மாற்று மருத்துவத்தில் தான் மக்களின் கவனம்!

சித்த மருத்துவர், தீவிர சூழலியல் செயல்பாட்டாளர், உணவியல் ஆய்வாளர், நம் பாரம்பரிய உணவுமுறையை வாழ்வியல் நெறிகளை மீட்டெடுக்கும் பணியில் அர்ப்பணிப்போடு செயல்படுபவர்,
மாற்று மருத்துவத்தில் தான் மக்களின் கவனம்!

சித்த மருத்துவர், தீவிர சூழலியல் செயல்பாட்டாளர், உணவியல் ஆய்வாளர், நம் பாரம்பரிய உணவுமுறையை வாழ்வியல் நெறிகளை மீட்டெடுக்கும் பணியில் அர்ப்பணிப்போடு செயல்படுபவர், மத்திய அரசின் 12-ஆவது திட்டக்குழுவில் சித்த மருத்துவத்துக்கான ஆலோசகர், சமூகஆர்வலர். இன்னும் பல அடையாளங்களைக் கொண்டவர் மருத்துவர் கு. சிவராமன்.

சர்வதேச அளவில் சித்த மருத்துவத்தை அதன் மகத்துவத்தைக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர். ஒருங்கிணைந்த மருத்துவ முறை என்பதை இந்தியாவிற்கு அறிமுகம் செய்து அதனை மக்களிடம் சேர்க்க உழைப்பவர். கால் நூற்றாண்டுக்கும் மேலாக மருத்துவத்துறையில் பெற்ற தமது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

இளமைப்பருவம் பற்றிச் சொல்லுங்களேன்?

அற்புதமான மனுஷியாக அம்மா, தங்கை, அரசு அலுவலராக அப்பா என்று பாளையங்கோட்டையில் வளவுவீடு என்று சொல்லப்படும் தொகுப்பு வீடுகளில் ஒரு குழுவைப் போல வாழும் வாழ்க்கை முறை அமைந்தது. அழகான நடுத்தரக் குடும்பத்து நகர வாழ்க்கை, அங்கே பெரிய பள்ளிக்கூடத்தில் படிப்பு, விடுமுறைகள் எல்லாம் தாத்தா பாட்டி வீட்டில் கிராமத்தில் இயற்கையோடு களிப்பு. இப்படித்தான் நகரத்து வசதிகள் கிராமத்துக் கொண்டாட்டங்கள் என என்னுடைய இளமைப்பருவம் இருந்தது. இயற்கை மீதான ஆர்வம் அங்கேயே விதைக்கப்பட்டது என்று சொல்லலாம்.

உங்களுடைய தனிப்பட்ட விருப்பங்கள் என்ன?

சிவராமன் ஒரு சாப்பாட்டு ராமன் .அதற்குக்காரணம் என்னுடைய அம்மா அற்புதமான சமையல் கலை வல்லுநர்.விதவிதமாக சமைத்துத்தருவதைச் சாப்பிடுவதில் எனக்கு விருப்பம் அதிகம். அடுத்து, நான்அடிப்படையில் ஒரு பயண விரும்பி. பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் அதிகம். பல நாடுகளுக்கும் ஆராய்ச்சி நிமித்தமாகவும் பணி தொடர்பாகவும் சென்று வரும் வாய்ப்பு அமைந்திருக்கிறது. சிறுவயதில் ஆஸ்துமாவால் அவதிப்பட்ட எனக்கு பள்ளிக்கூடத்தில் புத்தகயா செல்வதற்கான வாய்ப்பு அமைந்த போது உற்சாகம் தந்து என்னை தைரியமாக என்னுடைய அம்மா அனுப்பிவைத்தார்கள். அப்போதிலிருந்து பயணம் எனக்கு மிகப்பிடித்தமானது.

சித்த மருத்துவர் ஆனது எப்படி?

சித்த மருத்துவத்துக்கான எந்த பின்புலமும் எனக்குக் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் மருத்துவக்கல்லூரியில் சேர்வது வரை சித்த மருத்துவம் பற்றிய எந்த ஒரு விஷயமும் எனக்குத் தெரியாது. பள்ளிக்கூடத்தில்படித்த போது மருத்துவராக வேண்டும் என்ற கனவு மட்டும் இருந்தது. ஆனால், மருத்துவக்கல்லூரிகளில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. அப்போது என் தகப்பனாரின் நண்பர் சித்தமருத்துவக்கல்லூரி பற்றிச் சொல்லி அங்கே படித்தால் அரசு வேலை நிச்சயம் என்று கூறினார். அதைக்கேட்ட அப்பா என்னை பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்கு சம்மதித்தார். இப்படித்தான் சித்த மருத்துவம் படிக்கச் சென்றேன்.

சித்த மருத்துவராக ஆன போது சமூகத்தின் பார்வை எப்படி இருந்தது?

சித்த மருத்துவம் என்றாலே வேறு எந்தக் கல்லூரிகளிலும் இடம் கிடைக்காமல் அங்கு வந்து சேர்ந்தவர்கள் என்று தான் நினைப்பர். சமூகத்திலும் பெரிய மதிப்பு ஒன்றுமில்லை. இரண்டாம் பட்சமாகவே பார்க்கப்பட்டோம். என்னுடைய அதிர்ஷ்டம் நல்ல ஆசிரியர் அமைந்தது. சித்த மருத்துவம் என்பதற்கான முழுமையானஅர்த்தத்தை சொல்லித்தந்தார்கள். டாக்டர் மைக்கேல் ஜெயராஜ் என்ற என்னுடைய சீனியர் இது மருத்துவம்அல்ல "தமிழரின் வாழ்வியல்' என்று சொல்லிக்கொடுத்தார்.சென்னையில் பதினெண் சித்தர் மருத்துவமனை என் றமருத்துவமனையில்தான் முதன்முதலாக பணியில் சேர்ந்தேன். அப்போது தமிழ்நாட்டில் இருந்த ஒரே சித்த மருத்துவமனை அதுதான்.

தமிழ் ஆர்வம் பற்றி?

பள்ளிக்காலத்திலிருந்தே எனக்கு தமிழ் மீது ஆர்வம் இருந்தது. என்னுடைய தமிழாசிரியர் எனக்கு நன்றாக பயிற்சி கொடுத்து இருந்தார். நல்ல தமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்திப் பேசுவது எப்படி என்பதை அவருடைய வழிகாட்டுதலில்தான் கற்றுக்கொண்டேன். டாக்டர் தெய்வநாயகம் அவரோடு 13 ஆண்டுகள் உடனிருந்தேன். தமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்தித்தான் அவர் பேசுவார். தாய்மொழியின் மீது விசுவாசம் இருக்க வேண்டும் என்பார்.சித்த மருத்துவமும் தமிழில்தான் இருந்தது சித்தர்பாடல்களை அடிப்படையாகக் கொண்டே கல்வி அமைந்திருந்த காரணத்தால் தமிழ் மீது ஆர்வமும் வியப்பும் அதிகமாயிற்று. இந்தப் பயிற்சிதான் இப்போது நல்ல தமிழ் பேசுவதற்கும் எழுதுவதற்கும் உறுதுணையாக இருக்கிறது.

எழுதுவதற்கு ஆர்வம் வந்தது பற்றி ?

1993-இல் முதன் முறையாக என்னுடைய நிர்வாக இயக்குநர் பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையில் சித்த மருத்துவம் பற்றி ஒரு கண்காட்சியை நடத்த அனுமதிதந்தார்.அப்போது ஒரு மூலிகைக்கண்காட்சியை சென்னையில் நடத்தினேன். அப்போது அது பற்றிய ஒரு கட்டுரை தினமணி கதிரில் எழுதப்பட்டது. அதை எழுதியவர் சந்தானம். அவரோடுசூழலியல், தமிழ் மருத்துவம், காப்புரிமை போன்ற பல விஷயங்களைப் பற்றியும் பேசியபோது புதிய கருத்துக்களை தினமணியில் ஏற்று வெளியிடுவார்கள் என்று கூறி நடுப்பக்கக்கட்டுரை எழுதுவதற்கு என்னைத் தூண்டினார்.

அப்படித்தான் என்னுடைய எழுத்துப்பயணம் ஆரம்பம் ஆயிற்று. தினமணியில் ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் நடுப் பக்கக்கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தேன். தினமணிதான் எழுதுவதற்கு என்னைத் தூண்டியது; வாய்ப்பளித்தது.இதனால் என்னுடைய கருத்துக்கள் பிரபலமாயின என்னுடைய பெயரும் வெளியில் தெரியவந்தது. அதன்பிறகு பல பத்திரிகைகளிலும் வாய்ப்புத் தந்தார்கள். இப்படி ஆரம்பம் ஆன என்னுடைய எழுத்துப்பயணம் இன்று வரை தொடர்கிறது.

உங்களின் உணவு சார்ந்த ஆராய்ச்சி பற்றி ?

உணவியல் சார்ந்த ஆய்வில் நான் என்னுடைய முனைவர் பட்டத்தை முடித்தேன். இதனால் மிகப்பெரிய உணவியல் நிறுவனத்தில் எனக்கு ஆய்வுத்துறையில் வேலை கிடைத்தது. ஆறு ஆண்டுகளில் ஏறத்தாழ 19 நாடுகளுக்குப் பயணம் செய்து பல பல்கலைக்கழகங்களுக்கும் சென்று உணவு சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தேன். அந்த நேரத்தில் நம்முடைய நாட்டின் உணவு முறை பற்றிய சிந்தனை எனக்குத் தோன்றியது. அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட போதுதான் நம்மாழ்வார் ஐயா வை 1999-இல் சந்தித்தேன். பின்னர் அவரோடு சேர்ந்து உணவு சார்ந்த ஆராய்ச்சிகளை களப்பணிகளை மேற்கொண்டேன்.

மரபணு மாற்றுப்பயிர்கள் விஷயத்தில் உங்கள் முயற்சி..

நம்மாழ்வார் ஐயாவுடன் சேர்ந்து களப் பணியாற்றிக் கொண்டிருந்த போது இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்ததால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசின் கவனத்திற்கு இந்த விஷயங்களை எடுத்துச்செல்லவும் எனக்கு ஊக்கம் தந்தார். நானும் மக்களிடம் இது குறித்துப் பேசத்தொடங்கினேன். அதே நேரத்தில் மரபணு மாற்றப்பயிர்கள் நம் நாட்டுக்குத் தேவையற்றவை என்பதை

மத்திய அரசிடம் எடுத்துச் சென்று பேசினோம். அப்போது தான் நெல் ஜெயராமன் போன்றவர்களின் அறிமுகமும் அவர்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் அமைந்தது. பல விதங்களிலும் விளக்கங்களை வைத்து பிடிகத்தரிக்காய் வராமல் தடுத்தோம். தொடர்ந்து இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

சுவையான சமையல் குறிப்புகள் உங்கள் புத்தகங்களில் மிகுதியாக இருக்கின்றதே...

அம்மா அற்புதமாக சமைக்கக்கூடியவர். எனக்கும் விதவிதமாக சாப்பிடப்பிடிக்கும். எங்காவது சென்று ஏதாவது ஒருசிறுதானியம் என்று சொல்லப்படும் அருந்தானியத்தைக் கொண்டு வந்து அம்மாவிடம் காட்டினால் இதைக் கொண்டு தோசை செய்யலாம் பாயசம் செய்யலாம் என்று புதிது புதிதாகக்கண்டுபிடிப்பார்கள். சிறுவயதில் அவர்கிராமங்களில் என்னவெல்லாம் சமைப்பார்கள் என்று சொல்லி அதையும் எனக்கு அறிமுகப்படுத்துவார்கள். அந்த நேரத்தில் தான் சிறுதானியங்களின் நன்மைகளைச் சொல்லி அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்று வெகுஜனமக்களிடம் பேசுவதும் எழுதுவதுமாக இருந்தேன். சிறுதானியம் என்பது ஒதுக்கத்தகுந்ததல்ல நோயாளிகள் சாப்பிடுவது அல்ல அவற்றையே முதன்மை உணவாகச் சாப்பிட முடியும் என்று சொல்வதற்காக எங்கள் வீட்டில் சமைத்து நான் சாப்பிட்டு மகிழ்ந்த உணவு வகைகளை அப்படியே மக்களோடு பகிர்ந்துகொண்டேன். பின்னாளில் மக்கள் அவரவர் மனதிற்கு ஏற்றாற் போல புதிய உணவு வகைகளை சமைக்கத் தொடங்கி விட்டார்கள். சிறுதானிய உணவுகளுக்காகவே உணவகங்கள் கூடத் தோன்றி விட்டன.

பூவுலகின் நண்பர்கள் பற்றி?

பூவுலகின் நண்பர்கள் அமைப்பை ஏற்படுத்தியவர்கள் நெடுஞ்செழியன் மற்றும் சந்தானம். மருத்துவ வணிகம் பற்றிய செய்திகளை இவர்களிடம்தான் நான்கற்றுக்கொண்டேன். பாரம்பரிய மருத்துவத்தை இந்த மருந்து வணிகம் எப்படி அழிக்கிறது என்பதை எடுத்துச்சொன்னார்கள். சிலஆண்டுகள் இந்த அமைப்போடு நான் தொடர்பற்றுத்தான் இருந்தேன். பின்னர் மரபணுமாற்றப் பயிர்கள்உணவு அரசியல் வணிகம் இவற்றை வெகுஜனமக்களிடம்கொண்டு சேர்க்க வேண்டும் என்று மீண்டும் செயல்படத் தொடங்கினேன். உணவு வேளாண்மை போன்றவற்றிற்கு நம்மால் முடிந்த பங்களிப்பைத்தர வேண்டும் என்று நண்பர்கள் சேர்ந்து செயல்படத் தொடங்கினோம்.உணவுப் பாதுகாப்புக்கான கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தி இந்தியா முழுவதும் இயற்கை வேளாண்மை சார்ந்த களப்பணி ஆற்றுவதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு காரணமாக இருந்தது. இன்றும் அதேவழியில் தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

அறமற்ற வணிகம் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள் அதுபற்றி?

விளம்பரங்கள் மூலம் தங்களுடைய பொருட்களை வாங்கச் செய்ய வேண்டும். ஏதோ ஒரு விதத்தில் இவர்கள் நுகர்வோரைக் கவர்கிறார்கள். அறிவியல் முலாம் பூசப்பட்ட விளம்பரங்கள் பெருமளவில் குழந்தைகள் சார்ந்த உணவுப்பொருட்களில் அதிகம் காணப்படுகின்றன. இன்னின்ன வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன என்று கூறும் விளம்பரங்கள் அதைத் தாண்டி என்னென்ன வகையான நச்சுப்பொருட்களும் வேதிப்பொருட்களும் கலந்திருக்கின்றன என்பதைச் சொல்லாமல் மறைக்கின்றன.

இதைத்தான் "அறமற்றவணிகம்' என்றுசொல்கிறோம். மிகப்பெரிய அளவில் முயற்சி மேற்கொண்ட பின்னர் தற்போதுதான் சில நிறுவனங்கள்உணவுப்பொருளில் என்னென்ன கலந்திருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளமுன் வந்திருக்கின்றன. குறைந்தபட்சம் குழந்தைகளுக்கான உணவு அல்ல என்றேனும் குறிப்பிடவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஊட்டச்சத்துக்களை குறிப்பிடும் பொழுது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் பற்றிய குறிப்புகளையும் தர வேண்டும் என்றுவலியுறுத்துகிறோம். அறமற்ற வணிகத்தை முடிவுக்குக் கொண்டு வர இன்னும் மிகப்பெரிய முயற்சியும் மனித ஆற்றலும் தேவையாக இருக்கின்றன. வெகுஜன மக்களின் புரிதல் அவசியமாயிருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கும் நெறிப்படுத்துவதற்கும் நம் நாட்டில் இன்னும் அதற்குரிய கடுமையான சட்டங்கள் இல்லை என்பது வேதனைக்குரியது.

சித்த மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆங்கில மருத்துவம் முன்னிலை பெற்றது எப்போது?

சித்த மருத்துவம் என்பது ஒரு வாழ்வியல். மருத்துவம் என்பது அதில் ஒருகூறுதான். நவீன மருத்துவத்தையும் சித்த மருத்துவத்தையும் ஒரே தட்டில் வைத்து எடை போட இயலாது. சித்தமருத்துவம் உணவு மனம் ஆன்மிகம் இயற்கை யோகா காலம் இயற்கைக்கு ஏற்ற வாழ்க்கை மண்ணுக்கேற்ற வாழ்க்கை என்று எத்தனையோ பரிமாணங்களைக் கொண்டது. நவீன அறிவியலின் துணையை நாட ஆரம்பித்த காலத்தில் ஆங்கில மருத்துவம் முதன்மைப்படுத்தப்பட்டது. நம் நாட்டில் நவீன மருத்துவத்தின் பங்களிப்பு மிகப்பெரியது. பல தொற்று நோய்களுக்குத் தீர்வு கண்டது, மகப்பேறு மரணங்களைப் பெருமளவில் குறைத்தது, சிசு மரணங்களைத்தடுத்தது,பொது சுகாதாரத்தை மேம்படுத்தி தொற்றுநோய்கள் அண்டாமல் தடுத்தது, காலரா, பிளேக் போன்ற நோய்களைத் தவிர்க்க முடிந்தது இவையெல்லாம் நவீன மருத்துவத்தின் பயன்கள். இதனால் தான் மக்கள் நவீன மருத்துவத்தை நம்பத் தொடங்கினார்கள். அப்போதுதான் நமது பாரம்பரிய மருத்துவம் சற்று பின்னடைவைச் சந்தித்தது.

மீண்டும் சித்த மருத்துவம் மேலோங்குமா?

சுற்றுச்சூழல், உணவு இவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் இந்தக் காலத்தில் சர்க்கரை நோய் போன்ற தொற்றாத நோய்கள் பெருமளவில் வாழ்நாள் முழுவதற்குமான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இன்று வளர்ந்திருக்கின்றன. இந்த நோய்களுக்கு நவீனமருத்துவம் தரும் மருந்துகள் முழுமையான தீர்வைத் தருவதாக இல்லை.இப்பொழுதுதான் பாரம்பரிய மருத்துவத்தின் மீது மக்களின் கவனம் திரும்புகிறது. இதனால் உலகம் முழுவதும் மாற்றுமுறை மருத்துவங்கள் தொற்றாத நோய்களுக்கான தீர்வைத்தந்துவிடாதா என்ற ஆதங்கம் மேலோங்கியிருக்கிறது. அதற்கான தேடலில் சித்த மருத்துவத்திற்கான முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது. காலப்போக்கில் மற்றுமொரு இணையான மாற்று மருத்துவமாக உலகம் முழுவதும் சித்த மருத்துவம் நிலைக்கும்.

ஒருங்கிணைந்த மருத்துவமுறை என்ற கருத்தை சமீபமாக முன் வைக்கிறீர்கள்..

ஒவ்வொரு மருத்துவ முறையும் சில தனித்தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. சில நோய்களுக்கு முழுமையான தீர்வுகளையும் கண்டிருக்கின்றன. உலகம் முழுவதும் எல்லா மருத்துவமுறைகளிலும் தொடர்ந்து ஆராய்ச்சி நடந்து கொண்டே இருக்கிறது. அதனால் ஒரு குறிப்பிட்ட மருத்துவம் தான் சிறந்தது என்று கூற இயலாது. வருங்காலத்தில் ஒருங்கிணைந்த மருத்துவமுறை நடைமுறைக்கு வரலாம். அதாவது ஒவ்வொரு மருத்துவத்தின் தனித்தன்மையையும் நோயை குணப்படுத்துவதற்குப் பயன்படுத்திக்கொள்வது. ஒரே மருத்துவமனையில் நோயாளிக்குத் தேவையான பல வகையான சிகிச்சைகளும் கிடைப்பதற்கான வாய்ப்பு நோக்கித்தான் இப்போது மருத்துவ உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

சர்வதேசக் கருத்தரங்குகளும் இது தொடர்பாகவே நடைபெற்று வருகின்றன. புற்றுநோய் போன்ற கடும் சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கு இத்தகைய ஒருங்கிணைந்த மருத்துவம் நல்ல பலனைத்தரும். அமெரிக்காவில், தாய்ச்சி எனும் மூச்சுப்பயிற்சியைத் தந்து நவீன கீமோதெரபி அளித்து உணவியல் சார்ந்த கட்டுப்பாடுகளையும் தந்து சிகிச்சை தருகின்றனர். இனி வரும் காலங்களில் மருத்துவச் செலவைக் குறைத்து ஒருங்கிணைந்த மருத்துவத்தின் மூலம் பலனைஅதிகரிக்கும் செயல்பாடு நிலைபெறும். இந்த ஒருங்கிணைந்த மருத்துவமுறை உலகம் முழுவதும் நிலைபெறும்பொழுது தொற்றாத நோய்கள் சர்க்கரை நோய் புற்றுநோய் போன்ற பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும் அபாயகரமான நோய்களுக்குத் தீர்வு காண்பதில் சித்த மருத்துவத்தின் பங்கு தவிர்க்க முடியாத படி பெருமளவில் இருக்கும்.

உங்கள் வெற்றிக்கான அடிப்படை ?

நம்பிக்கை தரக்கூடிய பள்ளிக்கூடம் ஆசிரியர்கள் குடும்பம் மகிழ்ச்சியான சூழல் இவைதான் எனது இன்றைய தெளிவான வாழ்க்கை முறைக்கு அடிப்படை அல்லது வெற்றிக்கானகாரணம் என்று சொல்வேன்.

- ஜோதிலட்சுமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com