கம்போடியா நாடோடிக்கதை - மோதிரம்

அங்கு உள்ள கோயிலில் பூஜை செய்யும் பூசாரி அன்றாடம் காலையில் நதியில் நீராடிய பின்பு பூஜை செய்வது வழக்கம்.
கம்போடியா நாடோடிக்கதை - மோதிரம்

கம்போடியாவின் கிராமங்களில் ஒன்று மேகாங். அழகான நதி ஓடும் கிராமம்.
 அங்கு உள்ள கோயிலில் பூஜை செய்யும் பூசாரி அன்றாடம் காலையில் நதியில் நீராடிய பின்பு பூஜை செய்வது வழக்கம்.
 அப்படி ஒரு நாள் நீராடச் செல்லும் போது தன் கையில் அணிந்திருந்த லிங்க வடிவிலான மோதிரத்தை கரையில் கழற்றி வைத்து விட்டு நீராடச் சென்றார்.
 கரை திரும்பிய அவர் மோதிரத்தை அணிய மறந்து கோயிலுக்குச் சென்று விட்டார்.
 அந்த ஊரைச் சேர்ந்த இளைஞன் லேன், அதே நதியில் நீராடச் செல்லும் போது, பூசாரி விட்டுச் சென்ற மோதிரத்தை காண நேர்ந்தது. பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்த அந்த மோதிரத்தை எடுத்து கையில் அணிந்து கொண்டான்.
 அன்று மாலை தனது நண்பனுடன் கோயிலுக்குச் சென்றான். அங்கிருந்த அந்தப் பூசாரி இளைஞன் அணிந்திருந்த மோதிரத்தை பார்த்துவிட்டு "இந்த மோதிரம் எங்கே இருந்து வாங்கினீர்கள்?'' என்று கேட்டார். "என்னிடமும் இது போன்ற மோதிரம் இருந்தது இன்று காலை தான் காணாமல் போனது'' என்றார்.
 பூசாரி சொன்னதை கேட்டு திடுக்கிட்ட லேன், அவருடைய எந்த கேள்விக்கும் பதிலும் அளிக்காமல் மவுனம் காத்தான். அவன் உடன் சென்ற நண்பன், "நாங்கள் அவசரமாகச் செல்ல வேண்டியிருக்கிறது, புறப்படுகிறோம்.'' என லேனை கூட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.
 கோயிலின் பிரகாரத்தைச் சுற்றி வருவதற்குள், லேன் தான் அணிந்துள்ள மோதிரம், பூசாரியின் மோதிரம் தான் என்பதைத் தெரிந்து கொண்டான். ஆனால், நண்பனிடம் சொல்லவில்லை. அவனுக்குள் பதற்றம் ஏற்பட்டது.
 "உடனே நாம் இங்கிருந்து சென்று விடுவோம். ஆபத்துக் காத்திருக்கிறது'' என லேன் தனது நண்பனை கூட்டிக் கொண்டு கோயிலில் இருந்து வெளியே சென்று விட்டான். ஆனால் விஷயத்தை கடைசி வரை நண்பனிடம் சொல்லவில்லை.
 அந்த இளைஞன் தன்னுடைய கேள்விக்குப் பதில் சொல்லததால், அவன் மீது பூசாரிக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
 உடனடியாக அங்கிருந்த காவலர்களிடம் விஷயத்தைச் சொன்னார் பூசாரி. உடனே அந்த இளைஞனைத் தேட ஆரம்பித்தார்கள்.
 நண்பனுடன் வீடு திரும்பிய லேன் பதற்றத்துடனேயே தூங்கச் சென்றான்.
 "நாம் ஒன்றும் பூசாரியின் மோதிரத்தை திருட வில்லை. ஏன் நம் மீது திருட்டுப் பட்டம் வர வேண்டும் எடுத்த பொருளை எடுத்த இடத்திலேயே வைத்துவிடுவோம்'' என்று இரவு முடிவுக்கு வந்தான்.
 மறுநாள் காலை பூசாரி நீராட வரும் நேரம் பார்த்துக் கரையில் அவர் தன்னைக் காணாதவாறு மறைந்திருந்தான் லேன்.
 பூசாரி நீராட நதியில் இறங்கிய சமயத்தில் அவர் உடைமைகளை வைத்திருந்த இடத்திலேயே அந்த மோதிரத்தை வைத்துவிட்டான்.
 இன்றாவது தொலைந்த லிங்க வடிவிலான மோதிரம் தனக்குக் கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிய படி பூசாரி நீராடிவிட்டு கரை திரும்பினார்.
 அப்போது அவர் தேடிக்கொண்டு இருந்த மோதிரம் அங்கே இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்.
 உடனடியாகக் கைகளில் மோதிரத்தை அணிந்து கொண்டு, கைகளைகூப்பி இறைவனை வணங்கினார்.
 நடப்பதை தூரத்தில் நின்று பார்த்த லேன், மன நிம்மதியுடன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
 நடந்ததைத் தன் அம்மாவிடம் சொன்னான். அடுத்தவரின் பொருளைத் தப்பி தவறிக் கூட எடுத்துவிடக்கூடாது. எடுத்தாலும் அவர்களைத் தேடிச் சென்று திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். நமக்குக் கிடைக்க வேண்டியது நமக்குக் கிடைத்தே தீரும் என லேனுக்குப் புத்திமதி சொன்னார் அவனுடய அம்மா.
 - ஜெயந்தி சுரேஷ், ஸ்ரீரங்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com