சீன நாடோடிக்கதை - வல்லவனுக்கு வல்லவன்

"நான் மிகவும் நல்லவன். ஆண்டுக்கு ஒன்பது தோலா வெள்ளியைக் கூலியாகக் கொடுப்பேன்.
சீன நாடோடிக்கதை - வல்லவனுக்கு வல்லவன்

அண்ணன் தம்பி என இரண்டு பேர். அந்த ஊரில் வசித்து வந்தனர்.
 நிலச்சுவான்தாரிடம் கூலி வேலை கேட்டு அண்ணன் சென்றான்.
 "நான் மிகவும் நல்லவன். ஆண்டுக்கு ஒன்பது தோலா வெள்ளியைக் கூலியாகக் கொடுப்பேன். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை, நான் சொன்ன வேலையை உன்னால் செய்ய முடியவில்லை என்றால், 3 தோலா வெள்ளியைக் குறைத்துக்கொள்வேன். சம்மதமா?'' என்றான் நிலச்சுவான்தார்.
 "சரி'' என்று உடனே ஒப்புக்கொண்டான் அண்ணன்.
 பத்து மாதம் பறந்துவிட்டது. வேலையில் எந்தக் குறையையும் கண்டுபிடிக்க முடியாமல் நிலச்சுவான்தார் திண்டாட நேரிட்டது.
 ஆனால், ஒரு நாள், வெயிலில் தானியம் காய்ந்து கொண்டிருப்பதைக் கண்டதும், திடீரென யோசனை உதித்தது.
 "இந்தப்பா, தானியக் களஞ்சியத்துக்குள் வெயில் படுமாறு செய். பிறகு, தானியத்தை அதில் கொட்டி வை'' என்று உத்தரவு போட்டான்.
 "அதெப்படி முடியும்? '' என்று அண்ணன் திகைத்தான்.
 "அதாவது உன்னால் செய்ய முடியாது என்கிறாய், அப்படித்தானே?''
 "ஆமாம்''
 "சரி, மூன்று தோலா வெள்ளியைக் குறைத்துவிடுகிறேன்'' என்று தீர்மானமாகக் கூறினான் நிலச்சுவான்தார்.
 வேலை தொடர்ந்தது. பதினோராவது மாதம் முடியப்போகிறது.
 "முற்றத்தில் உள்ள பெரிய பீப்பாய்களை எல்லாம் சிறிய பீப்பாய்களுக்கு உள்ளே வை'' என்று உத்தரவிட்டான்.
 "அதெப்படி முடியும்?'' என்று அண்ணன் திகைத்தான்.
 "அதாவது உன்னால் முடியாது என்கிறாய், அப்படித்தானே?''
 "ஆமாம்''
 "சரி, மூன்று தோலா வெள்ளி வெட்டு''
 மீண்டும் வேலை தொடர்ந்தது. பன்னிரெண்டாவது மாதத்தின் கடைசி நாளும் வந்தது.
 "இந்தப் பன்றியைக் கொன்றுவிடு'' என்று கட்டளையிட்டான் நிலச்சுவான்தார்.
 அவனும் நிறைவேற்றினான்.
 "என்னுடைய தலையின் எடைக்குச் சமமாக, பன்றியிலிருந்து ஒரு துண்டை வெட்டிக்கொடு'' என்றான் நிலச்சுவான்தார்.
 ஆச்சரியத்துடன் பார்த்தவன். "அதெப்படி முடியும்?'' என்றான்
 "அதாவது உன்னால் முடியாது என்கிறாய், அப்படித்தானே?''
 "ஆமாம்''
 "சரி, மூன்று தோலா வெள்ளி வெட்டு. ஆக, உனக்கு நான் தர வேண்டியது ஏதுமில்லை. ஏற்கெனவே நீ ஒப்புக் கொண்டிருக்கிறாய். எனக்கு குறை கூற வழியே கிடையாது'' என்று விடை கொடுத்து அனுப்பினான் நிலச்சுவான்தார்.
 கோபம் பீறிட்டது. என்ன பயன்? வெறுங் கையுடன் வீடு திரும்பினான்.
 நடந்ததை எல்லாம் தம்பியிடம் கூறி வேதனைப்பட்டான். தம்பி அவனைத் தேற்றினான்.
 சில நாட்களுக்கு பின்னர், அதே நபரிடம் வேலை கேட்டு, தம்பி சென்றான்.
 தன்னுடைய நிபந்தனையை நிலச்சுவான்தார் எடுத்துக் கூறினான்.
 "எனக்கென்று நானும் ஒரு விதியை வகுத்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு உத்தரவிடும் எஜமானார். அதை திரும்பப் பெற்றுக்கொண்டால் இரண்டு மடங்கு கூலி வேண்டும். சம்மதமா?'' என்றான் தம்பி.
 சற்று நேரம் யோசித்த நிலச்சுவான்தார். பிறகு, "சரி'' என்று ஒப்புக்கொண்டான்.
 பத்து மாதம் பறந்துவிட்டது. தனது கைவரிசையைத் காட்டத் தொடங்கினான் நிலச்சுவான்தார்.
 "இந்தாப்பா. இந்தத் தானியத்தைக் களஞ்சியத்தில் நிரப்ப வேண்டும். ஆகவே களஞ்சியத்துக்குள் வெயில் படுமாறு ஏற்பாடு செய்'' என்று கட்டளை பிறப்பித்தான்.
 உடனே ஏணியை எடுத்து போட்ட தம்பி. அதன் மீது ஏறி களஞ்சியத்தின் மேற்பகுதியைப் பிய்த்து எறிய ஆரம்பித்தான்.
 "என்னப்பா செய்கிறாய்?'' என்று பதறிப் போனான் நிலச்சுவான்தார்.
 "வெயில் படுமாறு ஏற்பாடு செய் என்று நீங்கள் தானே சொன்னீர்கள்? '' என்றான் தம்பி
 "நீ... நீ... நீ...'' என்று பதறினான்
 "அப்படி என்றால் உத்தரவைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறீர்களா?'" என்று தம்பி கேட்டான்.
 "இல்லை'' என்றான் நிலச்சுவான்தார்.
 களஞ்சியத்தின் மேற்பகுதி சிதைக்கப்பட்ட போது தனது இதயமே கிழிவது போல அவன் உணர்ந்தாலும், அதை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை.
 இன்னொரு நாள் முற்றத்தில் இருந்த பெரிய பீப்பாய்களை எல்லாம் சிறிய பீப்பாய்க்குள் அடைக்குமாறு உத்தரவு போட்டான்.
 உடனே கத்தியை எடுத்து பெரிய பீப்பாய்களை உடைத்து நொறுக்கினான் தம்பி
 "என்ன செய்கிறாய்?''
 "நீங்கள் உத்தரவு போட்டபடியே செய்கிறேன்''
 "நீ... நீ... நீ...''
 "என்ன, உத்தரவைத் திரும்ப பெற்றுக் கொள்கிறீர்களா?''
 "இல்லை''
 அவன் பற்களைக் கடித்தான்: தம்பி பீப்பாய்களை நொறுக்கிறான்.
 பன்னிரெண்டாவது மாதத்தின் கடைசி நாளும் வந்தது. கடைசியாக தனது ஆயுதத்தைப் பிரயோகித்தான் நிலச்சுவான்தார்.
 "இந்த பன்றியைக் கொன்று விடு'' என்றான். தம்பியும் அவ்வாறே செய்தான்.
 "என் தலையின் எடைக்குச் சரியாக பன்றி இறைச்சித் துண்டை வெட்டிக்கொடு'' என்றான் நிலச்சுவான்தார்.
 "சரி'' என்ற தம்பி அவனது சட்டையைப் பிடித்து இழுத்துக் கழுத்தில் கத்தியை வைத்தான்.
 "என்ன செய்கிறாய்?'' என்று பதறினான் நிலச்சுவான்தார்.
 "உங்கள் தலையைச் சீவப்போகிறேன்''
 "உனக்கென்ன பைத்தியமா?''
 "நீங்கள் தானே. தலையின் எடைக்குச் சரியான பன்றியிறைச்சித் துண்டு கேட்டீர்கள்.''
 "நீ... நீ... நீ...''
 வேறு வழி தெரியவில்லை.
 "நான் கூறியதைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்'' என்று கெஞ்சினான் நிலச்சுவான்தார்.
 "அப்படியானால் இரட்டிப்புக் கூலி சரியா?'' என்றான் தம்பி.
 "சரி. சரி'' என்று தலையை ஆட்டிய நிலச்சுவான்தாரிடமிருந்து பதினெட்டுத் தோலா வெள்ளியைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினான் தம்பி.
 "அண்ணா! இனி அவர் நம்மிடம் வாலாட்ட முடியாது. இந்தப் புத்தாண்டு நமக்கு மகிழ்ச்சிகரமான புத்தாண்டுதான்'' என்று சிரித்துக்கொண்டே கூறினான் தம்பி.
 -மயிலை மாதவன்
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com