சுடச்சுட

  
  SIVAN

  சந்திரயான் 2 வெற்றிப்பயணத்தின் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனை எட்டியுள்ளது இந்தியா. இதனால் நிலவுக்குச் செயற்கை கோள் அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
   நிலவில் உள்ள கனிம வளங்கள் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காகக் கடந்த 2008-ஆம் ஆண்டு "சந்திரயான் 1' விண்கலம் விண்ணிற்குச் செலுத்தப்பட்டது. இது தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததையடுத்து அடுத்தக்கட்டமாக நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் எப்படி உள்ளன என்பதைக் கண்டுபிடிக்க ரூ.1000 கோடி செலவில் சந்திரயான்-2 விண்கலத்தை இந்தியா தயார் செய்தது.
   இதனையடுத்து கடந்த ஜூலை 22-ஆம் தேதி, ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம், சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் முக்கியக் கட்டமாகச் சந்திரயான் 2 விண்கலம்,புவி வட்டப்பாதையில் இருந்து நகர்ந்து நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. ஆகஸ்ட் 14-ஆம் தேதி நிலவை சுற்றி வந்தது. இதனையடுத்து ஆகஸ்டு 21, 28, 30 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தினங்கள் சந்திரயானை பொறுத்தவரை மிக முக்கியத் தினங்கள் ஆகும். அதாவது சந்திரயான் தனது நிலையை மாற்றிப் பயணத்தை மேற்கொண்டது. செப்டம்பர் 2-ஆம் தேதி செயற்கைகோள் விலகி நிலவை நோக்கிய பயணத்தைத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவில் இறங்கும் திட்டம். ஆனால், சந்திரயான் 2 விண்ணில் செலுத்தும் போது இறுதியில் ஏற்பட்ட காலதாமதம் போன்ற தொழில் நுட்ப கோளாறு ஏற்படலாம். ஆனால் இறுதி முடிவு என்பது செப்டம்பர் 7 - ஆம் தேதியே முழுமையாகத் தெரியவரும்.
   இனி நிலவில் தரை இறங்கிய பிறகு சந்திரயான்-2 விண்கலம் ஓரு வருடத்திற்கு ஆய்வு பணிகளை மேற்கொள்ளும். நிலவின் மேற்பரப்புகளைத் தினமும் படம் எடுத்து விண்கலம் அனுப்பி வைக்கும். சந்திரயான் 2 - இல் இணைக்கப்பட்டுள்ள லேண்டர் அமைப்பு, நிலவின் எந்த இடத்தில் தரை இறங்கியதோ, அதே இடத்தில் 14 நாட்களும் நின்றபடி ஆய்வுகளை மேற்கொள்ளும்.
   இதன்மூலம் நிலவில் மனிதர்கள் குடியேற முடியுமா? நிலவில் எத்தகைய தாது பொருட்கள் உள்ளன? என்பதை இந்தியாவால் கண்டுபிடிக்க முடியும்.

  இந்தப் பயணத்தின் மூலம்தான் இந்தியா தனது விண்வெளி ஆய்வில் அடுத்தக் கட்டத்தை எட்டிப்பிடிக்கவிருக்கிறது. ஏற்கெனவே சந்திராயன் 1-இன் மூலம் நிலவின் சுற்றுப்பாதைக்கு விண்கலத்தை இந்தியா அனுப்பியிருக்கிறது. இருந்தாலும்,முதன் முறையாக இந்தப் பயணத்தின் மூலம்தான் இந்தியா அனுப்பும் கருவிகள் நிலவில் தரையிறங்குகின்றன. ஆகவே,நிலவில் மெதுவாக, திட்டமிட்டபடி,குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்க முடியுமா? இதுவரை யாரும் அடையாத தென் துருவத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள முடியுமா?என்பதை இந்தியா இந்தத் திட்டத்தின் மூலம் பரிசோதிக்கும்.
   இது பற்றி கருத்த தெரிவித்த இஸ்ரோ தலைவர் சிவன், ""நிலவை நோக்கிய இந்தியாவின் வரலாற்று பயணத்தின் தொடக்கமாக உள்ளது. இந்த மிகப்பெரிய திட்டம் இஸ்ரோ குழுவின் கடினமான உழைப்பால் சாத்தியமானது. குறிப்பாகப் பொறியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், மற்றும் பிற ஊழியர்கள் இதற்காகத் தொடர்ந்து பணிகளைச் செய்தனர். மேலும் 500 கல்லூரி மாணவர்கள், 120 தனியார் நிறுவன ஊழியர்களின் பங்களிப்பு இருந்தது. இதில் முக்கியமாகச் சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. சந்திரயான் 2 விண்கலம் செலுத்துவதற்கு இந்தியா எந்த நாட்டின் உதவியையும் பெறவில்லை என்பது தான் '' என்றார் .

   எதற்கு இந்த ஆராய்ச்சி?
   பல நாடுகள் நிலவு ஆராய்ச்சியில் இறங்குவதற்காகக் காரணங்கள் உள்ளன. இதற்கு முன் நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக ரஷ்யா, அமெரிக்க, சீனா போன்ற நாடுகள் செயற்கைகோளை விண்ணிற்குச் செலுத்தி உள்ளன. நிலவின் தென் துருவ பகுதியில் சூரிய ஒளி படாது. ஆனால் இங்குப் பாறைகள் உள்ளன. அவை எப்படியிருக்கும் என்பதை ஆராய்ச்சி செய்ய முடியும். மேலும் 100 மில்லியன் டன் தண்ணீர் இருப்பதாகக் கூறுகிறார்கள். தண்ணீர் இருந்தால் உயிரினங்கள் இருக்கும். உயிரினங்கள் இருந்தால் மனிதர்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. நிலவில் மனிதன் இருக்கின்றானா என்பதற்கான ஆராய்ச்சி தான் இது.
   மேலும் தென் துருவ பகுதியில் அலுமினியம், மக்னீசியம், இரும்பு, கால்சியம், தோரியம், பாதரசம், வெள்ளி போன்ற கனிம வளங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். மேலும் ஹீலியம் 3 என்ற தனிச் சிறப்பு வாய்ந்த விஷயம் உள்ளது. இதனை வைத்து சுத்தமான, பாதுகாப்பான அணுசக்தியை உற்பத்தி செய்ய முடியும். இதனால் மின் தேவையை எளிதில் பூர்த்தி செய்து கொள்ளலாம். அதனால் இந்தக் கனிம வளங்களைப் பெறுவதற்காக நாடுகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
   இனி நிலவிற்கு இந்தியர்கள் செல்லலாமா? வேண்டாமா? என்பதை உறுதி செய்யும் இந்த சந்திரயான் 2 என்பதில் சந்தேகமில்லை.
   


   
   -ராஜன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai