தளவானூர் சத்ருமல்லேசுவரம்

செஞ்சி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் சுமார் 16 கி.மீ. தொலைவில், பிரியும் கிளைச் சாலையில் சென்றால் அழகிய தளவானூர் குடைவரைக் கோயிலைக் கண்டு மகிழலாம்.
தளவானூர் சத்ருமல்லேசுவரம்

செஞ்சி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் சுமார் 16 கி.மீ. தொலைவில், பிரியும் கிளைச் சாலையில் சென்றால் அழகிய தளவானூர் குடைவரைக் கோயிலைக் கண்டு மகிழலாம்.
தளவானூர் கிராமத்திற்கு வடக்கே உள்ள ஒரு குன்றின் அடிவாரத்தில் இக்குடைவரைக் கோயில் அமைந்திருப்பதைக் கண்டு வியக்கத் தோன்றும்! சுற்றிலும் வயல் வெளிகள். அடுக்கி வைத்தாற் போல குன்றின் மீது பாறைகள். அதன் கீழே கல்லிலே படைத்த காவியமாக இக்குடைவரைக் கோயில் காணப்படுகிறது.
சத்ருமல்லன் : 
இக்கோயில் அமைந்திருக்கும் மலையினை பஞ்சபாண்டவர் மலை என மக்கள் அழைக்கின்றனர். இங்கு காணும் கல்வெட்டில் இக்குடைவரைக் கோயில் "சத்ருமல்லேசுவராலயம்" எனப் பெயரிட்டு குறிக்கப்படுகிறது. "சத்ருமல்லன்" என்பது பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனின் சிறப்புப் பெயர்களில் ஒன்று. எனவே இக்குடைவரைக் கோயில் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டது எனக் கருதப்படுகிறது.
குகைக் கோயிலின் அமைப்பு : 
இக்குடைவரைக் கோயில் முன்மண்டபமும் உள்ளே சிறிய கருவறையும் அமைந்துள்ளது. இருபக்கமும் அழகிய துவாரபாலகர் சிற்பங்கள் செதுக்கி அமைக்கப்பட்டுள்ளன. முன்மண்டபத் தூண்களின் மேற்புறமும் கீழ்புறமும் சதுரமாகவும் இடையில் எண்கோண வடிவமாகவும் அமைக்கப்பட்டு பல்லவர்கால கலைப்படைப்பாய் விளங்குகிறது. தூண்களின் சதுரப்பகுதியில் மலர்ந்த தாமரைப்பூவின் வடிவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 
குடைவரையின் நுழைவு வாயிலின் மேலே கபோத அமைப்பும், அழகிய சிற்ப வேலைப்பாட்டுடன் மகர தோரண அமைப்பும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல்லவர்கால குடைவரைக் கோயில்களில் இங்கு மட்டுமே இத்தகைய மகர தோரணம் காணப்படுவது சிறப்பு.
முக மண்டபத்தை அடுத்து கிழக்கு நோக்கி கருவறை அமைந்துள்ளது. கருவறையில் சிவலிங்கத்திருமேனி காட்சி அளிக்கிறது. கருவறை நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் துவாரபாலகர் சிற்ப வடிவங்கள் காட்சி அளிக்கின்றன.
கல்வெட்டுகள் : 
இக்குடைவரைக் கோயிலில் மூன்று கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மேற்கு அரைத்தூண் அருகில் காணப்படும் பல்லவ கிரந்த எழுத்தில் அமைந்த கல்வெட்டில் இக்குடைவரைக் கோயிலை "நரேந்திரன்" என்னும் சத்ருமல்லன்" என்னும் அரசனால் இம்மலையின் மேலே சத்ருமல்லேசுவராலயம் என்னும் இக்கோயில் அமைக்கப்பட்டதாக கூறுகிறது. 
தண்டாநத நரேந்த்ரேண நரேந்த்ரனைஷ காரித :
ஸத்ருமல்லேண ஸைலேஸ்மின் ஸத்ருமல்லேஸ்வ ராலய:
இரண்டாவது கல்வெட்டு இதே செய்தியை தமிழில் கூறுகிறது:
ஸ்ரீ தொண்டைநய் தார்வேந்தன்
நரேந்திரப் போத்தரையன்
வெண்பேட்டின் றென்பால் மிக 
மகிழ்ந்து கண்டான்
சரமிக்க வெஞ்சிலையான் சத்துரு 
மல்லேஸ்வராலய மென்
நரனுக்கிடமாக வாங்கு"
இப்பாடல் மூலம் மகேந்திரவர்மனுக்கு "நரேந்திரன்' என்ற பெயர் இருந்ததையும், அவன் வில் - அம்பை படைக்கலனாகக் கொண்டிருந்தான் என்பதையும் அறிய முடிகிறது.
மேலும் இக்கல்வெட்டில் வடமொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தளித்த "இவ்வூர் பிரம மங்கலவன் செல்லன் சிவதாசன்" என்பவரைப் பற்றி குறிப்பிடுகிறது.
மூன்றாவது கல்வெட்டு இரண்டாம் நந்திவர்மன் (கி.பி.750) காலத்தைச் சேர்ந்ததாகும். இக்கல்வெட்டிலும் பிரம மங்கலவன் செல்வன் சிவதாசன் பெயர் குறிப்பிடப்படுவது சிறப்பானது.
இக்கோயிலில் காணும் கல்வெட்டுகளில் வரும் நரேந்திரன் என்னும் பெயர் மகேந்திரவர்மனின் சிறப்புப் பெயராகக் கருதப்படுகிறது. பல்லவ அரச வழியினர் பற்றி குறிக்கும் வாயலூர் கல்வெட்டில் இராஜசிம்மனுக்கும் நரேந்திரசிம்மன் என்ற பெயர் குறிக்கப்படுகிறது. மேலும் தளவானூர் குடைவரைக் கோயிலினை கட்டடக்கலை அமைப்பில் கபோதம், மகர தோரணம் போன்ற அமைப்புகள் காணப்படுவதால், இக்கோயில் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டதில்லை எனவும் அறிஞர்கள் கருதுகின்றனர்.
எனினும் குடைவரைக் கோயிலின் அமைப்பினாலும், கலையழகு மிக்கச் சிற்பங்களாலும், தமிழ்க் கல்வெட்டுகள் அளிக்கும் செய்திகளாலும், தளவானூர் சத்ருமல்லேசுவராலயம் - பல்லவர் கால கலைச்சிறப்பினை எடுத்துக்கூறும் வகையில் அமைந்துள்ளது எனலாம். மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையால் போற்றி பாதுகாக்கப்படும் இக்கலைச் செல்வத்தைக் கண்டு மகிழ்ந்து போற்றுவோம்!

கட்டுரையாளர் : தொல்லியல் துறை (ஓய்வு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com