Enable Javscript for better performance
வறண்ட பூமியை வளமாக்கும் விவசாயி- Dinamani

சுடச்சுட

  
  sk12

  சீமைக்கருவேலப் புதர்கள்...சீரமைக்கமுடியாத வறண்ட நிலம் என இருந்த பகுதியை தற்போது பாலைவனச் சோலையாக்கும் வகையில் பண்படுத்தி, அதில் பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் விவசாயி தரணி முருகேசன் (54).

  தமிழகத்தில் எங்காவது அரசுத்துறைகளில் அதிகாரிகள் பயப்படவேண்டும் எனில் தண்ணியில்லா காட்டுக்கு மாற்றப்படுவீர்கள் என திரைப்படங்களில் பேசும் காட்சிகள் வந்தால், அனைவருக்கும் நினைவுக்கு வருவது ராமநாதபுரம் மாவட்டம்தான். ஆம்....இயற்கையின் மழை மறைவுப் பிரதேசமான இம்மாவட்டத்தில் தற்போது விவசாயத்தில் பாரம்பரியத்தை புகுத்தி அதில் வெற்றி கண்டுள்ளார்  நம்மாழ்வாரின் நவீன தொண்டர்.

  மதுரை ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றால் ராமநாதபுரம் நகருக்கு சுமார் 10 கிலோ மீட்டருக்கு முன்பே வரும் எட்டிவயல் ஊரிலிருந்து எட்டிப்பார்க்கும்  தூரத்தில் ரயில் பாதையை ஒட்டி அமைந்திருக்கிறது அவரது பாரம்பரிய விவசாய பண்ணை.

  மயிலின் அகவல், குயிலின் கூவல், நாட்டுச் சேவலின் கொக்கரக்கோ, பலவகை இந்திய மாடுகளின் ..ம்மா...ம்மா என இனம் புரியாத எழுச்சிதரும் சத்தம் என இந்த 25 ஏக்கர் பரப்பளவுள்ள பாரம்பரிய பண்ணையில் நுழைந்தால் பட்டாம் பூச்சிகளும், தட்டான்களும் நம்மை வட்டமிட்டு வரவேற்கின்றன.

  வேங்கை, மகோதனி, மகிளம், திருவோட்டு மரம், கருங்காலி, ஏழிலைப்பாடபுன்னை, ஆலம், அரசு, சந்தனம், நாவல், நெல்லி, சப்போட்டா, வாழை, தென்னை, கொய்யா, மா மற்றும் பனை என பாரம்பரியத்தை நினைவூட்டும் மரங்கள் ஓரளவு வளர்ந்து நமக்கு நல்ல காற்றையும், காலாற நிழலையும் தருகின்றன.

  ""ஒன்பது ஊருணிகள், அவற்றின் ரத்த நாளங்களான சிறிய கால்வாய்கள் என நீரோட்டத்தை வயல்களின் ரத்த ஓட்டங்களாக மாற்றி அதன்மூலம் நமது பாரம்பரிய விவசாயத்தை மீட்டு வருவதாகக்'' கூறும் தரணி முருகேசனின் பண்ணையில் நவீன கால விவசாய பயிர்களுக்கு இடமேயில்லை.

  பண்ணையில் புஞ்சைப் பயிர்களாக கேப்பை, கம்பு, குதிரைவாலி, சோளமும்,நஞ்சைப் பயிர்களாக ஆத்தூர் கிச்சடி சம்பா, மைசூர் மல்லி, சீரகச்சம்பா,சித்திரக்காரு, பூங்காரு, நொருங்கன், கருத்தக்காரு என வரிசைகட்டி வயலை அலங்கரிக்கின்றன.

  வேளாண்மைத்துறையில் இல்லாத நெல் வகைகளை இந்த தரணி பண்ணையில் தாராளமாக வாங்கிச்செல்லலாம். காய்கறிகளில் வெண்டை, கத்தரி, கொத்தவரை, புடலை, வெள்ளைப் பூசணி, பாகல், பீர்க்கங்காய் என பார்ப்போரின் நாவில் சுவையூர வைக்கும் ஏராளமான செடி கொடிகள் கூடவே பலவகைக் கீரைகள்.

  மரம், பயிர், செடிகொடிகளில் மட்டுமல்ல..மாடு, கோழி வளர்ப்பிலும் அவர்பாரம்பரியத்தை மீட்டெடுக்கவே முன்னுரிமை அளித்துள்ளார். காங்கேயம், கான்கிரீச், தார்பார்க்கர், சாகிவால் என இந்திய வகை மாடுகள் ஏராளம்.

  கருங்கோழி, நாட்டுக்கோழி என  மாதிரி கடைக்கோடி கிராமமாக காட்சிதருகிறது தரணியின் பண்ணை பகுதி.

  பயிர்களுக்கு மாட்டுச்சாணம், இயற்கையாகவே மக்கிய கழிவுகளே உரமாகின்றன. பசுமை புடைசூழ உள்ள பண்ணையில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கவும், யோகா பயிற்சிக்குமான  பெரிய அறையும் உள்ளது. சூரிய ஒளி மின்சார அமைப்பு மூலம் நீர் இறைக்கும் மின்மோட்டார் பம்புகளையும் இயக்குகிறார்.

  எட்டிவயலைத் தவிர்த்து தரணி முருகேசனுக்கு,  சித்தார்கோட்டையிலும் சிறிய பண்ணை உள்ளது. அங்கு நாட்டு மா, வாழை, தென்னை, சப்போட்டா, பப்பாளி ஆகியவையும், கரிசலாங்கண்ணி போன்ற மூலிகைகளும் ஏராளமாக உள்ளன.புத்தேந்தல் இடத்தில் பாரம்பரியப் பூக்களை வளர்க்கும் திட்டத்தையும் செயல்படுத்திவருகிறார்.

  வறண்ட பிரதேசத்தில் வளமான பாரம்பரிய விவசாயத்தை வென்ற தரணி முருகேசனின் சொந்த ஊர் திரு உத்திரகோசமங்கை அருகேயுள்ள கைலாச
  மங்களம்.  மனித நடமாட்டமின்றி வெறும் மண்சுவர் வீடுகளே அங்குள்ளன. 

  அங்கு மூன்றரை ஏக்கர் விவசாய நிலத்தில் 5 குழந்தைகளுடனான குடும்பத்தை காப்பாற்ற வழியின்றி தனது பயணத்தை முடித்துக்கொண்ட விவசாயி ரத்தினத்தின் மூன்றாவது மகன்தான் தரணிமுருகேசன்.

  பசியோடு பட்டப்படிப்பு, அரசுப் போக்குவரத்து கழகத்தில் பணி, தமிழக அரசின் மெக்னீசியம் நிறுவனம், ஹைதராபாத்தில் வேதியியல் துறையில் பணி என சுற்றிவந்த நான் கடந்த 1997 -ஆம் ஆண்டு நில விற்பனை மற்றும் கட்டுமானத் தொழிலில் கால் பதித்தேன்''.

  கோழிப்பண்ணை, வெளிநாட்டு நிறுவனங்களுக்கான பணிகளை கணினி மூலம் நிறைவேற்றுதல், நிதி நிறுவனம், தண்ணீர் விற்பனை என பல்வகைத் தொழிலுக்கும் மாறினேன்.  அப்பாவைத் தோற்கடித்த பாரம்பரிய விவசாயத்தை வெற்றிகொள்ளவேண்டும் என்ற எண்ணம் மட்டும் மாறவேயில்லை.

  ""எனது எண்ணத்தில் புதைந்து கிடந்த  பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தக் காரணமானவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.அவர்தான் பாரம்பரிய விவசாயத்துக்கான வழிகாட்டி'' என்கிறார் முருகேசன்.

  பாரம்பரிய விவசாயத்தை ஆன்மிக .விவசாயக் கொள்கையாக மாற்றும் புதியமுயற்சியில் ஈடுபட்டுள்ள தரணி முருகேசன் ""கடந்த நான்காண்டு வறட்சியை சமாளித்து விவசாயத்தை வெற்றிகொண்டதே பெரும்பாடு'' என்றும் மூச்செறிகிறார்.

  இந்த வெற்றி எவ்வாறு சாத்தியமானது என்று கேட்ட போது,  ""ஒருங்கிணைந்த பண்ணை முறை விவசாயத்தின் மூலமே வெற்றி சாத்தியமானது. நெல்லிலிருந்து கிடைக்கும் வைக்கோலை மாடுகளுக்கு தீனியாக்கி, மாடுகளில் இருந்து கிடைக்கும் பாலை விநியோகிக்கலாம். மாட்டு சாணத்தை உரமாக்கலாம். நெல் அரிசிக்கு சரியான விலை இல்லை எனில் அவற்றை இடியாப்ப மாவாக்கினால் கிலோ ரூ.75 வரை விற்கலாம்'' என விவசாய வெற்றிச்சூத்திரத்தையும் விளக்குகிறார். இயற்கை பாரம்பரிய விவசாயப் பண்ணையில்  விளையும் பொருள்களை விற்க இரு இடங்களில் கடைகளையும் அமைத்துள்ளார்.

  வறண்ட பூமியில் விவசாயம் செய்வதே பெரும் சவாலான காலகட்டத்தில் பாரம்பரிய இயற்கை விவசாயத்தை வெற்றிகொண்ட தரணி முருகேசனின் மனைவி பாக்கியவதி அரசுபள்ளி ஆசிரியை. 2 மகன்கள், மகள் என அனைவரும் பட்டதாரிகள். ""ஆம்...என்னதான்படித்தாலும் சேற்றில் கால்வைத்தால்தான் சோற்றில் கைவைக்க முடியும்'' என சிரித்துக்கொண்டே கூறும் தரணி முருகேசன்.. அதை தனது வாரிசுகளும் அறிந்திருப்பது பாராட்டுக்குரியது என்கிறார்.

  ஆம்..நவீன காலகட்டத்தில் இந்த விவசாயத்தை இனி நம்பி என்ன பயன்..என கேட்போருக்கு நிலத்தை நம்பி கெட்டவனும் இல்லை. பாரம்பரிய விவசாயத்தை நம்பி தோற்றவனும் இல்லை என்று செயலில் காட்டிவருகிறார் தரணி முருகேசன் என்றால் மிகையில்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai