சுடச்சுட

  
  sk2

   

  அந்த அதிசயம் என்ன தெரியுமா?  நானும் குழந்தை நட்சத்திரம் ஆனேன். அது எப்படி என்று கூறுகிறேன் கேளுங்கள். "விஜயகுமாரி' படத்தின் இயக்குநர் ஏ.எஸ்.ஏ. சாமி  தான், என்னை முதன் முதலில் நடிக்க வைத்தவர். எப்படி என்று கேட்டால் எல்லோரும் ஆச்சர்யப்படுவீர்கள். "விஜய குமாரி' படம் முடித்த கையோடு அடுத்தப் படத்தையும் இயக்குநர் சாமி  தொடங்கி விட்டார்கள். அந்த படத்தின் பெயர் "ராணி'.  

  இதில் வீணை வித்வான் எஸ். பாலசந்தர் கதாநாயகனாகவும், பானுமதி அம்மா கதாநாயகியாகவும் நடித்தார்கள். இந்த படம் இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்டது. தமிழில் ஏ.எஸ்.ஏ. சாமி  இயக்கினார்.  இந்தியில் எல்.வி.பிரசாத் இயக்கினார். இந்தியில் இந்த படத்தின் கதாநாயகர் அனுப்குமார். இவர் அன்று பிரபலமாக இருந்த இந்தி நடிகர் அசோக் குமாரின் சகோதரர். அந்த படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரம் தான் மிக முக்கிய கதாபத்திரத்தில் நடிப்பதாக திரைக்கதை அமைந்திருந்தது. 

  இந்தியில் படப்பிடிப்பு சரியாக நடந்தது. தமிழில் இதன் படப்பிடிப்பை ஆரம்பிக்கும் போது குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த  குழந்தை ஜுரம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தது. இந்த செய்தி படப்பிடிப்பு ஆரம்பமாகும் முன்பே, அதாவது ஒரு நாளைக்கு முன்பே  தெரிந்ததால் என்ன செய்வது என்று இயக்குநர் மற்றும் பலரும் அமர்ந்து யோசித்தார்கள். இயக்குநர் சாமி என்னை முன்பே பார்த்திருந்ததால், "விஜயகுமாரி', படப்பிடிப்பின் போது மட்டும் அல்ல, எங்களது  வீட்டிற்கு கீழ் உள்ள நடன பள்ளிக்கு பல தடவை வந்திருந்ததால், என்னை முன்பே பார்த்திருக்கிறார். 

  அது மட்டுமல்லாமல் "விஜயகுமாரி', படத்தில் கடைசியாக எடுக்கப்பட்டது நடனக் காட்சி என்பதால், அதை ஒட்டியே இந்த புதுப் படமும் ஆரம்பிக்கப்பட்டதால் "இந்த குழந்தையே நடிக்கட்டும். பானுமதி அம்மா ஜாடை கூட இருக்கிறது' என்று கூறினார். என்னுடன் வந்திருந்த பாட்டியிடம் இந்த விஷயத்தை சொன்னவுடன், பாட்டி முதலில் மறுத்தார். "இவள் அப்பாவிற்கு சினிமா என்றாலே பிடிக்காது. பெரிய பெண்ணையே நடனம் என்பதால் மட்டும் அனுமதித்தார். சின்ன பெண்ணை நடிப்பதற்கு அனுமதிக்கவே மாட்டார்' என்று கூறினார். அதற்கு இயக்குநர் சாமி "குழந்தை நடிப்பதால் எந்த தவறும் இல்லை. நானே குழந்தையின் தந்தையிடம் பேசி நடிப்பதற்கு சம்மதம் வாங்குகிறேன்' என்று சொன்னார். 

  பாட்டிக்கு தன் பேத்தி நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளூர இருந்தது என்று பின்னர் தெரிந்தது. காரணம், அந்த சமயத்தில் தான் இயக்குநர் கே. சுப்ரமணியத்தின் படமான "தியாக பூமி' வெளிவந்து நன்றாக போய்க் கொண்டு இருந்தது. அதில் பேபி சரோஜா என்ற ஒரு குழந்தை நட்சத்திரம், இன்று சித்ரா டாக்கீஸ் என்று இருக்கிறதே, அதன் அதிபரின் மகள் அவர். இந்த "தியாக பூமி'யில் மிகவும் சிறப்பாக வசனம் பேசியும், நடித்தும், பெரும் புகழ் பெற்றார். "தியாக பூமி' படமே அன்றைய கால கட்டத்தில் மிகவும் பேசப்பட்ட படமாகும். பெண்மையை உயர்த்திப் பேசும் படம். இந்த படம் பரபரப்பாக பேசப்பட்டதால் மக்கள் ஆர்வத்துடன் படத்தினை பார்க்க வந்தார்கள். இந்த படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர்தான் பேபி சரோஜா.

  படமும் நன்றாக ஓடியது. அதில் நடித்த பேபி சரோஜா என்ற குழந்தை நட்சத்திரமும் புகழ் பெற்றார். இந்த புகழின் விளைவாக "பேபி சரோஜா பிராக்', "பேபி சரோஜா வளையல்', குழந்தையின் தலையில் வைக்கும் "ப்ரோச்' சை கூட அவர்கள் விட வில்லை.  அதற்கும் "பேபி சரோஜா ப்ரோச்' என்று பெயரிட்டு விற்று வந்தார்கள். இதை எல்லாம் பார்த்த என் பாட்டி திரில்லாகி விட்டார். நாமாக நடிக்க தேடிப்போக வில்லை. அதுவாக வாய்ப்பு வருகிறது. ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ? அதிகமாக அழுத்தி வேண்டாம் என்று மறுக்கவில்லை.  இதில் என் பங்கு ஒன்றுமே இல்லை. உண்மை சொல்லப் போனால் எனக்கு ஒன்றுமே தெரியாது. ஒப்புக்கொள்ளலாமா வேண்டாமா என்று சொல்லத் தெரியாத வயது. பாட்டி என்னை நடிக்க வைத்து விட்டார்கள். நானும் நடிக்க தயாராகி விட்டேன்.   

  முதல் நாள் படப்பிடிப்பு 

  நான் ரொம்ப ஜாலியாக இருந்தேன். புது சட்டை, பாவாடையுடன் சந்தோஷமாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். எனக்கு வருத்தமே இல்லை. பயமோ அழுகையோ இல்லை. காரணம் அன்று என்னிடம் இருந்த எல்லாமே புதுசு தான். குழந்தைகளுக்கு என்றுமே புதுசு என்றால் மகிழ்ச்சிதானே? அது மட்டும் அல்லாமல் இயக்குநர் ஏ.எஸ்.ஏ. சாமியும்  எனக்கு நன்கு தெரிந்தவர். எங்கள் வீட்டிற்கு வரும் போதெல்லாம் என்னுடன் அன்பாக பேசுவார். அது மட்டும் அல்லாமல் "விஜய குமாரி', படப்பிடிப்பு தளத்திலும் என்னிடம் பேசியிருக்கிறர். அதனால் எனக்கு அவரிடமோ அல்லது காமிரா முன்பாகவோ, எந்த பயமும் இல்லாமல் நான் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உட்கார்ந்திருந்தேன். சிறிது தூரத்தில் பாட்டியும் இருந்தார். 

  இன்று நான் என் ரசிகர்களை வாய் விட்டு சிரிக்கவைத்துக் கொண்டிருக்கின்றேன். பல படங்களில் நான் தோன்றினாலே அவர்கள் சிரிக்கிறார்கள் என்பதையும் பார்த்திருக்கிறேன். ஒரு கால கட்டத்தில் "சிரிப்பிற்கு சச்சு' என்று பெயரெடுத்தவள் நான். அப்படி பெயரெடுத்த நான், நடித்த முதல் காட்சி என்ன என்று சொன்னால் நீங்கள் எல்லோரும் கண்டிப்பாக சிரிப்பீர்கள்? அது என்ன என்று அடுத்த வாரம் சொல்கிறேன்.    

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai