Enable Javscript for better performance
அண்ணலுடன் எனது நினைவுகள்!- Dinamani

சுடச்சுட

  
  sk5

  ஏழைகளுக்கு உதவுவதே உயர்வு! - எஸ்.ஏ. பழனியம்மாள்
   மறைந்த எனது கணவர் எஸ்.ஏ சுப்பிரமணியம் மிக சிறுவயதிலேயே சூலூருக்கு காந்திஜி வந்த போது ஐந்து ரூபாய் கொடுத்து அவருடன் பேசியவர். அது முதற்கொண்டு காந்திய வழிப்படியே வாழ்ந்தவர். தினமணி அறிவிப்புக்கு இணங்க எனது கணவரின் டயரியில் எழுதி வைத்தபடி உங்களுக்கு அனுப்பியுள்ளேன் என்று குறிப்பிடும் எஸ்.ஏ பழனியம்மாளும் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்.
   எஸ்.ஏ சுப்பிரமணியத்தின் நாட்குறிப்பு (2011):
   1934-ஆம் ஆண்டு எனது பள்ளிப் பருவத்தில் காந்தியடிகளை நேரில் சந்திக்கும் பொன்னான வாய்ப்பினைப் பெற்றேன்.
   என் தந்தையார் காந்தியடிகளிடம் மிகுந்த பற்றும், மதிப்பும் கொண்டவர். காந்தியடிகளைப் பற்றியும், சுதந்திரப் போராட்டத்தில் அவர் கடைப்பிடித்த அகிம்சை நெறியைப் பற்றியும் அடிக்கடி என்னிடம் கூறுவார். அது பள்ளி மாணவனாகிய என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிட்டது. எனவே காந்தியடிகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் என் மனதில் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. அதற்கேற்றார் போல் காந்தியடிகள் சூலூர் வருகிறார் என்ற இனிய செய்தியை அறிந்து அவரைச் சந்திக்க வேண்டும் என்றும் அவருடன் பேசிவிட வேண்டும் என்றும் முடிவு செய்தேன்.

  என்னுடன் படித்த மாணவர்கள் ஆறுபேருடன் சேர்ந்து கஷ்டப்பட்டு ஐந்து ரூபாய் சேர்த்தேன். அதனை காந்தியடிகளிடம் வழங்கக் காத்திருந்தேன். காந்தியடிகளைக் காண்பதற்காக சாலையின் இருபுறமும் ஆண்களும், பெண்களும் திரண்டிருந்தனர். நான் அவர் வரும் வழியை பார்த்திருந்தேன். அந்த நேரமும் வந்தது. காந்தியடிகள் கரங்களைக் கூப்பியவாறு நடந்து வந்தார். சட்டை அணியாத மெலிந்த உடல். நீண்ட கைகள், வேகமான நடை, காண்பவரைக் கவர்ந்திழுக்கும் காந்தப்பார்வை. என் மனம் படபடத்தது. நான் அவரை நெருங்கினேன். தயாராக வைத்திருந்த ஐந்து ரூபாயை இரு கரங்களால் நீட்டினேன். புன்சிரிப்போடு பெற்றுக் கொண்டு" நன்றி' எனக் கூறினார்.
   அவரிடம்" உயர்வு என்றால் என்ன?' என்று கேட்டேன். அதற்கு அவர் "சமூகத்தில் கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவுவதே' என்றார். அவர் வார்த்தைகைளை கேட்ட பின், ஏழை எளிய மாணவ மாணவியருக்கு உதவுவதையே என் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டேன். "அருந்தவப்பசு' என்ற அறக்கட்டளையைத் தொடங்கினேன். நான் ஓய்வு பெற்ற போது எனக்கு கிடைத்த பணப்பலன் ஒரு லட்சம் ரூபாயை அதில் முதலீடு செய்தேன். மாதந்தோறும் எனக்கு வந்த ஓய்வுதியத்தின் பெரும் பகுதியை அதில் முதலீடு செய்தேன். அத்தோடு எனக்குக் கிடைத்த வீட்டு வாடகையையும் அதில் சேர்த்தேன். இதுவரை 7500 மாணவ மாணவியருக்கு நிதியுதவி வழங்கியுள்ளேன். என்னிடம் உதவி பெற்றவர்கள் மருத்துவர், பொறியாளருக்குப் படித்து பட்டங்களைப் பெற்று வாழ்வின் உயர்ந்த நிலையில் விளங்குகிறார்கள் என்பதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த உயர்ந்த நற்பணிக்கு வித்திட்ட பெருமை காந்தியடிகளையே சாரும்.
   என் வாழ்வின் வழிகாட்டி காந்தி. மனித வடிவில் நான் தரிசித்த தெய்வம். வயது முதுமை காரணமாக எனது உடல் மிகவும் தளர்ந்துவிட்டது. கண் பார்வை மங்கிவிட்டது. ஆனால், காந்தியடிகளின் உருவம் என் மனத்திரையில் மங்காமல் ஒளிவீசிக்கொண்டிருக்கிறது.
   
  காந்திஜிக்கு ஜே!
   இப்போது எனது வயது 79. எனக்கு ஆறு வயது இருக்கும் போது மதுரையில், வடுகக் காவல் கூடத் தெருவில் ஒரு வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்தோம். காந்தியைப் பார்க்கப் போகலாம் என்று அப்பா அழைத்துப் போனார்கள்.
   எனது அண்ணன், தங்கை, மற்றும் நான் உடன் சென்றோம். பிரம்மாண்டமான கூட்டம். மேலமாசி வீதியில் வடக்குப் பகுதியில் என்று நினைவு. எனது தந்தை தோளுக்கு மேல் தூக்கி வைத்துக் காண்பித்தார்கள். தொலைவில் இருந்து பார்த்தாலும் அண்ணலை நன்கு பார்க்க முடிந்தது. "காந்திஜிக்கு ஜே!' என்று கூட்டத்தோடு நாங்களும் ஜே போட்டோம்.
   அண்ணலை தரிசித்த அந்தக்காட்சி இன்னமும் என் மனத்திரையில் அப்படியே பசுமையாக உள்ளது.
   -உமாகல்யாணி,
   தென்காசி

   மாபெரும் பேறு! - ம.மு.விசுவநாதன், மதுரை
   1946 -ஆம் ஆண்டு காந்திஜி மதுரைக்கு வர இருப்பதை அறிந்து அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல். எனவே காந்திஜி வரவிருந்த 2.2.1946 அன்று அவர் பங்கேற்கும் பொதுக் கூட்ட பந்தய மைதானத்திற்கு சைக்களில் சென்றேன். மைதானத்தில் கட்டுக்கடங்காத கூட்டம். நாடு விடுதலைக்கு முன்பு போலீஸ் கெடுபிடி இல்லாததால் மேடைக்கு முடிந்த அளவு நெருங்கிப் போனேன். ஆனால் காந்திஜியை பார்க்க முடியவில்லை.
   அவர் மேடையில் படுத்துவிட்டார் என்று சொன்னார்கள். எனவே வீடு திரும்பினேன். வழியில் அவர் தங்கி இருக்கும் சிவகங்கை அரண்மனை பங்களாவிற்குப் போனால் எப்படியும் பார்த்துவிடலாம் என்று எண்ணி அங்கு போய் சேர்ந்தேன். அங்கும் பார்க்க முடியவில்லை.
   எப்படியும் மறுநாள் பார்த்துவிட வேண்டும் என்பதற்காக காலையிலேயே சிவகங்கை பங்களாவுக்குப் போய்விட்டேன். காந்திஜி ஆலய வழிபாட்டுக்காகப் புறப்பட்டு வரும் பொழுது அருகிலிருந்து நன்றாக தரிசித்தேன். மகாத்மாஜி வெளியில் வந்து காரில் ஏறும் வரை யாரும் எழுந்திருக்க வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே எல்.கிருஷ்ணசாமி பாரதி வந்து கொண்டிருந்தார். ஆனால் நான் காந்திஜி நகர்ந்ததும் உடனே எழுந்து சென்று அவரது திருவடி பட்ட இடத்தில் மண்ணை எடுத்து தலையில் அணிந்து கொண்டேன்.

  மகாத்மாவை மறுபடியும் பார்க்க விருப்பம். ஆலய வழிபாட்டிற்குப் பின் காந்திஜி நகர்வலம் வருவது அறிந்து தெற்கு மாசி வீதியில் மஞ்சனக்கார தெரு சந்திப்பில் போய் மக்களுடன் காத்திருந்தேன். காந்திஜி வந்தார். அரை ஆடையுடன் இருந்த அவரை முன்புறமும், பின்புறமும் நன்றாக ஆவலுடன் பார்த்தேன். அவர் மேல் கதிரவன் ஒளிபட்டு அவரது தேகம் தங்கமாக மின்னியது. அவரது தரிசனம் மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். நம் காலத்து அவதார புருஷர் ஒருவரின் தரிசனம் கிடைத்தது எனது மாபெரும் பேறு.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai