மழைநீர் சேகரிப்பின் மகத்துவங்கள்!

மழைநீர் சேகரிப்பின் மகத்துவங்கள்!

"நீரின்றி அமையாது உலகு' என்று திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீரின் முக்கியத்துவத்தைப் பற்றி "வான்சிறப்பு' அதிகாரத்தில் கூறியுள்ளார்

"நீரின்றி அமையாது உலகு' என்று திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீரின் முக்கியத்துவத்தைப் பற்றி "வான்சிறப்பு' அதிகாரத்தில் கூறியுள்ளார். இவ்வதிகாரத்தைக் கடவுள் வாழ்த்துக்குப் பிறகு இரண்டாவது அதிகாரமாக அவர் அமைத்திருப்பதிலிருந்து அவர் நீர் மற்றும் மழைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்று உணர முடிகிறது என பேச ஆரம்பிக்கிறார் சேகர் ராகவன். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை பேராசிரியராக பணியாற்றியவர். மேலும் சென்னை பெசன்ட் நகரில் செயல்படும் மழை இல்லத்தின் இயக்குநர் . 
தண்ணீரைப் பொருத்தவரை நகர்ப்புறங்களில் இப்போதைய நிலை என்ன?
இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் வெள்ள அபாயமும், கோடைகாலங்களில் தண்ணீர் பற்றாக்குறையும் பார்க்க முடிகிறது. இதற்கு சென்னை ஒரு விதிவிலக்கல்ல இதற்கான முக்கியக் காரணங்கள்.
சென்னையில் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வரை பல குளங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. நீராதாரங்களைப் பற்றி தெருக்களின் பெயர்கள் மூலமாகத்தான் அறிந்து கொள்ள முடிகிறது. இது நாளடைவில் குப்பையைக் கொட்டி மூடப்பட்டு அதில் ஏதேனும் கட்டடம் எழுப்பப்பட்டு விட்டது. இதனால் மழைநீர் நிலத்திற்கு மேலேயே தேங்கி நின்று வெள்ள அபாயத்தை ஏற்படுத்துகிறது.
குடியிருப்புகளில் இருக்கும் திறந்தவெளிகளைச் சிமெண்டால் மூடுவதனாலும் சாலையின் இருபுறங்களிலும் திறந்த வெளிகள் விடாமல் தார் போட்டு மூடுவதனாலும் மழைநீர் பூமிக்குள் ஊடுருவிச் செல்ல முடியாமல் தெருக்களில் வெள்ள அபாயத்தை ஏற்படுத்துகிறது.
கோடைகாலங்களில் தண்ணீர் பற்றாக்குறை வருவதற்கான காரணங்கள்?
நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டு வருவது. இதனால் தண்ணீர் தேவையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆனால், மழையின் மூலம் கிடைக்கும் நீரின் அளவோ அதிகரிப்பதில்லை. 
* மக்களுக்கு தண்ணீரைப் பற்றிய மெத்தனமான போக்கு.
* நிலத்தடிநீர் மழைநீரிலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாதது.
* சென்னை மற்றும் தமிழ் நாட்டில் உள்ள இதர நகரங்களைச் சுற்றியுள்ள நீர் நிலைகளைச் சரிவரப் பராமரிக்காதது.
* மழைநீரைப் பொதுமக்களும், அரசாங்கமும் சேமிக்க அதிக அளவில் முயற்சி எடுக்காதது.
* தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்க எந்தவித நீண்டகாலத் திட்டத்தையும் வகுக்காதது.
உங்கள் மழை இல்லத்தின் பணிகள் என்ன?
மழைநீர் தெருவுக்கு ஓடித் தெருக்களில் தேங்க ஆரம்பித்தது. மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவம் பற்றி பெசன்ட் நகரில் வாழும் மக்களிடையே ஏற்படுத்த 1995-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு அடுக்குமாடிக் குடியிருப்புக்கும் சென்று ஓர் பயணத்தை மேற்கொண்டேன்.
அமெரிக்காவில் வாழும் ஒரு சில சென்னை வாசிகள் எனக்கு உதவ முன் வந்தனர். அவர்கள் உதவியின் மூலம் "மழை இல்லம்'என்ற ஒரு தகவல் மற்றும் உதவி மையத்தை 2002-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறுவி அதை மறைந்த முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்கள். அன்று முதல் தொடர்ந்து அது இயங்கிக் கொண்டு வருகிறது. இம்மழை இல்லம் இந்தியாவிலேயே முதன்மையானது.
மழைநீர் சேகரிப்புத் திட்டங்களை மக்களுக்கு விளக்குவது, மழைநீர் கட்டமைப்புகளை அமைக்கும் முறைகள் மற்றும் அவற்றிக்கான செலவையும் மதிப்பீட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்வது, மேலும் மழைநீர் கட்டமைப்புகளைத் தனி வீடுகள், அடுக்குமாடிக் கட்டடங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் ஆகிய பலவிடங்களில் அமைத்துக் கொடுப்பது போன்ற செயல்பாடுகளில் இம்மழை இல்லம் கொடுத்து வரும் ஆலோசனைகள் முற்றிலும் இலவசம் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா?
மழைநீர் சேமிப்பைப் பற்றிக் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசிக் கொண்டு வந்திருந்தாலும் அதற்குண்டான முக்கியத்துவத்தை நாம் கொடுக்கத் தவறிவிட்டோம். அதைப் பற்றிய ஒரு பொதுவான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இருந்தாலும், மழைநீர் சேமிப்பை எப்படி சரியாக அமல்படுத்துவது என்பது பற்றிய பல தகவல்கள் இன்றும் மக்கள் மத்தியில் சென்று அடையவில்லை என்பது எங்களுடைய கருத்து. மேலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் சரியாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் இல்லை.
மழைநீர் சேமிப்பு நகர்ப்புறங்களில் வாழும் நம்மில் பலர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இதற்கு ஒரு முக்கிய காரணம் இதை ஆங்கிலத்தில் ஹார்வெஸ்ட்டிங் என்று அழைப்பது தான். இந்த வார்த்தைக்குத் தமிழில் அறுவடை என்று தான் அர்த்தம். அறுவடை என்று சொன்னவுடனேயே நகர்ப்புறமக்கள் இது கிராமப்புறங்களில் தான் செய்யவேண்டிய ஒன்று என்றும், இது நகர்ப்புறங்களில் வாழும் மக்களுக்குத் தேவையில்லை என்றும் நினைத்துக் கொள்கிறார்கள். இது முற்றிலும் தவறான ஒரு கருத்து.
நகர்ப்புறங்களில் வாழும் வேறு சிலர், மழைநீர் சேமிப்பை அரசாங்கம் தான் செய்யவேண்டும். நாம் செய்யத் தேவையில்லை என்று நினைக்கிறார்கள். இந்த கருத்து நூறு வருடங்களுக்கு முன்பு பொருத்தமாக இருந்திருக்கலாம். அக்காலகட்டத்தில் மக்கள் பொது இடங்களில் இருந்த ஊரணிகளில் இருந்தும், கேணிகளிலிருந்தும், தண்ணீரை எடுத்து உபயோகித்து வந்திருப்பார்கள், அவைகளை மழைநீர் சேமிப்பின் மூலம் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தினுடையதாக இருந்திருக்கும். கடந்த 40, 50 ஆண்டுகளாக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு திறந்த அல்லது ஆழ்துளை கிணறு எடுக்கப்படுகிறது. இதைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பில் ஒவ்வொரு வீட்டு சொந்தக் காரரையே சாரும். 
மழைநீர் சேமிப்பு என்றால் மழைநீரை மழை பெய்யும் காலங்களில், பெய்யும் இடங்களிலேயே சேமித்து, மழை பெய்யாத காலங்களில் நம்முடைய நன்னீர் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வது தான்.
மழைநீர் சேமிப்பு இரண்டு வகைப்படும். ஒன்று உடனடித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக சேமிப்பது. இரண்டு, மழைநீரை பூமியில் செலுத்தி நிலத்தடி நீராகச் சேமிப்பது.
இதை கிராமப்புறங்களில் ஒரு விதமாகவும், நகர்ப்புறங்களில் வேறு விதமாகவும் தான் சேமிக்கமுடியும். கிராமப்புறங்களில் திறந்தவெளிகள் அதிகமாக இருப்பதால் ஏரி, குளம், ஊரணி, குட்டை போன்றவைகளில் சேமித்து உடனடித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். மாறாக நகர்ப்புறங்களில் திறந்தவெளிகள் குறைந்து கொண்டு வருவதால் மழைநீரை நிலத்தடி நீராக மட்டுமே சேமிக்க வாய்ப்பிருக்கிறது. நகர்ப்புறங்களில் உடனடித் தேவைக்கு வேண்டுமென்றால் நிலத்தடிநீர்த் தொட்டியில், மொட்டைமாடியில் பெய்யும் மழைநீரை சேமிக்கலாம். 
-ராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com