விடியல் எப்போது?

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பழமையான ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயில் உள்ளது.
விடியல் எப்போது?

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பழமையான ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களை ஆசிர்வதித்து குதூகலமூட்டும் கோயில் யானையின் பெயர் கோதை.. கோதை தண்ணீர் வசதி இன்றிச் சுட்டெரிக்கும் வெப்பத்தில் தவிக்கும் நிலை உள்ளது. கோதைக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

1998- ஆம் ஆண்டு அசாமில் உள்ள லகீம்பூரில் பிறந்த கோதை, 2001- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி குட்டி தேவதையாக இக்கோயிலுக்கு அழைத்து வரப்பட்டவள். தற்போது கோதையின் வயது 20. கோயிலில் நடைபெறும் முக்கிய விசேஷங்கள் என்றால் கோதை ஸ்பெஷல் அலங்காரத்துடன் பவனி வருவாள். கடந்த சில மாதங்களுக்கு முன் தேக்கப்பட்டிப் பகுதியில் நடந்த புத்துணர்வு முகாமுக்கு சென்று வந்தது கோதையின் லேட்டஸ்ட் வெளியூர் விசிட். அங்கு அவள் செய்த சேட்டைகள் புகைப்படங்களாக இணையதளத்தில் உலா வருவதை இப்போதும் ரசிக்க முடிகிறது. 

சரி கோதையின் இப்போதையை நிலை  என்ன? கோயிலின் எதிரில் உள்ள மண்டபத்தில் கால்கடுக்க நிற்க வைக்கப்பட்டுள்ளாள். இங்குச் சிமெண்ட் தரை, காங்கீரிட் மேல் தளம் இருந்தாலும் கோடை வெப்பம் மற்றும் வெப்பக் காற்றால் கோதை தவிக்கும் தவிப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை. கால்களில் இறுக்கிப் பிடிக்கும் சங்கிலி பிணைக்கப்பட்டு  சிறிய கொட்டகையில் இருபது மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளாள். 

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் கோயிலில் ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயில் உள்ளது. எனவே தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் கோதைக்குத் தீவிர உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. 

அப்பகுதியில் வசிப்பவர்கள் சிலரிடம் பேசிய போது,  ""கோதை சிறு பிள்ளையாக இருந்தபோது கட்டபட்ட இடம் இது. தற்போது கோதை நன்கு வளர்ந்து விட்டாள். அவளுடைய எடை 3,840 கிலோ. பார்ப்பதற்கு நன்றாக இருப்பினும் நீண்டு வளர்ந்துள்ள வெட்டப்படாத நகங்களுடன் காட்சியளிப்பது வேதனையாக இருக்கிறது. தற்போது கோதையின் இரண்டு கால்களும் சங்கிலியால் இறுக்கமாக ஒரு பாறாங்கல்லில் கட்டப்பட்டு அது பக்கவாட்டில் திரும்புவதற்கோ உட்காருவதற்கோ சிறிதும் இடம் இல்லாமல் மிகச் சிறிய அறையில் வைத்து பராமரிக்கப்படுவதை அனைவரும் பார்க்கலாம்'' என்றனர். 

கோதையைப் பராமரித்து வரும் பாகன் முருகேசனிடம் பேசிய போது, ""கோதையைத் என்னுடைய மகளாகப் பார்க்கிறேன்''  என்றவர்,  தினசரி நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வதாகவும், சத்தான உணவுகளை அளிப்பதாகவும் சொல்கிறார். கோதைக்கும் எனக்கும் தங்குமிடம் இது தான் என்று அந்தச் சிறிய இடத்தைக் காட்டுகிறார். மிருகங்கள் பராமரிப்புச் சட்டம் 5- இன் படி, யானைகளைப் பராமரிப்பதில் அவற்றிற்கான குறைந்தபட்ச இருப்பிட அளவு நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோதைக்குக் கொடுக்கப்பட்டுள்ள இடம் அதில் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை என்பது வேதனையே.

இது போன்ற செயல் யானைக்கு மட்டும் கேடு விளைவிக்கக்கூடியது அல்ல. யானைப் பாகனுக்கும் ஊறு விளைவிக்கும். சில சமயம் யானைக்கு மதம் பிடித்தால் யானைப் பாகன் வெளியே சென்று தப்பித்துக் கொள்ளக் கூட முடியாத நிலையில் தான் உள்ளது. கோதை இருக்கும் இடம் காற்றோட்டம் இல்லாமல் மேற்குப் பார்த்து இருப்பதால் நாள் முழுவதும் வெப்பத்தில் வெந்து போகும்படி இருக்கிறது.

இது பற்றி கோயில் நிர்வாகத்திடம் பேசியபோது, கோயிலிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் ஓர் ஏக்கர் நிலப்பரப்பில் கூடியவிரைவில் வசதியான இடத்தை அமைக்கப்போவதாகச் சொல்கிறார்கள். அதற்கான வேலை இன்னும் இரண்டு மாதத்தில் தொடங்கப்படவுள்ளதாகவும் சொல்கிறார்கள். 

காஞ்சிபுரம் மாவட்டத்தின் முன்னாள் வனத்துறை அதிகாரி சச்சின் துக்காராமிடம், கோதையின் தற்போதைய நிலைப் பற்றி கவனத்திற்குக் கொண்டு சென்ற போது, புதிய இட வசதி பற்றி இப்போது சொன்னதாக சொல்கிறீர்கள். ஆனால் கடந்த ஆண்டிலிருந்து அதிகாரிகள் இதைச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள், ஆனாலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை  என வருத்தம் தெரிவித்தார். 

யானைகளை ஒரே இடத்தில் வெகுநேரம் நிற்க வைப்பது மிகப் பெரிய கொடிய செயலாகும். இதனால் அவை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் அதிகம் பாதிக்கப்படலாம். பொதுவாக யானைகள் 15 மணி நேரம் நடந்தே செல்லக்கூடியவை. துணை இல்லாமல் அதுவும் பெண் யானையை இவ்வாறு ஒரே இடத்தில் நிறுத்தி வைப்பது குற்றச் செயலாகும். 

காட்டில் யானைகள் பெரும்பாலும் பாதுகாப்பாக இருக்கின்றன. வன உயிரின சட்டத்தின்படி யானை பாதுகாக்கப்பட வேண்டிய விலங்காக உள்ளது. கோடை வந்தாலே யானைகளுக்குத் தனிக்கவனம் செலுத்த வேண்டும். யானையைக் கொட்டிலில் மட்டும் நிறுத்தி வைக்காமல் மர நிழலிலும் ஓய்வெடுக்கச் செய்ய வேண்டும் புல் வகைகளை மாற்றி ஆல், அரசு, மலைப் பூவரசு, நாட்டுப் பூவரசு, ஆத்தி, அகத்தி இலைகளைக் கொடுக்கலாம். மாதம் ஒரு முறை வேப்பிலை தரலாம். நீரை துதிக்கையால் குடிப்பதற்கான வசதிகள் செய்ய வேண்டும்.

மேலும் நாள்தோறும் நடை பயிற்சி, நல்ல குளியல் அவசியம், உணவு சரியான விகிதத்தில் கொடுக்கப்பட வேண்டும். தவறான உணவு பழக்கதால் கோயில் யானைகள் நோயுறுகின்றன. பக்தர்கள் தரும் அழுகிய பழங்களால் இப்பிரச்னை ஏற்படுகிறது. இவற்றைப் பக்தர்கள் தவிர்க்க வேண்டும். தற்போது வெப்பம் அதிகமாக உள்ளதால் கோயில் யானைகளை முறையாகப் பராமரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகிறார்கள். 

கோதைக்கு விடியல் எப்போதோ? 


யானை வளர்ப்பு விதிகள் சொல்வது என்ன?


✦    யானை பராமரிப்பு தொடர்பாக 2001-ஆம் ஆண்டு வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் உள்ளன. அவற்றின் உட்பிரிவு 5-ன் படி  யானை பராமரிக்கும் முதலாளி சுத்தமான, சுகாதாரத்துடன் கூடிய நிழல் தரும் சூழலில் அதனைத் தங்க வைக்க வேண்டும்.
✦    காங்கிரீட் அல்லது கடினமான தரையில் அதனை நீண்ட நேரம் நிற்க வைக்கக்கூடாது.
✦    மண் பூமியாக இருக்க வேண்டும். அதுவும் முறையான நிலப்பரப்பாக இருப்பது அவசியம்.
✦    யானை தங்க வைக்கப்பட்டுள்ள இடம் குறைந்த பட்ச அளவு உயரம் 9 மீட்டர், நீளம், அகலம் தலா 6 மீட்டர் இருக்க வேண்டும். 
✦    முறையாகக் கழிவு நீர் வெளியேற வசதியை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
✦    யானை தங்கவைக்கப்பட்டுள்ள மேல் கூரை இரும்பாகவோ, வெப்பம் இறங்கும் ஷீட்டுகளாகவோ இருக்கக்கூடாது.
✦    யானை தங்குமிடம் மரங்கள் சூழ்ந்த இடமாக இருக்க வேண்டும். குறிப்பாகக் கோடை காலத்தில் நிழல் தரும் மரங்கள் உள்ள இடத்தில் தான் தங்க வைக்க வேண்டும்.
✦    யானை பாதுகாக்கும் பிரிவு 6-ன் படி யானை குளிப்பதற்குத் தண்ணீர் குளம் இருக்க வேண்டும். 3 மணி நேரத்திற்குக் குறையாமல் யானை தண்ணீரில் இருக்க வேண்டும். பாகன் யானையை சரியான முறையில் குளிக்க வைத்து பராமரிக்கிறாரா என்பதை கவனிக்க வேண்டும் என்று கூறுகிறது.
✦    பிரிவு 13-ன் படி யானையை துன்புறுத்தினால் தண்டனை கிடைக்கும்.  அதனை சிறை போல் கூண்டுக்குள் அடைக்கக்கூடாது
✦    காரணமே இல்லாமல் யானையை சங்கிலி போட்டு கட்டக்கூடாது. குறிப்பாக அதிக எடை கொண்ட சங்கிலிகளைப் பயன்படுத்தக்கூடாது. 
✦    யானையின் கால் பகுதியில் நகம் வளர விடக்கூடாது. அதற்கென இருக்கும் ஆயில் போட்டு நன்கு பராமரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com