அமெரிக்க நாடோடிக்கதை: மரங்கொத்திப் பறவைகளான மனிதர்கள்

முன்னொரு காலத்தில் டெக்ஸாஸ்  பாலைவனத்தில் தங்கியிருந்த நாடோடிக் கூட்டத்தில் மூலிகை மருத்துவர் ஒருவர் இருந்தார்.
அமெரிக்க நாடோடிக்கதை: மரங்கொத்திப் பறவைகளான மனிதர்கள்

முன்னொரு காலத்தில் டெக்ஸாஸ்  பாலைவனத்தில் தங்கியிருந்த நாடோடிக் கூட்டத்தில் மூலிகை மருத்துவர் ஒருவர் இருந்தார். அவருக்கு அந்த பாலைவனத்தில் வளரும் செடி. கொடிகள் பற்றியும் அவற்றின் மருத்துவ குணங்களும் தெரிந்திருந்தன.

நாடோடிக் கூட்டத்தில் யாராவது நோய்வாய்பட்டால் இந்த மருத்துவ செடிகள் மூலம் குணப்படுத்தும் திறமை அவருக்கு இருந்தது. நாடோடிக் கூட்டதினரின் சார்பில் கடவுளிடம் பிரார்த்தனை செய்யவும், பூஜை, திருமணம், இறந்தவர்களின் இறுதிச் சடங்கு போன்றவற்றைச் செய்யும் தீர்க்கதரிசியாகவும் அவர் விளங்கினார்.

அந்தப் பாலைவனத்தில் ஒரு பகுதியில் கள்ளிச்செடி போன்று உயரமாக வளர்ந்திருந்த செடிகளில் காய்க்கும் பழங்களில் விசேஷ தன்மை இருந்தது. "மெஸ்கல்' என்று குறிப்பிடப்படும் அந்தச் செடியின் பழங்களை சாப்பிட்டால் விசித்திரமான கனவுகளும், யாரும் கண்டிராத அபூர்வமான காட்சிகளும் பிரகாசமாகத் தெரியும் என்பதால் யாரும் அவைகளை சாப்பிட வேண்டாம் என்ற அந்த மருத்துவர் நாடோடிக் கூட்டத்தினரை எச்சரித்திருந்தார். ஆனால் அந்த மருத்துவருக்கு மட்டும்  அதை சாப்பிடும் உரிமை இருப்பதாகவும், மற்றவர்கள் யாரும் அவைகளை சாப்பிடக்கூடாதென்றும் பழங்களைத் தொடவும் கூடாது. மீறினால் மோசமான விளைவுகள் ஏற்படுமென்றும் அச்சுறுத்தி இருந்தததால் யாரும் அந்தச் செடிகள் அருகே போவதும் இல்லை. தொடுவதும் இல்லை.

ஆனால், அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு வாலிபனுக்கு மட்டும் அடக்கமுடியாத ஆவல் இருந்தது. அடிக்கடி அந்த மருத்துவர் மட்டும் பழங்களை சாப்பிட்டுவிட்டு நினைவில்லாமல் சத்தமாக பாடுவதையும், சிரிப்பதையும் அவன் பார்த்திருக்கிறான். அவர் ஏன் அப்படி செய்கிறார்? கனவில் அவர் எதைப் பார்த்து விட்டு வித்தியாசமாக செயல்படுகிறார்? என்ற சந்தேகம் அவனுள் எழுந்தது.

ஒரு நாள் இரவு,  அந்த வாலிபன் மட்டும் கூட்டத்திலிருந்து வெளியேறி "மெஸ்கல்' செடிகள் வளர்ந்திருந்த பகுதிக்குச் சென்றான். நல்ல நிலவு வெளிச்சம் இருந்ததால் செடிகளிலிருந்த பழங்களை பார்க்க முடிந்தது. நடுங்கும் கரத்தால் ஒரு பழத்தை மட்டும் பறித்து வாயில் போட்டான். இனிப்போடும் நல்ல சுவையாகவும் இருந்தது. துணிந்து மேலும் இரண்டு பழங்களை பறித்து சாப்பிட்டான்.

சில விநாடிகளுக்குள் அவன் எதிரிலிருந்த இருளடைந்த பாலைவனம் பிரகாசமாக காட்சியளித்தது. அந்த மருத்துவர் கூறியது போல் கடவுள் உருவங்கள் தோன்றின. அப்படியே மிதப்பது போலிருந்தது. உறங்கிப்
போனான்.

காலையில் விழித்தெழுந்தவுடன் தன் கூட்டத்திற்குத் திரும்பினான். முந்தைய இரவு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தன் நண்பர்களிடம் அவனால் சொல்லாமலிருக்க முடியவில்லை. அதைக் கேட்டதும் அவனது நண்பர்களுக்குப் அந்த விசித்திரமான அனுபவத்தைத் தாங்களும் அனுபவிக்க வேண்டுமென விரும்பினர். அன்றிரவு மேலும் சில வாலிபர்கள் யாருக்கும் தெரியாமல் கூட்டத்திலிருந்து வெளியேறி மெஸ்கல் செடிகள் இருந்த இடத்திற்குச் சென்று பழங்களை பறித்துத் தின்றனர். சில நிமிடங்களுக்குள் புதிய அனுபவத்தை உணர்ந்த அவர்களால் நீண்ட நாட்களுக்கு இந்த ரகசியத்தை மறைக்க முடியவில்லை. தங்கள் கூட்டத்தில் மற்றவர்களுக்கும் தெரிவித்தனர். வாலிபர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் அந்த அனுபவத்தை அறிய ஆசைபட்டனர்.

நாடோடிகள் அனைவருமே மெஸ்கல் பழங்களை தின்று உணர்விழந்து கிடப்பதை அறிந்த மருத்துவர், அவர்களை தடுத்து பழங்கள் சாப்பிடுவதை நிறுத்தும் படியும், இதனால் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடுமென்றும் எச்சரித்தார். ஆனால் அவர்கள் அவரது பேச்சை மீறி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தனர். நாளடைவில் வேலை செய்வதை நிறுத்திவிட்டனர். தினமும் பழங்களைத் தின்று கனவில் மிதந்தனர். தங்கள் குழந்தைகளை மறந்தனர். அந்தக் குழந்தைகளை கவனிப்பதோ, உணவளிப்பதோ இல்லை.
கவனிப்பாரற்ற அந்தக் குழந்தைகள் பசியால் வாடி உணவுக்காக அலைந்தனர். கூட்டத்திலிருந்து வெளியேறி பாறைகளிலும், செடிகள் நிறைந்த புதர்களிலும் உணவைத் தேடினர். மழைக்கும், மின்னலுக்கும் அதிபதியான "மனிடோவ்' என்ற கடவுள் பசியுடன் பாலைவனத்தில் திரியும் குழந்தைகளைப் பார்த்து பரிதாபப்பட்டு அவர்கள் முன் தோன்றி உணவளித்தார். வயிறாற சாப்பிட்ட அந்தக் குழந்தைகளை சூரிய வெப்பத்திலிருந்தும், ஒநாய்களிடமிருந்து காப்பாற்ற அவர்களை மரப்பொந்துகளுக்குள் மணிடோவ் மறைத்து வைத்தார். 

சில நாட்கள் கழித்து நாடோடிக் கூட்டத்திலிருந்த இளம்பெண்ணொருத்தி மட்டும் மயக்கம் தெளிந்து,  தன் குழந்தைகளை தேடினாள். தங்கியிருந்த இடத்தைச் சுற்றிச்சுற்றி அலைந்தாள். தன் குழந்தை மட்டுமல்ல அந்தக் கூட்டத்திலிருந்த மற்ற குழந்தைகளும் காணாமல் போயிருப்பது தெரிந்தது. அந்தப்பெண் செய்வதறியாது கதறி அழுதாள். மற்றவர்களும் உணர்வு திரும்பி நடந்ததை அறிந்து பைத்தியம் பிடித்தாற் போல் தங்கள் குழந்தைகளின் பெயர்களைச் சொல்லி கூவி அழைத்தனர். எங்கு போனார்களென்று அவர்களுக்கு தெரியவில்லை.

மணிடோவ் அவர்கள் எதிரில் தோன்றி மருத்துவர் எச்சரிக்கையை மீறி நடந்து கொண்ட தவறை எடுத்துக் கூறியதோடு அவர்களுடைய குழந்தைகளுக்கு உணவளித்து காப்பாற்றி மரப் பொந்துகளில் மறைத்து வைத்திருப்பதை கூறினார். அதைக் கேட்டு அழுத அவர்கள் தங்கள் குழந்தைகளை பிரிந்து எங்களால் இருக்க முடியாது. குழந்தைகளை திரும்ப ஒப்படைக்கும்படி கேட்டனர்.

அவர்கள் மீது பரிதாபப்பட்ட மணிடோவ்,  இப்போதுள்ள சூழ்நிலையில் உங்களால் அவர்களை கண்டுபிடிக்க முடியாது. உங்களை பறவைகளாக மாற்றுகிறேன். நீங்கள் மரங்களை கொத்தி பொந்துகளை செய்து அவரவர் குழந்தைகளை கண்டுபிடித்தால் மீண்டும் உங்கள் பழைய மனித உருவத்தை அடைவீர்கள் என்று கூறி கைகளை உயர்த்தி அவர்களை பறவைகளாக மாற்றினார். அவர்கள் அணிந்திருந்த கருப்பு நிற அங்கிகள் சிறகுகளாகவும், தலை முடி சிவப்பு நிறமாகவும் கொண்ட பறவைகளாக மாறின. பின்னர் பறந்து சென்று தன் கூர்மையான அலகால் ஒவ்வொரு மரமாக கொத்தி பொந்துகள் செய்தன. இதனால் மரங்கொத்தி பறவை என அவைகளை குறிப்பிடத் தொடங்கினர்.

இன்றளவும் மரங்கொத்திப் பறவைகள், மரங்களை கொத்தி தேடினாலும் அவைகளின் குழந்தைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. கிடைக்கும் புழு, பூச்சிகளைத் தின்று பசியாறுகின்றன. என்றாவது ஒரு நாள் தங்கள் குழந்தைகளை கண்டுபிடிப்போம் என்ற நம்பிக்கையில் அவைகள் இருக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com