கலைஞர்களை மக்கள் கடவுளுக்கு நிகராகப் பார்க்கிறார்கள் -ஜமுனா

இருநூறுப் படங்களுக்கு மேல் நடித்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிப் படங்களில் நடித்து மக்களால் பாராட்டப் பட்டவர். இரண்டு முறை ஃபிலிம் ஃபேர் விருது வாங்கியவர் ஜமுனா.
கலைஞர்களை மக்கள் கடவுளுக்கு நிகராகப் பார்க்கிறார்கள் -ஜமுனா

பிடித்த 10
 இருநூறுப் படங்களுக்கு மேல் நடித்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிப் படங்களில் நடித்து மக்களால் பாராட்டப் பட்டவர். இரண்டு முறை ஃபிலிம் ஃபேர் விருது வாங்கியவர் ஜமுனா. தனக்குப் "பிடித்த பத்து' பற்றிக் கூறுகிறார்:
 செல்லப் பிரணிகள்: வாயில்லா ஜீவன் மீது எனக்கு என்றுமே பாசம் அதிகம். அந்தக் காலத்தில் எங்கள் வீடு சென்னையில் உள்ள அடையாறு பகுதியில் இருந்தது. ஒரு நாள் நான் காரில் போகும் போது மான் குட்டி ஒன்று சாலையோரம் நடக்க முடியாமல் படுத்திருந்தது. அதைப் பார்த்து விட்டு சும்மா போகாமல் நான் வீட்டிற்கு எடுத்து வந்து வளர்த்தேன். ஓரளவிற்குப் பெரிதாக வளர்ந்தப் பிறகு, அந்தப் பகுதியில் விட்டு விட்டேன். எங்கள் வீட்டில் நாய், பூனை என்று பலவகை செல்லப் பிரியாணிகளை வளர்த்துள்ளேன்.
 சென்னை: என் போன்ற பலருக்கும் வாழ்வளித்த நகரம். நான் கர்நாடகாவில் உள்ள ஹம்பி நகரில் பிறந்து பின்னர் அங்கிருந்து சென்னைக்கு வந்து, இங்கு நடிகையாக நடித்து, பணம், புகழ் கொடுத்து, வாழவைத்த நகரம் இந்த சென்னை. அன்றிருந்த சென்னை இன்று எவ்வளவோ மாறிவிட்டது. ஆனாலும் எனக்கு சென்னையை என்றுமே மறக்க முடியாது. இங்குள்ள ஒவ்வொரு இடமும் அத்துப்படி. நாங்கள் வேலை செய்த கோடம்பாக்கத்தை மறக்க முடியுமா? எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெமினி போன்ற மாபெரும் கலைஞர்கள் வாழ்ந்த இந்த நகரத்தை சொல்லலாமல் இருக்க முடியுமா?
 சாப்பாடு: நான் சுத்தமான சைவம். ஆரம்பத்தில் இருந்து இதை நான் கடைபிடிக்கிறேன். சைவ உணவகங்களில் அந்தக் காலத்தில் எனக்குப் பிடித்தமான ஓட்டல் சவேரா. அங்கு நான் அதிகம் கேட்டு விரும்பி சாப்பிடுவது ஆப்பம் தேங்காய்பால். சிலசமயம் படப்பிடிப்பின் உணவு இடைவேளையில் நான் இதைத்தான் சாப்பிடுவேன். அது தவிர ரசம், சாம்பார், தயிர் என்று பலவும் விரும்பி சாப்பிட்டாலும், தயிர் சாதம் மீது கூடுதல் விருப்பம் உண்டு.
 பேரன்: இன்று நான் அதிக நேரத்தை செலவு செய்வது என் பேரன் அபிஷ் உடன் மட்டுமே. இப்பொழுதெல்லாம் நான் அவன் இல்லாமல் வாழ்வது கடினம் என்று கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்து விட்டேன்.
 படங்கள்: சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். அதில் தமிழில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் அது "மிஸ்ஸியம்மா' (1955). விஜயா வாகினி சார்பில் பி.நாகிரெட்டியும் சக்ரபாணியும் இணைந்து தயாரித்தப் படம். இதற்கு மேலும் ஒரு சிறப்பு இருக்கிறது. அது என்ன தெரியுமா? இயக்கம் எல்.வி.பிரசாத். அதில் கதாநாயகன் ஜெமினி கணேசன். அடுத்து சொல்ல வேண்டும் என்றால் ஏ.வி.எம். தயாரித்த "குழந்தையும் தெய்வமும்'. இதில் கதாநாயகன் ஜெய்சங்கர். இதை இயக்கியவர்கள் கிருஷ்ணன் -பஞ்சு. இந்தியில் "மிலன்'. இப்படியாக நடித்த 200 படங்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம்.
 பாராளுமன்ற உறுப்பினர்: எப்பொழுதுமே என்னைப் பாராட்டிய மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புவேன். அப்படிப் பட்ட ஒரு வாய்ப்பு 1980-ஆம் ஆண்டு கிடைத்தது. பாராளுமன்ற தேர்தலில் ராஜமன்றி மக்களவைத் தொகுதியில் வென்றேன். என்னால் முடிந்த உதவிகளைப் பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் செய்தேன்.
 விருதுகள்: இரண்டு ஃபிலிம் ஃபேர் விருதுகள், ஆந்திர அரசின் என்.டி.ஆர். தேசிய விருது, தமிழ் நாடு அரசின் எம்.ஜி.ஆர். விருது போன்ற பல்வேறு விருதுகள் கிடைத்திருக்கிறது.
 குடும்பம்: என் கல்யாணம் காதல் கல்யாணம் இல்லை. பெரியவர்கள் பார்த்து முடிவு செய்தது. அவர் பெயர் ஜூலாரி ரமணா ராவ், உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். என் மகன் பெயர் வம்சி கிருஷ்ணா, மகள் ஸ்ராவந்தி இருக்கிறார்கள். பையன் அவனது தந்தையைப் போலவே பேராசிரியராக வெளிநாட்டில் இருக்கிறான். ஆந்திராவில் பெண்ணுடன் இருக்கிறேன். சந்தோஷமான, நிறைவான வாழ்க்கையை வாழ்கிறேன்.
 கலையும் கலைஞர்களும்: இந்திய திரைபடங்களும் திரை கலைஞர்களும் மிகவும் பிரபலமானவர்கள். அதிலும் தென்னக திரை உலகக் கலைஞர்களை இங்கு உள்ள மக்கள் கடவுளுக்கு நிகராகப் பார்க்கிறார்கள் என்று சொன்னால் அது மிகை இல்லை. இங்கிருந்துதான் 5 முதலமைச்சர்கள் வந்துள்ளனர். அப்படிப்பட்ட தென்னக திரை உலகில் இருந்து நான் வந்துள்ளேன் என்பது எனக்குப் பெருமையான விஷயம்.
 மரியாதை: என்னைப் பொருத்தவரை சிறியவர் பெரியவர் என்று பாகு பாடு இல்லாமல் நான் எல்லோருக்கும் மரியாதை கொடுப்பேன். காரணம், எல்லோரும் மனிதர்கள் தான். இதில் ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். நான் நடிக்க ஆரம்பித்த நாட்களில் என்னுடன் நடித்தவர்கள் எல்லோரும் என்னை விடப் பெரியவர்கள். ஓரளவிற்கு அனுபவம் பெற்ற பின் மரியாதை என்னுடன் கூடவே வந்துவிட்டது. குறிப்பாகத் தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் மரியாதை கொடுப்போம்.
 -சலன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com