மனமகிழ்ச்சி அளிக்கும் மகேந்திரவாடி

வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டத்தில் சோளிங்கர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் பல்லவர் கால குடைவரைக்கோயில், "மகேந்திரவாடி" என்று 
மனமகிழ்ச்சி அளிக்கும் மகேந்திரவாடி

வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டத்தில் சோளிங்கர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் பல்லவர் கால குடைவரைக்கோயில், "மகேந்திரவாடி" என்று அழைக்கப்படும் ஊரில் அமைந்துள்ளது.
திறந்தவெளியில், ஓர் உருண்டையான, பெரிய (கல்லை) பாறையை அழகிய கற்காவியமாக - குடைவரைக் கோயிலாக பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் (கி.பி. 590 - 630) அமைத்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடையலாம். இப்பாறையை குடைந்து அமைத்த அழகிய குகைக்கோயிலாக இக்கலைப்படைப்பு விளங்குகிறது.
மகேந்திர விஷ்ணு கிரஹம்: இக்குடைவரைக் கோயில் திருமாலுக்காக எடுக்கப்பட்டதாகும். தென்புறத்தூணில் காணப்படும் கல்வெட்டில், "குணபரன் என்பவர் மகேந்திரபுரத்தில் - மகேந்திர தடாகக் கரையில் மகேந்திர விஷ்ணு கிரஹம் என்னும் இக்கோயிலை "முராரி' என்னும் இறைவனுக்காக மக்கள் கண்டு போற்றுவதற்காக குடைவித்துள்ளார்' என்று குறிப்பிடப்படுகிறது. அக்கல்வெட்டு இதுதான்:-
மஹிதமம் ஸதாமுப மஹேந்த்ர தடாகமித
ஸ்திரமுருநாரிதம் குணபரேண விதார்ய ஹிலாம்
ஜனநாயனாபிரம குணநாமி மஹேந்த்ர புரெ
மஹதி மஹேந்த்ர விஷ்ணுக்ருஹா நாம முராரிக்ருஹ:
பொதுவாக பல்லவர் காலத்தில் ஏரிகள் "தடாகம்' என அழைக்கப்பட்டதைக் காண்கிறோம். மாமண்டூரில் - சித்திர மேகத்தடாகம் - கூரம் என்ற ஊரில் பரமேசுவர தடாகம், உத்தரமேரூரில் - வயிர மேகத்தடாகம், வாலாஜாபாத் அருகில் தென்னேரி (திரையன் ஏரி) - திரளயதடாகம், களக்காட்டூர் - சந்திர மேக தடாகம் என்று சிறப்பித்துக் குறிப்பிடப்படுகிறது.
மகேந்திர தடாகம் : குடைவரைக் கோயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள பாறையில் காணப்படும் கல்வெட்டில் மகேந்திரவர்மன், மகேந்திர தடாகத்தை அமைத்ததைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இக்குடைவரைக் கோயிலிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊரின் அருகே பெரிய ஏரி காணப்படுகிறது. இதுவே "மகேந்திர தடாகம்' ஆக இருக்கவேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் தென்னேரி, உத்தரமேரூர், மாமண்டூர் ஏரிகள் (தடாகம்) அளவில் மிகப் பெரியதாக அமைந்துள்ளன. மகேந்திர தடாகமும் பெரிய ஏரியாகவும், அளவில் பெரிய கலிங்கு அமைப்புடன் விளங்குகிறது.
கோயில் அமைப்பு: குகைக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், முக மண்டபம் என்ற அமைப்புகளுடன் விளங்கியிருக்கிறது. மண்டபத்துத் தூண்கள் பல்லவர் கால கலைபடைப்புக்கு எடுத்துக்காட்டாக தூணில் மேற்பகுதி சதுரமாகவும் - நடுப்பகுதி எட்டு பட்டைக் கொண்டதாகவும் விளங்குகிறது. தூண்களில் சதுரமாகிய பகுதியில் மலர்ந்த தாமரை போன்று வேலைப்பாடு கண்ணைக் கவருகிறது.
கருவறை வாயிலில் துவார பாலகர் சிற்பங்கள் அமைந்துள்ளன. மேலும் கருவறையின் வாசற்படி அரை சந்திர வடிவத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கருவறையில் பின்புறச் சுவரில் வண்ண ஓவியம் தீட்டப்பட்டிருந்தற்கான அடையாளங்கள் காணப்படுவதால், இங்கு வழிபாட்டில் இருந்த திருமாலின் வடிவம் இக்குகைக் கோயிலில் வண்ண ஓவியமாக தீட்டப்பட்டு விளங்கியிருக்க வேண்டும் என அறிஞர்கள் கருதுகின்றனர். அதற்கு வழிபாடுகளும் நடைபெற்றிருக்க வேண்டும். இவ்வரிய பல்லவர் கால கலைக்காவியம் மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையால் பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது.
மகேந்திரவாடி குகைக்கோயில் அருகே ஒரு பாறையில் வடிக்கப்பட்ட பிள்ளையார் சிற்பமும் வழிபடப் பெறுவதைக் காணலாம். பல்லவர் கால கலைச் சிறப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக பல்லவர் கால கலைச் சிறப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் மகேந்திரவாடி குடைவரைக் கோயிலைக் கண்டு மகிழ்ச்சி அடைவோம்! பெருமை கொள்வோம்!

கட்டுரையாளர் : தொல்லியல் துறை (ஓய்வு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com