சமூக பிரச்னைதான் கதை!

ஒரு விஷயத்தைக் காப்பதற்காக ஒருவன் என்னென்ன செய்கிறான்; படத்தோட கதாநாயகன் எதைக் காப்பாற்ற முனைகிறான்....
சமூக பிரச்னைதான் கதை!

ஒரு விஷயத்தைக் காப்பதற்காக ஒருவன் என்னென்ன செய்கிறான்; படத்தோட கதாநாயகன் எதைக் காப்பாற்ற முனைகிறான்.... இதுதான் "காப்பான்.' அமைதியாக பேச ஆரம்பிக்கிறார் இயக்குநர் கே.வி. ஆனந்த்.
 "அயன்', "மாற்றான்' படங்களையடுத்து மூன்றாம் முறையாக சூர்யாவுடன் இணைந்திருக்கிறார். படம் இந்த மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் அவரிடம் பேசியதிலிருந்து..
 "காப்பான்' எப்படி வந்திருக்கிறது...?
 நிறைய விஷயங்களை அழித்துதான் ஒரு விஷயத்தைக் காப்பாற்ற முடியும். அப்படி ஒரு சூழல் இங்கே வருகிறது. இதுதான் முழு படமும். இதில் நாட்டு நடப்பு, பிரச்னை என்று எல்லாம் இருக்கும். அரசியல் துளியளவு கூட இருக்காது.
 மூன்றாவது முறையாக இருவரும் இணைந்திருப்பதால், எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்புக்காக இரண்டு பேருமே உழைத்திருக்கிறோம். ஒரு படத்துக்குள் வந்து விட்டால், அந்தப் படம் நன்றாக வர வேண்டும் என்றுதான் உழைப்போம். அப்படியொரு உழைப்புதான் கொடுத்திருக்கிறேன். அந்த காலக் கட்டத்தில் "அயன்' படத்துக்கு கூட எதிர்மறை விமர்சனம் இருந்தது. ஆனால், அதை தாண்டி படம் ஹிட். அப்படி விமர்சனங்கள் வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. "இப்போது எங்கே போனாலும் சூர்யாவின் ரசிகர்கள் "அயன்' மாதிரி ஒரு படம் கொடுங்க சார்' என்று கைக்குலுக்குவார்கள். சூர்யாவுக்கும் அப்படியொரு எண்ணம் இருந்தது. இப்படி சின்ன சின்ன விஷயங்களையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் இந்தப் படத்துக்குள் இருவருமே வந்தோம். விமர்சனங்களைத் தாண்டி இந்தப் படமும் பேசப்படும். இதனால்தான் எந்த விருதையும், மேடையையும் மனசுக்குள் வைத்துக் கொள்வதில்லை. திருப்தியாக வந்திருக்கிற கதை. தயாரிப்பாளருக்கும் பெரும் லாபம் கொடுக்க வேண்டும். அப்படி ஒரு எண்ணத்தில்தான் எல்லோருமே உழைத்திருக்கிறோம்.

ஒரு சமூக பிரச்னையை கொண்டு வருகிறீர்கள்... இதில் என்ன இருக்கும்....?
 நான் ஒரு கதைச் சொல்லி. எங்கோ பயணமாகி வருவேன். டூரிஸ்ட்டுக்கும் டிராவலருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. டூரிஸ்ட்டாக இருந்தால், எங்கே போகிறோம், எப்படி போகிறோம், எங்கே தங்குகிறோம், என்னென்ன பார்க்க போகிறோம். இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் தீர்மானித்துக் கொண்டு போவான். ஆனால், பயணி அப்படி இல்லை. அவன் கையில் திட்டம் இருக்காது. ஃபார்முலா இருக்காது. அவனுக்கு பயணிக்க வேண்டும். ஒரு நாற்காலியில் உட்கார வைத்து அசையாமல் கட்டிப் போட்டாலும் நம் மனசு எங்கேயாவது பயணித்துக் கொண்டே இருக்கும். அப்படி ஒரு பயணம்தான் எனக்கு. நான் எங்கே இருக்கிறேனோ அதுதான் என் அப்போதைய விலாசம். அப்படித்தான் என் கதைகளும். நான் பார்க்கிற காட்சிகளில், சம்பவங்களில் எது என்னை தொடுகிறதோ, அதுதான் என் கதை. எங்கோ விமானத்தில் பார்த்த இரட்டையர்கள் "மாற்றான்' கதைக்குள் இழுத்துப் போனார்கள். அது மாதிரி ஒவ்வொன்றும் ஒரு அனுபவம்.
 முதன் முறையாக உங்கள் படத்தில் மோகன்லால்.... அனுபவம் எப்படி?
 அவர் வேறு மாதிரியான ஆள். அவரை நடிகர் என நான் சொல்ல மாட்டேன். உன்னதமான மனம் கொண்டவர். முதலில் இந்தப் படத்துக்காக அவரை அணுகுவதில் எனக்கு பயம். கதையை கேட்டு விட்டு என்ன சொல்லுவாரோ, என அச்சம். ஒரு நாள் அவரை சந்தித்து கதை சொன்னேன். "கிரேட்... தமிழுக்கு வர இப்படியொரு கதையைத்தான் எதிர்பார்த்திருந்தேன்' என்றார். இந்த கதையின் ஒரு பகுதி அப்போதே வெற்றியடைந்து விட்டது. அனுபவங்கள் மூலமாகவே அவர் எதையும் புரிந்துக் கொள்ள விரும்புகிறார். உணர்வுகள், உறவுகள், கனவுகள், இன்பங்கள், துன்பங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கவும் ரசிக்கவும்தானே வாழ்க்கை. அவர் வாழ்க்கையை அவரே வாழ்ந்து பார்க்கும் தருணங்களை பார்த்திருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றியது மிக முக்கியமான காலக் கட்டம். என் சினிமா வாழ்க்கையின் ஒரு பகுதி நிறைவடைகிறது. நன்றி மோகன்லால் சார்.

சூர்யாவின் கதாபாத்திரம் கதையின் எதிர்மறை அளவுக்கு இருக்கும் என ஒரு பேச்சு இருக்கே....
 சூர்யா எனக்கு எப்போதுமே ஸ்பெஷல். பெர்சனலாக அவருக்கு செய்த வேலையையே திரும்பத் திரும்ப செய்வது பிடிக்காது. புதுசு புதுசா ஏதாவது செய்ய வேண்டும் என்பது அவரது குணம். "நோ பெய்ன்... நோ கெய்ன்' என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். அதற்காக எந்த உழைப்புக்கும் எப்போதுமே தயாராக இருக்கிறார். அதற்கு "காப்பான்' ஒரு நல்ல உதாரணம். இப்போதைக்கு இவ்வளவுதான் பேச முடியும்.சூர்யாவுடன் ஆர்யாவும் இருக்கிறார்.பொமன் இரானி, சாயிஷா, இடைவெளிக்குப் பின் ஹாரீஸ் ஜெயராஜ்... எல்லாமே புது பேக்கேஜ். இது வேறு ஒரு அனுபவமாக உங்களை வந்து சேரும்.
 ஏற்ற இறக்கங்கள்... எந்த மாதிரியான உணர்வை கொடுக்கும்...
 என் இடமும் நிரந்தரம் கிடையாது. அதே நேரம், மற்றவர்கள் இடமும் அப்படிதான். இருக்கிற வாய்ப்பைக் கவனமாப் பயன்படுத்திக் கொள்வதில்தான் சாமர்த்தியம். எனக்குப் பிடித்ததை மட்டும் இங்கே செய்ய முடியாது. அஜித்தின் "நேர் கொண்ட பார்வை' வேறு விதமாக இருந்தது. பார்த்தவர்கள் எல்லாம் அஜித்தை பாராட்டிக் கொண்டே இருந்தார்கள். இமேஜ் பற்றி கவலைக் கொள்ளாத நடிகர். . அவரைவிட அந்த கேரக்டரை யார் பண்ணி இருந்தாலும் இந்த அளவுக்கு ரீச் கிடைத்து இருக்காது. அது மாதிரி ஈஸியாப் படம் செய்ய நடிகர்கள் வர வேண்டும். எல்லோருக்கும் ஒரு லைன் இருக்கிறது. களம் இருக்கிறது. இதில் இங்கே போட்டி வந்தது? கதை சொல்வது மட்டுமே பெரிய விஷயம் இல்லை. அதை நடைமுறைப்படுத்தி எடுப்பதுதான் சாதனை. யாரையும் நான் வலுக்கட்டாயமாக தவிர்க்கவில்லை. புது நடிகர்கள் யாரும் என் வீட்டுப் பக்கமே வராதீங்க... என்று நான் சொல்லவில்லை. சினிமாவில் எங்கே ஹிட் கிடைக்கும் என யாருக்கும் தெரியாது.
 -ஜி. அசோக்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com