வரலாறு காட்டும்

மக்களுக்கு வேண்டிய தேவையான மருத்துவ வசதிகள் செய்து தரப்பட்டதை வரலாற்றுச் சான்றுகளான கல்வெட்டுகள் எடுத்துக்கூறுகின்றன. மருத்துவமனைகள் "ஆதுலர்சாலை'" என
வரலாறு காட்டும்

மக்களுக்கு வேண்டிய தேவையான மருத்துவ வசதிகள் செய்து தரப்பட்டதை வரலாற்றுச் சான்றுகளான கல்வெட்டுகள் எடுத்துக்கூறுகின்றன. மருத்துவமனைகள் "ஆதுலர்சாலை'" என அழைக்ப்பட்டன. திருக்கோயில்களிலும் மருத்துவச்சேவை நடைபெற்றதை அறியமுடிகிறது.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பேரரசர் அசோகரால் மக்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதை கல்வெட்டின் மூலம் அறிகிறோம். அவ்வாறே சமணத்துறவிகள் தங்கள் பள்ளிகளில் கல்வி, மருத்துவம், உணவு உள்ளிட்ட பிற தானங்கள் செய்ததாக மதுரை மாவட்டத்தில் மலைகளில் உள்ள (பிராமி) பண்டைத் தமிழ்க் கல்வெட்டுகளால் அறிகிறோம். 
பெரு மருத்துவனார்
மருத்துவத்தில் சிறந்து விளங்கியவர்கள் அரசனுக்கும் மருத்துவராக விளங்கியிருக்கிறார்கள். பல்லவ மன்னர்களில் மகேந்திரவர்மனுக்கு (கி.பி. 590-630) மருத்துவராக இருந்தவர் பற்றி குறிப்பிடும் கல்வெட்டு காஞ்சிபுரம் வட்டம் "சிறுவாக்கம்" என்ற ஊரில் உள்ள விநாயகர் கோயிலில் காணப்படுகிறது. "மயேந்திரப்போத்தரைசரு பெரு மருத்துவனாருக்கு தேவகுலம்'" என்பதே அக்கல்வெட்டு. இதில் ""பெரு மருத்துவனார்'" என மருத்துவர் குறிப்பிடப்படுவது சிறப்பாகும்.
வைத்திய சிகாமணி
பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியனின் எட்டாம் ஆட்சி ஆண்டு, நாமக்கல் குன்றுச்சரிவில் வெட்டப்பட்டிருக்கும் கல்வெட்டில், இப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த சிறப்பு மருத்துவர்களுள் ஒருவரான நாங்கூர் நாட்டைச் சேர்ந்த "சுவர்ணன் பாராசிரியன் ஆதித்த தேவன் திருவம்பலப் பெருமாளான வைத்ய புரந்தரன்" என்பவருக்கு ஊதியமாக மன்னர் நிலம் அளித்ததைப் பற்றிக் கூறுகிறது.
பாண்டிய நாட்டில் இருந்த வைத்தியகுல பெரியோர்களைப் பற்றியும் கல்வெட்டுகளின் வழியே அறிகிறோம். பாண்டிய மன்னன் மாறன் சடையனின் (கி.பி. 8-ஆம் நூற்றாண்டு) தலைமை அமைச்சரான மாறன்காரி, கரவந்தபுரம் என்ற களக்குடியில் வைத்தியக் குலத்தைச் சேர்ந்தவர் ஆவார். மருத்துவத் துறையில் சிறந்து விளங்கியவர் "வைத்திய சிகாமணி'" என்ற சிறப்புப் பெயரையும் பெற்றிருந்தார் என்பதையும் அறிய முடிகிறது. 

திருமுக்கூடல்
தமிழகத்தில் சோழர் காலத்திலிருந்த மருத்துவச் செய்திகளைப் பற்றியும் பல கல்வெட்டுகள் கூறுகின்றன. "ஆதுலர்சாலை' என மருத்துவமனைகள் கல்வெட்டுக்ளில் குறிப்பிடப்பட்டுள்ளன. திருமுக்கூடல், திருப்புகலூர், திருவாவடுதுறை, கீரைக்களூர், கூகூர் மற்றும் கடத்தூர் ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகள் சோழர்காலத்தில் அளிக்கப்பட்ட மருத்துவச் சேவைக்குறித்து செய்திகளைத் தெரிவிக்கின்றன. இவற்றில் சிறப்புமிக்கது எனச் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடல் கோயில் கல்வெட்டைக் குறிப்பிடலாம். 
பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறுகள் கூடுமிடம் திருமுக்கூடல் என்று அழைக்கப்படுகிறது. இங்கு உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சோழர்கால கல்வெட்டுகள் உள்ளன. இவ்வூரை ""ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து களத்தூர்க் கோட்டத்து, தனியூர் ஸ்ரீ மதுராந்தகச் சதுர்வேதிமங்கலத்து வடபிடாகை திருமுக்கூடல்'" என்று சோழர்கால் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன்.
முதலாம் ராஜேந்திரனின் மகன் வீரராஜேந்திரனின் 5-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்று இவனது காலத்தில் திருமுக்கூடல் கோயிலில் வேதக் கல்லூரியும், மருத்துவமனையும் இயங்கியதை கூறுகிறது. 55 வரி
களைக் கொண்ட மிகப்பெரிய கல்வெட்டு இது. "கங்கை கொண்ட சோழபுரத்துச் சோழ கேரளன்'" என்றும் திருமாளிகையில் ""ராஜேந்திரச் சோழ மாவலி வாணராஜன்" என்ற இருக்கையில் அமர்ந்து இந்த ஆணையை வீரராஜேந்திர சோழன் வெளியிட்டுள்ளார். 
வீரசோழன் ஆதுலர்சாலை
இக்கோயிலில் 15 படுக்கைகள் கொண்ட "வீரசோழன்" என்ற கோயில் மருத்துவமனை இயங்கி வந்துள்ளது. "வியாதிபட்டுக் கிடப்பார்" என நோயாளிகள் குறிப்பிடப்பட்டனர். நோயாளி ஒருவருக்கு ஒருவேளை உணவுக்கு 1 நாழி அரிசி கொடுக்கப்பட்டது. மருத்துவச்சாலை விளக்கெரிக்க இரண்டே கால் காசும், விளக்கொன்றுக்கு ஆழாக்கு நெய் வழங்கப்பட்டதும் அறிய முடிகிறது.
நாடி பார்த்து மருத்துவம் செய்யும் பொது மருத்துவர் ஒருவரும் அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவர் ஒருவரும் இந்த ஆதுலர் சாலையில் பணியாற்றியுள்ளனர். மருத்துவர் "ஆதுலர்'" எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். அறுவைச்சிகிச்சை மருத்துவர் "சல்லியக்கிரியை பண்ணுவான்'" என்று குறிப்பிடப்பட்டுள்ளார். நாடி மருத்துவரின் பெயர் "ஆலம்பாக்கத்து சவர்ணன் கோதண்டராமன் அசுவத்தாம பட்டர்'" என்பதாகும். இவருக்கு நாளொன்றுக்கு ஊதியம் 3 குறுணி நெல்லும் 4 காசுகளும், அறுவைசிகிச்சை மருத்துவரின் ஊதியம் நாளொன்றுக்கு 1 குறுணி நெல்லும் 2 காசுகளும் ஆகும்.
மருத்துவர்களைத் தவிர்த்து அவர்களுக்கு உதவியாளர்களாக மருந்து தயாரிக்க தேவையான மூலிகைச் செடிகளைக் கொண்டு வருவதற்காகவும், அவற்றைக்கொண்டு மருந்து தயாரிப்பதற்காகவும், "மருந்தாய்ந்து கொடுப்பார்'" என்ற மருந்து கொண்டு வருபவர் இருவர் பணியாற்றினார். மேலும் மருந்து தயாரிக்க வேண்டியதற்கு பயன்படும் விறகுகளை சேகரித்து வந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
இவர்கள் ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு 1 குறுணி நெல்லும் 1 காசும் ஊதியம் பெற்றனர். மேலும், கத்தியைத் திறம்பட உபயோகிக்கும் சவரத்தொழில் செய்யும் நாவிதர் ஒருவரும் சவரத்தொழிலுடன் அறுவைச் சிகிச்சையும் செய்துள்ளார்.
இவரும் மருத்துவர் என்றே அழைக்கப்பட்டார். மகப்பேறு மருத்துவத்தில் உதவிய நாவிதர் மனைவி "மருத்துவச்சி'" என அழைக்கப்பட்டார். நாவிதருக்கு ஊதியமாக நாளொன்றுக்கு 4 நாழி நெல் அளிக்கபட்டது.
மருத்துவச் சாலை சிறப்பாக இயங்குவதற்கு மேலும் சில பணியாட்களும் இருந்தனர். "நீர் கொண்டு வருபவர்'" ஒருவர் மருத்துவச் சாலைக்கு தேவையான நீர் கொண்டுவரும் பணியிலிருந்தார். ஆண்டொன்றுக்கு 15 கலம் நெல் அவருக்கு ஊதியமாக கொடுக்கப்பட்டது. மகளிர் இருவரும் பணியாற்றினர். இவர்கள் "மருந்து அடும் பெண்கள்' என அழைக்கப்பட்டனர்; 
இவர்கள் ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு 4 நாழி நெல்லும் அரைக்காசும் ஊதியமாகக் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த ஆதுலர் சாலையில் ஒரு ஆண்டிற்கு தேவையான மருந்துகள் இருந்தன. அவற்றின் பெயர்களும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.

திருக்கோயில்களில் - மடங்களில்
மேலும் மருத்துவச்சேவைகள் பல திருக்கோயில்களில் நடைப்பெற்று வந்ததையும் கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகிறது.
ஆதுலர் சாலைகளை பராமரிக்க மருத்துவர்களுக்கும் நிலம் தானமாக அளிக்கப்பட்டது. அவ்வாறு அளிக்கப்பட்ட நிலம் ""வைத்திய விருத்தி'" என அழைக்கப்பட்டது. மருத்துவர்களில் அறுவை சிகிச்சை செய்பவர்களும் இருந்தனர். இதனை "சல்லியக்கிரியை'" செய்வோர் எனக் கல்வெட்டு குறிக்கிறது. கும்பகோணம் அருகில் உள்ள திருவிசலூர் கோயிலில் "சல்லியக்கிரியை போகமாக" நிலம் தானமாக அளிக்கப்பட்டதாக ராஜேந்திர சோழனின் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
ராஜராஜ சோழனின் தமக்கையான குந்தவை பிராட்டியார் தஞ்சாவூரில் தன் தந்தையின் பெயரால் "சுந்தர சோழ விண்ணகர் ஆதுலர்சாலை'" என்ற மருத்துவமன நிறுவியதை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதனைப் பராமரிக்க ஆகும் செலவுகளுக்காகப் பண்டாரவாடை என்ற ஊரில் நிலம் அளித்த செய்தியும் அறியப்படுகிறது.
திருக்கோயில்களில் மட்டுமல்லாமல் அருகில் உள்ள மடத்திலும் மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. அரியலூர் அருகே உள்ள கோவிந்தபுத்தூரில் "திருத்தொண்டத் தொகையான் மடம்" என்ற பெயரில் மடம் இருந்தது. அதில் அவ்வூருக்கு வரும் வழிப்போக்கர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. இதே போன்று கும்பகோணம் அருகே திருக்கோடிக்கா திருக்கோயிலில் மடைவிளாகத்தில் மருத்துவம் பார்ப்பதற்காக "வைத்திய விருத்தியாக" விக்கிரம சோழன் காலத்தில் நிலம் வழங்கப்பட்டது.
திருப்புகலூர் கோயில் கல்வெட்டு ஒன்றில் "வைத்திய சிகாமணி" என்ற சிறப்புப் பட்டம் குறிக்கப்படுகிறது. மேலும் இவ்வூரில் முடி கொண்ட சோழ ஆற்றின் தென்கரையில் இருந்து ஆதுலர் சாலையாகக் கொண்ட மடத்தில் மருத்துவ வசதி அளிக்கப்பட்டதையும் மற்றொரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஸ்ரீவாஞ்சியம் கோயில் அருகே உள்ள அச்சுதமங்கலம் கோயிலிலும் "வைத்திய விருத்தியாக'" நிலம் அளிக்கப்பட்ட செய்தி காணப்படுகிறது.
ஸ்ரீரங்கம் கோயில் - தன்வந்திரி 
ஸ்ரீரங்கம் கோயிலிலும் ஆதுலர்சாலை இருந்தது. போசள மன்னன் வீர ராமனாதன் காலத்தில் படைத் தலைவனாக இருந்த சிங்கன்ன தண்ட நாயக்கர் காலத்தில் "ஆரோக்கியசாலை" கருடவாகன பண்டிதரால் நிர்மாணிக்கப்பட்டது. அவர் இங்கு மருத்துவக் கடவுளான "தன்வந்திரி'" பெருமாள் திருமேனியையும் நிறுவினார். "மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா" என்று பெரியாழ்வார் திருமொழி போற்றுகின்றது. மருத்துவ வசதி இங்கு அனைவருக்கும் அளிக்கப்பட்டது மேலும், ஸ்ரீரங்கத்து பெருமாளுக்கு நாள்தோறும் "கஷாயம்" அளிக்கப்பட்டது. இது "ரங்க தோஷணை'" என்று பெயரிட்டு கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது.
மக்களுக்கு மிகவும் அவசியமான மருத்துவ சேவை திருக்கோயில்களிலும் அதைச் சார்ந்த மடங்களிலும் அளிக்கப்பட்டதை வரலாற்றுச் சான்றுகள் நமக்கு புலப்படுத்துகின்றன.
கட்டுரையாளர்:
தொல்லியல் துறை (ஓய்வு) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com