சுடச்சுட

  
  sk4

  நகைச்சுவை நாயகியாக வலம் வரும் எனக்கு கேமரா முன் முதன் முதலில் நடிக்க கொடுக்கப்பட்ட காட்சி என்ன தெரியுமா? அழுவதுபோல் தான் நடிக்க வேண்டும். எல்லோரும் என்னை "அழு-அழு' என்று சொன்னார்கள். காரணம், அது ஒரு ராஜா ராணி கதை. அதில் நான் அந்த ராஜாவிற்கு குழந்தையாக நடிக்கிறேன். குழந்தை காணாமல் போகக் கூடாது என்பதற்காக மட்டும் அல்லாமல், இது ராஜாவின் குழந்தை என்று தெரிவதற்காக ஒரு அரசு முத்திரையை குழந்தையின் முதுகில் இடுவார்கள். அது எப்படி என்றால், அரசு முத்திரையை பழுக்கக் சூடாக்கி அந்த குழந்தையின் முதுகில் வைப்பார்கள். 
  அந்தக் காட்சி எடுக்கப்படும் போது நான் அழவேண்டும். இதுதான் முதன் முதலில் கேமராவின் முன்பு நான் நடிக்க வேண்டிய ஷாட். உண்மையாகவே கதையில் அப்படி இருந்தாலும், படத்திற்காக யாரும் பழுக்கக் காய்ச்சிய முத்திரையை குழந்தையின் மீது வைப்பார்களா என்ன? அதனால் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி இந்த காட்சியை மூன்று பகுதியாக பிரித்தார். நெருப்பில் வைக்கப்பட்டுள்ள முத்திரை. அடுத்த காட்சி குழந்தையின் முதுகில் அரசு முத்திரை பதியும் காட்சி, சுட்டதால் குழந்தை வீறிட்டு அழும் காட்சி என்று வரிசையாக வரும். ஆனால் படப்பிடிப்பின் போது அந்த அழும் காட்சிதான் அன்று முதன் முதலில் எடுத்தார்கள். இப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்புதான் வருகிறது. 

  தமிழ் கூறும் நல்லுலகையே சிரிக்க வைத்துக் கொண்டு, பல்வேறு பரிசுகளை எனது நகைச்சுவை நடிப்பிற்காக பெற்றுள்ள, என்னை, முதன் முதலில் கேமராவுக்கு முன்னால் நின்றவுடன் என்னை அழச் சொன்னார்கள் என்றால் எப்படி இருக்கும். அதுவும் புது பாவாடை, சட்டை கொடுத்து அழச் சொன்னால்? 
  எனக்கு முதலில் அழுகையே வரவில்லை. இதற்கும் ஒரு தந்திரம் செய்தார் இயக்குநர் ஏ.எஸ்.ஏ. சாமி . என் முகத்திற்கு குளோஸ்-அப் காட்சியாக வைத்து விட்டு, பின்னால் புகையை வரவழைத்து விட்டு, கேமரா ஓடும் பொது என் அருகில் இருந்து கொண்டு என்னை நறுக்கென்று கிள்ளினார். நான் வலி தாங்காமல் ஓவென்று அழ, அன்று முதன் முதலில் எடுக்கப்பட்ட அந்த முதல் காட்சியை தத்ரூபமாக படமெடுத்தனர்.
  இதைப் பார்த்தவுடன் எனது பாட்டிக்கு பயமாகி விட்டது. காரணம், நானோ மிகவும் சிறிய குழந்தை. மழலை சொல் கூட முழுமையாக வரவில்லை. வசனம் கொடுத்தால் எப்படி குழந்தை பேசும்? அதற்கு அடிப்பார்களோ? இந்த பயத்தால் இயக்குநர் சாமியிடம் சென்று, "குழந்தைக்கு மழலை சொல் கூட வரவில்லை. எப்படி வசனம் பேசும்'", என்று கேட்க, "நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் கவலை படவேண்டாம்", என்றும், உங்கள் குழந்தையை நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம்' என்று உத்தரவாதமும் கொடுத்தார்கள்'. 
  இன்று கூட எனக்கு வசனத்தை எழுதிக் கொடுத்து விட்டு படிக்க சொன்னால், நடிப்பு மட்டும் அல்லாமல், வசனமும் வராது. "நாளை' படப்பிடிப்பு இருக்கிறது. நீங்கள் தயாராக வரவேண்டும் என்று எனது வசனத்தை எழுதிக் கொடுத்து, படித்து விட்டு வாங்க என்று சொன்னால் எனக்கு படிக்கத் தெரியாது. அவர்கள் வசனத்தை படித்துக் காண்பித்தால் போதும். அதை அப்படியே நான் மனப்பாடம் செய்து விடுவேன். எப்பொழுது எங்கு வேண்டுமானாலும் அந்த வசனத்தை ஏற்ற இறக்கங்களோடு சொல்லி எல்லோரையும் அசத்தி விடுவேன். 
  நான் குழந்தையாக இருக்கும் போதில் இருந்தே இந்த பழக்கம் இருந்து வந்ததால், இந்த முறையே எனக்கு பழகி விட்டது. படப்பிடிப்பின் போது என் பாட்டியிடம் வசனங்களை கொடுத்து படிக்க வைத்து, அவர்கள் படிக்க நான் கேட்டு அதை அப்படியே நடிக்க எல்லாமே நல்லபடியாகச் சென்றது. 
  ஒரு முறை அகில இந்திய வானொலி நிலையத்தில் என்னை டிராமா ஒன்றில் நடிக்க அழைத்தார்கள். என்னுடைய மனப்பாடம் டெக்னிக் அவர்களுக்கெல்லாம் புதுமையாக இருந்தது. அதுவும் ஒரு மணி நேர நாடகம். ஒருமுறை எனக்கு படித்துக் காண்பித்தால் போதும். அவர்கள் படிக்கப் படிக்க நான் மனப் பாடம் செய்து" லைவ்' நிகழ்ச்சியின் போது நடித்து காண்பிக்க, எல்லோரும் 6 வயது குழந்தையான என்னைப் பாராட்டி மகிழ்ந்தார்கள். 
  இதன் நடுவில் நான் நடித்த "ராணி" படத்தின் எனது பாத்திரத்திற்கான படப்பிடிப்பு நடந்து முடிந்தது. நானும் என் பாட்டியும் சென்னைக்கு திரும்பி வந்து சேர்ந்தோம். ஆனால் படம் முடியவில்லை. என் பகுதி தவிர மற்ற நடிகர்கள் நடிக்க படப்பிடிப்பு தொடர்ந்தது. அந்தக் கால கட்டத்தில் எல்லாம் ஒரு படம் எடுக்க சுமார் 2 வருடத்தில் இருந்து 3 வருடங்கள் வரை மெல்ல தான் படத்தினை எடுப்பார்கள். சின்ன குழந்தையாக இருந்தால் அந்த குழந்தையே கதாநாயகியாக நடிக்க தயாராகி விடும். அந்த அளவிற்கு நிதானமாக எடுப்பார்கள்.
  இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் டபிள்யூ.ஆர். சுப்பாராவ் என் முதல் படத்தினை ஒளிப்பதிவு செய்ததோடு மட்டும் அல்லாமல் அவர் ஒளிப்பதிவு செய்த பலப் படங்களில் நான் பின்னர் நடித்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் என்னைப் பார்த்து "நீ குழந்தையாக இருக்கும் போதே ஓர் இடத்தில் நிற்க மாட்டாய். உன்னை ஒரிடத்தில் உட்கார வைக்க எங்களுக்கு எல்லாம் போதும் போதும் என்று ஆகி விடும். அவ்வளவு குறும்புக்கார குழந்தை நீ. அது மட்டும் அல்லாமல் நீ சூட்டிகையான குழந்தை' என்று சொல்வார். 
  நான் சென்னைக்கு வந்தாலும் "ராணி' படத்தில் நான் நடித்தது, சினிமா உலகில் பிரபலமானது. இந்தக் குழந்தை "கற்பூரம்' போல் பட்டென்று புரிந்து கொள்கிறாள். சொன்னதைச் சரியாக செய்கிறாள். சின்னக் குழந்தையாக இருந்தாலும் வசனத்தை மனப்பாடம் செய்து அழகாக பேசுகிறாள் என்று என்னைப் பற்றி பலரும் பாராட்டி கூற, அந்தப் பாராட்டு சென்னை வரை தொடர்ந்தது.
  கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் ஒரு புதுப் படத்திற்கு பூஜை போட்டார்கள். அந்த படத்தின் வசனகர்த்தா வசனங்களை எழுத, அதை பேசி நடிக்க நான் மிகவும் சந்தோசப்பட்டேன். அவர் யார்? ஏன் என்னை அவர் பாராட்டினார்? அடுத்த வாரம் சொல்கிறேன்.
  (தொடரும்)
  - சந்திப்பு: சலன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai