மற்றவர்களின் படைப்புக்களைப் பற்றி விமர்சனத்தை எழுதும் அவர், அது பற்றி விமர்சிக்கப்படுவதை அதிகமாக வரவேற்றார்.
 (அடுத்த இதழில்
 யு.ஆர். அனந்தமூர்த்தி)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com