Enable Javscript for better performance
வாழ்வின் மாயங்களைக் கடந்த சினிமா!- Dinamani

சுடச்சுட

  
  sk15

  ""வாழ்வதற்கு எந்தத் தத்துவமும் தேவையில்லை. ஆழ்ந்து பார்த்தால் இதுதான் வாழ்க்கையின் தத்துவம். எதையேனும் அடையத் துடிக்கிற மனம்தான் இந்த வாழ்வின் சாபம். இந்த வாழ்வை, சமூகத்தை, அரசியலை சிக்கலாக்குவதும் குழப்பியடிப்பதும் சிதைப்பதும் அறிவாளிகள், லட்சியவாதிகள் எனப் பெயரிட்டுக் கொண்டவர்களின் மூளைகள்தான். அன்பை, கருணையை, ஈரத்தை, கோபத்தை அதன் போக்கில் வெளிப்படுத்தாமல் அறிவு தரும் முகமூடிகள்தான் இருப்பதிலேயே குரூரமானவை. அப்படி தங்களது தேவைகளுக்காக அறிவோடு ஆயுதங்களையும் பயன்படுத்தும் சிலரின் கதைகள்தான் படம். அவரவர் செயல்கள்தான், அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது என இந்தக் கதையை இப்படியும் சொல்லி விட்டுப் போகலாம்.'' ஆழமாகப் பேசத் தொடங்குகிறார் பாவெல் நவகீதன். நடிகராக அறியப்பட்டவர் தற்போது "வி 1' படத்தின் மூலமாக இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

  தலைப்பு எதன் குறியீடாகக் கதைக்குள் இருக்கும்....

  ஆமாம், அதை மறைத்து இங்கே எதையும் சொல்ல முடியாது. எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்வுதான் அடிப்படை. நேர்மை, நியாயம், கோபம், அன்பு என மாறிக் கொண்டே இருக்கும் வாழ்வின் மாயங்களைக் கடந்த சினிமா எங்கேயும் இல்லை.அனுதினங்களின் எதார்த்தங்களில் இருந்து கதையைப் பிரிக்கவே முடியாது. கதையின் மனசாட்சியை ஒரு தலைப்பு பிரதிபலிக்க வேண்டும். அதற்காகத்தான் இப்படியொரு தலைப்பு. வி 1 என்பது ஒரு கொலை நடக்கும் வீட்டின் கதவு எண். அந்த வீட்டைச் சுற்றி நடக்கும் விசாரணைகளும் திருப்பங்களும்தான் கதை.

  உண்மையைக் கண்டால் பலரும் ஓடிக் ஒளிகிறோம். ஆனால் விசாரணை என வருகிற போது, போலீஸூக்கு எல்லாம் சவால்தான். என்னைக் கேட்டால் உண்மையை நேருக்கு நேர் சந்திக்கிற தைரியம்தான் வாழ்க்கை. அது வலிக்கும். உயிரை எடுக்கும். ஆனால், அதுதான் சரி. இப்படி ஓர் அனுபவம் ஒரு காவல் துறை அதிகாரிக்குக் கைக் கூடி வருகிறது. அதை சில கோணங்களின் வழியே கடத்தியிருக்கிறேன்.

  உள்ளடக்கம் பற்றிப் பேசினால் இன்னும் கொஞ்சம் தெளிவு பிறக்கும்...

  ஒரு குற்றமும், அந்தக் குற்றத்தை செய்யத் தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். ஒரு குற்றத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அது அந்த மனிதனை எங்கே நிறுத்துகிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். அதை ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான சட்டகத்துக்கு உட்பட்டு, செய்து முடித்திருக்கிறேன். அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசைகளைத் தீர்மானிக்கும். அது நல்லதோ கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறி விடும். அப்படித்தான் இங்கே ஒரு சூழல்.

  இருட்டு என்றால் பயம் கொள்ளும் ஒரு காவல்துறை அதிகாரிக்கு இருட்டில் நடந்த கொலையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் வேலை. அதை எப்படி அவரால் முடிக்க முடிந்தது என்பதுதான் கதை. அதற்காக அவர் கடந்து வந்த தூரம், கொடுத்த விலை என கதை போகும். அதை எல்லோருக்கும் பிடிக்கிற ஒரு கமர்ஷியல் சினிமாவாகக் கொண்டு வந்திருக்கிறேன். எல்லா மனித சிக்கல்களிலும் காதல் எப்படி ஒரு பங்கு வகிக்கிறதோ, அப்படி இந்தக் கதை ஓட்டத்திலும், மையப் புள்ளியிலும் ஒரு காதல் உண்டு.

  நடிகர் என்ற பெயரே நல்ல இடம்... ஏன் இப்போது இயக்கம்....

  எங்கே போகிறோம், எப்படிப் போகிறோம், எங்கே தங்குகிறோம், என்னென்ன பார்க்க போகிறோம் என இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் ஏற்கெனவே தீர்மானித்துக் கொண்டுதான் வந்திருக்கிறேன். சம்பாதிப்பதை நல்லப் படியாகச் சேர்த்து வைத்துக் கொள்ளாமல் நீயே சினிமா இயக்குவதெல்லாம் தேவையா என்று கேட்காதவர்கள் இல்லை. அப்போதெல்லாம் மனசுக்குபிடித்ததைத்தானே செய்கிறோம் என உள்ளுக்குள் ஒரு அலை அடிக்கும். சமூகத்தின் தற்போதைய தேவையை உணர்ந்து நான் எடுத்து வைக்கிற ஒரு கதை இது. இதை நானே இயக்கலாம் எனத் தோன்றியதால் இயக்குகிறேன். அவ்வளவுதான். எல்லாம் கேள்வி ஞானம்தான்.இங்கே யாரும் சுயம்பு கிடையாது என்பதையும் புரிந்துக்கொள்ள வேண்டும். அனுபவங்கள் மூலமாகவே நான் எதையும் புரிந்துக் கொள்ள விரும்புகிறேன். உணர்வுகள், உறவுகள், கனவுகள், இன்பங்கள், துன்பங்கள் எல்லாவற்றையும்அனுபவிக்கவும் ரசிக்கவும்தானே வாழ்க்கை. என் வாழ்க்கையை நானே வாழ்ந்து பார்க்கும் தருணம் இது.

  இன்னும் பரிச்சயமான முகங்களை வைத்து கதை சொல்லலாமே...

  ஒரளவுக்கு எல்லோருமே தெரிந்தவர்கள்தான். பெரிய ஹிட் இல்லை. அதுதான் வருத்தம். ராம் அருண் காஸ்ட்ரúô, விஷ்ணுபிரியா, விஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மனிஷா ஜித் இப்படி எல்லோருமே ஒரளவுக்கு அறிமுகமானவர்கள்தான். அனைவரின் பங்கும் இதில் கை சேர்ந்ததில் மகிழ்ச்சி. ரோனி ரப்ஹெல் இசைக்குப் பொறுப்பு. கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவில் சென்னை பெரு நகரத்தின் மறுபக்கம் உங்களுக்கு தெரியவரும். லட்சக்கணக்கான மக்களைச்சென்று சேரக் கூடிய சினிமாவுக்கான பொறுப்பை உணர்ந்து உழைத்திருக்கிறேன். எல்லாம் ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது. தயாரிக்க முன் வந்த அரவிந்த் தர்மராஜ், என்.ஏ.ராமு, சரவணன் பொன்ராஜ் ஆகியோருக்கு நன்றி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai