என்றும் இருப்பவர்கள்! 33

"நான், ஜெயகாந்தன் எல்லாம் எழுத ஆரம்பித்ததும் க.நா.சு தான் எங்களைப் பற்றி முதலில் எழுதினார்.

"நான், ஜெயகாந்தன் எல்லாம் எழுத ஆரம்பித்ததும் க.நா.சு தான் எங்களைப் பற்றி முதலில் எழுதினார். ஜெயகாந்தன் பின்னாட்களில் அவருடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாமல் பல விஷயங்கள் எழுதியிருக்கிறார், என்றாலும் ஆரம்பத்தில் க.நா.சு சொன்னவற்றால் ரொம்ப உற்சாகம் அடைந்தார் என்பது தான் என் எண்ணம், நானும் ரொம்ப உற்சாகம் அடைந்தேன்.''
 - சுந்தர ராமசாமி

2003-ஆம் ஆண்டில் புதுதில்லியில் கீதா தர்மராஜன் என்ற தமிழ்நாட்டுப் பெண்மணி கதா அறக்கட்டளைச் சார்பாக இரண்டு நாள்கள் இலக்கிய கருத்தரங்கு இந்தியா இண்டர்நேஷனில் நடத்தினார். தமிழ்நாட்டில் இருந்து பல எழுத்தாளர் அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் அசோகமித்ரன், பி.ஏ. கிருஷ்ணன் ஆகியோருடன் நானும் இருந்தேன்.
 டிசம்பர் மாதம் புதுதில்லியில் நல்ல குளிர். பனியும் பொழிந்து கொண்டிருந்தது. பகலில் வெயில் அடித்தது. இலக்கிய விழா நன்றாகவே நடந்து கொண்டிருந்தது.
 இரண்டாவது நாள், கடைசி நிகழ்ச்சியாக சுந்தர ராமசாமியின் வாழ்நாள் சாதனை அங்கீகரித்து பாராட்டும் விதமாக அவருக்கு "கதா சூடாமணி விருது' வழங்கப்பட்டது. அவர் பனி குளிருக்கு அடக்கமான கோட்டணிந்து கொண்டு, தலையில் கம்பளி குல்லா போட்டுக் கொண்டு விருதைப் பெற்றுக் கொண்டார். பின்னர் உரையாற்றினார்.
 சுந்தர ராமசாமி இந்திய தலைநகரான புதுதில்லியில் பெற்ற பெரிய இலக்கிய விருது கதா சூடாமணி விருதுதான். அப்பொழுது அவருக்கு எழுபத்திரண்டு வயதாகி இருந்தது.
 அவர் தில்லியில் சாகித்ய அகாதெமி விருது பெறுவார் என்று தமிழ்நாட்டில் பலரும் எதிர்பார்த்தார்கள். பல முறைகள் அவர் பெயர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டும் கடைசியில் விருது கிடைக்காமல் போய்க் கொண்டே இருந்தது. அவர் சாகித்ய அகாதெமி விருது பெற முற்றிலும் தகுதி வாய்ந்தவர் தான். ஆனால் இலக்கியம் அல்லாத காரணங்களுக்காகத் தமிழ் மொழிக்காக விருதுக்குப் படைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் குழு அவரைத் தள்ளி வைத்துக்கொண்டே வந்தது. அது கண்டு அவர் கோபம் கொண்டார். சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு சவால் இட்டார்.
 ""சாகித்ய அகாதெமி பரிசு ஒரு சாதாரண சின்ன பரிசு. அதை பெறுவதற்கே இங்கே ஜனாதிபதியின் சிபாரிசு தேவைப்படுகிறது. பரிசு பெற்ற படைப்பாளிகளைக் கேட்கிறேன், ""துணிச்சல் இருந்தால் வெளியில் வந்து சொல்லுங்கள். எந்த சிபாரிசும் இல்லாமல் பரிசு பெற்றேனென்று. சிபாரிசால் பரிசு பெறும் எழுத்தாளனுக்கு உண்மையில் ஆத்ம சந்தோஷம் இருக்குமா?''
 பரிசுகள், விருதுகள் பற்றி எல்லா மொழிகளிலும் கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. அந்த விமர்சனத்தின் அடிப்படை நோக்கம் சரியான படைப்பு ; அசலான எழுத்தாளர் கெளரவம் அடைய வேண்டும் என்பது தான்.
 தமிழ்நாட்டில் சாகித்ய அகாதெமி விருது தமிழக அரசின் பரிசுகள் பெறாமல் சிறப்பான எழுத்தாளர் என்று கொண்டாடப்பட்டு வருகிறவர் சுந்தர ராமசாமி.
 அவர் 1931-ஆம் ஆண்டில் நாகர்கோவிலுக்கு அருகே உள்ள தழுவிய மகாதேவர் கோயில் என்னும் சிற்றூரில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தார்.
 நாகர்கோவிலை உள்ளடக்கிய கன்னியாகுமரி மாவட்டம், மலையாள மொழி பேசப்படும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்தது. அவர் தந்தை எஸ்.ஆர். சுந்தரம் ஐயர் கோட்டயத்தில் தொழில் புரிந்தார். எனவே சுந்தர ராமசாமி ஆரம்பப் பள்ளிப்படிப்பு என்பது மலையாளமாக இருந்தது.
 அவர் குடும்பம் நாகர்கோவிலுக்குக் குடிபெயர்ந்து வந்தது. தமிழ்ப் படிக்க ஆரம்பித்தார். பத்து வயதில் வாத நோயால் பாதிக்கப்பட்டார். எனவே பள்ளிக்கூடம் செல்ல முடியவில்லை. வீட்டிலேயே தமிழ், ஆங்கில மொழிகள் படித்தார் அவர் தாயார் தங்கம்மாள், தமிழ் நவீன உரை நடை எழுத்தாளர்களான புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி சி.சு. செல்லப்பா சிறுகதைகளைப் படித்துக் காட்டினார். அவர் மனம் கதைகளைப் பிடித்துக் கொண்டு விட்டது. கதை படிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வம் கொண்டார். அவருக்குப் புதுமைப்பித்தன் மிகவும் பிடித்தமான எழுத்தாளராகிவிட்டார். எனவே தன் இருபதாவது வயதில் புதுமைப்பித்தன் நினைவு மலர் ஒன்றைக் கொண்டு வந்தார். அதில் "முதலும், முடிவும்' என்ற அவரது சிறுகதை வெளிவந்தது. அது தான் அவரின் முதல் சிறுகதை. பின்னர் அவருக்கு சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது.
 முற்போக்குவாதியும், தீவிரமான இலக்கிய ஆசிரியருமான தொ.மு.சி. ரகுநாதன் "சாந்தி' என்ற பத்திரிகை ஒன்றை நடத்தி வந்தார். சாந்தி வெகுஜன பத்திரிகையின் கதைகளுக்கு எதிரான சிறுகதைகளை வெளியிட்டு வந்தது. அது தனக்கான பத்திரிகை என்று கருதினார். அதற்கு "தண்ணீர்' என்ற சிறுகதையை அனுப்பினார். 1952-ஆம் ஆண்டில் சாந்தியில் தண்ணீர் வெளிவந்தது. அப்போது அவருக்கு இருபத்தொரு வயதாகி இருந்தது. முற்போக்கு இலக்கியவாதிகள் சுந்தர ராமசாமியை அடையானம் கண்டு கொண்டார்கள். 1954-ஆம் ஆண்டில் திருமணமாயிற்று. மனைவியின் பெயர் கமலா.
 மலையாள மொழியின் நவீன அடையாளமாக தகழி சிவசங்கரன் பிள்ளை மாறி வந்து கொண்டிருந்தார். அவரின் முற்போக்கு மனிதாபிமான நாவல் "தோட்டியின் மகன்'. அதற்கு வேறு சிபாரிசு தேவையில்லை. சுந்தர ராமசாமி "தோட்டியின் மகன்' நாவலை மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். அதுதான் அவரின் முதல் நாவல் மொழி பெயர்ப்பு. அவர் இருபத்திரண்டு வயதில் மொழி பெயர்த்த நாவல் 1957-ஆம் ஆண்டில் விஜய பாஸ்கரனின் சரஸ்வதியில் தொடராக வெளியிடப்பட்டது. தகழி தோட்டியின் மகனை 1947-ஆம் ஆண்டில் எழுதினார். எழுதப்பட்ட அசலான நாவலுக்குக் காலம் என்பது இல்லை.
 1959-ஆம் ஆண்டில் சுந்தர ராமசாமியின் முதல் சிறுகதைத் தொகுப்பான "அக்கரைச் சீமையில்' வெளிவந்தது. தத்துவத்தையும் அதன் அடிப்படையிலான அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் சொல்லும் கதைகள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு முற்போக்கு, இடதுசாரி கம்யூனிஸ்டுகளால் அதிகமாக வரவேற்கப்பட்டது. அவருக்கு தொ.மு.சி.ரகுநாதன், சரஸ்வதி ஆசிரியர் விஜய பாஸ்கரனோடு இலக்கிய ரீதியிலும், நட்பு முறையிலும் நல்லுறவு இருந்தது. விஜயபாஸ்கரன், சரஸ்வதியில் சிறுகதைகள் எழுதி வந்தவர். "வேப்பமரம்' என்ற நாவலை 1950-ஆம் ஆண்டில் எழுத ஆரம்பித்தார். ஆனால் தொடர்ந்து எழுத முடியவில்லை. அவர் சிந்தனை ரீதியில் மாறிவிட்டார். குடும்ப நெருக்கடிகளாலும் எழுதுவதை விட்டுவிட்டார். சரஸ்வதி பத்திரிகையும் நின்று போய்விட்டது.
 சுந்தர ராமசாமி தான் எழுதிய முதல் நாவலை அப்படியே விடவில்லை. தனியாக எழுதி 1966 -ஆம் ஆண்டில் புத்தகமாக கொண்டு வந்தார். அவர் புதுக்கவிதைகளிலும் ஆர்வங் கொண்டிருந்தார். "எழுத்து' இதழில் "உன் கை நகம்' என்ற புதுக்கவிதை எழுதினார். கவிதைகளை "பசவய்ய' என்ற புனைப் பெயரில் எழுதினார்.
 ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி இருவரும் கவனிப்புக்கு உரிய எழுத்தாளர்கள் என்று க.நா.சுப்ரமணியம் கூறினார். அது அவர்களை உற்சாகமடைய வைத்தது போன்று இலக்கிய ஈடுபாடு கொண்டவர்களையும் படிக்க வைத்தது.
 ஆனால் ஆறாண்டு காலம் எழுதுவதில் இருந்து ஒதுங்கி இருந்த சுந்தர ராமசாமி அதன் பிறகு ஜே.ஜே.சில குறிப்புகள் என்ற நாவல் மூலமாக மறுபிரவேசம் செய்தார். பலர் "ஜே.ஜே சில குறிப்புகள்' நாவலை மிகச்சிறந்த நாவல், புதிய சாரளங்களைத் தமிழில் திறந்து விட்டிருக்கிறது என்று கொண்டாடினார்கள். சிலர் நாவல் சரியாக இல்லை. அவருக்கு மொழி நடை கைவரவில்லை. முறுக்கி முறுக்கி மூளையால் எழுதுகிறார். இலக்கியம் என்பது புத்திசாலித்தனம் இல்லை என்று விமர்சனம் எழுதினர்.
 அவர் மனதளவில் காயப்பட்டுப் போனார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அவர் இலக்கிய அக்கறை குன்றவே இல்லை. நாவல்கள், சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள், புதுக்கவிதைகள் எழுதியபடிய இருந்தார். அவருக்குப் பல ஊர்களிலும் இலக்கிய நண்பர்கள் இருந்தார்கள். சிலர் அவரைத் தேடிச் சென்றர். அப்படிப்பட்டவர்களில் முக்கியமானவர் சென்னையில் வாழ்ந்த க.நா.சுப்ரமணியம். அவர்சுந்தர ராமசாமி எழுத்துகள் மீதும் இலக்கிய அபிப்பிராயங்கள் மீதும் பெரும் மதிப்பும் கொண்டிருந்தார். 1970-ஆம் ஆண்டில் சென்னை வாலாஜா சாலையில் இருந்த க.நா.சுப்ரமணியம் வீட்டில் தான் சுந்தர ராமசாமியைப் பார்த்தேன்.
 "என்னை சுந்தர ராமசாமிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். "கசடதபற' ஆள். சிறுகதைகள், நாவல் எழுதியிருக்கிறார்'' என்றார். சுந்தர ராமசாமி என்னை நிமிர்ந்து பார்த்து லேசாக முறுவலித்தார். அது தெரியும் என்பது போலப்பட்டது. ஆனால், அவர் ஒன்றும் பேசவில்லை. க.நா.சுப்ரமணியம் தமிழ், கன்னட, மலையாள இலக்கியங்கள், இலக்கிய ஆசிரியர்கள் பற்றியும் பேச ஆரம்பித்தார். அவர் தில்லியில் சில ஆண்டுகள் வசித்துவிட்டு வந்திருந்தார். "வங்காளிகள் தாகூரை வைத்துக் கொண்டு வீண் ஜம்பம் அடித்துக் கொள்கிறார்கள். அது தில்லியில் நன்றாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது. விரைவில் இந்தியா முழுவதற்கும் தெரிந்துவிடும்' என்றார்.
 அவர்கள் வெகு நேரமாகப் பேசிக்கொண்டு இருந்திருப்பார்கள் போலும். எனவே காபி சாப்பிட என்னையும் அழைத்துக் கொண்டு டிரைவ் இன் ஓட்டலுக்குச் சென்றார்கள். மசால் தோசை சாப்பிட்டுவிட்டு காபி சாப்பிட்டோம்.
 சுந்தர ராமசாமி தான் பேசுவதை விட, இன்னொருவர் பேசுவதை காது கொடுத்து கேட்கக்கூடியவராக இருந்தார். இடையில் புகுந்து பேசக் கூடியவராக இல்லை. நான் ஏழெட்டு முறை சென்னை, மைசூர், தில்லியில் சந்தித்ததிலிருந்து தெரிந்து கொண்டது. அவர் மகிழ்ச்சிகரமான மனிதராகவே இருந்தார். அவருடைய ஒரே மகள் கேன்சர் கண்டு காலமான பின்னர் சென்னையில் சந்தித்தேன். அப்பொழுது பேசும் நிலையிலோ கேட்கும் நிலையிலோ அவர் இல்லை. அவரை நான் சந்தித்த போது அவர் மிகுந்க வருத்தமுடன் இருந்துதான் தெரிந்தது.அவர் எனக்குப் படிக்கவென்று ராமகிருஷ்ண பரமஹம்சரின் இல்லசீடர் மகேந்திர குமார் டைரியைப் படிக்க சிபாரிசு செய்தார். கூடவே "தமிழ் வேண்டாம். ஆங்கிலம் படியுங்கள்'' என்றார்.
 அவருக்கு உற்ற நண்பர் என்றால் கிருஷ்ணன் நம்பிதான். அவரின் "நீலக்கடல்' சிறுகதைத் தொகுப்பைப் படித்தீர்களா என்று கேட்டார். ஆனால் அவர் ஒருபொழுதும் தன் படைப்புகளை படித்திருக்கிறீர்களா என்று கேட்டது இல்லை. ஆனால் அவர் க.நா.சுப்ரமணியம் புதுமைப்பித்தன், மெளனி, கு.அழகிரிசாமி, சி.சு.செல்லப்பா பற்றிப் பேசக் கூடியவராக இருந்தார். தி.ஜானகிராமன் படைப்புகள் அவரை வசீகரித்திருந்தன.
 அவரை படைப்பு எழுத்தாளர், இலக்கியப் பிரசரகர் என்றே குறிப்பிட வேண்டும். அவருக்குத் தன் இலக்கியப்படிப்பு மீதும் அவை பற்றி சொல்லும் கருத்துகள் மீதும் அதிகமான நம்பிக்கை இருந்தது.
 பிரபல சினிமா ஆர்ட் டைரக்டரான பி.கிருஷ்ணமூர்த்தி ஜி.வி.ஐயரிடம் உருவானவர். ஐயர் படங்களிலும், மலையாள படங்களிலும் கலை இயக்குநராகப் பணியாற்றி தேசிய விருது பெற்றவர். அவருக்கு சுந்தர ராமசாமியின் "ஒரு புளிய மரத்தின் கதை'யை, தேசிய திரைப்பட வளர்ச்சி வாரியத்தின் உதவியால் படம் எடுக்க வேண்டுமென்று விருப்பம் இருந்தது. அவர் சுந்தர ராமசாமியிடம் உரிமை வாங்கிக் கொண்டு திரைப்படம் எடுக்க விண்ணப்பித்தார். சில ஆண்டுகள் அதே வேலையாக கிருஷ்ணமூர்த்தி அலைந்தார். ஆனால்" ஒரு புளிய மரத்தின் கதை' சினிமா படமாக வரவில்லை.
 ஓர் எழுத்தாளன் படைப்பு சினிமா படமாவதும் மொழி பெயர்க்கப்படுவதும் அவர் சம்பந்தப்பட்ட காரியமல்ல. அவற்றில் ஈடுபாடு கொண்ட யார் யாரோ செய்வது. எழுத்தாளர் ஒரே பணி எழுதுவது தான். உனக்கு உகந்ததாகப்படுவதை தனக்கு உகந்த முறையில் எழுதுவதுதான். அதைத்தான் சுந்தரராமசாமி செய்து வந்தார்.
 சாகித்ய அகாதெமிக்காக தகழி சிவசங்கரன் பிள்ளையின் "செம்மீன்' நாவலை மொழி பெயர்த்தார். அது தான் அதிகமாகப் படிக்கப்படும் மலையாள நாவல் அதற்கு சுந்தர ராமசாமி மொழி பெயர்ப்புதான் காரணம். மொழி பெயர்ப்பு நாவல்.கள், சிறுகதைகள் பற்றி எத்தனைத்தான் உயர்வாகச் சொல்லப்பட்டாலும், தானே படித்து விமர்சனம் செய்ய மொழி பெயர்ப்புளே காரணமாகின்றன.
 நவீன தமிழ் எழுத்தாளர்களில் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் எழுத்தாளர் சுந்தர ராமசாமிதான். அவரது "ஒரு புளிய மரத்தின் கதை' ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, ஐரோப்பிய மொழியான ஹீப்ருவிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
 இலக்கியத்தில் அவர் திறந்த மனம் கொண்டவர். தனக்குப் பிடித்த அசலான எழுத்தாளர்கள் பற்றிய நினைவுகளை நினைவோடை என்ற தலைப்பில் மனதில் தோன்றிய முறையில் பதிவு செய்து உள்ளார். அதில் அரசியல் இல்லை. சொந்த விருப்பம் கிடையாது. அவர் நினைவோடைகள் பல எழுத்தாளர்கள் தங்களுக்குப் பிரியமானவர்கள் பற்றி யோசிக்கவும், எழுதவும் வைப்பது தான்.
 அவர் நினைவோடையில் க.நா.சுப்ரமணியம், மெளனி, கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், தொ.மு.சி.ரகுநாதன், பிரமிள், கிருஷ்ணன் நம்பி எல்லோரும் இடம் பெற்று இருக்கிறார்கள்.
 சுந்தர ராமசாமி ஒரு செயற்பாட்டாளர். தான் எழுதி பெயர், விருது பெற வேண்டும் என்று மட்டும் இருந்தவர் கிடையாது. தமிழ்நாட்டில் செழிப்பான இலக்கியச்சூழல் ஏற்பட வேண்டும்; தரமான படைப்புகள் எழுதப்படவேண்டும்; அவை வாசிக்கப்பட்டு பொது அங்கீகாரம் பெற வேண்டும் என்று விரும்பியவர். அதற்காக அவர் இலக்கியக் கட்டுரைகள் எழுதினார்; இலக்கியக் கூட்டங்களில் பேசினார்.
 ஒரு சமயத்தில் அவை மட்டும் காணாது என்று கருதி 1988-ஆம் ஆண்டில் காலச்சுவடு- என்ற இலக்கியக் காலாண்டு இதழைத் தொடங்கினார். ஆனால் தொடர்ந்து அவரால் நடத்த முடியவில்லை. நிறுத்திவிட்டார். அவர் மகன் கண்ணன் எடுத்து நடத்துகிறார்.
 2003-ஆம் ஆண்டில் நான் ஐம்பதாண்டு தமிழ்ச் சிறுகதைகள் என்று ஒரு தொகுப்பு நூலைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்து கொண்டு இருந்தேன். சிலரிடம் அனுமதி கேட்கவில்லை. சிலரிடம் கடிதம் எழுதி அனுமதி கேட்டேன். பலரிடம் வாய்மொழியாகவே அனுமதி கோரினேன். பலரும் அனுமதி வழங்கினார்கள்.
 "கதா சூடாமணி விருது' வழங்கும் நிகழ்ச்சி முடிந்த பிறகு "ஆயாராம் சோயாராம்' என்ற சிறுகதையை ஐம்பதாண்டு தமிழ்ச் சிறுகதைகள் என்ற தொகுப்பில் சேர்க்க அனுமதி கேட்டேன்.
 "பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' என்றார்
 "கடிதம் எழுத வேண்டுமா?''
 "எதற்குக் கடிதம். நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' என்றார்.
 "உங்கள் அப்பா பெயரை எப்படி எழுதுவது? ''
 "எஸ்.ஆர். சுந்தரம் ஐயர் என்றே எழுதுங்கள்'' என்றார்.
 கதா சூடாமணி விருது விழா முடிந்ததும் அடுத்த நாள் சாகித்ய அகாதெமி கலையரங்களில், "நானும் என் எழுத்தும்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அவர் எந்தக் காரியத்தையும் ஒழுங்காக, அதுவும் இலக்கியம் சம்பந்தப்பட்டது பதிவு செய்யப்பட வேண்டுமென்று நினைக்கிறவர். அவர் உரை தமிழில் இருந்தது. அது அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது. என்ன அச்சிடப்பட்டிருந்ததோ அதையே பேசினார்.
 1988-ஆம் ஆண்டில் மலையாள கவி குமரன் ஆசான் விருதும். 2001-ஆம் ஆண்டில் ஈழத்தமிழர்கள் தமிழ் ஆளுமைகளுக்கு கனடாவில் இருந்து வழங்கும் வாழ்நாள் சாதனை இயல் விருதும் அவருக்கு வழங்கப்பட்டன.
 அவருக்கு இலக்கியப் பரிசுகள் மீது குறிப்பாகத் தமிழ் மொழிக்கு வழங்கப்படும் விருதுகள் மீது கோபம். அது தனக்கு வழங்கப்படவில்லை என்பதால் ஏற்பட்டதில்லை. அசலான, முதல் தரமான எழுத்தாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதாலும், தர மற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதாலும் ஏற்பட்டது.
 1998-ஆம் ஆண்டில் எனக்கு "விசாரணைக் கமிஷன்' நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது வழங்கப்படுவதாக தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டது. காலையில் சில எழுத்தாளர்கள் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்தார்கள். அவர்களில் நான் மதிக்கும் சுந்தர ராமசாமியும் இருந்தார். அவர் சொன்னார்: "நல்வாழ்த்துகள் கந்தசாமி, க.நா.சுப்ரமணியம் இருந்தால் நீங்கள் சாகித்ய அகாதெமி விருது பெறுவதைக் கண்டு ரொம்ப சந்தோஷப்படுவார்' என்று.
 அவருக்கு அறுபத்தேழு வயதாகியிருந்தது. நாவல்கள், சிறுகதைகள், புதுக்கவிதைகள், மொழி பெயர்ப்புகள், இலக்கியக்கட்டுரைகள் என்று பலவும் தரமாகவே எழுதி பெயர் பெற்று இருந்தார். அவருக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கும். வாழ்த்துச் சொல்ல ஒரு சந்தர்ப்பம் வருமென்றே இருந்தேன். ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. 2005-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் காலமாகிவிட்டார்.
 சுந்தர ராமசாமி இல்லாமல் போனவர் இல்லை; தமிழ் இலக்கியப் பரப்பில் என்றும் இருக்கிறவர்.

(அடுத்த இதழில் பாலு மகேந்திரா)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com