சதுரங்க ராஜாக்கள்

ஜூலை மாதம் 18-ஆம் தேதி, இந்திய செஸ் விளையாட்டு அரங்கின் பொன்னாள். அன்றுதான் தில்லியைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் ப்ரீத்து குப்தா (15) இந்தியாவின் 64-ஆவது கிராண்ட் மாஸ்டராக அறிவிக்கப்பட்டார்.
சதுரங்க ராஜாக்கள்

ஜூலை மாதம் 18-ஆம் தேதி, இந்திய செஸ் விளையாட்டு அரங்கின் பொன்னாள். அன்றுதான் தில்லியைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் ப்ரீத்து குப்தா (15) இந்தியாவின் 64-ஆவது கிராண்ட் மாஸ்டராக அறிவிக்கப்பட்டார். 8 நிரல்களும் 8 வரிசைகளும் கொண்ட சதுரங்கப் பலகையின் கட்டங்கள் 64. இன்று, இந்த 64 கட்டங்களையும் நிரப்புவோராக இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் உலகை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்கள்.
 இந்தச் சாதனைக்கு வித்திட்டவர் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த். 1987 டிசம்பரில் அவர் சர்வதேச செஸ் அரங்கில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைச் சூடியபோது அவருக்கு வயது 18 மட்டுமே.
 அவருக்கு முன்னதாக தேசிய அளவில் செஸ் விளையாட்டில் முத்திரை பதித்தவர் மானுவேல் ஓரான். மியான்மரைச் சேர்ந்த அவர் சென்னையில் படிக்க வந்து தமிழகக் குடிமகன் ஆனவர். அவர் 1961-இல் சர்வதேச அளவில் செஸ் மாஸ்டராக (ஐ.எம்) அறியப்பட்டவர். ஆனால், பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் (ஜி.எம்) நெறிமுறைகளின்படி கிராண்ட் மாஸ்டர் (ஜி.எம்) பட்டத்தை முதன்முதலில் பெற்றவர் விஸ்வநாதன் ஆனந்த் தான்.
 சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஆவது அவ்வளவு எளிதானதல்ல. முதலில் தேசிய அளவில் சாதனைகள் புரிந்து ஆசிய அளவில் முத்திரை பதிக்கும்போது
 தான், கிராண்ட் மாஸ்டர் தகுதிக்கான சர்வதேசப் புள்ளிகளை நோக்கி நகர முடியும்.
 "கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கான விதிகள் மிகவும் சிக்கலானவை. ஃபிடே அங்கீகாரம் பெற்ற சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் 2,500 புள்ளிகளைக் கடக்கும் வீரர் "கிராண்ட் மாஸ்டர்' என்று அறிவிக்கப்படுவார். முன்னதாக அவர் 27 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி குறைந்தபட்சம் மூன்று கிராண்ட் மாஸ்டர் மதிப்பீட்டுப் புள்ளிகளை (நார்ம்ஸ்) பெற வேண்டும். இந்த நார்ம்ஸ் புள்ளிகளைப் பெற பிரத்யேக விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக சொந்த நாட்டைச் சாராத வெளிநாட்டு கிராண்ட் மாஸ்டர்கள் மூவருடன் விளையாடி இருக்க வேண்டும்'' என்கிறார் தேசிய செஸ் நடுவரான திருப்பூரைச் சேர்ந்த ராஜேந்திரன்.
 உலக மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெல்வோரும் கிராண்ட்மாஸ்டர் பட்டியலை நோக்கிச் செல்ல முடியும். 2500 புள்ளிகளைப் பெற்ற எந்த வீரரும் கிராண்ட் மாஸ்டர் ஆக முடியும். அதன் பிறகு எந்தக் குற்றசாட்டும் இல்லாத வரை, அவரது புள்ளிகள் குறைந்தாலும், கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளலாம். போட்டிகளில் தொடர் பங்கேற்பு, சமண்கள், வெற்றிகள் மூலமாக இந்தப் புள்ளிகளை அதிகரிப்பது உலக தரவரிசையில் முதன்மை இடத்தை அளிக்கும். இப்போது உலக செஸ் தர வரிசையில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் (2765 புள்ளிகள்) ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.

"கிராண்ட் மாஸ்டர் பட்டம் அல்லாது சர்வதேச மாஸ்டர் (ஐ.எம்) பட்டமும் முக்கியமானது. இதற்கு 2,400 புள்ளிகளைப் பெற வேண்டும். ஆரம்பத்தில் ஐ.எம் பட்டம் பெறுவதே இந்தியர்களுக்கு சிரமமாக இருந்தது. இன்று இந்திய வீரர்களின் எண்ணிக்கை ஐ.எம் பட்டியலில் அதிகரித்து வருகிறது'' என்கிறார், கோவையைச் சேர்ந்த சர்வதேச செஸ் நடுவரான வி.விஜயராகவன்.
 "முன்னர் ஆண்டுக்கு ஓரிரண்டு சர்வதேசத் தர செஸ் போட்டிகள் இந்தியாவில் நடப்பதே அதிகம். இன்றோ ஆண்டுக்கு பத்து போட்டிகள் வரை நடைபெறுகின்றன. இதற்கு வழங்கப்படும் பரிசின் மதிப்பும் அதிகரித்திருக்கிறது. இதன் விளைவாக தொழில்முறை செஸ் ஆட்டக்காரர்களின் எண்ணிக்கை பெருகி இருக்கிறது. இதுவும் உலக செஸ் களத்தில் இந்தியர்கள் சாதனை படைக்கக் காரணமாக உள்ளது'' என்று கூறும் விஜயராகவன், தமிழ்நாடு மாநில செஸ் சங்கத்தின் இணைச் செயலாளராகவும் இருக்கிறார்.
 "செஸ் சங்கங்கள் தமிழ்நாட்டில் திட்டமிட்ட ரீதியில் இயங்குவதால், வட்டார அளவிலும்கூட போட்டிகளை நடத்த முடிகிறது. இதன்மூலம், இளம் புத்தி சாலிகள் உடனுக்குடன் கண்டறியப்படுகின்றனர். அவர்கள் மேலும் வளர்வதற்கான சாதகமான சூழல் இந்திய செஸ் அரங்கில் கிடைக்கிறது'' என்கிறார் இவர்.
 உலக அளவில் செஸ் விளையாட்டில் தீவிரமாக உள்ளவர்களின் எண்ணிக்கை 80 லட்சம் என்பது ஒரு மதிப்பீடு. இவர்களில் ஃபிடே அமைப்பால் கிராண்ட் மாஸ்டர் பட்டம் அறிவிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,878 மட்டுமே. இதில் 64 பேர் இந்தியர்கள் என்பது பெருமிதம் அளிப்பதே.
 செஸ் விளையாட்டுக்கு புத்திக்கூர்மை, மிகுந்த கவனம், தொடர் பயிற்சி, ஞாபக சக்தி ஆகியவை இருந்தாக வேண்டும். செஸ் என்பது மூளைகளுக்கு இடையிலான போர். திட்டமிட்ட வியூகமும், எதிராளியின் வியூகத்தை முன்கூட்டியே யூகிக்கும் லாகவமும் செஸ் விளையாட்டின் அடிப்படை. அதிவேக விரைவு நகர்த்தலில் திறமை பெற்றவராக உலக அளவில் மதிக்கப்படும் ஆனந்த்தின் வித்தியாசமான நகர்த்தல்கள், எதிராளியைக் குழப்பி, முடக்கிப் போடுபவை. அதனால்தான் அவரால் 5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை (2000, 2007, 2008, 2010, 2012) வெல்ல முடிந்தது.
 செஸ் விளையாட்டின் தாயகம் பாரதம். ஆனால், நவீன செஸ் விளையாட்டில் உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐரோப்பிய நாடுகளே கோலோச்சின. ஆனந்த்தின் செஸ் பிரவேசத்துக்கு முன்பு வரை இதுதான் நிலை. 1988-இல் அவர் பெற்ற சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் இந்திய செஸ் வரலாற்றில் புத்துணர்வைப் பாய்ச்சியது.
 அடுத்து, மேற்கு வங்கத்தின் திவ்யேந்து பரூவா (1991), மகாராஷ்டிரத்தின் பிரவீண் திப்சே (1997) ஆகியோர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றனர். இவர்களது வெற்றியால் செஸ் நோக்கி இளம் தலைமுறையின் கவனம் திரும்பியது. 2000-இல் ஆனந்த் உலக சாம்பியன் ஆனபோது, செஸ் ஜுரம் கல்வி நிறுவனங்களில் பற்றிக் கொண்டது. அதன் விளைவு, 2010-க்குள் மேலும் 20 கிராண்ட் மாஸ்டர்கள் உருவானார்கள். அவர்களில் மகாராஷ்டிரத்தின் அபிஜித் குந்தேவும் (2000), தமிழகத்தின் சசிகிரணும் (2000), ஆந்திரத்தின் கோனேரு ஹம்பியும் ( 2002) குறிப்பிடத் தக்கவர்கள்.
 2010-க்குப் பிறகு, இந்த 9 ஆண்டுகளில் 41 கிராண்ட் மாஸ்டர்கள் உதயமாகி இருக்கிறார்கள். குறிப்பாக, 2013-இல் 6 பேரும், 2018-இல் 8 பேரும், கிராண்ட் மாஸ்டராகியிருக்கிறார்கள். இந்த ஆண்டு (2019) இதுவரை 6 கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகியுள்ளனர். வரும் மூன்று மாதங்களில் மேலும் 5 பேர் கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கு வாய்ப்பிருப்பதாக இந்திய செஸ் கூட்டமைப்பு கூறுகிறது.

 இந்தியாவில் செஸ் விளையாட்டு சங்கங்கள் வலுவாக இருப்பது செஸ் பிரியர்களுக்கு மிகவும் சாதகமான அம்சம். 1990-க்குப் பிறகு கணினியில் கிடைக்கும் செஸ் மென்பொருள்கள், விளையாட்டு வீரர்களின் திறனை மேம்படுத்துவதில் பெருமளவில் உதவியாக இருக்கின்றன. கல்வி நிறுவனங்களும், பெரும் தொழில் நிறுவனங்களும் செஸ் விளையாட்டை ஊக்குவிப்பதால், இளம் வயதிலேயே திறமைசாலிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது.
 அதனால்தான் 10- 19 வயதுக்கு உள்பட்டோரில் 9 பேர் கிராண்ட் மாஸ்டர் ஆக முடிந்துள்ளது. 20- 29 வயதுக்குள் 27 கிராண்ட் மாஸ்டர்களும், 30- 39 வயதுக்குள் 22 கிராண்ட் மாஸ்டர்களும், 40- 69 வயதுக்குள் 6 கிராண்ட் மாஸ்டர்களும் இந்தியாவில் உள்ளனர்.
 இவர்களில் தமிழகத்தின் பங்களிப்பு மிக அதிகம். தமிழகம் (23), மேற்கு வங்கம் (8), மகாராஷ்டிரம் (7), தில்லி (6), ஆந்திரப் பிரதேசம் (4), பிற மாநிலங்கள் (16) என கிராண்ட் மாஸ்டர்களை அளித்த மாநிலங்களின் பங்களிப்பு தொடர்கிறது. தமிழகத்தில் விஸ்வநாதன் ஆனந்த், சசிகிரண், ரமேஷ், மகேஷ் சந்திரன் என நீளும் பட்டியலில், ஆர்.பிரக்ஞானந்தா, பி.கார்த்திகேயன், என்.ஆர்.விசாக், டி.குகேஷ், பி.இனியன் என புதிய வீரர்களின் சேர்க்கை தொடர்கிறது. எனினும் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு வேறெந்த இந்தியரும் பெறவில்லை என்பது பெரும் குறையே.

"உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் போட்டித்திறன் மிகுந்தவர்கள் மட்டுமே நுழைய முடியும். பல்வேறு நாட்டு வீரர்களின் விளையாட்டு உத்திகளுடன் மோதிப் பெறும் அனுபவம் தான் உலக சாம்பியன் போட்டியில் வெல்ல உறுதுணையாக இருக்கும்'' என்கிறார் பல போட்டிகளில் சர்வதேச செஸ் நடுவராகப் பணியாற்றியுள்ள சதீஷ்.
 செஸ் விளையாட்டின் தாரக மந்திரம். பயிற்சி, இடைவிடாத பயிற்சி, முழுமையான பயிற்சி... செஸ் விளையாட்டை மட்டுமே வாழ்க்கையாகக் ஏற்கும்போதுதான் இது சாத்தியம். கிராண்ட் மாஸ்டர் பட்டம் என்பது சர்வதேச சாம்பியன் பட்டத்துக்கான ஏணி. இந்த ஏணியில் இந்திய வீரர்கள் ஏறத் துவங்கிவிட்டனர்.
 வானம் வசப்படாமலா போய்விடும்?
 -வ.மு.முரளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com