Enable Javscript for better performance
கம்பனும் திரைப்படக் கவிஞர்களும்- Dinamani

சுடச்சுட

  
  sk2

  தமிழ் இலக்கிய வானில் ஜொலிக்கக் கூடிய சூரியனைப்போன்றவர் கம்பர். தனக்கென்று ஒரு வட்டத்தை வரைந்து அதற்குள் நில்லாமல் ராமர் கதையை ஆராய்ந்து தனக்குள் உள் வாங்கி  நேர்த்தியான ஒரு கதையை "கம்பராமாயணம்' என்ற காவியத்தைக்கொடுத்துள்ளார். அவருடைய கவித்துவமான கற்பனைக்கு எல்லையேயில்லை எனக் கவிப்புலமை மிக்க அனைவரும் பாராட்டியிருக்கிறார்கள்.கம்பரின் கற்பனை வரிகளைக் காதலித்த நம் தமிழ்த் திரைப்படக் கவிஞர்கள் அவ்வப்போது கம்பனின் கவிதைக் கருத்துக்களை எளிமையான பாடல்களாக தந்துள்ளனர்.  

  தமிழ் இலக்கியங்களில் ஒரு சிலவற்றை எளிமைப்படுத்தி நமக்குத் தந்தவர் கவியரசு கண்ணதாசன். தமிழ்த் திரைப்படப் பாடல்களிலும் இதனைக் கையாண்டுள்ளார். அசோகவனத்தில் வருத்தமாக உட்கார்ந்திருந்த சீதை அனுமனிடம் ராமன் ஏற்கெனவே அவளிடம் சொன்னதை நினைவுபடுத்தி கீழ்க்கண்டவாறு சொல்வாள்.

  ""இந்த இப்பிறவிக்கு இருமாதரைச்
  சிந்தையாலும் தொடேன்''

  இது கம்பரின் வரிகள், இந்த வரிகளைப் படித்தால் புரியாது. ஆனால், கவியரசு கண்ணதாசன் கருத்துச் சிதையாமல் எளிமையான வார்த்தைகளைக் கொண்டு எழுதி திரைப்பட பாடலாகத் தந்துள்ளார். "வசந்தமாளிகை' படத்தில் "மயக்கமென்ன இந்த மெளனமென்ன' பாடலில்

  "உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி
  நான் உள்ளத்தினாலும் தொடமாட்டேன்'

  என்று எழுதியிருப்பார்.  

  இந்த இடத்தில் "வசந்தமாளிகை' பாடல்கள் பற்றிச் சொல்லியாக  வேண்டும். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எட்டு. பாடல் கம்போசிங்குக்காக இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் கதாசிரியர் பாலமுருகனுடன் மற்றவர்களும் கவிஞருக்காக காத்திருக்கிறார்கள்.  கவிஞரும் வருகிறார், பாலமுருகனிடம் கதையையும் பாடல்கள் வரவேண்டிய இடத்தையும் (situation) கேட்கிறார்.  எட்டு பாடல்களையும் ஒரே நாளில்எழுதி முடிக்கிறார் கவியரசு கண்ணதாசன். எளிமையான வரிகளை தந்ததன் மூலம் நமக்கு கம்பரையும் ஞாபகப்படுத்துகிறார். 

  கம்பர் தன்னுடைய கதையில் ராவணணின் ஆசைக்கு அடிபணியுமாறு சீதையை அரக்ககர்கள் கோபத்தோடு சொல்ல, சீதை அழுதுகொண்டே சிரிக்கின்றாள். அதைக் கம்பர் "கண்கள் கலுழ்ந்தே நகுகின்றாள்' என்று வர்ணிக்கிறார். இந்த வரியை கவியரசு கண்ணதாசன் 1961-ஆம் ஆண்டு வெளிவந்த "பாவமன்னிப்பு' படத்தில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் "சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்'  என்ற பாடலில் கம்பரின் வரிகளுக்கு "நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்' என்று எழுதியிருப்பார்.கவியரசு கண்ணதாசன் பல இடங்களில் கம்பனின் எழுத்துக்களையும் கண்ணனையும் எளிமைக்காக கையாண்டு நமக்கெல்லாம் புரியும்படி எழுதியிருப்பார்.

  கவியரசு கண்ணதாசனின் சமகாலத்துக் கவிஞரான வாலி ஏராளமான திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.  ராமாயணத்தை "அவதார புருஷன்' என்ற தலைப்பில் புதிய கவிதை நடையில் எழுதியவர். எனவே ராமாயணத்தை முழுவதும் அறிந்தவர். சீதையைப் பிரிந்த வேதனையில் இருக்கும் ராமனுக்கு காட்டில் எங்கு பார்த்தாலும் சீதையின் முகம்தான் தெரிகின்றது. அப்போது அருகிலிருந்த இலக்குவனிடம் தன்னுடைய நிலையை

  ""கானகம் முழுவதும் கண்ணில் நோக்குங்கால்
  சானகி உருவெனத் தோன்றும் தன்மைய'' 

  என்று சொன்னதாக கம்பர் பாடியிருப்பார்.

  இதைக் கவிஞர் வாலி "ஊரெல்லாம் உன்பாட்டு' என்ற படத்தில் இளையராஜா இசையில் "ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்குது' என்று ஆரம்பிக்கும் பாடலில் 

  ""என் மனம் உன் வசமே கண்ணில் 
  என்றும் உன் சொப்பனமே
  விழி காணும் காட்சி 
  யாவும் உந்தன் வண்ணக் கோலம்தான்'' 

  என்று எழுதியிருப்பார் வாலி.

  மகாகவி பாரதியும் விதி விலக்கல்ல, கம்பனின் கவிகளில் மயங்கியிருப்பான் போல தன்னுடைய "தீர்த்த கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே' என்ற கவிதை வரிகளில் ""பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி'' என்று எழுதியிருப்பார். 

  எம்.ஜி.ஆருக்கு பாடல் எழுதிய  கவிஞர்கள் அனைவருமே பேரும் புகழும் பெற்றவர்கள். அதில் ஒருவர் கவிஞர் முத்துலிங்கம். இவரும் கம்பனின் கவிதைகளுக்கு பாதிப்பான கவிஞர். பொதுவாக தமிழ்க் கவிஞர்கள் பெண்களின் முகத்தை நிலவிற்கு ஒப்பிடுவது தொன்றுதொட்டு வரும் செயலாகும். கம்பரும் அதற்கு விதிவிலக்கல்ல.  

  ""தன்மதியாம் என உரைக்கத்தக்கதோ
  வெண்மதி பொலிந்தது மெலிந்து தேயுமால்''

  என்று பாடியிருப்பார். இதைக் கவிஞர் முத்துலிங்கம், "உன்னால் முடியும் தம்பி' திரைப்படத்தில் இளையராஜா இசையில் "இதழில் கதை எழுதும் நேரமிது' என்ற பாடலில் 

  "நாளும் நிலவது தேயுதுமறையுது
  நங்கை முகமென யாரதைச் சொன்னது'' 

  என்று  எழுதியிருப்பார்.

  கவிஞர் மருதகாசி கம்பனுடைய வரிகளை எடுத்தாளாதவன் கவிஞரே அல்ல என்று அடிக்கடி சொல்வார். நடிகை சந்திரகாந்தாவும் அவரது சகோதரரும் நடிகருமான சண்முகசுந்தரம் "ஆடலரசிஅனார்கலி' என்ற நாட்டிய நாடகத்தை 1960-ஆம் ஆண்டுகளில் நடத்தினார்கள். இதில் வருகின்ற பாடல்கள் அனைத்தையும் கவிஞர் மருதகாசி எழுதியிருப்பார். இப்பாடல்களில் ஒரு சில இடங்களில் கம்பரின் தாக்கம் வெளிப்படும். இவர்களைத் தவிர வேறு பல கவிஞர்களும் கம்பரின் கவிகளுக்கு எளிமையான வரிகளை தமிழ்த் திரைப்படப்பாடல்களில் நமக்குத் தந்துள்ளார்கள்.

  இதையெல்லாம் கடந்து அடுத்த தலைமுறைத் தமிழ்மக்கள் கம்பனை மறந்து விடுவார்கள் என்று பேசிக்கொண்டிருக்கும்போது, இல்லை நாங்கள் இருக்கிறோம் என்ற தமிழ்த் திரைப்பட கவிஞர்களின் குரல்கள் நமக்குக் கேட்கிறது. கம்பனின் கவிக்கருத்துக்களை எளிமையான திரைப்படப்பாடல்கள் மூலம் கவிஞர்கள் கொடுத்தார்கள், கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள், எதிர்காலத்தில், "கம்பன் ஏமாந்தான்' என்ற கண்ணதாசன் வரிகளை பொய்ப்பிக்கும்  வகையில் கம்பனின் வரிகளை தமிழ்த்திரைப்பட கவிஞர்கள் எடுத்தாளவேண்டும். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai