கணக்கனில் தொடங்கி மீசை முனுசாமி வரை -டி.எஸ்.சீனிவாசன்

தினமணி 85 ஆண்டுகள் ஆகிறதென்றால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மக்களுக்காக மக்களின் நாடித்துடிப்பை அறிந்து ஒரு பத்திரிகை செயல்பட்டால் அதுவே ஓர் இயக்கமாக மாறிவிடும் என்பதற்கு
கணக்கனில் தொடங்கி மீசை முனுசாமி வரை -டி.எஸ்.சீனிவாசன்

தினமணி 85 ஆண்டுகள் ஆகிறதென்றால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மக்களுக்காக மக்களின் நாடித்துடிப்பை அறிந்து ஒரு பத்திரிகை செயல்பட்டால் அதுவே ஓர் இயக்கமாக மாறிவிடும் என்பதற்கு தினமணியே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
 தினமணியின் முதல் ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் தொடக்க காலத்தில் இருந்தே உண்மையான செய்திகளையும், பாரபட்சமற்ற அணுகுமுறையையும், நடுநிலை தலையங்கத்தையும் பிரசுரித்து தினமணிக்குப் பெரும் மரியாதையையும், கெளரவத்தையும், அசைக்க முடியாத நம்பிக்கையையும் ஏற்படுத்திக் கொடுத்தவர். இன்று வரை அதில் எந்த மாற்றமும் இல்லை.
 அவருக்கு அடுத்தபடியாக ஏ.என்.சிவராமன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். ஏ.என்.எஸ். கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். சொக்கலிங்கம் எழுப்பிய அஸ்திவாரத்தில் ஏ.என்.எஸ். கட்டடம் கட்டினார். கணக்கன், மாணாக்கன் உள்ளிட்ட புனைப்பெயர்களில் கட்டுரைகள் எழுதினார். அந்தக் கட்டுரைகள் படித்தவர்களுக்கு மட்டுமல்லாமல் எளிய பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்தன.
 ஏ.என்.எஸ். ஓய்வு பெற்றபின், ஐராவதம் மகாதேவன் தினமணி ஆசிரியரானார். ஏ.என்.எஸ்., ஐராவதம் மகாதேவன் ஆகியோரின் காலத்தில் கி.கஸ்தூரிரங்கன் இணை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். ஏ.என்.எஸ். காலத்தில் ஜனாதிபதி போன்ற சம்ஸ்கிருத வார்த்தைகள் தினமணியில் பயன்பாட்டில் இருந்தது. ஐராவதம் மகாதேவன் பொறுப்பேற்றதும், தூய தமிழ் சொற்கள் மட்டுமே பத்திரிகையில் இடம் பெற வேண்டும் என்று பணித்தார். ஏ.என்.எஸ். இல்லாத தினமணி, நீறில்லாத நெற்றி என்று ஐராவதம், தினமணியிலேயே வெளியிட்டார். அந்த அளவுக்குப் பரந்த மனப்பான்மை கொண்டவர் ஐராவதம்.
 எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தபோது, தமிழில் பெரியார் சீர்திருத்த எழுத்துகளையே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். பாடப்புத்தகங்கள் அனைத்தும் அவ்வண்ணமே அச்சிடப்பட்டன. ஏறத்தாழ எல்லா பத்திரிகைகளுமே பழைய தமிழ் எழுத்துகளையே பயன்படுத்தி வந்தன. ஐராவதம் தினமணியில் பொறுப்பேற்ற மறுநாள், எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டார். இதைக் கவனித்த மற்ற பத்திரிகைகள் அப்போதுதான் சீர்திருத்த எழுத்துகளுக்கு மாறின.
 "ஜ' என்பது சமஸ்கிருத எழுத்து. அதற்கு ஒற்றைக் கொம்போ, இரட்டைக் கொம்போ கிடையாது என்றார் ஐராவதம். அதனால் ஜெயலலிதாவின் பெயர், ஜயலலிதா என்று பிரசுரமானது. இதைப் படித்த ஜெயலலிதா, ஆசிரியரைத் தொடர்பு கொண்டு, தனது பெயரை "ஜெயலலிதா' என்றே வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன் பிறகு மீண்டும் "ஜெயலலிதா' என்றே தினமணியில் பிரசுரமானது.
 ஐராவதம் காலத்திற்கு முன் செய்திகளில் புதுடில்லி என்றே வந்தது. "புதுதில்லி' என்பதே சரியான சொல் என்று ஐராவதம் சுட்டிக்காட்டினார். அவர் காலத்தில் தான் சனிக்கிழமை தோறும் "தமிழ்மணி' என்ற புதிய இணைப்பு வெளிவந்தது.
 தமிழ்மணி இணைப்பின் முதல் பக்கத்தில் ""முலைப்பால் சிறந்தது'' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டார். அந்தத் தலைப்பைக் கண்டு பலர் யோசித்தனர். தகவல் அவரை எட்டியது. மறுநாள் தினமணி முதல் பக்கத்தில் "முலைப்பால்' என்ற சொல் தூய தமிழ்ச் சொல் என்று ஆதாரத்துடன் விளக்கினார்.
 அந்தச் சமயத்தில் உடன்கட்டை ஏறுவது குறித்து ஆதரவும், எதிர்ப்பும் கூடிய சர்ச்சை எழும்பியது. உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஐராவதம் கடுமையாக எதிர்த்தார். அதை ஆதரித்த ஒரு முக்கியமான துறவி சென்னை வந்து சொற்பொழிவு ஆற்றினார். அதை தினமணி பிரசுரித்து. அதை ஆசிரியரிடம் கேட்டபோது, "தினமணியின் கொள்கை என்பது வேறு, செய்திகளை மறைக்காமல் வெளியிடுவது என்பது வேறு' என்றார். அப்போது இணை ஆசிரியராக இருந்த கி.கஸ்தூரிரங்கன், சனிக்கிழமை தோறும் செய்தி விமர்சனக் கட்டுரை எழுதினார்.
 ஐராவதத்தைத் தொடர்ந்து கி.கஸ்தூரிரங்கன் ஆசிரியர் பொறுப்பேற்றார். தினமணி கதிரில் "ஒரு நிருபரின் டைரி' என்ற தொடரை அவர் எழுதினார். அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
 அவர் ஆசிரியராக இருந்தபோது "இவர், இவை, இப்படி' என்ற பகுதியை தினமணியில் வாரம் ஒருமுறை ஏழாம் பக்கத்தில் வெளியிட்டார். இதில் "ரகசியம், பரம ரகசியம்' என்று சொல்வது போல யாரும் அறிந்திராத தகவல்கள் இடம்பெற்று இருந்தன.
 பிறகு, மாலன் நிர்வாக ஆசிரியராகவும், சுதாங்கன் இணை ஆசிரியராகவும் பொறுப்பேற்றனர். பொறுப்பேற்ற ஓரிரு மாதங்களில் இதழியல் படிப்பிற்காக அமெரிக்கா சென்றார் மாலன். சுமார் 10 மாதங்கள் அங்கு தங்கி இருந்தபோதும், தினமணியின் மீது அவர் வைத்திருந்த கவனம் சிறிதும் சிதறவில்லை. இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய காலத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் "பேசிக் கொள்கிறார்கள்'', "ஊர்வலம்'' ஆகிய இரண்டு புதிய பகுதிகளைக் கொண்டு வந்தனர். அதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது.
 கருமுத்து தியாகராச செட்டியார் நடத்தி வந்த "தமிழ்நாடு' பத்திரிகையில் தன் பணியைத் தொடக்கி, தனது கடுமையான உழைப்பால் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் சேர்ந்து தினமணியின் ஆசிரியர் பதவிக்கும் உயர்ந்தார் இராம.சம்பந்தம். "சிறுவர்மணி' என்ற புதிய இணைப்பை தினமணியில் கொண்டு வந்தார். அதில் குழந்தைகளை ஈர்க்கும் வண்ணம் பல பகுதிகள் இடம்பெற தனி கவனம் செலுத்தினார்.
 அவர் பணியாற்றிய காலத்தில் தான் "வெள்ளிமணி' இணைப்பில் பிரபல ஜோதிடர் ஏ.எம்.ராஜகோபாலன் "காலம் உங்கள் கையில்' என்ற பகுதியில் வார ராசி பலன், கேள்வி பதில் ஆகியவை இடம் பெற்றன. "காலம் உங்கள் கையில்' பகுதிக்காக வெள்ளிக்கிழமைகளில் தினமணி கூடுதலாக அச்சிடப்பட்டது.
 சம்பந்தத்திற்கு அடுத்ததாக கி.வைத்தியநாதன் தினமணி ஆசிரியரானார். அவரது தலையங்கத்திற்கு தினமணி வாசகர்கள் பெரும் மதிப்பு கொடுத்தனர். "மதிப்பெண் ஒரு மதிப்பீடு அல்ல' என்ற தலைப்பில் அவர் எழுதிய தலையங்கம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோன்று, ஒரு திரைப்படம் பற்றி ஒரு தலையங்கம் எழுதியது தினமணி வரலாற்றில் அதுவே முதல் முறை. "பாபநாசம்' திரைப்படம் பற்றி வைத்தியநாதன் எழுதிய தலையங்கத்தைப் படித்து மனம் மாறிய பெற்றோர்கள் ஏராளம்.
 "மீசை முனுசாமி', "அஜாத சத்ரு', "கலாரசிகன்' உள்ளிட்ட பல புனைப்பெயர்களில் அவர் எழுதி வருகிறார். "மீசை முனுசாமி'யின் எழுத்துக்களுக்கு என்றே ஒரு தனிக்கூட்டம் இருக்கிறது.
 15 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தமிழ்மணியை தினமணியில் ஞாயிறுதோறும் தினமணியின் ஒரு பக்கமாக வெளியிட்டு வருகிறார். அதில் "இந்த வாரம்' பகுதி சுவாரஸ்யமாக கருதப்படுகிறது.
 குக்கிராமங்களில் இருக்கும் திருவள்ளுவர் படிப்பகம், தமிழ் இலக்கிய மன்றம், கம்பன் கழகம் உள்ளிட்ட அமைப்புகளை ஊக்கப்படுத்துவதில் தனி கவனம் செலுத்தினார் அவர். இதனால், தமிழ் உலகில் "எங்கும் தினமணி, எதிலும் தினமணி' என்ற நிலை ஏற்பட்டது.
 வைத்தியநாதனைப் பற்றி துக்ளக் ஆசிரியராக இருந்த சோ எஸ். ராமசாமி இவ்வாறு கூறியிருந்தார். "தலையங்கம் எழுதுவது எளிதான காரியம் அல்ல. அது மட்டுமின்றி பல புனைப்பெயர்களில் தனித்துவம் வாய்ந்த செய்திகளைத் தருவது அசாத்தியமான ஒன்று. என்னைக் கேட்டால் என்னால் முடியாது என்று சொல்லி விடுவேன். ஆனால் அதை மிகச் சிறப்பாக செய்து வருகிறார் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன். பல இலக்கிய மாநாடுகளை தினமணி சார்பில் நடத்தி வருகிறார். அப்துல் கலாம் உள்ளிட்ட பல மேதைகள் அந்த விழா மேடைகளை அலங்கரித்தனர்.
 நான், தினமணியில் 25 ஆண்டு காலம் பத்திரிகையாளராகப் பணியாற்றியவன். கணக்கன் ஏ.என்.எஸ்.ஸில் தொடங்கி, "மீசை முனுசாமி' வரை பல அறிவுஜீவிகளிடம் பணியாற்றி இருக்கிறேன் என்ற மகிழ்ச்சி எனக்கு எப்போதும் உண்டு.
 தினமணியின் 85-ஆவது ஆண்டு விழாவை காணும் வைத்தியநாதன், அதன் நூற்றாண்டு விழாவையும் நடத்திக் காட்டி தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் தினமணிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
 கட்டுரையாளர்: பத்திரிகையாளர்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com