Enable Javscript for better performance
நம்மால் நுழைந்து விட முடியாத உலகம்- Dinamani

சுடச்சுட

  
  sk10

   

  வடபழனி சிக்னலில் ஆட்டோவில் நிற்கும் போது அழுக்காக ஒரு சிறுவன் ரைம்ஸ் புத்தகங்கள் விற்றுக் கொண்டு வந்தான். "சார் சார் ரைம்ஸ் புக்ஸ் சார் 10 ரூபாதான் சார்' என்றான் தவிப்பாக. நான் 10 ரூபாயை அவன் கையில் திணித்து விட்டு "புக்கெல்லாம் வேணாப்பா  வெச்சுக்க' என்றேன். அவன் பதறிப்போய் "சார். சும்மால்லாம் வேணாம் சார் புக் வாங்கிக்கங்க சார்' என புக்கை கையில் திணித்தான். அவன் பார்வையில் அவ்வளவு ஏக்கம். அதே இடத்தில் இன்னொரு புறம் பளீச் ஆடைகளுடன் ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள். இந்த இரண்டுக்குமான மன ஓட்டம் என்னை  எங்கெங்கோ இழுத்துப் பிடித்தது. அப்படி எனக்குள் தோன்றியதை, நூல் பிடித்து எழுதி சேர்த்தேன். இன்னொரு பக்கம் இந்த வாழ்க்கையின் மீது சிறுவர்கள் கொண்டிருக்கும்  கோபத்தின் வெளிப்பாடாகவும் இதை முன்னெடுத்து வந்தேன். படம் முழுக்கவே சீரியஸ்த்தனம் தொற்றிக் கொள்ளலாம். அழுத்தமாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர்  ராஜவேல் கிருஷ்ணா. "பிழை' படத்தின் இயக்குநர்.


  கதை என்பதை தாண்டி, அது கையாளப்படுகிற விதங்களுக்குதான் இப்போது வெற்றி முகம்... இது எந்த விதத்தில் மாறுபடும்...?

  நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நாகரீக மாற்றங்கள், பொருளாதார நெருக்கடி, கிராமத்து வாழ்க்கை மீதான வெறுப்பு, கல்வி முறையின் மீது விழுந்த சவுக்கடி விமர்சனங்கள், அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கை, துரித உணவு முறை என ஒவ்வொன்றும் சிறுவர்களின் கோபத்தைச் சுமந்துக் கொண்டுதான் நிற்கின்றன. இதை விட ஒரு கொடுமை. ஒரு தகப்பனாக எனக்கும் என் மகளுக்குமான இடைவெளியை யாரோ போட்டு வைத்த சட்ட திட்டங்கள் தீர்மானிப்பதுதான். பெண்களுக்காவது வீட்டில் அம்மாக்கள் இருக்கிறார்கள். உடல் சம்பந்தமான சந்தேகங்களை மகளுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டியது தன்னுடைய கடமை என்று நினைக்கிற பக்குவம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் சிறுவர்களுக்கு அப்படி இல்லை.  அதனால் நம் நாட்டில் வயது பெண்களை விட, வயது பையன்கள்தான் பாவம். தன் உடலில் நடக்கிற மாற்றங்களை நினைத்து குழம்பி, தேவையில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். சில நேரங்களில் நாம் மீட்கவே முடியாத தூரத்துக்குப் போய் விடுகிறார்கள். நம் வீட்டிலேயே வளர்ந்தாலும், நிறையச் சிறுவர்கள் காணாமல் போனவர்கள் பட்டியலில்தான் இருக்கிறார்கள். இப்படி நிறைய விஷயங்களை இந்தப் படம் பேசும். 

  பேச வேண்டிய விஷயம்தான்... வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்...?

  கல்வி இல்லாமல் இங்கே எதையும் சாதிக்க முடியாது என்பதுதான் எடுத்து வைக்கும் மையம். பெற்றோர்களை வெறுத்து, கல்வியை வெறுத்து ஓடும் சிறுவர்கள்தான் நீங்கள் கடந்து போகும் சிக்னலில் நின்று கையேந்துகிறார்கள். அவர்களுக்கான ஒரு படமாக இது இருக்கும். இன்னொரு பக்கம் பெற்றோர்களின் நியாய - தர்மங்களையும் எடுத்து வைக்கிறேன்.

  ஏக்கம், கனவு, ஆசை, பொறாமை, வன்மம், ஈகோ, மன்னிப்பு, காதல், தண்டனை என எதுவும் இல்லாத இதயங்கள் சிறுவர்களுக்கானது. உண்மையில் பரிசுத்தங்கள். இல்லாத போது ஏங்குவதும், இருக்கிற போது ஆடுவதுமான மன நிலை அவர்களுக்கு இருப்பதில்லை. எப்போதும் ஒரே மன நிலைதான். குழந்தையாக வந்து குழந்தையாகி போகும் இந்த வாழ்க்கையில், எல்லோரும் மீண்டும் குழந்தையாகி விடுகிற தருணத்தைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம். என்ன முயற்சி செய்தாலும், நம்மால் நுழைந்து விடவே முடியாத உலகம் அது.  அதனால்தான் உலக இலக்கியங்களும், சினிமாக்களும், கதைகளும் குழந்தைகளைப் பற்றியே பேசி விடுகின்றன. ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்து கிடக்கும் குழந்தைதான் மனித இனத்தின் பேரழகு. அதுதான் இந்தக் கதையின் ஊடாக வெளிப்படும். 

  பொதுவாக, தமிழ் சினிமாவில் சிறுவர்கள் இயல்புக்கு மீறி அதிகமாக பேசுவது மாதிரி காட்டுகிறார்கள்...?

  இதில் சிறுவர்களை அதிபுத்திசாலியாகவோ, மேதாவியாகவோ காட்டவில்லை. உண்மையில் சிறுவர்களின் உலகம் வேறு. 

  அதற்குள் நிறையவே பயணம் செய்து வசனங்கள் எழுதியிருக்கிறேன். காட்சிகள் வைத்திருக்கிறேன்.  சிறுவர்களின் குட்டிக் குட்டி சந்தோஷங்களைப் பதிவு செய்திருக்கிறேன். இந்தப் படம், இயக்குநர் பார்வையில சிறுவர்களின் வாழ்க்கையைச் சொல்லவில்லை. சிறுவர்களின் பார்வையிலேயே அவர்களின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கிறேன். 

  யாரெல்லாம் நடிக்கிறார்கள்...?

  "காக்கா முட்டை'  படத்தில் நடித்த ரமேஷ், "அப்பா' படத்தில் நடித்த நாசத் இருவருக்கும் கதையில் தனி இடம். மேலும் தர்ஷினி, ராகவேந்திரா சிரஞ்சீவி, பிருந்தா, அரவிந்த் காந்த், சார்லி, மைம் கோபி, ஜார்ஜ் இப்படி ஏக நடிகர்கள். சிறுவர், சிறுமிகளின் கள்ளம் கபடமில்லாத கலாட்டாக்கள் இந்தக் கதையின் இன்னொரு பகுதி. அதற்காக இன்னும் சில சிறுவர்களைத் தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறோம். கதையைக் கேட்டதும் தயாரிக்க முன் வந்த டர்னிங் பாயிண்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின்  தாமோதனுக்கு  நன்றி. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai