வாழ வழி தெரியாதவர்களின் வழிகாட்டி!

காலை 9 மணி. சென்னை பாடி மேம்பாலத்திற்குக் கீழ் வசிக்கும் ஆதரவற்றோருக்கு தனது ஆட்டோவில் கொண்டு வந்த துணிகளை தானமாகக் கொடுக்கிறார் ஆட்டோ ஓட்டுநர் அருள்ராஜ்.
வாழ வழி தெரியாதவர்களின் வழிகாட்டி!

காலை 9 மணி. சென்னை பாடி மேம்பாலத்திற்குக் கீழ் வசிக்கும் ஆதரவற்றோருக்கு தனது ஆட்டோவில் கொண்டு வந்த துணிகளை தானமாகக் கொடுக்கிறார் ஆட்டோ ஓட்டுநர் அருள்ராஜ். கூடவே உணவு பொட்டலங்களையும் கொடுத்து அவர்களின் விவரம் கேட்டு தெரிந்து கொள்பவர் சிறிது நேரத்தில் அவர்களை ஆட்டோவில் ஏற்றிச் சென்று அரசின் நல்வாழ்வு மையங்களில் கொண்டு சேர்க்கிறார்.
 ஆட்டோ ஓட்டுநர் அருள்ராஜுக்கு மட்டும் ஏன் இந்த அக்கறை இது பற்றி அவரே சொல்லுகிறார்:
 "நான் சேத்துப்பட்டுக் காவல் நிலையம் பின்புறம் வசிக்கிறேன். 10 ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். 2015-ஆம் ஆண்டு சென்னையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது, ஜாபர்கான்பேட்டை பகுதிக்கு உதவி செய்யச் சென்றேன். இரண்டு நாட்கள் இரவு பகல் பார்க்காமல் நீரில் தத்தளித்தவர்களைக் காப்பாற்றும் பணிகளைச் செய்தேன். அது தொடர்பான புகைப்படங்கள் அனைத்தையும் முகநூலில் பதிவு செய்தேன்.
 அப்போது பல நண்பர்களின் தொடர்பு கிடைத்தது. அதில் ஒரு நண்பர் என்னை மக்களுக்கு உதவலாம் என்ற பெயரில் உள்ள "வாட்ஸ் அப்' குழு ஒன்றில் இணைத்து விட்டார். அதில் 75-க்கும் மேற்பட்ட என்.ஜி.ஓக்கள் இருந்தார்கள். அவர்கள் தங்களால் முடிந்த பொருட்களை எங்களுக்கு வாங்கிக் கொடுத்தார்கள். என்னிடம் பணம் கிடையாது என்பதால் என்னால் பொருள் உதவி செய்ய முடியவில்லை. உதவி செய்ய நினைத்தவர்கள் கொடுத்த போர்வை, சாப்பாடு, துணிமணிகள் என அனைத்தையும் பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்த்தேன். இப்படியே 2 மாதங்கள் ஆனது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் கண்ணகி நகரில் வீடு ஒதுக்கப்பட்டது அவர்கள் அங்குச் சென்று விட்டார்கள். அதன் பிறகு யாருக்கு உதவுவது என்று தெரியவில்லை.
 அப்போது தான் சாலையில் நிராதரவாக இருக்கும் நபர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அவர்களுக்கு என்னால் முடிந்த துணிகளை கொடுத்து சாப்பாடும் வாங்கிக் கொடுப்பேன். நீ யார் என்றே தெரியாது. எங்களுக்கு இவ்வளவு உதவி செய்கிறாய். தங்குவதற்கு இடம் கண்டு பிடித்து தரக்கூடாதா என்று உரிமையோடு கேட்பார்கள். நோய் வாய்ப்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கும் படி கேட்பார்கள். அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றால், அடையாளம் தெரியாத நபர்களை அனுமதிக்க முடியாது என்று சொல்லிவிடுவார்கள்.
 இவர்களுக்கு நாம் ஏதாவது உதவி செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் முதியோர் இல்லங்களுக்குச் சென்று கேட்டால் பணம் கட்ட வேண்டும் என்று சொன்னார்கள்.

 அப்போது தான் விவரம் தெரிந்தவர்கள் சொன்னார்கள் சென்னை மாநகராட்சியே இது போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்காக 51 இல்லங்களை நடத்துவது தெரியவந்தது. அந்த இல்லங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் ஆஷா என்ற மேடத்தை நேரில் சென்று சந்தித்து, என்னைப் பற்றி விவரத்தைச் சொன்னேன். என்னுடைய சேவையைப் பாராட்டியவர், நல்ல ஆரோக்கியத்துடன் சாலையில் வசிப்பவர்களை எங்குச் சேர்க்க வேண்டும். நோயின் தாக்கத்துக்கு ஆளாகி படுக்கையில் இருப்பவர்களுக்கு உதவ என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். இதுவரை 500-க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களைக் காப்பாற்றி இருக்கிறேன்.என்று சொல்லும் அருள்ராஜ் ஆட்டோ ஓட்டுநர் ஆனது தனிக்கதை.
 தனியார் வங்கி ஒன்றில் கடன் வசூலிக்கும் பணியைச் செய்து வந்த அருள்ராஜ், பணி நேரம் போக மற்ற நேரங்களில் ஆதரவற்றவர்களை மீட்டு அரசின் நல்வாழ்வு இல்லங்களில் சேர்க்கும் பணியை மேற்கொண்டுள்ளார். இந்த விஷயம் வங்கி மேலாளருக்கு தெரியவர "உன்னுடைய பணி சிறப்பானது. நீ அந்தப்பணியைத் தொடர்ந்து செய். இந்த வங்கி வேலை உனக்கு சரியாக வராது' என்று சொல்லி வேலையைவிட்டு அனுப்பிவிட்டாராம். 6 மாதங்களுக்கு மேலாக எந்த வேலையிலும் இல்லாமல் பலரிடம் உதவி கேட்டுள்ளார். சமூக சேவைக்காக விருது வழங்கி கௌரவித்தவர்கள் யாரும் உதவ முன் வரவில்லை. தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நல்ல உள்ளம் படைத்தவர், சிலரை அருள்ராஜ் வீட்டுக்கு சிலரைஅனுப்பி உண்மை நிலவரத்தை தெரிந்து வரச் சொல்லியிருக்கிறார். அந்தப் பகுதியில் வசிப்பவர்களிடம் அருள்ராஜ் பற்றி விசாரித்து நற்சான்றிதழ் கிடைக்க, புதிய ஆட்டோ வாங்குவதற்கு குறிப்பிட்ட தொகையை அருள்ராஜுக்கு தெரியாமலேயே ஆட்டோ விற்கும் நிறுவனத்திடம் கொடுத்து ஆட்டோவை பெற ஏற்பாடு செய்துள்ளார்.
 இனி வரும் காலங்களில் சாலையில் ஆதரவற்றோர் யாரும் இல்லாத நிலை வர வேண்டும் என்று நண்பர்களிடம் சொல்லி இதற்கான ஒரு மொபைல் ஆப்பை கண்டுபிடித்தால் என்ன என்று ஆலோசனை செய்ய அவர்கள் இரண்டு ஆண்டு முயற்சிக்கு பிறகு புதிய செயலியை கண்டுபிடித்துள்ளனர். அதில் உள்ள சிறப்புகளை அருள்ராஜ் நம்மிடம் விளக்கி கூறினார்.
 வயதானவர்களுக்கு வாரிசு இல்லாவிட்டாலும் அருள்ராஜ் போன்றவர்கள் இருப்பது சற்று மன ஆறுதலே
 -வனராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com