அதிவேக நீச்சல் தம்பதி!

நீச்சலில் இந்தியாவின் அதிவேக நட்சத்திரத் தம்பதியாகத் திகழ்கின்றனர் விர்த்வால் கடே-ருஜுட்டா.
அதிவேக நீச்சல் தம்பதி!

நீச்சலில் இந்தியாவின் அதிவேக நட்சத்திரத் தம்பதியாகத் திகழ்கின்றனர் விர்த்வால் கடே-ருஜுட்டா.

கிரிக்கெட்,  வாலிபால், கால்பந்து, ஹாக்கி, கபடி, கூடைப்பந்து, பாட்மிண்டன், டென்னிஸ் என பல்வேறு விளையாட்டுகள் பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றிருந்தாலும், நீச்சலுக்குத் தனி மதிப்புள்ளது.

மனித உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் வலு சேர்க்கும் வகையில் சிறந்த பயிற்சியாக உள்ளது நீச்சல். கடல், ஆறு, குளம், ஏரி என இயற்கையாக நீச்சல் பயிலுவோர் ஏராளம். ஆனால் நீச்சல் போட்டிகளில் பங்கேற்க சிறப்புப் பயிற்சி, ஊட்டச்சத்து தேவைப்படுகிறது.

நீச்சலில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் சிறப்புற்று உள்ளன.

இந்தியாவில் நீச்சல் விளையாட்டை எஸ்.எப்.ஐ. நிர்வகித்து வருகிறது. 1948-இல் எஸ்.எப்.ஐ தொடங்கப்பட்டு மொத்தம் 30 மாநில சங்கங்கள் இணைந்துள்ளன. ப்ரீஸ்டைல், பிரெஸ்ட்ஸ்ட்ரோக், பேக் ஸ்ட்ரோக், பட்டர்பிளை ஸ்ட்ரோக், பிரண்ட் கிரால், சைட் ஸ்ட்ரோக், டிரிடிங் வாட்டர் உள்ளிட்டவை நீச்சலின் வகைகளாகும்.

இந்திய முன்னணி நட்சத்திரங்கள்: ஷம்ஷெர் கான், ஆரத்தி சாஹா, பக்தி சர்மா, பரத்குமார், சிஎன்.ஜானகி, முரளிகாந்த் பெட்கர், சாஜன் பிரகாஷ், சந்தீப் செஜ்வால், ஷிகா தாண்டன், ஷிவானி கட்டாரியா, நிஷா மில்லட், ரேஹன் பொன்சா ஆகியோர் இந்தியாவின் தலைசிறந்த நீச்சல் வீரர்களாகத் திகழ்கின்றனர்.

விர்த்வால் கடே: அவ்வரிசையில் தற்போதைய காலகட்டத்தில் சிறந்தவராக திகழ்கிறார் விர்த்வால் கடே.  மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்த விர்த்வால். கடந்த 1991 ஆகஸ்ட் மாதம் 29-இல் பிறந்தவர். 28 வயதாகும் அவர், ப்ரீஸ்டைல் பிரிவில் வல்லவராக திகழ்கிறார். 50, 100, 200 மீ, ப்ரீஸ்டைல் பிரிவுகள் மற்றும் 50 மீ பட்டர் பிளை பிரிவில் தேசிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 2006 தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 6 தங்கப் பதக்கங்களை வென்றார்.

ஆசியப் போட்டியில் வெண்கலம்: 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் 100 மீ. ப்ரீஸ்டைல் பிரிவில் புதிய தேசிய சாதனையை நிகழ்த்தினார். 2010 குவாங்ஷு ஆசியப் போட்டியில் 50 மீ பட்டர்பிளை பிரிவில் வெண்கலம் வென்று 24 ஆண்டுகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

2011-இல் அர்ஜுனா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார் கடே. தற்போது பெங்களூருவில் தங்கி தீவிர பயிற்சி பெற்று வரும் அவர் ஏஷியன் ஏஜ் நீச்சல் போட்டியிலும் தங்கப் பதக்கங்கனை வென்றுள்ளார். கடந்த 2015-இல் இல் நீச்சல் வீராங்கனை ருஜுட்டாவை காதலிக்கத் தொடங்கிய கடே 2017-இல் திருமணம் செய்து கொண்டார்.

மனைவி ருஜுட்டாவும் சாதனை: விர்த்வால் கடேவின் மனைவி ருஜுட்டாவும் சிறந்த நீச்சல் வீராங்கனை ஆவார். இருவரும் இணைந்து அண்மையில் போபாலில் நடைபெற்ற தேசிய நீச்சல் போட்டியில் அதிவேக நீச்சல் தம்பதி என்ற சாதனையை படைத்தனர்.

ஆடவர் 50 மீ. ப்ரீஸ்டைல் பிரிவில் விர்த்வால் கடே 24.19 விநாடிகளில் கடந்து புதிய சாதனையைப் படைத்தார். இதற்கு முந்தைய சாதனை 24.26 விநாடிகளாகும். இச்சாதனையையும் விர்த்வாலே கடந்த 2018-இல் திருவனந்தபுரத்தில் படைத்திருந்தார்.

ருஜூட்டாவும் மகளிர் 50 மீ. ப்ரீஸ்டைல் பிரிவில் 26.72 விநாடிகளில் கடந்து தங்கத்துடன் புதியசாதனையை படைத்தார்.

இதன் மூலம் இந்திய நீச்சலில் அதிவேக நட்சத்திர தம்பதி என்ற சிறப்பை பெற்றுள்ளனர் விர்த்வால்-ருஜுட்டா.

இது தொடர்பாக விர்த்வால் கூறியதாவது: ""மனைவி ருஜுட்டா நீச்சல் பயிற்சி செல்ல மனதளவில் தயாராக இல்லை. எனினும் உடல் தகுதிக்காக நீச்சலில் ஈடுபட்டார். அதில் அவர் சிறப்பாக செயல்படுகிறார் என நம்பிக்கை ஏற்பட்டதும், 4 ஆண்டுகள் கழித்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு, 50 மீ. ப்ரிஸ்டைல் பிரிவில் சாதனை படைத்துள்ளார்'' என்றார்.

மனைவி ருஜுட்டா கூறியதாவது: ""போபாலில் நடைபெற்ற தேசிய நீச்சல் போட்டி சிறந்த அனுபவமாகும். அதிவேக தம்பதி என்ற சிறப்பை பெற்றது மகிழ்ச்சி தருகிறது. விர்த்வால் ஏற்கெனவே தேசிய சாதனையை படைத்துள்ளார். நானும் 50 மீ ப்ரீஸ்டைல் பிரிவில் சாதனை படைக்க வேண்டும். கடந்த 2015-இல் முதன்முறையாக தேசியப் போட்டியில் பங்கேற்றேன். அதன்பின் படிப்பை முடிப்பதற்குள் பயிற்சியாளர் இறந்து விட்டார். யூத் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டிய நிலையில், குழப்பத்தால் அந்த வாய்ப்பு பறிபோனது. இதனால் நீச்சலையே விட்டுவிடலாம் எனத் தோன்றியது. எனினும் விர்த்வாலின் தொடர் ஊக்கமே,  என்னை மீண்டும் நீச்சல் பயிற்சி பெற தூண்டியது ‘‘என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com