Enable Javscript for better performance
தாக்கத்தில் எழுந்த உணர்வு!- Dinamani

சுடச்சுட

  
  kolangal_1

  "ஒரு சினிமா ரசிகனாக எனக்கு சார்லி சாப்ளின், பாலுமகேந்திரா சார் படங்கள் ரொம்பப் பிடிக்கும். அமெரிக்க இயக்குநர் ஃப்ராங்க் காப்ரா என்னை ரொம்பப் பாதித்தவர். இரண்டாம் உலகப் போர் சமயம், உலகம் முழுக்கவே போர் அழுத்தம் மக்கள் மனதில் ஒருவித வெறுப்பை உண்டாக்கி இருந்த போது, தன் சினிமாக்களில் பிரியத்தையும் நேசத்தையும் நிரப்பிக் கொடுப்பார் ஃப்ராங்க். நமக்குள் ஏதோ ஒரு சின்ன இலையை அசைக்கிறதுதான் ஒரு சினிமாவின் தாக்கமாக இருக்க வேண்டும். அப்படி ஒரு சினிமா காட்ட ஆசைப்பட்டுதான் இதை எடுத்தேன். படிக்கிற புத்தகம் மாதிரி, பார்த்து வளர்ந்த சினிமா மாதிரி இதுவும் ரொம்பவே எளிமையானது. பெரிய திட்டம் எதுவும் இல்லை. இந்தக் கதைக்கு எது உண்மையோ, எது நேர்மையோ... அவ்வளவுதான் படம்.'' நம்பிக்கையாக பேசுகிறார் எம்.ஆர். பாரதி. பத்திரிகை, எழுத்து, உலக சினிமா என தனி ரசனைக்காரர். இப்போது "அழியாத கோலங்கள் 2' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார். 

  பாலுமகேந்திராவின் "அழியாத கோலங்கள்' படத்தின் பாதிப்பு எதுவும் இருக்குமா....
  அப்படி எதுவும் இல்லை. நான் பாலுமகேந்திராவின் மாணவன். அவரிடம் சில படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். அது போல் இதில் நடித்திருக்கிற ரேவதி, அர்ச்சனா, ஈஸ்வரி ராவ் என பலரும் அங்கேயிருந்து வந்தவர்கள். மாணவர்கள் எல்லோரும் ஒன்று சேரும் போது, ஆசிரியரை நினைப்பதுப் போல்தான் இந்தப் படத்துக்கு "அழியாத கோலங்கள் 2' எனப் பெயர் வைத்தோம். இது ஒரு சின்ன நெகிழ்ச்சி. அவ்வளவுதான். மற்றபடி அவரின் படைப்பு வேறு. இதன் கரு வேறு. 
  மனித மனம் காட்டை மறந்து, வீட்டின் சூழலுக்குப் பழக்கப்பட்ட மிருகம் போல எப்போதும் ஒரு நிர்பந்தத்துக்குக் கட்டுப்பட்டது. மிருகம் மிருகமாக இருக்க இயலாமல் தடுப்பது மிருகத்தின் கோணத்தில் பெருந்துக்கம். எங்கேயாவது ஒரு மரத்தடியில் அமர்ந்து , உள் இழுத்து முழுவதுமாக புதைந்து போயிருந்த நினைவுகளை எல்லாம் தூர்வாரி வெளியே இழுத்துப்போட்டால் எப்படி இருக்கும். அப்படி ஒரு தாக்கத்தில் எழுந்த உணர்வுதான் படம். பரவசம் கொடுக்கும் பயணம், எளியவர்களின் எதிர்பார்ப்பு இல்லாத பிரியம்... இப்படித்தான் இருக்கும் இது. 

  எந்த மாதிரி திரை பாணி வடிவம்....
  கடந்து போன காலங்கள்தான். காதல்தான். எப்பேர்பட்ட ஆன்மிக அனுபவம் அது. மலையின் முன் நிகழும் அற்புதம். காதலும்கூட ஆன்மிகத்தின் ஒரு வழிதான். காதல் மட்டும் அல்ல; எந்தத் தீவிரமான உணர்வும் ஆன்மிகத்துக்கான முதல் திறவுதான். ஷாஜகானைப் பற்றி எத்தனைக் கருத்துகள் உலவினாலும், நிரம்பி வழிந்த அவனுடைய காதல்தான் தாஜ்மஹால் என்ற இப்படி ஓர் அற்புதத்தை உருவாக்கி இருக்க முடியும். 
  காதல், வாளைப் பறித்துவிட்டு... பூக்களைத் தருகிறது. காதல், ஒரு வீரனைக் கோழையாக்குகிறது... கோழையை வீரனாக்குகிறது. எப்போதும் காதல் முரணுக்குப் பிறந்த குழந்தைதான். கண்ணுக்குத் தட்டுப்படாத பிரியங்களின், கரிசனங்களின் குவியல்தான் இந்தப் படம்.

  உள்ளடக்க கதை பற்றி இன்னும் கொஞ்சம் பேசலாமே...
  சூரியன் குளிர்ந்து போகும்வரை நட்சத்திரங்கள் முதுமையடையும் வரை நான் உன்னைக் காதலிப்பேன்" என்று எப்படிக் காதலிக்க வேண்டும் எனக் கற்றுத்தந்தார் ஷேக்ஸ்பியர். அப்படி ஒரு ரசனைக்கார எழுத்தாளர் பிரகாஷ்ராஜ். காதல்தான்... காதல் மட்டும்தான் அவருக்கு அனைத்துக்கும் கிரியா ஊக்கி. அவருக்கு அனைத்தும் ஈரமான காதலிலிருந்துதான் உயிர்ப்பித்தது... உயிர்ப்பிக்கிறது.
  ஒரு கட்டத்தில் சாகித்ய அகாதெமி விருது வந்து சேர்கிறது. விருதுக்குப் பின் தனது காதலியை பார்க்க அவரது வீட்டிற்கு செல்கிறார். அவள் கணவனை இழந்து தனியே வசிக்கிறார். அவர்தான் அர்ச்சனா. 24 ஆண்டுகளுக்கு பின் சந்திக்க வரும் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார். இருவரும் தங்களது வாழ்க்கை அனுபவங்களை மனம் விட்டு பேசுகிறார்கள். எழுத்துலகில் தான் பெற்ற அத்தனை சிறப்புகளுக்கும் நீதான் காரணம் என்பதை சொல்கிறது எழுத்தாளர் பாத்திரம். அவர் அன்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விடுகிறார். அதன் பின் அவளை இந்த சமூகம் எப்படி எடுத்துக்கொள்கிறது, காதலன் மனைவியான ரேவதி என்ன செய்யப்போகிறார் என்பதை ஒரு இரவில் நடக்கும் கதையாக உருவாக்கி உள்ளேன்.

  இந்த மாதிரி சினிமாக்களுக்கு ரசிகர்கள் பெருகி வருகிற காலம் இது... 
  ஒரே மாதிரியான சினிமாக்கள் பார்த்து எல்லோருக்கும் ஓர் அலுப்பு இருக்கிறது. காமெடி, பேய் இதுதான் மாறி மாறி இருக்கிற ட்ரùண்ட். ஆனால் காதல் படங்களுக்கு எப்போதுமே ஒரு கூட்டம் உண்டு. "தென் மேற்கு பருவக்காற்று', "அசுரன்' மாதிரியான படங்களுக்கு வந்த கூட்டம் எல்லாம் நல்ல சினிமாக்களின் பின்னால் நிற்கிற கூட்டம். அப்படியான ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். அதன் பின் இந்தப் படத்தில் நிறைய பேர், எதார்த்த கதாபாத்திரங்கள். ராஜேஷ் கே. நாயர் கேமரா, அரவிந்த் சித்தார்த்தின் இசை, வைரமுத்து சார் பாடல்கள் என்று நல்ல டீம் நம்பிக்கையாக இருக்கிறேன். 
  -ஜி.அசோக்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai