நூல் அறிமுகம்: கவனித்தல் கற்றல் தலைமையேற்றல்: வெங்கையா நாயுடு 

சங்ககால மன்னர் தன் நாட்டு மக்களுக்குத் தாய் போல இருந்து, மக்களாகிய குழந்தைகளின் துயர் துடைத்துப் பசியைப் போக்கும் பண்புடையவர்களாக இருந்துள்ளனர். மன்னனின் இத்தகைய இயல்பு நிலையை கம்பர்.
நூல் அறிமுகம்: கவனித்தல் கற்றல் தலைமையேற்றல்: வெங்கையா நாயுடு 

சங்ககால மன்னர் தன் நாட்டு மக்களுக்குத் தாய் போல இருந்து, மக்களாகிய குழந்தைகளின் துயர் துடைத்துப் பசியைப் போக்கும் பண்புடையவர்களாக இருந்துள்ளனர். மன்னனின் இத்தகைய இயல்பு நிலையை கம்பர்.

""நாயகன் அல்லன்; நம்மை
நனி பயந்து எடுத்து நல்கும்
தாய் என இனிது பேணித் 
தாங்குதி தாங்குவோரை''
என்று கூறியுள்ளார். 

எனவே மன்னன், தலைவன் என்று கருதப்படுபவனாய் மட்டுமே இருந்து விடக்கூடாது. ”""ஈன்றெடுத்து ஊட்டி வளர்க்கும் தாய் இவன்''” எனக் கருதும்படி அன்பு நிறைந்தவனாகவும் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும். இக்கூற்றை வைத்து பல பாடல்கள் புறநானூற்றில் பாடப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக

""குழவி கொள்வாரின் குடிபுறந்தந்து
காவல் குழலி கொள்வாரின் ஒம்புமதி''

போன்ற தொடர்கள் இதனை மெய்ப்பிக்கின்றன. எனவே ஒரு தாய் தன் குழந்தையை எவ்வளவு பொறுப்புடனும், பாசத்துடனும், கடமை உணர்வுடனும் பாதுகாப்பாளோ அவ்வாறு ஆள்வோறும் குடிமக்களைப் பாதுகாப்பது தம் கடமையென எண்ணி வாழ்ந்துள்ளனர் என்பது இதன் மூலம் தெரிகின்றது.

அந்த வரிசையில் நமது குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அனைத்துறைகளிலும் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி  நாட்டு மக்களுக்கு முடிந்தளவு சேவைகளைச் செய்து வருகிறார். அவர் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது, நகர்ப்புற மக்களுக்கான பிரதமரின் வீட்டுவசதி திட்டம், பொலிவுறு நகரங்கள் ஆகிய இரண்டு மாபெரும் திட்டங்களைக் கொண்டு வந்தவர். 

நாட்டின் 15-ஆவது குடியரசு துணைத்தலைவராகப் பதவியேற்று இரண்டு ஆண்டுகளை முடிவு செய்த  வெங்கையா நாயுடு 14 குடியரசு துணைத்தலைவர்கள் செய்ததற்கும் ஒருபடி  மேலாக அடிக்கடி பல்துறை சார்ந்த அறிஞர்களைச் சந்தித்து நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான தொலைநோக்கு சார்ந்த ஆலோசனைகளைத் தருவதும்,  மாணவர்களிடையே உரையாற்றுவதும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு நலிந்து வரும் கலைகளை மீட்டெடுக்க ஆலோசனைகளைத் தருவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். 

வெங்கையா நாயுடுவின் உரையாடல்களிலிருந்து சிறந்தவற்றை ஆவணமாகப் பதிவு செய்யும் வகையில் ”""கவனித்தல் - கற்றல் - தலைமையேற்றல்''”  (Listening, Learning, Leading) என்ற நூல் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.

துடிப்புடன் செயல்படக்கூடியவரும் சிறந்த பேச்சாளருமான  வெங்கையா நாயுடு, அவரது இரண்டாண்டு பதவிக்காலத்தில் 65 பொது நிகழ்ச்சிகள், மாணவர்களுடனான 35 சந்திப்புகளை மேற்கொண்டதுடன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த 97 நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருப்பதுடன், பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வழிகாட்டியிருப்பதாக நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

விவசாயியின் மகன்

சென்னைக்கு வடக்கே 175 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில்,ரங்கையா நாயுடு - ரமணம்மா தம்பதிகளுக்குப் பிறந்த வெங்கையா நாயுடு, புத்தகத்தின் முதலாவது அத்தியாயத்தில் விவசாயத்தைப் பற்றி மேற்கோள் காட்டியுள்ளார். அதில்  விவசாயத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களைப் பற்றியும், விவசாயிகளுக்கு தற்போதைய வருமானத்திலிருந்து இரட்டிப்பாக்குவதற்கும் தேவையான ஆராய்ச்சிகளைச் செய்யுமாறும் வலியுறுத்துகிறார். ”""விவசாயம் நமது மூலதாரம், நாட்டின் முதுகெலும்பு. அதை பாதுகாத்து ஊக்குவிப்போம்”.அதை அதிக வருமானம் கொடுப்பதாகவும் நிலையானதாகவும் உருவாக்குவோம்'' என்கிறார் துணை குடியரசுத் தலைவர்.  
""விவசாய வளர்ச்சியையும், அதைச் சார்ந்துள்ள மக்களின் தரமான வாழ்வையும் பாதிக்கும் பிரச்னைகளுக்குக் கருத்தொருமித்த நடவடிக்கைகள் தேவைப்படுகிறது'' என்பதைச் சுட்டிக்காட்டியவர் ""விவசாய உற்பத்தியை மேம்படுத்த புதிய அறிவு, மாற்றுக் கொள்கைகள் மற்றும் கட்டமைப்பு மாற்றங்கள் தேவை'' என்கிறார்.  

""நிலங்களில் கடுமையாகப் பாடுபடும் விவசாயிகளுக்கு அறிவுப்பூர்வமாகவும், நிதி சார்ந்தும், சேமிப்புக் கிடங்குகள் மற்றும் காப்பீட்டு வசதிகளை வழங்கவும் வேண்டும்'' என்றும்,  ""வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி குறித்து மறு சிந்தனையும் புதிய ஊக்குவிப்பும் தேவைப்படு
கிறது'' என்பதையும் பதிவு செய்கிறார்.

கல்வி பற்றி அறிவுறுத்துகையில் 

""ஆரம்பக்கல்வி என்பது தாய்மொழியிலேயே இருத்தல் வேண்டும்'' என்று வலியுறுத்தும் வெங்கையா நாயுடு, ""கல்வி வேலை வாய்ப்புக்கு மட்டுமன்று; அது அறிவைப் பெறுவது-விரிவு செய்வது- அதிகார மளித்தலுக்கு உதவுவதற்கும் ஆனது என்பதை உணர வேண்டும் '' என்கிறார். 

""அது போலவே மேற் படிப்பிற்காக வெளிநாடு செல்லும் மாணவர்கள் வெளிநாடுகளில் கற்றுக்கொள்ளுங்கள்- சம்பாதியுங்கள். பின்னர் தாய் நாட்டிற்குத் திரும்பி, அதன் வளர்ச்சிக்கு உதவுங்கள் - என்றும் அறிவுறுத்துகிறார். 

கல்வி தொடர்பாக அவர் மேலும் கூறிவதாவது:

*  கல்வி நிறுவனத்திற்குச் செல்வது என்பது நமது சமூகத்தின் சிறந்த மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கான யாத்திரை ஆகும்.
*  மாணவர்கள்  ஒழுக்கத்தைக் கற்பதற்கும், தேவைப்படுவோருக்குத் தாமாக முன்வந்து சேவை செய்யும் விருப்பத்தை ஏற்படுத்தவும் சாரணர் இயக்கம் மற்றும் தேசிய மாணவர் படையில்  சேவையாற்றுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.
*  கல்வி என்பது, பெரும் மாற்றத்தை உருவாக்குவதாக இருக்கவேண்டுமே தவிர, வெறும் பரிமாற்றமாக அமைந்து விடக்கூடாது.
*  பண்டைக்காலத்தில் இந்தியாவில் நாலந்தா போன்ற பல முன்னணி பல்கலைக் கழகங்கள் இருந்தன.  நமது நாடு உலகத்திற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தது.  இந்தப் பெருமையை மீட்டெடுக்கும் வகையில் அனைவரும் பாடுபட வேண்டும்.
உலக நாடுகள் பற்றி கூறுகையில் 
பயங்கரவாதத்திற்கு அல்லது தீவிரவாதத்திற்கு மதமும், இனமும், நிறமும் இல்லை. அது உண்மையில் மனித குலத்தின் எதிரி, அதை வேறருக்க நாம் அனைவரும் (உலக நாடுகள் அனைத்தும்) ஒன்றுபடுவோம் என்கிறார்.
 மேலும் கூறுகையில், 
*  "வசுதைவ குடும்பகம்'” (உலகம் ஒரே குடும்பம் - உலகத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழ்வோம்) என்பது இந்தியாவின் அடிப்படைத் தத்துவம்.
*  அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து நிலையான வளர்ச்சிக்குப் பணியாற்றுவோம்.
*  பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து எடுத்து வருகிறது. நாம் அமைதிக்கு முதன்மையானவர்களாக இருக்கிறோம்.
*  ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அமைதி, சமாதானம் இன்றியமையாதது.  உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பதற்றம் இருந்தால் நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியாது.
*  உலகளாவிய வளர்ச்சிக்கு, வறுமை ஒழிப்பு, கல்வியளித்தல், வேலை வாய்ப்பு, சுகாதாரம் மற்றும் பாலின வேறுபாடு போன்றவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு உலக நாடுகளின் ஒன்றிணைந்த முயற்சிகள் தேவைப்படுகிறது.
மருத்துவம் குறித்து
*  அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியின் நோக்கம் மக்களை மகிழ்ச்சியாக வாழ வழிகாட்டுவதுதான். 
*  மருத்துவ அறிவியலில் பெருமளவு முன்னேற்றமும் மாற்றமும் அடையவேண்டும்
*  மருத்துவரிகளிடம் உரையாடும் போது, "" தரமான மருத்துவச் சேவை எல்லாப் பிரிவினருக்கும் கிடைக்க வேண்டும். மருத்துவத் துறையில் தனியாரும் அரசும் சேர்ந்து செயல்படுவதே உசிதமானது'' என்றார். 
*  நகர்புற மக்களுக்குக் கிடைக்கும் மருத்துவ வசதி கிராமப்புற மக்களுக்கும் கிடைக்கும் விதமாக நமது மருத்துவ
முறை மறுவடிவமைப்புச் செய்ய வேண்டும்.
*  அனைத்து மருத்துவர்களும் கட்டாயமாகக் கிராமப்புறத்தில் பணி செய்தல் வேண்டும்.
*  மக்கள் குறிப்பாக இளைஞர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றும்படியும், யோகா மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும், சத்தான ஊட்டச் சத்து உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்  - என வலியுறுத்துகிறார்.
கலாசாரம்-ஆன்மிகம் பற்றி 
*  இயற்கையிடம் அன்பு செலுத்தி வாழுங்கள்
*  சிறந்த எதிர்காலத்திற்கு இயற்கை மற்றும் கலாசாரம்
*  இயல், இசை, நாடகம் நமக்கு வாழையடி வாழையாக பெறப்பெற்றது, அது வாழ்க்கை, வரலாறு, ஒருமைப்பாடு நிறைந்தது, மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது, மானுட மேன்மைக்கு வழி வகுக்கிறது என்று கூறும் வெங்கையா நாயுடு தான் கலந்து கொண்ட நிகழ்வுகள் சிலவற்றையும் பதிவு செய்திருக்கிறார்.

உதாரணமாக: பாகிஸ்தானில் அமைந்துள்ள  பஞ்சாப் மாகாணம், நரோவால் மாவட்டம், ஷக்கார்கர் அருகேயுள்ள கர்த்தார்பூரில் ராவி ஆற்றின் கரையில் குருத்துவரா தர்பார் சாஹிப் எனப்படும் சீக்கியர்களின் கோயில் உள்ளது. சீக்கிய குருவான குருநானக்  18 ஆண்டுகள் அந்த இடத்தில்  வாழ்ந்ததால் அது சீக்கியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள சீக்கியர்கள்  பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூர் சென்று தரிசிப்பதற்கு வசதியாக அமையவிருக்கும் புதிய பாதைக்குக் குடியரசு துணைத்தலைவர் அடிக்கல் நாட்டிய செய்தியை வண்ணப் புகைப்படத்துடன் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, தேசப்பிதா காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த நாளில் விடுதலை போராட்டத்தில் இந்தியர்களைப் பெருந்திரளாக ஒருங்கிணைத்த  காதி எனும் புரட்சிகரமான எண்ணத்திற்குப் புகழாரம் சூட்டிய வெங்கையா நாயுடு,  இன்று காதி நாட்டின் நேர்மை, தேசப்பற்று, வகுப்புவாத நல்லிணக்கம் மற்றும் ஆன்மிக பணிவு ஆகியவற்றின் வெல்லமுடியாத சின்னமாகக் காட்சியளிக்கிறது என்றவர் , சர்தார் படேல், ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, பகவான் மகாவீர்,  சுவாமி விவேகானந்தர், வாஜ்பாய் மற்றும் தில்லியில் அமைந்துள்ள தேசிய போர் நினைவுச் சின்னம் பற்றியும் ஒரு சில வரிகளில் பதிவு செய்துள்ளார்.

மாநிலங்களவையில் வெங்கையா நாயுடு

நம் நாட்டின் குடியரசு துணைத் தலைவர், மாநிலங்களவையின் தலைவராக இருப்பது நாடாளுமன்ற மரபாகும்.  வெங்கையா நாயுடு நாடாளுமன்ற மாநிலங்களவையின் தலைவராகவும் இரண்டு ஆண்டுகளைப் பூர்த்திச் செய்துள்ளார்.

மாநிலங்களவையில் ”"" நாம் பேசுவோம், விவாதிப்போம், முடிவு செய்வோம். ஆனால்,  இடையூறு செய்ய வேண்டாம்''” என்று சொல்லும் குடியரசு துணைத் தலைவர் ”நாடாளுமன்றத்தின் ""இரு அவைகளும் ஜனநாயகத்தின் ஆலயமாகும். நாம் கூட்டாக அதன் புனிதத்தைப் பராமரிப்போம் '' என்கிறார்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் 20-ஆம் தேதி தொடங்கிய 249-ஆவது மாநிலங்களவையின் கூட்டம்,  கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற சிறந்த கூட்டமாகும்.

இந்தாண்டு ஜூலை 24 முடிய 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதையும்,  பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் 13 அமர்வு எந்த வித இடைஞ்சலுமின்றி நடைபெற்றதையும் இந்த நூலின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதிலிருந்து  மாநிலங்களவைத் தலைவர் என்ற முறையில் அவர் நடுநிலை தவறாமல் கடமையாற்றி வருவதையும்,வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட அணுகுமுறை காரணமாக, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து தரப்பினரும் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கும் நிலையை ஏற்படுத்தியிருப்பதாகவும் அறியமுடிகிறது. மேலும் கடந்த இரண்டாண்டு காலத்தில் மொத்தமாக 50 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

மாநிலங்களவையின் வரலாற்றில் முதன் முறையாக 2014-ஆம் ஆண்டு முதல் 2019- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிய நடைபெற்ற மாநிலங்களவையின் நிகழ்வுகளைத் தொகுத்து report to the people என்ற தகவல் தொகுப்பை 248-ஆவது கூட்டத்தின் முடிவில் வழங்கினார். அதில் குறிப்பிட்ட  ஒருசில நிகழ்வுகளின் தொகுப்பு நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.  

மாநிலங்களவை வரலாற்றில் முதன் முறையாக துணைத் தலைவர் ஹர்வன்ஷ் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு இந்த ஆண்டு மார்ச் மாதம்  ஜப்பானுக்குச் சென்றதையும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முதன்முறையாக மாநிலங்களவை வரலாற்றில்  மாநிலங்களவை அயல்நாட்டு அவையோடு, நாடாளுமன்றங்களுக்கு இடையேயான உரையாடலை முன்னெடுத்துச் செல்ல வகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வெங்கையா நாயுடுவும், ருவாண்டா குடியரசின் பிரதி நிதிகள் சபை தலைவர் பர்னார்ட் மக்குஸூவும் கையெழுத்திட்டு வரலாறு படைத்துள்ளனர். இது போன்றதொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் மாநிலங்களவையின் முதல் தலைவர் வெங்கையா நாயுடு ஆவார்.  

இதுமட்டுமல்லாமல் ராஜ்யசபா செயலகத்தில் , ராஜ்யசபாவில் உறுப்பினர் களுக்குண்டான சலுகைகள் மற்றும் இதர வசதிகள் பற்றி சுருக்கமாக எழுதப்பட்டுள்ளன.

இன்னும் ஏராளமான தகவல்களுடனும் வண்ணப்புகைப்படங்களோடும்  257 பக்க நூலாக மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நூலில் உள்ள தகவல்கள் அடுத்த தலைமுறை மக்கள்படிப்பதற்கு வசதியாக குறைந்தபட்சம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள நூலகங்களில் கிடைக்கும்படி செய்தால் நன்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com