கடின உழைப்புதான் வெற்றிக்கான வழி!: யோகி பாபு

தலைக் காட்டும் போதெல்லாம் தியேட்டரில் காமெடி பட்டாசு கொளுத்தும் யோகி பாபுவின் அடுத்த அவதாரம் கதாநாயகன்.  "தர்மபிரபு', "ஜாம்பி', "பன்னிக்குட்டி'  என கதாநாயகன் வேடத்துக்கு வரிசைக் கட்டி நிற்கிறது

தலைக் காட்டும் போதெல்லாம் தியேட்டரில் காமெடி பட்டாசு கொளுத்தும் யோகி பாபுவின் அடுத்த அவதாரம் கதாநாயகன்.  "தர்மபிரபு', "ஜாம்பி', "பன்னிக்குட்டி'  என கதாநாயகன் வேடத்துக்கு வரிசைக் கட்டி நிற்கிறது 

படங்கள். காமெடியனாக "தர்பார்', "தளபதி 63', "மிஸ்டர் லோக்கல்', "அசுரகுரு', "அசுரன்' என நிரம்பி வழிகிறது பாபுவின் கால்ஷீட். கவுண்டமணி, வடிவேலு வரிசையில் பாபுவின் கால்ஷீட்டுக்குக் காத்திருக்கிறது கோடம்பாக்கம்.

"வெற்றிக்குக் குறுக்கு வழி என எதுவும் இல்லை. கடின உழைப்புதான் வெற்றிக்கான ஒரே நியாயமான வழி!  - இரண்டே வரிகளில் சொல்லிச் சிரிக்கிறார் யோகி பாபு.

இப்போது அதி வேக பரபரப்பு... இதற்கெல்லாம் முன்னாடி எப்படி இருந்தது வாழ்க்கை...

காலையில் எழுந்து தெருவில் கால் வைக்கும் போதே, யாராவது இந்தக் கேள்வியோடு வந்து விடுவார்கள், அப்புறம் பாஸ்... என்ன போயிட்டிருக்கு.. கோடம்பாக்கத்தில் நான் அதிகமாக எதிர்கொண்ட வார்த்தைகள் இதுதான். தினம் தினம் இப்படி எதிர் படுபவர்களிடமும், குடும்பத்தாரிடமும், உறவுகளிடமும் பதில் சொல்ல முடியாத கேள்விகள் துளைத்தெடுக்க, தவித்து அலைந்தவர்களில் நானும் ஒருவன்.   காலையில் 8 மணிக்கு வாய்ப்பு தேடி அலைய ஆரம்பித்தால், எல்லாம் முடிய இரவு ஆகிவிடும். இது தவிர, ஏரியா பசங்க கூட கிரிக்கெட் விளையாடப் போவேன். அதற்குப் போகும் சமயத்தில் யோசிப்பேன். ஏனென்றால் அப்போது "லொள்ளு சபா'வில் இருந்த நேரம். வேலை பெரிதாக இல்லை. ஏதாவது கேட்பார்கள் என்று பாதி நாள் போகமாட்டேன். ஜெயிக்க வேண்டும் என்கிற வெறி மட்டுமே இருந்தது. அதற்காக ஓடிக் கொண்டே இருந்தேன். என் வாழ்க்கையில் அவமானங்கள் நிறைய இருக்கிறது. புறக்கணிப்புகள் நிறைய உண்டு. பசி நிறைந்த நாள்கள் அவ்வளவு இருக்கிறது. எனக்கும் என் செருப்புக்கும்தான்  பட்ட அவமானங்கள் தெரியும். எனக்கு என்ன தகுதி இருக்கோ, அதற்கு ஏற்ற இடம் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

பெரிய ஹீரோக்கள் படங்களில் நடிக்கிறீங்க... எப்படி இருக்கிறது அனுபவம்...?

ஒரு பக்கம் பயம் . இன்னொரு பக்கம் சந்தோஷம் இருக்கும்.  விஜய் சார் ஆகட்டும், அஜித் சார் ஆகட்டும்... அவர்களுக்கும் இது தெரியும். "விஸ்வாசம்' பண்ணும்போது, உங்களுக்கு இன்னொரு பட ஷூட்டிங் இருக்குல்ல. முடிச்சுட்டு வந்திடுங்க'னு சொல்லி அனுப்பி வைத்தார், அஜித் சார். விஜய் சார்கூட என்னை இப்படிச் சொல்லி  அனுப்பியிருக்கிறார். ஜெயம் ரவி சார் எனக்கு ரொம்ப நெருக்கம். என்னை வைத்து படம் இயக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார். அதற்காக இரண்டு மாதமாக வீட்டில்தான் இருக்கிறார். "என்னய்யா இப்படி உட்கார வெச்சிட்டே'னு அவ்வப்போது ஜாலியாகச் சொல்லுவார். ஆனா, என் கண்டிஷன் என்னவென்று அவருக்குத் தெரியும்." நல்லபடியா எல்லாத்தையும் முடிச்சுட்டு வாங்க, பண்ணுவோம்'னு சொல்லியிருக்கார். பல நடிகர்கள், அவரை அனுப்பிவிடுங்க, போயிட்டு வரட்டும்'னு சொல்லுவார்கள். இப்போது கூட விஷால் சார் படத்தின்  படப்பிடிப்பை முடித்து விட்டு, இன்னொரு படத்துக்கான படப்பிடிப்புக்கு கிளம்பி விட்டேன். ஜோதிகா மேடம் நடிக்கும்" ஜாக்பாட்'  படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.  இப்படித்தான் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. 

கதாநாயகனாக புரமோஷன் அடைந்திருக்கிறீர்கள்.... வாழ்த்துகள்..

நன்றி சார்... அதைக் கூட பிரச்னை ஆக்கி விட்டார்கள். இனி மேல் நான் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன்.  காமெடியனாக நடிக்க மாட்டேன் என்று எல்லாவற்றிலும் நியூஸ் தட்டி விட்டார்கள். சத்தியமாக அப்படி ஏதும் கிடையாது. ஹீரோவாக நடிப்பதற்கான முகம் இது கிடையாது. அதற்கான தகுதியும் எனக்கு இல்லை. ஏனென்றால், சாம் ஆண்டர்சன் சமீபத்தில் ஒரு கதை சொன்னாரு. அதுல படம் முழுமையாக வருகிற  மாதிரி  கூர்க்கா கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அவ்வளவுதான். வேறு ஏதும் கிடையாது. இதை சிலர் பெரிதாகப் போட்டு விட்டார்கள்.

நான் கடைசி வரைக்கும் காமெடியன்தான்.  எனக்கு அதுதான் தகுதி. மக்களுக்கு அதுதான் பிடித்திருக்கிறது. யார் என்ன சொன்னாலும் நம்ப வேண்டாம். நான் காமெடியனாதான் இருப்பேன். அடுத்து வருகிற தர்மபிரபு படமும் அப்படித்தான். அதில் என் பங்கு என்னவென்று படம் பார்க்கும் போது தெரியும். கவுண்டமணி, வினுசக்ரவர்த்தி ஆகிய இரண்டு ஜாம்பவான்களுக்கு அடுத்து நான் இதில் எமதர்மனாக நடிக்கிறேன். என்னை ஹீரோவாகப் போட்டு தயாரிப்பாளர்கள் விளம்பரப்படுத்துகிறார்கள். அதற்கு நான் பொறுப்பாக முடியாது. 

பொண்ணு பார்த்து விட்டார்களா..?.

ஆமாம்.. அதையும் முடித்து விட வேண்டியதுதான். அம்மாவுக்கு அதில் பெரும் விருப்பம். அம்மாவின் விருப்பத்துக்கு யார் தான் மறுப்பு சொல்லுவார்கள். உங்களுக்குத்  தெரியாமல் எப்படி கல்யாணம் முடிப்பேன்.  கண்டிப்பாக உங்களுக்குத் தெரியவரும். நான் நல்ல அழகான பொண்ணு எதிர்பார்க்கிற மாதிரி, அந்தப் பொண்ணும் நல்ல மாப்பிள்ளை வேண்டும் என கேட்பதில் என்ன தவறு இருக்கிறது. இப்படியே பெண் பார்க்கும் வேலை போய் கொண்டு இருக்கிறது. தகுதிக்கு ஏற்ற பெண் கிடைத்தால் போதும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com