மக்களைக் கவர்ந்த திறந்தவெளி நூலகம்

வெளிநாடுகளில் தான் திறந்த வெளி நூலகம் என்பது பிரபலமான ஒன்று.  அது தற்போது நமது தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது.  
மக்களைக் கவர்ந்த திறந்தவெளி நூலகம்

வெளிநாடுகளில் தான் திறந்த வெளி நூலகம் என்பது பிரபலமான ஒன்று.  அது தற்போது நமது தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது.  திருச்சி பகுதியில் தொடங்கப்பட்டுள்ள திறந்தவெளி நூலகத்துக்குத் தற்போது பொதுமக்களிடம் அதிகம் வரவேற்பு கிடைத்துள்ளது. 

திருச்சி புதூர் அரசு மருத்துவமனை எதிரில், மாநகராட்சி சார்பாக இந்த நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்துக்குக் கதவுகள் கிடையாது. நூலகத்துக்கு அருகிலேயே தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இருக்கைகளுடன்கூடிய வீதி பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளதால், இயற்கையோடு புத்தகங்களை வாசிக்க முடிகிறது. இந்த ரம்மியமான சூழ்நிலை வாசிப்பாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது.  இதனை "லிட்டில் ப்ரீ லைப்ரரி' என்று இப்பகுதியிலுள்ள மக்கள் அழைக்கிறார்கள். 

புத்தகங்கள் நனையாமல் இருப்பதற்காக இங்கு மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தகங்களை அடுக்கி வைக்க அலமாரிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு யார் வேண்டுமானாலும் புத்தகத்தை எடுத்துக்கொள்ளலாம். புத்தகத்தை எடுப்பவர்கள் அதற்கு மாற்றாகப்  வேறு ஒரு பயனுள்ள புத்தகத்தை வைக்க வேண்டுமாம். அதாவது "கிவ் ஏ புக் டேக் ஏ புக்' என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த நூலகம் செயல்படுகிறது. இதனைக் கண்காணிப்பதற்கு மாநகராட்சி பணியாளர் ஒருவர்  நியமிக்கப்பட்டுள்ளார். 

அரசுப்பணியில் இருந்து ஓய்வுபெற்ற சண்முகத்திடம் பேசிய போது,  சமூக வலைதளங்களில் கவனம் செலுத்தும் இளைஞர்கள் மத்தியிலும் வாசிக்கும் பழக்கம் ஏற்பட வேண்டும். இந்தத் திறந்தவெளி நூலகத்தைப் பயன்படுத்தி அவர்கள் தங்களது வாழ்க்கையில் முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும். என்னைப் போன்ற மூத்த குடிமக்களுக்கு இந்த நூலகம் மூலமாக ஏராளமான நண்பர்கள் கிடைத்துள்ளனர். நாங்கள் காலை, மாலையில் சந்தித்து நாட்டு நடப்புகளைப் பேசிக்கொள்வதற்கு வசதியாக உள்ளது என்றார்.

எவ்வளவு தான் தொழில்நுட்ப  வளர்ச்சி விண்ணைத் தொட்டாலும், போன் மூலமாக உலகில் உள்ள தகவல்களைச்  சட்டெனப்  படித்துவிட முடிந்தாலும், புத்தகங்களை வாசிப்பதில் உள்ள சந்தோஷம் எதிலும் இல்லை என்கிறார்கள் இப்பகுதியிலுள்ள புத்தகப்பிரியர்கள். உண்மை தானே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com