Enable Javscript for better performance
ஹீரோ வாய்ப்பு நானே எதிர்பார்க்காதது !- Dinamani

சுடச்சுட

  
  soori

  சூரியிடம் கொஞ்சம் பேச்சுக் கொடுத்தால், வாழ்வில் வெற்றி என்பது இவ்வளவு துயரமானதா...? என எண்ணிவிடத் தோன்றும்! ஆனாலும், இஷ்டப்பட்டு ஏற்ற கஷ்டம் அது. இலக்கை அடையும் வரை தின வாழ்வின் சுமைகளை ஒரு பொருட்டாகக் கருதாமல் வெற்றிக் கனி பறித்தவரின் சொல்லாத பக்கங்கள் நிறைய இருக்கின்றன... "எங்கேயோ அந்தப் போஸ்டரைப் பார்த்தேன். புலி ஒன்று ஆக்ரோஷமாக மானைத் துரத்தும் படம். "நீ மானாக இருந்தால்,
   புலியைவிட வேகமாக ஓடு. நீ புலியாக இருந்தால், மானைவிட வேகமாக ஓடு...' என்கிற அந்த வரிகள் என்னை பாதித்தது. ஏனென்றால் என் வாழ்க்கையே அதுதான். அன்புக் கரம் கோர்க்கிறார் சூரி!
   20 வருடத்துக்கு மேலான சினிமா அனுபவம், இவ்வளவு படங்கள் திரும்பி பார்க்கும் போது என்ன தோன்றும்....
   வறுமையை ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சினிமாவுக்காக சென்னை புறப்பட்டு வந்தவன் நான். பெரிதாகப் பின்னணி இல்லை. நண்பர் வட்டம் இல்லை. அம்மா கொடுத்த ஆயிரம், நான் கடன் வாங்கி வந்த ஆயிரம். இதுதான் என் மூலதனம். பசியுடன் பணம், பொருள் என தேடி அலைந்த நாள்கள் அது. பெயிண்டிங், ஆர்ட் அசிடெண்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என இப்படிப் பல வேலைகள் பார்த்திருக்கிறேன். தி. நகர் ஜவுளிக் கடைகளுக்கு எல்லாம் ஒரு காலத்தில் பெயிண்ட் அடித்தவன் நான். போத்தீஸ், சரவணா ஸ்டோர்ஸ் என எல்லா கடைகளிலும் கயிற்றில் தொங்கி கொண்டு பெயிண்ட் அடித்திருக்கிறேன். பெயிண்ட் அடித்துக் கொண்டே நான் சொல்லும் காமெடிக்கு அத்தனை ரசிகர்கள்.
   சூரி இருந்தால் பொழுது போறதே தெரியலை... என என்னை வேலைக்கு அழைத்துப் போனவர்கள் பலர். ஒரு கட்டத்தில் சினிமா தாகத்தால் வருமானத்தின் ஒரு பகுதியிலிருந்து வடபழனி பக்கம் நடக்கும் திருவிழாக்களில் நாடகம் போட்டேன். அப்போது நான் போட்ட "இன்னாது கோரிக்கையா' நாடகம் பெரும் பிரபலம். சந்தன கடத்தல் வீரப்பனின் மர்ம சாவு குறித்து அந்த நாடகம் காமெடியாக பேசும். இது மாதிரி நாடகம், பெயிண்டிங் வேலை என்று திரிந்த நாள்கள். அதன் பின் ஆர்ட் அசிடெண்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என ஒரு வழியாக சினிமாவுக்குள் வந்தேன்.
   நிறைய வேலைகள். எல்லாவற்றிலும் கொஞ்ச நாள்களே.... இதுதான் நிரந்தரம் என எந்த இடத்திலும் நின்றது கிடையாது. இப்போது கூட மதுரையில் "அம்மன் ஹோட்டல்' என்ற பெயரில் டீக்கடை, சாப்பாட்டுக் கடை ஆரம்பித்திருக்கிறேன். ஒரு பிடி சோறுக்காக அலைந்து திரிந்தவன் நான். அதனால் மற்றவர்களும் வயிறாற சாப்பிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பித்திருக்கிறேன். தம்பிகள்தான் அதைபார்த்துக் கொள்கிறார்கள். வறுமையை ஜெயிக்க வந்தேன். கொஞ்சம் ஜெயித்திருக்கிறேன். இவ்வளவுதான் என் அனுபவம்.
   
   என் அப்பாதான் எனக்கு ரோல் மாடல் என்பீர்கள்....
   ஆமாம், இதை நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறேன். என் அப்பாதான் நான் முதன் முதலில் பார்த்த பெரிய காமெடியான மனுஷன். பேச ஆரம்பித்தால், அவர் நடைக்கு யாரும் வேகம் காட்ட முடியாது. அத்தனை மடக்கல், நக்கல், நையாண்டி இருக்கும். உங்க அப்பா முத்துச்சாமி அளவுக்கு, யாரும் காமெடி பண்ண முடியாது.. என அவர் செட் ஆள்கள் சொல்ல இப்போதும் நான் கேட்பதுண்டு. என்னுடைய உடல் மொழி, உச்சரிப்பு எல்லாமே அவரிடம் இருந்து வந்ததுதான். இப்போது அவர் என் கூட இல்லை.
   
   முன்பெல்லாம் காமெடிக்கென தனி ட்ராக் இருக்கும்.... இப்போது அப்படியில்லையே....
   அது தமிழ் நகைச்சுவையின் பொற்காலம். ட்ராக் இல்லாமல் காமெடி செய்வது பெரும் கஷ்டம். அதை ஒவ்வொரு சினிமாவிலும் அனுபவித்து வருகிறேன். கவுண்டமணி - செந்தில் கூட்டணியில் வருடத்துக்கு 100 படம் வருமாம். இப்போது அப்படி ஒரு நிலை எந்த காமெடியனுக்கும் இல்லை. உதாரணத்துக்கு, ஒரு ஹீரோ வருடத்துக்கு 5 படம் நடித்தால், காமெடியன் 7 படம்தான் நடிக்க முடிகிறது. ஹீரோ கால்ஷீட் 55 நாள்கள் என்றால், காமெடியனுக்கு 45 நாள்கள். இதில் எங்கேயிருந்து காமெடி டிராக் வைப்பது. அப்போதெல்லாம் ஹீரோவும், காமெடியனும் சந்தித்துக் கொள்ளவே மாட்டார்களாம். காமெடி டிராக் தனியாக எடுக்கப்பட்டு சேர்க்கப்படும். இப்போது அப்படியல்ல. ஹீரோ இருந்தால், அங்கே காமெடியனும் இருந்தாக வேண்டும். ஹீரோவுடன் டான்ஸ் வரைக்கும் ஆட வைத்து விட்டார்கள். ஹீரோ சோகமாக இருந்தால், அங்கே நானும் சோகமாக இருக்க வேண்டும். அவர் ஜாலியாக இருந்தால், நானும் ஜாலியாக இருக்க வேண்டும் இதுதான் இப்போதைய சினிமா. இப்படி கஷ்டப்பட்டு நடிக்கும் படம் நன்றாக இருந்தால்தான் காமெடி எடுபடும். படம் தோல்வி என்றால் காமெடியும் தோல்வி. இப்போது சினிமாவில் இருக்கும் காமெடியன்களுக்கு இது பெரும் சவால்.

  வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கும் செய்தி... யாரும் எதிர்பாராதது...
   நானே எதிர்பார்க்கவில்லை. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் சார்தான் சொன்னார். போய் பார்த்தேன். ஒரு சின்ன லைன் மட்டும்தான் சொன்னார். அதில் அவ்வளவு ஈர்ப்பாக இருந்தது. அவர் ரொம்ப பெரிய இயக்குநர். அவர் படங்கள் மாதிரி சமீபத்தில் யாருமே செய்யவில்லை என நினைக்கிறேன். எல்லாக் காட்சிகளிலும் ஒரு எதார்த்தம் இருக்கும். இப்போது அந்த வாய்ப்பை நானே எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். எல்லாம் சரியாக நடந்தால், நான் அடுத்த தளத்துக்குப் போவேன். இந்தப் படத்தைப் பற்றி அவர்தான் பேச வேண்டும். அதுதான் நல்லது.
   
   அதற்காகத்தான் இந்த சிக்ஸ் பேக் மிரட்டலா.... அப்போ இனி காமெடி...
   அதற்காக நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். வெறும் கஞ்சி மட்டும்தான் குடித்தேன். பழைய சோற்றையும், பச்சை மிளகாயையும் விட்டு விட்டு இருப்பது அவ்வளவு சிரமம். மாற்றம் நன்றாகத்தான் இருக்கிறது. எனக்குக் காமெடிதான் சோறு போடுகிறது. அது இருந்தாலும் சட்டியில் கஞ்சி வேகும். காமெடிதான் கஞ்சி ஊற்றும். ஹீரோவாகப் படம் வந்தால் நடிப்பேன். கண்டிப்பாகக் காமெடியை விட மாட்டேன்.
   
   சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி கூட அடுத்தடுத்துப் படங்களில் நடிக்கிறீங்க...
   சிவகார்த்திகேயன் என் தம்பி. என் குடும்பத்தில் ஒருத்தன். அவனுக்கும் எனக்கும் ஒரு புரிதல் இருக்கிறது. அது நிறையப் படங்களில் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. இப்போது வந்திருக்கிற நம்ம வீட்டுப் பிள்ளை படம் பார்த்தால் உங்களுக்கே அது புரியும். விஜய் சேதுபதி என் மாமா. "சங்கத்தமிழன்' படத்துக்காக உட்கார்ந்து யோசித்து காமெடி காட்சிகள் வைத்திருக்கிறோம். இதுவரைக்கும் நான் பண்ணாத ரோல். நன்றாக இருக்கும்.
   -ஜி. அசோக்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai