Enable Javscript for better performance
துல்லியமான செய்திகளை அளிப்பது "தினமணி' - டி.ஆர்.ஸ்ரீகண்டன்- Dinamani

சுடச்சுட

  

  துல்லியமான செய்திகளை அளிப்பது "தினமணி' - டி.ஆர்.ஸ்ரீகண்டன்

  By DIN  |   Published on : 10th November 2019 10:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sk1

  கடந்த 80 ஆண்டுகளாக தினமணி நாளிதழின் தீவிர வாசகர். சுகாதாரத்துறையின் ஓய்வு பெற்ற ஊழியர் வாலாஜாப்பேட்டை டி.ஆர்.ஸ்ரீகண்டன். தினமணி நாளிழிதழுடனான தனது தொடர்பை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்:

  ""1931- ஆம் ஆண்டு பிறந்தேன். எனக்கு தற்போது 89 வயதாகிறது. இப்போதும், ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். நான் 4- ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே தினமணி நாளிதழை வாசித்து வருகிறேன். தினமும் விடியற் காலையிலேயே தினமணியை வாசித்து விடுவேன்.

  அந்த காலகட்டத்தில் ராணிப்பேட்டை முனிசிபல் சேர்மன் சம்பத் நரசிம்மன் என்ற முகவர் ஆற்காடு, ராணிப்பேட்டை , வாலாஜாப்பேட்டை பகுதிகளில் நாள்தோறும் நேரம் தவறாமல் தினமணி நாளிதழை கொண்டுவந்து சேர்ப்பார்.

  தினமணி நாளிதழின் ஆசிரியராக இருந்த ஏ.என்.சிவராமன் அவருடைய பணிக்காலத்தில் திரு. வி.க, கி.வா.ஜகந்நாதன், நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, ராஜமாணிக்கம், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, கிருபானந்தவாரியார் போன்ற அறிஞர்கள் ஆற்றிய கம்பராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை, திருக்குறள், தேவாரம், திருவாசகம், சஷ்டி கவசம் போன்ற உரைகள் தினமணி நாளிதழின் மூலம் பாமர மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் இருந்தது .

  நம் நாடு சுதந்திரம் பெறவும், பல தியாகிகள் ஆற்றிய சேவைகளை, எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் செய்திகளாக தந்தது தினமணி தான்.

  சுதந்திர போராட்டக்களத்தில் தனது பங்களிப்பை அளித்த வாலாஜாப்பேட்டையை சேர்ந்த கே.ஆர்.கல்யாண ராமய்யர், முனிசாமி நாயக்கர், ஜமதக்னி (முதன் முதலில் சீனா சென்ற தமிழர்) உள்ளிட்டோர்களின் போராட்டங்களை வெளியிட்ட பெருமை தினமணிக்கே உண்டு.

  தினமணி நாளிதழில் பஞ்சம், வாழ்க்கை குறிப்பு, மகரிஷிகள், சந்நியாசிகள், மகான்கள், மடாதிபதிகள் என பலராலும் வணங்கக்கூடிய சிறந்த புண்ணியத் ஸ்தலங்களின் மகிமைகளையும், ரமண மகரிஷி, சேஷாத்திரி சுவாமிகள், காஞ்சி காமகோடி மகா ஸ்வாமிகள், சிருங்கேரி மகா ஸ்வாமிகள், தயானந்த ஸ்வாமிகள் உள்ளிட்ட ஆன்மிக பெருமக்களின் அருளுரையை மக்களிடம் கொண்டு சேர்த்தது தினமணியே.

  1971-இல் நான் சுகாதாரத் துறை ஆய்வாளராக பணியாற்றியபோது ஜவ்வாது மலையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சுகாதாரத் துறை இயக்குநர், மாவட்ட சுகாதார அதிகாரி மற்றும் 20-க்கும் மேற்பட்ட மூத்த மருத்தவர்கள் முன்னிலையில் சுகாதாரமும், சுகாதார ஆய்வாளரின் பங்கும் என்ற தலைப்பில் திடீரென என்னை பேச அழைத்தனர். நானும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் அத்தனை பேர் மத்தியில் தைரியமாக பேசி அனைவரது பாராட்டு பெற்றதுடன் பரிசும், சான்றிதழும் பெற்றேன். இதற்கு நான் தினமணி நாளிதழை தினமும் தவறாமல் படித்தது மட்டுமே முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

  தினமணி கதிர் என்னுடைய மனதில் தனி இடம் பிடித்துள்ளது. அதில் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த மருத்துவக் கட்டுரையை அளிக்கும் பேராசிரியர் எஸ்.சுவாமிநாதனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  தற்போது தினமணி நாளிதழுடன் இணைப்பாக வெளிவரும் இளைஞர் மணி, மகளிர் மணி, வெள்ளிமணி, சிறுவர் மணி போன்ற இணைப்புகள் நடுத்தர மக்களின் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் இக்கால விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப கைப்பேசியிலும் படிக்கும் வகையில் இணையதளம் மூலம் தினமணி நாளிதழ் பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

  அரசியல் பாகுபாடின்றி அரசு கொண்டுவரும் நலத்திட்டங்கள், உலகச் செய்திகள் உள்ளிட்ட அனைத்தையும் துல்லியச் செய்திகளாக தரக் காரணமான ஆசிரியர் கி. வைத்தியநாதன் உடல் நலமுடன் பல்லாண்டு வாழ்ந்து தொடர்ந்து சீரிய பணியாற்றிட இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்னைத் தொடர்ந்து மூத்த மகன் டி.எஸ்.ராஜசேகர் மற்றும் பேரன், பேத்தி ஆகியோரும் தினமணி நாளிதழின் வாசகர்களாக தொடர்கிறார்கள்'' என்கிறார் டி.ஆர்.ஸ்ரீகண்டன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai