ரோஜா மலரே! 14- குமாரி சச்சு

நான் சிறுமியாக இருக்கும் போதே சாவித்திரி அம்மாவுடன், பல படங்களில் நடித்திருக்கிறேன் என்றாலும், நான் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்த புதிதில் ஒரு முறை "வீரதிருமகன்'' படப்பிடிப்பு நடந்து
ரோஜா மலரே! 14- குமாரி சச்சு

நான் சிறுமியாக இருக்கும் போதே சாவித்திரி அம்மாவுடன், பல படங்களில் நடித்திருக்கிறேன் என்றாலும், நான் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்த புதிதில் ஒரு முறை "வீரதிருமகன்'' படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது, அதே ஸ்டுடியோவில் அவரது "பார்த்தால் பசி தீரும்'' படத்தின் படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தது. பக்கத்தில் சாவித்திரி அம்மா இருக்கிறார் என்றால், நான் உடனே அவர் இருக்கும் இடத்திற்கு ஓடி விடுவேன். என்னைப் பார்த்தவுடன் "கதாநாயகியே வாருங்கள்'' என்று சந்தோஷமாக என்னை அழைத்து பக்கத்தில் உட்கார வைத்து கொள்வார்.
 "எப்படி இருக்கிறது கதாநாயகி வேடம்'" என்று கேட்டார்கள். "நிறைய டெஸ்ட் எல்லாம் எடுத்த பிறகுதான் என்னை செலக்ட் செய்தார்கள். ஆனால், வெயிலில் நிறைய நேரம் நிற்க வைத்து, என் முகத்திற்கு நேராக ரிப்லெக்டெர்களை வைத்து கண்களை கூச வைக்கிறார்கள்'" என்று சொன்னவுடன், "மாட்டிக் கொண்டாயா'", என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு, "ஆனால்" நீ பெரிய தயாரிப்பாளரின் படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறாய். ஏ.வி.எம். ஒரு ராசியான கம்பெனி. உன்னைச் சரியாக அறிமுகம் செய்து, உனக்கு நல்ல பெயர் கிடைக்க செய்வார்கள்'", என்றார்.
 "நீங்கள் என் முதல் படத்தை பார்த்து விட்டு நான் எப்படி நடித்திருக்கேன் என்று சொல்லவேண்டும்' என்று கேட்டுக்கொண்டேன்." கண்டிப்பாக' என்று சொல்லி விட்டு என் படம் வெளியான அன்று சரியாக போன் செய்து, "நீ கதாநாயகியாக நடித்த "வீர திருமகன்'" படத்தை நான் பார்த்து விட்டேன்'," என்றார். அவர் என்ன சொல்லப்போகிறாரோ என்று அந்த சில நொடிகள் எனக்கு படபடப்பு.
 என்ன சொல்லப் போகிறார் என்று எனக்கு ஒரு விதமான பயம் கலந்த மரியாதை மட்டும் அல்ல, அவர் பார்த்து நான் வளர்ந்தவள் என்பதனால் என் மனதில் பல்வேறு எண்ணங்கள் வந்து போயின. அந்த சில நொடிகள் எனக்கு வேர்த்தது. அந்த சில நொடிகளுக்கு பிறகு அவர், "நீ ரொம்ப அழகா இருக்கே, காஸ்ட்யூம் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு, நீ சிறப்பாக நடிக்கிறே. தொடர்ந்து நடி', என்று சொல்லியவுடன், நான் "உங்கள் ஆசிதான் வேண்டும்" , என்று சொன்னேன். "கண்டிப்பாக என் ஆசிகள் உனக்கு என்றும் இருக்கு. நீ ரொம்ப நல்லா வருவே", என்று வாழ்த்தினார்கள்.
 பெரியவளான பின்பு அவருடன் நான் "வீட்டு மாப்பிள்ளை' என்று ஒரு படம் பண்ணினேன். அந்தப் படத்தில் பூக்காரி வேடத்தில், நான் காமெடி செய்வதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்கள். அவர்கள் செய்யாத காமெடியா? அவரால் தான் எந்த வேடம் கொடுத்தாலும், அதை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் ஆற்றல் பெற்றவராயிற்றே? எந்த நடிகருக்கும் ஈடு கொடுத்து நடிக்கும் நடிகை அவர்தானே? இப்படி உள்ள சாவித்திரி அம்மா எனது காமெடி நடிப்பைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தால் அது எனக்கு பெருமைதானே? நடிப்பு மட்டும் அல்ல பல்வேறு உலக விஷயங்களையும் அறிந்தவர்.
 இப்படித்தான் நாங்கள் இருவரும் சீனா, போர் நடக்கும் போது, நமது நாட்டை காப்பாற்றும் ராணுவ வீரர்களுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து, நட்சத்திர இரவு கலை நிகழ்ச்சி நடத்தி, தாயகம் காக்கும் படை வீரர்களுக்கு எங்களால் முடிந்ததை செய்தோம். அப்பொழுது சாவித்திரி அம்மாவுடன் நானும் அதே பஸ்ஸில் பயணம் செய்தேன். எப்பொழுதும் நான் அருகில் இருந்தால், என்னையும் கூட வா என்று சொல்லி விட்டு எங்கேயும் ஒன்றாகவே போவோம். நட்சத்திரங்கள் ஒன்றாக இருக்கும் இடத்தில், நாங்கள் இருந்தால் என்னை கூட்டிக் கொண்டு தான் எப்பொழுதும் நடனம் ஆடுவார்கள். மற்றவர்களை போல் மிமிக்ரி செய்வார்கள். அதே சமயம் யாரை பற்றியும் ஒரு சொல் கூட தவறாகப் பேசமாட்டார்கள்.
 நாங்கள் வந்த பாதையை பற்றியும், அவருடைய அனுபவங்களை பற்றியும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதுமட்டும் அல்ல, அவர் பல்வேறு உடைகள் உடுத்திக் கொண்டு, அதாவது மேலே ஆண்கள் அணியும் சட்டை போட்டுக் கொண்டு, தலையில் முண்டாசு போல் ஒரு துண்டை சுற்றிக் கொண்டு சிறப்பாக நடனம் ஆடுவார்கள்.
 ஒரு முறை அவருக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று விரும்பினார்கள். அதற்காக தனுஷ்கோடி போய் வேண்டுதல் கூட செய்தார்கள். அந்த சமயம் பார்த்து ஒரு கோர புயல் வந்தது. எங்களுக்கெல்லாம் சாவித்திரி, ஜெமினி கணேசன் இருவரும் தனுஷ்கோடி போய் இருக்கிறார்கள் என்று தெரிந்தது. அந்த சமயத்தில் தான் அந்த கோர புயலும் வந்தது. அவர் இருவரும் தனுஷ்கோடியில் இருந்தார்கள். நாங்கள் எல்லோரும் சென்னையில் இருந்தோம்.
 நான் மட்டும் அல்ல எல்லோரும் அவர்கள் இருவரும் நல்லபடியாக சென்னைக்கு வந்து சேரவேண்டும் என்று தெய்வங்களை வேண்டி கொண்டோம். அவர்களும் பத்திரமாக வந்தார்கள். அவர்கள் சென்றது ஒரு ஆண் மகன் சாவித்திரி அம்மாவுக்கு பிறக்க வேண்டும் என்பதற்காகத்தான். வேண்டுதலும் பலித்தது. அவருக்கு ஆண் மகன் பிறந்தான், அவன்தான் சதீஷ்.
 வேறு ஒரு முறை ஒரு நட்சத்திர இரவுக்கு எல்லோரும் சென்றிருந்தோம். சாவித்திரி அம்மாவும் அங்கு வந்திருந்தார்கள். கொஞ்சம் வளர்ந்திருந்தார் சதீஷ். நான் தான் சாவித்திரி அம்மாவின் பெட் ஆயிற்றே. எங்கே இருந்தாலும் சாவித்திரி அம்மா இருந்தால் நான் அங்கேதானே இருப்பேன். அன்றும் அவர்கள் இருந்த இடத்தில் நான் இருந்தேன். சதீஷும் அம்மாவின் அருகில் இருந்தார். நான் அவனை கிண்டல் செய்ய வேண்டி, சாவித்திரி அம்மாவின் அருகில் நெருங்கி அவர் மேல் கையை வைத்து கொண்டு நான் தான் சாவித்திரி அம்மாவுக்கு பெட் என்று சொன்னேன். இதைப் பார்த்த "சதீஷ் "முதலில் அம்மாவின் மேல் இருந்த கையை எடு'", என்று சொன்னான். நான் எடுக்காமல் இருந்ததனால், சதீஷ் அழ ஆரம்பித்தான். "நானும் விடாமல் முதலில் நான்தான் அம்மாவின் பெட். பிறகுதான் நீ வந்தே' என்று அவனை சீண்டினேன்.
 சாவித்திரி அம்மா, "சச்சு உனக்கு ஒரு செல்ல ஆண்டி தான்டா. உனக்கு முன்பே சச்சு தான், என்று சொல்லிக் கொண்டே, நீனும் தான் எனக்கு பெட்' என்று சொல்லி இருவரையும் சேர்த்து கட்டி பிடித்தார்.
 அப்போதுதான் சதீஷின் அழுகை நின்றது. இப்படி பல விஷயங்கள் எனக்கும் சாவித்திரி அம்மாவுக்கும் நடந்திருக்கின்றன.
 சாவித்திரி அம்மா நடித்த அனைத்துப் படங்களும் எனக்கு பிடிக்கும் என்றாலும் அவர் நடித்த "கை கொடுத்த தெய்வம்'" என்னை மிகவும் பாதித்த படம். காரணம் என்ன என்றால், ஊரில் உள்ள யாரும் ஒரு பெண்ணைப் பற்றி தவறாக சொல்லலாம். ஆனால், பெண்ணை பெற்ற தாயும், தந்தையும் அவளைப் பற்றி தவறாக சொன்னால், அந்தப் பெண் தாங்க மாட்டாள். அதை ஒரு காட்சியாகவே வைத்திருப்பார்கள். எந்தவிதமான நடிப்பு என்றாலும் ஊதித் தள்ளி விடுவார்கள்.
 காட்சியில் தன் முகத்தை குழந்தைத்தனமாக மாற்றிக்கொண்டு, "ஊர் உலகத்தில் யார் சொன்னாலும் நான் கவலைப் படமாட்டேன். ஆனா நீங்க சொல்லாதீங்க அப்பா" என்று கூறும் போது நான் அழுதே விடுவேன். அந்த வசனத்தை அவர் ஏற்ற இறக்கத்துடன் சொல்லும் முறை, அவரது முகம், உடல் மொழி எல்லாமுமாக சேர்த்து என்னை இன்று மட்டும் அல்ல அந்தக் காட்சியை நினைத்துவிட்டால் என்றுமே அழுகை வந்து விடும். நம்மையும் அறியாமல் நம்மை அழவைப்பதுதான் சிறந்த நடிப்பு என்று எங்கோ யாரோ சொல்லி உள்ளார்கள். அவரது நடிப்பு "சபாஷ்' என்று சொல்லத் தோன்றும்.

அதே போல் "களத்தூர் கண்ணம்மா" படத்தில் ஒரு காட்சி. சுப்பையா, சாவித்திரி அம்மாவிடம் "உன் குழந்தை இறந்து பிறந்தது' என்று சொன்னவுடன் சாவித்திரி அம்மா கொஞ்சம் கொஞ்சமாக சோகத்தை முகத்தில் கொண்டு வந்து கதறி அழும் காட்சி, யாராக இருந்தாலும் கண்ணீர் சிந்த வைக்கும். இதில் சிறப்பு என்னவென்றால் இயக்குநர் ஏ. பீம்சிங் "கட்' என்று சொல்ல வில்லை. சாவித்திரி அம்மா விடாமல் அழுகிறார்கள். உணர்ச்சியுடன் அவர் அழும் காட்சி நீடித்தது. அதற்குள் எல்லா விளக்கையும் 3 ஆவது நிமிடத்திலேயே இயக்குநர் செய்கை காட்ட அணைத்து விட்டார்கள். சுமார் 5 நிமிடத்திற்கு பிறகு தன் நிலைக்கு வந்த சாவித்திரி அம்மா, "என்ன லைட் எல்லாம் அணைந்து விட்டிருக்கு. கரண்ட் கட்டா', என்று கேட்க, இயக்குநர் பீம்சிங் "நீங்க ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு விட்டீர்கள். நீங்கள் சமாதானம் அடைய நாங்கள் காத்திருந்தோம்' என்றார்.
 நான் அந்த சமயத்தில் அங்கு படப்பிடிப்பில் இருந்தேன். என்னைப் பார்த்த சாவித்திரி அம்மா நான் கண்களில் கண்ணீருடன் நிற்பதை பார்த்து விட்டு, "என்ன நீயும் அழுற?', என்றார். "நீங்கள் அழுவதைப் பார்க்க என்னால் முடியவில்லை', என்றேன். "இது சினிமா தானே', என்று என்னை அணைத்தவாறு அழைத்துச் சென்றார்.
 அவர் அழுதாலே என்னால் தாங்க முடியாது என்றால், அவரது கடைசி காலத்தை நினைத்து நாள் தோறும் நான் கண்ணீர் விடுகிறேன். "அவரை நீங்க போய்ப் பார்க்க வில்லையா என்று யாரோ கேட்ட போது, என் எதிரே பேசி, பழகி, நடனம் ஆடிய சாவித்திரியை மட்டுமே நான் பார்க்க ஆசைப்பட்டேன். படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த சாவித்திரியை பார்க்க எனக்கு தைரியம் இல்லை. மனமும் இல்லை' என்று சொன்னேன்.
 குலுங்க குலுங்க சிரிப்பில் "இவள் ஒரு பாப்பா' என்று நடித்தவர். மிகவும் இயற்கையாக நடித்தவர். நடிகையர் திலகம் என்று பட்டம் எல்லாம் சும்மா கிடைக்குமா என்ன? அப்படிபட்டவருடன், பழகியது நான் செய்த பாக்கியம் என்றுதான் சொல்வேன். அதே மாதிரி வேறு ஒரு கிடைப்பதற்கரிய பேரு என் வாழ்நாளில் பெற்றேன். அது என்ன என்று அடுத்த வாரம் சொல்கிறேன்.
 (தொடரும்)
 சந்திப்பு: சலன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com