தீபாவளி நாளில் வெளியான பாகப்பிரிவினை படத்துக்கு வயது 60!

தீபாவளி நாளில் புதுத் துணிகள், பதார்த்தங்கள், வெடிகள் போன்றவை மனதில் பதிந்த அளவிற்கு, தீபாவளிக்கு வெளிவரும் திரைப்படங்களும் நம் மனதில் நீங்கா இடம் பெறும்.
தீபாவளி நாளில் வெளியான பாகப்பிரிவினை படத்துக்கு வயது 60!

தீபாவளி நாளில் புதுத் துணிகள், பதார்த்தங்கள், வெடிகள் போன்றவை மனதில் பதிந்த அளவிற்கு, தீபாவளிக்கு வெளிவரும் திரைப்படங்களும் நம் மனதில் நீங்கா இடம் பெறும். அதேபோல 60 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1959-ஆம் ஆண்டு தீபாவளிக்கு "பாஞ்சாலி', "கண் திறந்தது', "தெய்வமே துணை', "பாகப்பிரிவினை', "அவள் யார்', "அபலை அஞ்சுகம்' என ஆறு படங்கள் திரைக்கு வந்தன. 
இதில் சிவாஜி கணேசன் நடித்த "பாகப்பிரிவினை' மதுரை சிந்தாமணியில் 216 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கண்ட படமாக முத்திரை பதித்தது. குடும்பக் கதையை யதார்த்தமாக காண்பித்த "பாகப்பிரிவினை' படத்திற்கு வயது 60 (வைரவிழா ஆண்டு) .
மத்திய அரசின் பிராந்திய மொழிகளில் சிறந்த படமாக "பாகப்பிரிவினை' தேர்ந்தெடுக்கப்பட்டது. கதை, திரைக்கதை - வசனம், அனைத்து நடிகர்களின் நடிப்பு, பாடல்கள், இசை, இயக்கம் என திரைப்படத்திற்குத் தேவையான முக்கிய காரணிகளெல்லாம் சேர்ந்து சமூகத்திற்கு குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படமாக வெளிவந்ததுதான் விருதுக்கு அடிப்படை! 
உணர்ச்சிக்கு அடிமையாக்கப்பட்ட நெஞ்சை உருக்கும் கதாபாத்திரங்களில் வைத்தியலிங்க மூப்பனாராக டி.எஸ். பாலையா, சுந்தரலிங்க மூப்பனாராக எஸ்.வி.சுப்பையா, இவருடைய கை கால் ஊனமுற்ற மகன் கன்னையா மூப்பனாராக சிவாஜி. படத்தில் வரும் கன்னிப்பெண் சரோஜா தேவி சிவாஜியைக் காதலிக்கிறாள், கண்ணீர் வடிக்கிறாள், சிரிக்கிறாள், சிந்திக்கவும் செய்கிறாள். இந்த நான்குக் கதாபாத்திரங்களும் பல காட்சிகளில் உணர்ச்சியின் வெவ்வேறு பிம்பங்களை வடித்துக் காட்டுகிறார்கள். 
படத்தில் ஆரம்பத்திலேயே சிவாஜி சிறுவனாக இருக்கும்போது, மின் கம்பியில் மாட்டிக்கொண்ட பட்டத்தை எடுப்பதற்காக மின் கம்பத்தில் ஏறி எடுக்கும்போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்து கை ஊனமாகி விடுவதாக காண்பிக்கப்படுகிறது. இப்படத்தின் கதைக்குப் பின்னால் ஒரு உண்மைக்கதை உள்ளது.

கதை-வசனகர்த்தாவான எம்.எஸ்.சோலைமலை, மதுரை தல்லாகுளம் பூசாரித் தெருவில் வசித்தவருக்கு, தமுக்கம் மைதானத்திற்கு செல்வதற்கு முன்பாக இடது பக்கமுள்ள கருப்பண்ணசாமி கோயிலில் பூசாரி வேலை . கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனால் சினிமாவிற்கு அழைத்து வரப்பட்டவர். என்.எஸ்.கேயின் தம்பி என்.எஸ். திரவியம் தயாரிப்பில் உருவான "நீதிபதி' படத்திற்கு கதை - வசனம் எழுதியவர் சோலைமலை. 
மதுரையில் இருந்த போது தன் குடும்பத்தில் நடந்த உண்மைக்கதைக்கு வடிவம் கொடுத்து கதை - வசனங்களை எழுதி முடிக்கிறார் எம்.எஸ்.சோலைமலை. "இக்கதையில் சிவாஜிக்கு வித்தியாசமான கதாபாத்திரம் கொடுக்க வேண்டுமே என்று இரண்டு மூன்று நாட்களாக யோசிக்கிறார். இதற்கிடையில் குடும்பத்துடன் கம்பெனி காரில் மாமல்லபுரம் செல்கிறார். பிள்ளைகளை மாமல்லபுரச் சிற்பங்களைப் பார்க்க அனுப்பி விட்டு சோலைமலை தன் மனைவியுடன் ஓர் இடத்தில் உட்கார்ந்து சிவாஜியின் கதாபாத்திரத்தைப் பற்றி சிந்திக்கிறார். 
அப்போது, சிறுவன் ஒரு கை ஊனமாகவும் இரண்டு கால்கள் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டு தவழ்ந்து வந்து இவர்களிடம் வாழ்வாதாரத்திற்காக பணம் கேட்கிறார். தவழ்ந்து வரும்போதே வச்ச கண்ண எடுக்காமா அவனையே பார்க்கிறார், இதைக்கண்ட சோலைமலையின் மனைவி, "என்னாங்க அவனையேப் பாக்குறீங்க, ஏதாச்சும் இருந்தா கொடுத்து அனுப்புங்க' என்று சொல்ல, சோலைமலை பத்து ரூபாயைக் கொடுக்கிறார்.
உடனே மனைவி என்னங்க 10 ரூபாயை போடுறீங்க என்று கேட்க, "பரவாயில்ல, கஷ்டப்படுகின்ற ஆளுக்குதானே கொடுக்கிறோம், ஆனால், இந்தப் பத்து ரூபாய் எத்தனையோ பேருக்கு லட்சங்கள் சம்பாதிச்சுக் கொடுக்கப்போகுது' என்கிறார் சோலைமலை. சிவாஜிக்கான கதாபாத்திரம் சற்று மாறுதலுடன் மாமல்லபுரத்தில்தான் உருவானது. 
மகிழ்ச்சியாக இருந்த அண்ணன் தம்பிகளான வைத்தியலிங்க மூப்பனார், சுந்தரலிங்க மூப்பனார், மகன் கன்னையா மூப்பனார் ஆகியோர் அடங்கிய கூட்டுக் குடும்பத்தை எம்.ஆர்.ராதா தனது சதியால் பிரிக்கிறார். இறுதியில் சிவாஜியின் கையும் காலும் சரியாகிறது, பிரிந்த குடும்பம் ஒன்று சேருகிறது. இதுதான் கதை. 

"பாகப்பிரிவினை' படத்துக்கான முழுக்கதையையும், வசனத்தையும், கதாபாத்திரங்களின் பெயர்களோடு ராயப்பேட்டை அஜந்தா பஸ் ஸ்டாப்புக்கு அருகில் இருந்த சந்திரா லாட்ஜில் ரூம் எடுத்து எழுதி முடித்து கதை சொல்வதற்காக சோலைமலையும் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணியும் சிவாஜி வீட்டிற்குச் செல்கிறார்கள். வீட்டில் சிவாஜியோடு, எம்.ஆர். சந்தானம் (சந்தானபாரதியின் தந்தை) மோகன் ஆர்ட்ஸ் மோகன், தயாரிப்பாளர் பெரியண்ணா, ஏ.பி.நாகராஜன், சில நண்பர்கள், இவர்களோடு பைனான்ஸியர்களும் கதை கேட்பதற்கு ரெடியாக இருக்கிறார்கள். 
கதையைக் கேட்டவுடன் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அபிப்ராயத்தைச் சொல்ல, ஏ.பி.நாகராஜன் மட்டும் இக்கதையைப் படமாக எடுக்கலாம், நிச்சயமாக வெற்றி பெறும் என்று சொல்கிறார். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்ட சிவாஜி எழுந்து உள்ளே செல்கிறார். இதைக்கண்டவுடன் சோலைமலைக்கு ஒரே பதற்றம், ஆனால், பதினைந்து நிமிடங்கள் கழித்து, இடது கையை மடக்கி வைத்துக் கொண்டு, அழுக்கு வேட்டி கட்டிக் கொண்டு கன்னையா மூப்பனாராகவே (படத்தில் கதாபாத்திரத்தின் பெயர்) மாறி வெளியே வருகிறார். இதைப்பார்த்தவுடன் பதற்றமாக இருந்த சோலைமலை கண்களில் ஆனந்தக் கண்ணீர், சிவாஜியைக் கட்டித் தழுவி "என்னுடைய கன்னையாவை இங்கேயே பார்த்துட்டேன், இனிமே படம் எடுத்தா என்ன எடுக்காட்டி என்ன' என்று சொல்ல, உடனே சிவாஜி "இக்கதையை படமா எடுக்குறோம்' என்று சொல்லி சோலைமலையைத் தட்டிக் கொடுத்து, லேனா செட்டியாரைப் பார்த்து நாளை இவர்கள் இருவரும் உங்களை வந்து சந்திப்பார்கள் என்று சொன்னவுடன் கூட்டம் கலைந்தது. 
மறு நாள் சோலைமலையும், ஜி.என். வேலுமணியும் லேனா செட்டியாரை அவர் வீட்டில் சந்திக்கிறார்கள். செட்டியாரோ காசித்துண்டில் ஒரு லட்ச ரூபாயைக் கட்டி வைத்து வெத்தலை பாக்கு, பழத்துடன் இருவரிடமும் கொடுக்கிறார். பணம் வாங்கின கையோடு இருவரும் காரில் ஏற, கார், இயக்குநர் புல்லையா வீட்டை நோக்கிச் செல்கிறது, இதைக் கவனித்த சோலைமலை ஜி.என். வேலுமணியிடம் "இக் கதையை டைரக்ஷன் செய்வதற்கு சரியான ஆள் பீம்தான் (பீம்சிங்) எனவே அவர் வீட்டிற்குச் செல்வோம், இல்லேன்னா நான் கதையைத் தரமாட்டேன்' என்று செல்லமாகச் சொல்ல நேராக பீம்சிங் வீடு நோக்கி கார் செல்கிறது. வீட்டில் இருந்த பீம்சிங் இக்கதைக்கு திரைக்கதை எழுதி இயக்குவதற்கு தெரிவித்த சம்மதம்தான் "பா'" வரிசைப் படங்களுக்கு அச்சாரமாக அமைந்தது.
வசனங்களால் மனதை உருக்கிய இப்படத்தில் பாடல்கள் அத்துனையும் என்றைக்குக் கேட்டாலும் மகிழ்ச்சியாகவும் ஆறுதலாகவும் இருக்கும். "பிள்ளையாரு கோயிலுக்குப் பொழுதிருக்க வந்திருக்கும் பிள்ளை யாரு... இந்தப் பிள்ளை யாரு?'பாடலை பொட்டில் அடித்தாற்போல் பட்டுக்கோட்டை எழுதியிருப்பார்.
சிவாஜிக்கு எழுதமாட்டேன் என்று அடம்பிடித்த கண்ணதாசன் ஒரு வழியாக மனமிறங்கி இப்படத்திற்கு மூன்று முத்தான பாடல்களைத் தந்திருப்பார்.கை விளங்காத சிவாஜி தன் குழந்தையைத் தாலாட்டிப் பாடுவதாக ஒரு பாட்டு. அதுதான், "ஏன் பிறந்தாய் மகனே... ஏன் பிறந்தாயோ'. கல் நெஞ்சக்காரனைக்கூட இளக வைக்கும் சோகப்பாடல்.எவ்வளவு துயரம்! 
விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் உணர்ச்சிமிக்க இசை, எப்போது கேட்டாலும் மனதை உருக வைக்கும் பாடல்.மெதுவாக ஆரம்பிக்கும் இப்பாடலின் உச்சம் முதல் சரணத்திற்கு (கை கால்கள் விளங்காத கணவன் குடிசையில் என்ற வரிகளுக்கு) முன் வரும் பின்னணி இசை நெஞ்சை நெகிழ வைக்கும்.விஸ்வநாதன் -ராமமூர்த்தி பயன்படுத்தியிருக்கும் வாத்தியங்களின் பிரயோகம் அதியற்புதமானவை.
அடுத்து சிவாஜியின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கும்விதமாக, கதாநாயகி பாடுவதாக ஒரு பாட்டு. அது, "தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ." "சிவகெங்கைச் சீமை' படத்திற்காக பல பாடல்கள் எழுதியும் சேர்க்காமல் விட்டுவிட்டார். மருது பாண்டியரும் ராணி வேலு நாச்சியாரும் திண்டுக்கல்லிலிருந்து ஹைதர் அலியை சந்திக்க போவதாக ஒரு காட்சி. அந்தக் காட்சியில் "குடை நிழலிலிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடை மெலிந்தங்கேநடக்கின்றார்'"என்று ஒரு பாடல். அந்தப் பாடல் படத்தில் இடம்பெறவில்லை. அதே மெட்டில் தங்கத்திலே என்ற பாடலை எழுதியவர், மூன்றாவதாக "தாழையாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடை நடந்து...'பாடலை எழுதினார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்திற்கு கவிஞர் கண்ணாதாசன் எழுதிய மூன்று பாடல்களைக்கேட்ட சிவாஜி இனிமேல் என் படத்திற்கு கண்ணதாசனும் எழுத வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டார். 
இப்படத்தில் இடம்பெற்றப் பாடல்களின் வெற்றிப்பெருமிதம் விஸ்வநாதன்-ராமமூர்த்தி கூட்டணி மெல்லிசை மன்னர்கள் என்பதை நிரூபணம் செய்தன.
"பாகப்பிரிவினை' படத்தில் ஒன்றாக இருந்த குடும்பம் சூழ்ச்சியினால் பிரிந்து மீண்டும் ஒன்று சேர்ந்தது போல், பிரிந்த புத்தா பிக்சர்ஸ் கூட்டணி இப்படத்தின் மூலம்,மீண்டும் ஒன்று சேர்ந்து தமிழ்த் திரையுலகத்திற்கு காவியங்களைக் கொடுத்துவிட்டு மறைந்து விட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

படத்தில் நம்பியார் தன் நண்பர்களிடையே பேசும்போது, "இத பாரு விடிய விடிய ஷேக்ஸ்பியரையும் ஷெல்லியையும் படித்தாலும், தேன் சொட்டும் "திருவாசகம்", கல்லை உருக்கும் "தேவாரம்', வீரப்புகழ் பாடும் "புறநானூறு', காதல் கவி பாடும் "அகநானூறு", கருத்துகோர் "கலித்தொகை', நெஞ்சை அள்ளும் "சிலப்பதிகாரம்' இதைவிட வேற எந்த மொழியில சிறப்பு இருக்கு என்று கேட்பார். உடன் இருந்த நண்பர் மணி "சரியான போடு போட்டேப்பா' என்றவுடன், மீண்டும் நம்பியார் (மணி) ஒன்னு சொல்றேன் கேளுங்க "தாயை மறந்தவனையும் தாய் மொழிப் பற்று இல்லாதவனையும் உலகம் மனுசனாகவே மதிக்காது' என்று ஆவேசத்துடன் பேசுவார். மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்ட ஒரு நடிகர் தமிழ் மொழியை இவ்வளவு உயர்த்திப் பேசியிருக்கிறார் என்றால் தமிழர்களாகிய நாம் இன்னும் மெனக்கிட வேண்டும். 
"எம்.ஆர்.ராதா தன் அத்தையிடம் ஒரு சில பொருட்களைக் காண்பித்து "இனி மனுசனுக்கு வேலையே இல்லை எல்லாம் மிசின்தான் என அறுபது வருடங்களுக்கு பிறகு ரோபோதான் ஆளப் போகிறது' என்பதை சூசமாகச் சொல்வார். 
மற்றொரு காட்சியில் சிவாஜி- சரோஜாதேவி கல்யாணத்திற்கு தன் அண்ணன் நம்பியாரை அழைப்பதற்குச் செல்வார், செளகரியப்படாது, என்று நம்பியார் சொல்ல, நம்பியாரின் மனைவியோ ஒரு படி மேலே சென்று செளகரியப்படாதுன்னா மனசில்லேன்னுதான அர்த்தம் என குத்திக் காண்பிக்க மீண்டும் நம்பியார் "படிச்சிருந்தா தானே தெரியும்'' எனக் கோபத்தோடுச் சொல்ல அதற்கு சிவாஜி "தெரியுதுடா தம்பி எதுக்கெடுத்தாலும் தலயாட்டி பொம்ம மாதிரி தலையை ஆட்றவன் படிச்சவன், பொண்டாட்டி கிடச்ச உடனே அப்பா அம்மாவ மறக்கறவன் அறிவாளி, பெத்தவங்களுக்கு சோறு போடாத கைச் சாப்பாட்ட நாய் கூடத் தின்னாது'' என்ற சிவாஜியின் வசனம் இன்றைக்கு பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடும் மகன்/மகள்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு இதைவிட உவமானத்தைச் சொல்ல முடியாது.

- ரா.சுந்தர்ராமன்
படங்கள் : "ஸ்டில்ஸ்' ஞானம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com