வரலாற்றின் மறைந்த பக்கங்களுக்கு கிடைத்த நோபல் பரிசு

ஐரோப்பிய நாடான சுவீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் சுவீடனில் வேதியியல், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி மற்றும் இலக்கியத்திற்கென
வரலாற்றின் மறைந்த பக்கங்களுக்கு கிடைத்த நோபல் பரிசு

ஐரோப்பிய நாடான சுவீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் சுவீடனில் வேதியியல், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி மற்றும் இலக்கியத்திற்கென நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதில் அமைதிக்கான பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படும். மற்றவை அனைத்தும் சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் அளிக்கப்படும். சர்வதேச நிபுணர்களைக் கொண்டு ஆராய்ந்து கொடுக்கப்படும் இவ்விருது பரிசு பெறுபவர்களுக்கு பெரும் கௌரவமாகப் பார்க்கப்படுகிறது.
 அதிலும் ,இலக்கியத்திற்கான பரிசு என்பது தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு மட்டுமல்லாமல்,சர்வதேச மக்களுக்கும் எதிர்பார்ப்பை உருவாக்கக் கூடியது.உலகப் போர்கள் நடந்து வந்த காலங்களில் ஆறு ஆண்டுகள் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை.1935 -ஆம் ஆண்டு இப்பரிசுக்கு தகுதியானவர்கள் யாரும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
 ஆனால், கடந்த ஆண்டு எம்முறையும் இல்லாத அளவுக்கு பிரச்சனை வேறுவிதமாகப் பிரதிபலித்தது. இப்பரிசை தேர்வு செய்யும் குழுவில் இருந்த ஓர் உறுப்பினரின் கணவருக்கு எதிரான பாலியல் பிரச்னையை அக்குழு கையாண்ட விதம் சர்ச்சைக்கு உள்ளானது. எனவே, கடந்த ஆண்டு இலக்கியத்துக்கான பரிசு அறிவிக்கப்படவில்லை. தற்போது 2018,2019 - ஆம் ஆண்டுக்கும் ஒரே நேரத்தில் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
 ஒரு மனிதனின் அடிமனதில் உறங்கிக் கொண்டிருக்கும் உணர்ச்சிகளையும், சிந்தனைகளையும்,மக்களின் சமூக பிரச்சனைகளையும், ஓர் இனத்தின் அழிவையும் கூட உலகிற்கு உரக்கச் சொல்ல இலக்கியம் வடிகாலாக பயன்படுகிறது.
 எனவேதான்,இப்பிரிவிற்கு கிடைக்கும் நோபல் பரிசு உலகத்தால் உற்று நோக்கப்படுகிறது.
 பீட்டர் ஹேண்ட்கே
 போலந்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஓல்கா டோகார்சுக்கு 2018 -ஆம் ஆண்டுக்கும் ,ஆஸ்திரியாவின் பீட்டர் ஹேண்ட்கேவுக்கு 2019 - ஆம் ஆண்டுக்கும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.இருவருமே ஐரோப்பிய நாடுகளின் மதம், இனம்,சமூகத்தில் உள்ள குறைபாடுகளை,ஏற்றத்தாழ்வுகளை மையப்படுத்தி எழுதிய எழுத்தாளர்கள் ஆவார்.
 ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த 76 வயதான பீட்டர் ஹேண்ட்கே ஒரு நாவலாசிரியர், நாடக ஆசிரியர்,மொழி பெயர்ப்பாளர், கவிஞர், திரைப்பட இயக்குநர் மற்றும் எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர்.மொழியியல் திறமை மற்றும் புத்திக் கூர்மையைப் பயன்படுத்தி மனித அனுபவத்தின் உச்சத்தையும்,தனித்துவத்தை ஆராய்ந்ததற்காக இவ்விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.இவர் முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார்.
 சர்வதேச அளவில் இலக்கியத்திற்காக பல விருதுகளை வாங்கியிருக்கும் இவர், நவீன ஐரோப்பியாவின் மிக முக்கியமான இலக்கியவாதியாகக் கருதப்படுபவர். கடந்த 1990 -ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் நடந்த போரில், யுகோஸ்லாவியா சிதைக்கப்பட்டதன் மூலம் தென்கிழக்கு ஐரோப்பா என்று அழைக்கப்படுகின்ற செர்பியா,பல்கேரியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய பால்கன் தீபகற்பம் அழிக்கப்பட்டபோது,செர்பியர்களின் பாதுகாப்பில் இவர் காட்டிய தீவிரம் விமர்சனத்துக்கு உள்ளானது. போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்பட்ட முன்னாள் செர்பியன் தலைவர் ஸ்லோபோடன் மிலோசெவிக்கின் இறுதிச் சடங்கில் கடந்த 2006-ஆம் ஆண்டு ஹேண்ட்கே ஆற்றிய உரை தீவிர வலதுசாரி செர்பிய தேசியவாதத்திற்கான பாதுகாப்பில் பேசப்பட்டதாக கூறப்பட்டது.
 சிறந்த திரைப்பட இயக்குநராகவும் தன் பரிணாமத்தைக் காட்டியுள்ள ஹேண்ட்கே," தி லெப்ட் ஹேண்டட் உமன்',"தி ஆப்சென்ஸ்' ஆகிய திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.மேலும்,கடந்த 2014 - ஆம் ஆண்டு மனித உரிமை குழுவிலிருந்து முன்னெடுத்த போராட்டங்களைப் பற்றிய படைப்புக்காக ஹேண்ட்கே வுக்கு சர்வதேச இப்சன் விருது வழங்கப்பட்டது.இவ்விருது நாடகம் அல்லது நாடக உலகிற்கு ஒரு புதிய கலை பரிமாணத்தைக் காட்டியதற்காக ஒரு தனி நபருக்கோ ,அமைப்புக்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ கொடுக்கப்படுவதாகும்.
 இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தனக்கு கிடைக்கும் என்று தான் நினைக்கவில்லை என்றும் இம்முடிவு ஸ்வீடன் அகாதெமியின் தைரியத்தைக் காட்டுகிறது என்றும் ஹேண்ட்கே கூறியிருக்கிறார்.அதேசமயத்தில் இவர் ஒரு சிறந்த நாவல் ஆசிரியர்,எழுத்தாளர் மற்றும் திரைக்கதை இயக்குநர் என தேர்வுக் குழு,புகழாரம் சூட்டியுள்ளது. மேலும்,1971- ஆம் ஆண்டில் ,தன் தாயின் தற்கொலையால் தூண்டப்பட்டு அவர் எழுதிய நாவல் " ஏ சாரோ பியாண்ட் டிரீம்ஸ்' மிகச் சிறந்த படைப்பு என்றும் கூறியுள்ளது.ஒரு தேசம் ஒரு கதைசொல்லியை இழக்கும்போது,அது தனது குழந்தைப் பருவத்தையும் இழக்கிறது என்பது ஹோண்ட்கேயின் பிரபலமான வார்த்தைகள் ஆகும். ஆனால் , இவ்வுலகம் ஒட்டுமொத்தமும் தங்கள் குழந்தைப் பருவத்தை மட்டுமல்ல வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் இழக்கவில்லை என்பது ஹேண்ட்கெவுக்கு கிடைத்த நோபல் பரிசு மூலம் உறுதியாகியிருக்கிறது.
 ஓல்கா டோகார்ஸ்
 இதேபோன்று போலந்து நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியரான ஐம்பத்தேழு வயது ஓல்கா டோகார்சுக்கு 2018-ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. எல்லைகளைக் கடந்து வாழ்க்கையின் போக்கை சித்தரிக்கும் இலக்கிய எழுத்துக்களுக்காக இப்பரிசு கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 இவரது தலைமுறை எழுத்தாளர்களிலேயே மிகவும் திறமை வாய்ந்தவராக கருதப்படும் இவர்,பல கதாபாத்திரங்களின் தனித்துவ குணங்களை ஒன்றொடொன்று பின்னிப் பிணைந்து தன் எழுத்துக்களில் மிளிரச் செய்வதில் வல்லவர்.பயன்படுத்தப்படும் வார்த்தைகள் யாவும் துல்லியமானதும்,கவிதை நுட்பத்தோடும் இருக்கும்.அவரது படைப்புகளில் மிகச்சிறந்ததாகக் கருதப்படும் "தி புக்ஸ் ஆப் ஜேக்கப்' புத்தகத்தில் ,உலகம் அதிகம் அறிந்திடாத யூதப்பிரிவான "ஃபிராங்கிசத்தை' பற்றி விளக்குகிறார்.அந்தப்புத்தகத்தில் 7 நாடுகள்,3 மதங்கள்,5 மொழிகள் அங்கம் வகிக்கின்றன.மறைந்து போன, மக்கள் மறந்து
 போன ஐரோப்பிய வரலாற்றின் பக்கங்களை இதன் மூலம் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார்.
 மேலும், இவர் 2018- ஆம் ஆண்டு தனது "ப்ளைட்ஸ்' என்ற புத்தகத்துக்காக புகழ்பெற்ற புக்கர் பரிசைப் பெற்றவர் ஆவார்.17 -ஆம் நூற்றாண்டில் தொடங்கி தற்காலம் வரை கதைக்களம் கொண்ட இந்த நாவல், பயணம் மற்றும் உடல் பற்றி விரிவாகச் சொல்வதாகும். இவர் ஒரு உளவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.போலந்து கன்சர்வேட்டிவ் கட்சி மூலம் பெரிதும் விமர்சிக்கப்பட்டவர்.பல மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டவர். மேலும் ,நாட்டின் முந்தைய காலகட்டங்களில் இருந்த யூத எதிர்ப்பைப் பற்றி பதிவு செய்ததால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்.போலந்தின் வலதுசாரி அரசாங்கத்தைப் பற்றி விமர்சித்த ஒரு வலிமையான விமர்சகராக இவர் விளங்கினார்.
 மத்திய ஐரோப்பாவைப் பற்றி அதிகம் கவலைப்படும் இவர்,போலந்தின் சிறிய நகரங்களில் நடந்த சம்பவங்களைக் கொண்டு எழுதப்பட்ட தனது நாவல் இன்று உலக மக்களால் உற்றுநோக்கப்படுவதை மிகவும் பெருமைக்குரியதாகக் கருதுவதாகக் கூறுகிறார்.இப்பரிசு செய்தி அறிவிக்கப்பட்டபோது, தான் ஜெர்மனியில் ஒரு வாசிப்பு சுற்றுப்பயணத்தில் இருந்ததாகக் கூறியிருக்கின்றார்.இந்த நூற்றாண்டில் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற 15 -ஆவது பெண்மணியாக இவர் திகழ்கிறார்.எவ்வித முரண்பாடுகளும் இல்லாமல் அனைத்து இலக்கியவாதிகளும் ,ஐரோப்பிய மக்களும் இவர்களுக்குக் கொடுத்த ஆதரவே இவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய விருதாகும்.
 -கலைச்செல்வி சரவணன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com