தமிழகம் - சீன நல்லுறவு

நமது இந்தியாவும், அண்டை நாடான சீனாவும் தொன்மையான நாகரீக வரலாற்றை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. குறிப்பாக தமிழகமும் - சீனாவும் பண்பாட்டு உறவுகள், வணிக உறவுகள் கொண்டு விளங்கியதை
தமிழகம் - சீன நல்லுறவு

நமது இந்தியாவும், அண்டை நாடான சீனாவும் தொன்மையான நாகரீக வரலாற்றை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. குறிப்பாக தமிழகமும் - சீனாவும் பண்பாட்டு உறவுகள், வணிக உறவுகள் கொண்டு விளங்கியதை தொல்லியல் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் கூறுகின்றன.


தமிழகத்தைப் பற்றி சீனர்கள் கி.மு. 2-ஆம் நூற்றாண்டிலேயே அறிந்திருந்தனர். சீனாவிலிருந்து பட்டு இறக்குமதி செய்யப்பட்டது என்று அர்த்தசாஸ்திரம் கூறுகிறது. பட்டு உற்பத்தியின் ரகசியத்தை அவர்கள் யாருக்கும் கூறவில்லை. சீனத்துப்பட்டு வணிகர்கள் மத்தியத்தரைக் கடல் வழியே யவன நாடுகளுக்குச் சென்று விற்றனர். அவர்கள் சென்ற பெருவழி "பட்டுப்பெருவழி' எனப்பட்டது. இது மத்திய ஆசியாவுக்கு ஜாவா சுமத்ரா, மலேசியா, பர்மா, வங்கம், கலிங்கம், சாதவாகன நாடு, தமிழ்நாடு, செங்கடல் வழியாக யவன நாட்டிற்குச் சென்று பட்டு வணிகத்தில் ஈடுபட்டனர். இதனை பண்டை நாளில் பட்டு (கடல்) வழி என அழைத்தனர். பட்டினப்பாலை (189) "குணகடல் துகிரும்' என்று கூறுவது சீனப்பட்டினை ஆகும்.

மேலும் "வூடி' என்ற சீன அரசர் காலத்தில் ஹ{வாங்சூ  பகுதியோடு வணிக உறவுகள் இருந்தது என “சியன் ஹன்சு”என்ற நூல் தகவலை அளிக்கிறது. "ஹீவாங்க' என்று குறிப்பிடப்படும் ஊர் காஞ்சிபுரம் ஆக இருக்கலாம் என அறிஞர்களால் கருதப்படுகிறது.

இந்தியாவிலிருந்து பெளத்த மதம் சீன நாட்டுக்கு பரவியது. சமய ஒற்றுமை ஏற்பட்டது. காஞ்சிபுரத்தைச் சார்ந்த போதி தர்மர் பெளத்த மதத்தைச் சீனாவில் பரப்ப சென்றார்.

யுவான் சுவாங்: இந்தியாவிற்கு கி.பி 7-ஆம் நூற்றாண்டில் வந்த யுவான் சுவாங் என்ற புத்தத்துறவி காஞ்சிபுரம் வந்தார். காஞ்சிபுரத்தில் மாமன்னர் அசோகரால் எடுப்பிக்கப்பட்ட பெளத்த ஸ்தூபம் ஒன்று இருந்தது. அது சுமார் 100 அடி உயரத்திற்கும் மேல் இருந்தது. காஞ்சியில் பல பெளத்தப் பள்ளிகள் இருந்தன என்று யுவான் சுவாங் தனது பயண நூலில் குறிப்பிடுகிறார். 

காஞ்சிபுரத்தில் வைகுண்ட பெருமாள் கோயில் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் (கி.பி. 731 -- 796) காலத்தில் கட்டப்பட்டு, “பரமேஸ்வர விண்ணகரம்” என அழைக்கப்பட்டது. இக்கோயிலில் திருச்சுற்றுச் சுவர்களில் பல்லவ அரசர்களின் வரலாறு புடைப்புத்தொடர் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி. 630 -668) காலத்தில், காஞ்சிக்கு சீன பயணி யுவான் சுவாங் பயணம் மேற்கொண்டார். வைகுந்த பெருமாள் கோயிலில் காணப்படும் பல்லவர் வரலாற்றைக் கூறும் தொடர் சிற்பங்களில் தென்மேற்கு மூலையில் காணப்படும் சிற்பத்தில் கையில் பிடியுடன் கூடிய சாமரம் போன்ற ஒன்றை தாங்கிய நிலையில் ஒருவர் நிற்கிறார். அவருடைய முகம் சீன நாட்டவர் முகத்தோற்றத்துடன் காட்சி அளிப்பதைக் காணலாம். யார் அவர் என அறிய போதிய சான்றுகளில்லை. எனினும் சீன நாட்டு பயணியாக இருக்கலாம் எனக் கருத வாய்புள்ளது.

காஞ்சிபுரம்: வரலாற்றுச் சிறப்பு மிக்க காஞ்சிபுரத்தின் தொன்மைச்சிறப்பினை அறிய மத்திய அரசு தொல் பொருள் ஆய்வுத்துறை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறை, காஞ்சி சந்திரசேகர பல்கலைக்கழகம் போன்றவை பல்லவ மேடு போன்ற பல இடங்களில் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டன. இவற்றில் காமாட்சியம்மன் கோயில் அருகே நடைபெற்ற அகழாய்வில் பெளத்த ஸ்தூபம் என்று கருதப்படும் வட்டவடிவிலான கட்டடப்பகுதி வெளிப்படுத்தப்பட்டது. இக்கட்டடப்பகுதி அருகே மண் அடுக்கில் "புதலதிச' என்ற பெயர்பொறிப்பு உள்ள பானை ஓடு கிடைத்தது. அப்பெயர் பெளத்தத் துறவியின் பெயராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும் "கியோ தங்கசு'  என்ற நூல் சீன வணிகர்களுக்காக பல்லவ நாட்டில் (காஞ்சிபுரம் அல்லது மாமல்லபுரத்தில்) கட்டப்பட்ட கோயிலைப் பற்றி குறிப்புகள் காணப்படுகிறது.

தூதுக் குழு: சோழ மன்னர்கள் காலத்தில் சீனாவுடனான வணிக உறவு மேலும் வலுவடைந்தது. தூதுக் குழுக்கள் அனுப்பப்பட்டன. இராஜராஜசோழன், இராஜேந்திர சோழன் காலத்தைத் தொடர்ந்து முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் 72 பேர் அடங்கிய குழு சீனப்  பயணம் மேற்கொண்டனர். சீன நூல்கள் குலோத்துங்க சோழனை "திஹீவா கியாலோ' (தேவன் குலோத்துங்கன்) என்று குறிப்பிடுகின்றன.

தமிழ்நாட்டு வணிகர்கள் பலர் சீன நாட்டுக்குச் சென்றனர். சீனாவின் தென்பகுதில் "குவன்சு'  என்ற ஊரில் கோயில் கட்டப்பட்டது. இக்கோயில் சீன அரசர் செகசைகானின் (குப்லாகான்) அனுமதியோடு சம்பந்தப்பெருமாளான தவ சக்கரவர்த்திகள் கி.பி.1282-ஆம் ஆண்டு கட்டியது. சீன அரசர்  பெயரால் திருக்காணீச்சுரம் என்று அழைக்கப்பட்டதை தமிழ்க்கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் தமிழகக் கோயிலின் பகுதிகள் சீனாவில் அகழாய்வில் பல இடங்களில் கிடைத்துள்ளன.

மேலும் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் சீன அரசன் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்ம வர்மனின் (கி.பி. 695 -728) அனுமதி பெற்று நாகப்பட்டினத்திற்கு வரும் சீனத் துறவிகளுக்காக ஒரு புத்தவிகாரம் கட்டினான். அது சீன பகோடா (கோயில்) என்ற பெயரில் சென்ற நூற்றாண்டு வரை மக்களால் அழைக்கப்பட்டது.

நாகப்பட்டினம் காயா ரோகணமுடையார் கோயிலில் அமுது படைத்து வழிபாடு செய்ய கடாரத்து அரசனால் தானம் அளிக்கபட்ட செய்தியில் 87 கழஞ்சு "சீனக்கனகம்' வழங்கப்பட்டதாக முதலாம் ராஜேந்திரச் சோழன் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இங்கு "சீனக்கனகம்' என்ற பெயரில் பொன் சிறப்பித்துக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

சீன நாட்டுப் பானை ஓடுகள்: சீன நாட்டுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்புக்கு சான்றாக சீனப்பீங்கான் பானை ஓடுகள் அகழாய்வுகளில் கிடைத்துள்ளன. தமிழகத்தில் அரிக்கமேடு, தரங்கம்பாடி, நாகப்பட்டினம், பெரியபட்டினம், கங்கைக்கொண்ட சோரழபுரம், பழைய காயல், தாராசுரம், பழையாறை போன்ற பல இடங்களில் கிடைத்துள்ளன. பச்சை வண்ணமுடைய செலடன் , வெள்ளை நிற பீங்கான் ஆகிய சீன நாட்டு பானை ஓடுகள் கி.பி 12-13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும், வணிகத் தொடர்புக்கு ஆதாரமாகவும் விளங்குகிறது. 

பெரியப்பட்டினம்:  ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமநாதபுரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் கடற்கரையில் பெரியப்பட்டினம் அமைந்துள்ளது. இவ்வூர் பராக்கிரமப்பட்டினம், புவுத்திர மாணிக்கம்பட்டினம் என்றும் அழைகப்பட்டதை கல்வெட்டுகளால் வரலாற்றுச் செய்திகளால் அறிய முடிகிறது. மார்கோபோலோ, இபின் பதூதா போன்ற கடல்வழி பயணிகள் இவ்வூரை பட்டன் - படன் என தமது பயணக்குறிப்புகளில் குறிப்பிடுகின்றனர். இங்கு தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் 1987-ஆம் ஆண்டு அகழாய்வு மேற் கொண்டனர். அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சீன நாட்டு மட்பாண்டங்களை ஆய்வு செய்த மறைந்த பேராசிரியர் நொபொருகராஷிமா இவை 13 – 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் சீனாவிலிருந்து வந்தவை என்றும் ஆய்வு செய்துள்ளனர். டெளயி- - சிலு என்ற நூலில், “"டாப்டன்'” என்ற தென்னிந்திய துறைமுகம் குறிப்பிடப்படுகிறது. சீன மொழியில் "டா' என்றால் “பெரிய” "படன்' என்றால் “பட்டினம்”  - "பெரிய பட்டினம்' என்ற இவ்வூர் குறிக்கப்படுகிறது. பெரிய துறைமுகப்பட்டினமாக இவ்வூர் விளங்கியிருக்க வேண்டும். கி.பி.1293-ல் மார்கோபோலோ என்ற கடல்பயணியும் சீனாவிலிருந்து இலங்கை வழியாக இந்தியா வந்தபொழுது பெரிய பட்டணத்திற்கு வந்து சென்றதையும் அறிய முடிகிறது.

சீனக் காசுகள்:  சீன நாட்டுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்புக்குச் சான்றாக சீனக்காசுகள் தமிழகத்தில் கிடைத்துள்ளன. புதுச்சேரி, மதுரை, தரங்கம்பாடி, நெடுங்காடு, தேரழுந்தூர், ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. தரங்கம்பாடி பகுதியில் கிடைத்த காசுகள் ஜின் (கி.பி. 1224 – 1236) மற்றும் மிங் (கி.பி. 1628 – 1644) அரச பரம்பரையைச் சேர்ந்ததாகும்.

மயிலாடுதுறை அருகில் உள்ள தேரழுந்தூரில் கிடைத்த காசு ஹீயசாங் (கி.பி. 1102-06) என்ற சீனப் பேரரசர் காலத்தால் வெளியிடப்பட்டதாகும்.

பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டத்தில் விக்கிரம் என்ற ஊரில் 20 காசுகளும், மன்னார்குடி அருகே தல்லிக்கோட்டையில் 1822 காசுகளும், பட்டுக்கோட்டை வட்டத்தில் ஒலயக்குன்னம் என்ற ஊரில் 323 காசுகளும் கிடைத்துள்ளன. தமிழகத்தில் கிடைத்த சுங் (கி.பி. 960 – 1279) அரச பரம்பரையைச் சேர்ந்தவர்களின் காசுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன.

சீன நாட்டு மணிகள்: சாந்தி அமைதி சமாதானம்:  தஞ்சை மாவட்டம் கடற்கரைப் பகுதியிலிருந்து வெண்கல மணி ஒன்றும் சீன செப்புக் காசுகளும் கிடைத்துள்ளன. மணியில் சீன எழுத்துக்கள் காணப்படுகின்றன. சீன மொழியில் “பீன் ஆங்”  எனக்குறிக்கிறது. ஜப்பானிய மொழியில் இதனை “ஹீ-யான்”  என அழைக்கின்றனர். இரண்டுக்கும் சாந்தி  அமைதி – சமாதானம் என்பது பொருள் ஆகும். சீன நாட்டிற்கும் தமிழகத்திற்கும் நல்ல நட்புறவு இருந்து வந்ததற்கு சான்றாக இது விளங்குகிறது.

சீன நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பல்லவ மன்னர்களின் துறைமுகப்பட்டினமாக விளங்கிய மாமல்லபுரத்தில் இந்திய -சீன நாட்டு நட்புறவு சந்திப்பு நடப்பது நமக்கு பெருமை அளிப்பதாகும். 

கட்டுரையாளர்:தொல்லியல் துறை (ஓய்வு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com