வயதை மறந்து குழந்தைகளான தருணம்! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

சாகா ரயில் நிலையத்திலிருந்து சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா நடக்கும் இடத்திற்கு இட்டுச் செல்லும் பாதையில் சென்று கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களோடு நாங்களும் கலந்து நடந்தோம்
வயதை மறந்து குழந்தைகளான தருணம்! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் 69

"பலூன் காற்றில் அசையாமல் நிற்கிறது, அதன் அடியில் இருக்கும் பூமியோ வேகமாகப் பறந்து கொண்டிருக்கிறது.''
- ஆல்பர்டோ சான்டாஸ் டுமன்ட் 
சாகா ரயில் நிலையத்திலிருந்து சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா நடக்கும் இடத்திற்கு இட்டுச் செல்லும் பாதையில் சென்று கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களோடு நாங்களும் கலந்து நடந்தோம். என் வாழ்நாளில் ஒரு முறை கும்பகோணம் மகாமகத்தின் போதுதான் இப்படிப்பட்ட கூட்டத்தைப் பார்த்திருக்கிறேன். அடுத்தது இங்கேதான் இவ்வளவு கணக்கிலடங்கா மனிதர்களைப் பார்த்தேன்.
புன்னகைக்க மறந்து ஓடிக்கொண்டிருக்கும் ஜப்பானியர்கள், தங்கள் முக இறுக்கங்களைத் தொலைத்து, பொங்கி, சிரித்து, குழந்தைகளோடு குழந்தைகளாகக் குதூகலித்துச் சென்றுகொண்டிருந்தனர். 
1978-ஆம் ஆண்டில் புகுஓகா பகுதியில் உள்ள அமகி நகரத்தில் (Amagi) மிக சிறிய திருவிழாவாகத் தொடங்கிய இது, ஆண்டுதோறும் வளர, பிறகு சாகா நகரத்தின் புறநகர்ப் பகுதிக்கு இடம் பெயர்ந்தது.
1984-இல் சர்வதேச அளவில் வளர்ந்து இன்று சர்வதேச வெப்பக்காற்றுப் பலூன் திருவிழாவாக உயர்ந்திருக்கிறது. 1990-இல் பசிபிக் சாம்பியன்ஷிப், பெண்கள் உலகக்கோப்பை 1990-1996, இதைத்தவிர 1992, பலூன் ஃபான்டாசியா (Balloon fantasia) என்ற போட்டிகளையும் நடத்தியது. இதில் பலவிதமான உருவங்களைக் கொண்ட வெப்பக்காற்று பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இதோடு மற்றொரு நிகழ்ச்சியும் கைகோர்த்துக் கொண்டது. "லா மான்ட்கோல்பியர் நாக்டர்ன்' என்று இரவு நேரத்தில் ஒளி ஊட்டப்பட்ட, பல உருவ வெப்பக்காற்றுப் பலூன்கள், தரையிலிருந்து பிரம்மாண்டமாக எழுந்து, பின்னணியில் கேட்கும் இசைக்கு ஏற்ப அசைவதைப் பார்க்க கண்கொள்ளாத காட்சியாக இருக்குமாம். இதைத் தவிர வானவேடிக்கையும் உண்டு. 
"ஹார்ட் புல் டே' என்று உடல் ஊனமுற்றவர்களுக்காக, "கிட்ஸ் டே' என்று குழந்தைகளுக்குப் பலூன்களைப் பற்றிய தகவல்கள், திருவிழாவின் ஆரம்பநாள் அன்று "பரேட்' என்று பெயரில் பார்வையாளர்களை அசத்துகிறது.
அதிகாலையிலும், மாலையிலும் நடக்கும் போட்டிகளைக் காணச் செல்லலாம். அன்றைய தினம் மாலை நான்கு மணி அளவில் வானில் பறக்கவிட இருந்த வெப்பக்காற்றுப் பலூன்களைப் பறக்க வைக்க முடியவில்லை. தகிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்த பெருங்கூட்டம் ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது. பலூன்கள் பறக்கத் தேவையான காற்றின் வேகம் குறைவாக இருந்ததால் பலூன்களை எழ வைக்க முடியவில்லை. அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, நிகழ்ச்சி, கேன்சல் செய்யப்பட்டதாக மைக்கில் தெரிவித்தனர். 
இதனால் திருவிழா நடக்கும் மைதானத்தில் இருந்த சாப்பாட்டு கடைகளுக்கும், நினைவு பொருட்களை விற்கும் ஸ்டால்களுக்கும், கூட்டம் படையெடுக்கத் தொடங்கியது.
மறுநாள் அதிகாலையில் நாங்கள் கராட்சுவில் நடக்கும் திருவிழாவைக் காண சென்றுவிட்டோம். அன்றைய தினம் இரவு "லா மான்ட்கோல்பியர் நாக்டர்ன்' நடக்க இருந்தது. கராட்சுவிலிருந்து திரும்பி வந்ததும் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் சாகாவின் ஆற்றங்கரையை அடைந்தோம். இருள் பரவத் தொடங்கியதும், லட்சக்கணக்கில் மக்கள் வந்து கிடைத்த இடங்களை எல்லாம் ஆக்கிரமிக்கத் தொடங்கினர்.
திடீர் என்று இசை, காற்றில் தவழ, ஒளி கூட்டப்பட்ட பல உருவங்களைக் கொண்ட வெப்பக் காற்றுப் பலூன்கள் எழுந்து இசைக்கேற்ப ஆடத்தொடங்கின. ஆக்டோபஸ், பான்டா, மிக்கிமவுஸ், அரேபிய வியாபாரி, பல டிசைன்களைத் தன்னகத்தே கொண்ட பலூன்கள், மனிதனின் கற்பனையில் உதித்த உருவங்கள் என்று ஆட, அவைகளோடு சேர்ந்து குழந்தைகள், பெரியவர்கள், வாலிபர்கள், முதியவர்கள் போட்ட குதியாட்டத்தை என்னவென்று சொல்லி வர்ணிப்பேன். 
ஸ்வெட்டரை மீறி உள்ளே புகுந்த குளிர்காற்றும், சுற்றியிருந்த மகிழ்ச்சி அலைகள் ஏற்படுத்திய சிலிர்ப்பும் ஒன்று சேர்ந்து எங்களையும் கைகளைத் தட்டி ஆடி மகிழ வைத்தது. நிகழ்ச்சி முடியும்பொழுது வானத்தில் எழுந்த வானவேடிக்கைகளைப் பார்த்துக் கொண்டே இந்தப் பெரும் கூட்டம் ரயில் நிலையத்தை நோக்கி நகர, நாங்களும் நடையைக் கட்டினோம். இருப்பதோ சிறிய ரயில் நிலையம், எப்படி இவ்வளவு கூட்டத்தை வெளியேற்றும் என்று திகைத்தோம். கிலோமீட்டர் கணக்கில் நீண்ட வரிசையில் நின்றோம். ஒரு தள்ளல் இல்லை, ஒழுங்கீனம் என்பது எள்ளளவும் இல்லாமல் இருந்தது. இந்த நிகழ்வுக்காக விடப்பட்ட ரயில்கள் நேரம் தவறாமல் வரத்தொடங்க, அந்தப் பெருங்கூட்டம் ஒரு மணி நேரத்தில் தங்கள் இருப்பிடம் நோக்கி பயணிக்கத் தொடங்கிவிட்ட மாயத்தைக் கண்டு மலைத்தோம்.
அன்று சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழாவின் கடைசி நாள், ஆகையினால் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து, கிளம்பிவிட்டோம், எழுபதுக்கும் மேலான நாடுகள் பங்குபெற்று வானில் பறக்க விடப்போகும் பலூன்களை காணப் பேராவல் கொண்டோம்.
நாங்கள் திருவிழா நடக்கும் இடத்தை அடைந்தபொழுது, வானில் மிதக்கும் வானவில்களாக, பலூன்கள் பறக்கத் தொடங்கி இருந்தன. குறிப்பிட்ட இடத்தை அடையும் முன் தங்களால் கடக்க முடிந்த இடத்தை, மண்மூட்டைகளைப் போட்டு அடையாளம் காட்டுகின்றனர். குறி இடப்பட்ட இந்த மூட்டைகளே யார் எந்தெந்த இடத்தைக் கடந்தார்கள் என்பதைக் கணக்கிட வைத்து அதற்கு ஏற்றாற்போலப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
மணி பத்து ஆனது. முந்தைய இரவு கண்ட பலவிதமான உருவங்களைக் கொண்ட வெப்பக்காற்றுப் பலூன்கள் மீண்டும் தரிசனம் தந்தன. இரவு பார்த்ததைவிட பளிச்சிடும் சூரிய வெளிச்சத்தில், காற்றில் எழுந்து நின்ற அந்த உருவங்கள், கல்மனம் படைத்தவனையும், குழந்தையாக்கிவிடும், தன்நிலை மறக்க வைத்து, மகிழ வைக்கும். பல புகைப்படங்களை எடுத்துக் குவித்தோம். திருவிழா மைதானத்தில் டெண்டுகளுக்குள் இருந்த உணவு ஸ்டால்களுக்கு விசிட் அடித்தோம். "டெம்புரா' என்ற உணவை சாப்பிட்டு மகிழ்ந்தோம். மொத்தத்தில் எங்களுடைய வயதைத் தொலைக்க வைத்து குழந்தைகளாக்கி, மகிழ வைத்த சாகா வெப்பக்காற்று பலூன் திருவிழாவை நினைத்தாலே மனம் துள்ளிக் குதித்து மிதக்கிறது.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com