மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்

கோயிற்கலை வரலாற்றில் பல்லவ மன்னர்கள் காலத்தில், திருக்கோயில் அமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. இயற்கையாய் அமைந்த மலைக்குன்றுகளில் மலையை குடைந்து குகைக் கோயில்களை
மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்

கோயிற்கலை வரலாற்றில் பல்லவ மன்னர்கள் காலத்தில், திருக்கோயில் அமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. இயற்கையாய் அமைந்த மலைக்குன்றுகளில் மலையை குடைந்து குகைக் கோயில்களை (குடைவரைக் கோயில்கள்) அமைத்தனர். மேலும் ஒரே கல்லில் கோயில்கள் கட்டடக்கோயில்களையும் தோற்றுவித்தனர்.
 மண்டகப்பட்டு: பல்லவர் முதல் குடைவரைக் கோயில் என்ற சிறப்பு பெற்ற குடைவரைக்கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் மண்டகப்பட்டு என்ற ஊரில் அமைந்துள்ளது.
 விசித்திர சித்தன்: இவ்வூரில் ஊரின் வெளியே உள்ள மலைக்குன்றின் அடிவாரத்தில் பல்லவர்கால குடைவரைக்கோயில் அமைந்துள்ளது. குடைவரை எதிரே ஒரு பெரிய ஏரியும் அமைந்துள்ளது. பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 590-630) "விசித்திர சித்தன்' என்ற சிறப்புப்பெயர் பெற்றவன்
 இம்மன்னனால் இக்குடைவரைக் கோயில் தோற்றுவிக்கப்பட்டது என்பதை இங்கு காணும் கல்வெட்டால் அறிந்துக் கொள்ள முடிகிறது. அக்கல்வெட்டு இதுதான்
 ஏதத் அநிஷ்டகம் அதருமமலோ
 கம் அசுதம் விசித் ரசிக்தேந
 நிர்ம்மாபிதந் நிருபேண பிரமே
 ஸ்வர விஷ்ணு ல~ல்தாயதநம்
 செங்கல், மரம், உலோகம், சுதை ஆகியவை இல்லாமல் மும்மூர்த்திகளான நான்முகன் (பிரம்மா), சிவன், திருமால் ஆகியோருக்கு அமைக்கப்பட்டது எனக் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலை "இலக்சிதாயதநம்' என்றும் அழைக்கிறது. மகேந்திரவர்மனது பட்டப்பெயர்களில் ஒன்று "இலக்சிதன்' என்பது. அவனது பட்டப்பெயரிலேயே இக்கோயில் அமைந்திருப்பது சிறப்பாகும். மகேந்திரவர்மன் தான் வெளியிட்ட காசுகளிலும் "லக்ஷித' என்று பல்லவ கிரந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட காசுகளை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. "லக்ஷித' என்றால், குறிக்கோள்களை உடையவன் - தலைசிறந்த நோக்கங்களை உடையவன் என்பது பொருளாகும். செங்கல் - மரம் - சுதை என்று அழியும் பொருட்களால் கட்டடங்கள் கட்டப்பெற்று வந்ததை மாற்றி கருங்கல்லில் கோயில் அமைத்ததே மகேந்திரவர்மனின் சிறப்புச் செயலாக விளங்குகிறது.

குடைவரை அமைப்பு: குடைவரைக் கோயில் உயரமான மேடை போன்று காட்சி தருகிறது. மேலும் குகையின் மேல் முகப்பு சற்று நீண்டு அமைந்திருப்பதால் மழை நீர் உள்ளே செல்லாவண்ணம் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 குடைவரைக்கோயில் முன் மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்புடன் விளங்குகிறது. தூண்கள் மேற்பகுதியிலும் கீழ் பகுதியிலும் சதுரமாகவும் நடுவில் எட்டு பட்டைக் கொண்டதாகவும், பல்லவர்கால கலைப்பாணியை எடுத்துக்காட்டுகிறது.
 குடைவரையின் பின் சுவரில் மூன்று கருவறைகள் உள்ளன. அவற்றில் இறைவன் திருமேனியை வைக்க ஏதுவாக குழிகளும் காணப்படுகின்றன. மேலும் கருவறை சுவரின் மேல் சுண்ணாம்பு பூசிய பூச்சு காணப்படுவதால், இறைவன் வடிவங்கள் ஓவியங்களாகவும் தீட்டப்பட்டிருக்கலாம் எனக் கருத முடிகிறது. மகேந்திரவர்மனுக்கு "சித்திரகாரப் புலி' என்ற சிறப்புப்பெயர் உண்டு என்பதும் இங்கு நினைவுக் கூரத் தக்கது. குடைவரை கோயிலின் இருபக்கங்களிலும் துவாரபாலகர் எனப்படும் வாயிற்காவலர் சிற்பங்கள் கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றன. பல்லவர்கால சிறப்பான கலைப்படைப்பாக விளங்கும் மண்டகப்பட்டு குடைவரைக் கோயில் மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையால் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது. முதல் கற்கோயில் எனச் சிறப்பாகப் போற்றப்படும் மண்டகப்பட்டு குடைவரைக் கோயிலைக் கண்டு மகிழ்ந்து போற்றுவோம்!
 செஞ்சி - விழுப்புரம் சாலையில் 17 கி.மீ. தொலைவில் முட்டத்தூர் என்ற ஊர் அருகே, மண்டகப்பட்டு பிரிவு சாலையில் சென்றால் இவ்வூரை அடையலாம்.
 கட்டுரையாளர்: தொல்லியல் துறை (ஓய்வு)
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com