பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

இந்தியாவில் வட மாநிலம் ஒன்றில் பிரமாண்டமான அணை ஒன்று கட்டி முடிக்கப்பட்டது.

இந்தியாவில் வட மாநிலம் ஒன்றில் பிரமாண்டமான அணை ஒன்று கட்டி முடிக்கப்பட்டது. அணையை பிரதமர் ஜவஹர்லால் நேரு திறந்து வைக்க மாநில நிர்வாகம் முடிவு செய்தது. அவரும் குறித்த நாளில் வந்தார். நானே அணையைத் திறக்காமல் அணைத்திட்டத்தில் முதலில் இருந்து வேலை செய்த ஏதாவது ஒரு நபர் திறந்து வைக்க வேண்டும் என்று விரும்பினார். அவரின் ஆசைப்படியே இளம்பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு மேடைக்கு அழைத்துவரப் பட்டார்.
 மின் விளக்குகளின் அலங்காரமும் பூவேலைப்பாடுகளும் கொண்ட பந்தலை மிரள மிரளப் பார்த்துக் கொண்டே நடந்து வந்து மேடை ஏறினார். அந்தப் பெண். அவரை பக்கத்தில் அழைத்து "லீவர்' போன்ற கைப்பிடியை கீழே அழுத்தச் சொன்னார் நேரு. அப்படியே செய்தார் அந்தப் பெண். "ஹோ' என்று காதுகள் செவிடாகும் இரைச்சலுடன் எல்லா மதகுகளும் திறக்கப்பட்டு தண்ணீர் சீறி பாய்ந்தது.
 அந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சியில் கூடியிருந்த மக்கள் அப்பெண்ணின் கையில் ஓர் மாலையைத் கொடுத்து நேருவின் கழுத்தில் அணிவிக்கச் செய்தார்கள். விழா இனிதே முடிந்தது. நேருவுக்கு மாலை அணிவித்த இளம் பெண் மிக்க மகிழ்ச்சியோடு வீட்டிற்கு வந்தாள்.
 அவள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த கிராமத்தலைவரும் சில பெரியவர்களும், "நில் அங்கேயே வீட்டிற்குள் நுழையாதே! வேறு ஆணுக்கு ஜாதி கட்டுப்பாடுகளை மீறி மாலை போட்டு விட்டாய். இனி நீ எங்கள் ஜாதி பெண் இல்லை' என்று சொன்னார்கள்.
 "ஐயோ, அவர் இந்தியாவுக்கு பிரதமர் அவருக்கு மாலை இட்டது எப்படி தவறாகும்' என்று கண்ணீர் மல்க கூறினாள். அந்தப்பெண்ணை சமூகத்திலிருந்து விலக்க வேண்டும் என்று அறிவித்தார் கிராமத்துத் தலைவர்.
 மூன்றே நாட்களுக்குள் ஊருக்கு வெளியே சிறு குடிசை கட்டி அவளைக் குடி வைத்தார்கள். பக்கத்து ஊருக்குச் சென்று கூலி வேலை செய்து தனது முதுமைகாலம் வரை அந்த குடிசையிலேயே வாழ்ந்தாள். இந்த நிகழ்வு கி.பி. 1959-ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் தாமோதர் நதி அணைக்கட்டு பகுதியில் நடந்ததாகும்.
 - உ.ராமநாதன், நாகர்கோவில்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com