பூர்வஜென்ம புண்ணியம்!

என் வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாகவோ - சந்தர்ப்பவசமாகவோ எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
பூர்வஜென்ம புண்ணியம்!

பூர்வஜென்ம புண்ணியம்!

என் வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாகவோ - சந்தர்ப்பவசமாகவோ எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், அண்ணலுடன் எனது நினைவுகள் யாவுமே சற்றே வித்தியாசமானவை.

1946-ஆம் ஆண்டு காந்திஜி தமிழகம் விஜயம் செய்தபோது, திட்டமிட்டபடி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தரிசனத்தை முடித்துக்கொண்ட கையோடு பழனியில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
1946-ஆம் ஆண்டு என் மூத்த சகோதரியின் கணவர் என் அத்திம்பேர் -பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டியில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராகப் பணிபுரிந்தார்.
கணக்கன்பட்டி மார்க்கமாகத்தான் பழனி செல்லவேண்டும். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் என்பதால், முன்கூட்டியே காந்திஜி மதுரையிலிருந்து தனி ரயிலில் பழனிக்குச் செல்ல இருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
முன்கூட்டியே தகவல் தெரிந்ததால், என் அத்திம்பேர் தம் குடும்பச் சகிதம், கணக்கன்பட்டி ஸ்டேஷனைக் கடந்து பழனிக்குச் சென்ற காந்திஜியைத் தரிசனம் செய்யும் பாக்கியத்தைப் பெறமுடிந்தது. தனி ரயிலில் மக்கள் காந்திஜியைத் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. எட்டு வயதுச் சிறுமியாக இருந்த தன் மகள் சுலோசனாவிடம் என் மூத்த சகோதரி "இவர்தான் காந்தி தாத்தா; தரிசனம் செய்து கொள்'" என்று சொன்னாராம். 
"காந்தி தாத்தாவைப் பார்த்தேனே; காந்தி தாத்தாவைப் பார்த்தேனே'" என்று எல்லோரிடமும் பெருமையாகச் சிறுமியான சுலோசனா சொல்ல நானே கேட்டிருக்கிறேன். சிறுவயதில் காந்திஜியைத் தரிசனம் செய்த புண்ணியவதிதான் பின்னிட்டு எனக்கு மனைவியாக வாய்த்தாள்.
இது எதிர்பாராமல் நிகழ்ந்த நிகழ்வு என்றாலும், வாழ்க்கையில் நான் செய்த பூர்வஜென்ம புண்ணியத்தால் நேர்ந்தது என்றே நான் கருதுகின்றேன்.
என்னைப் பொருத்த வரையில், என் மனதுக்குப் பிடித்த வாழ்நாள் பணியாகப் பாரதி நூல்கள் பதிப்புப் பணியை மேற்கொண்ட ஒரே காரணத்தால் தான் காந்தி அண்ணலின் பேரன்பையும், மதிப்பையும், பாராட்டுதலையும் பெற்ற சான்றோர்களிடம் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. பலரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது; நெருங்கிப் பழகி உரையாடவும் முடிந்தது. இதுவும் நான் செய்த பிறவிப்பயன் போலும்!
ஆக, நான் சந்தித்தவர்கள் எல்லோருமே எதோ ஒருவகையில் குறிப்பாகவும், சிறப்பாகவும் காந்திஜியின் கட்டளைகளை ஏற்றுச் சிறைச்சாலையைத் தவச் சாலையாகச் கருதி காந்தி அண்ணலுடன் தொடர்பு கொண்டவர்களாகவும், பாரதியின் புகழைப் பரப்பியவர்களாகவும் விளங்கினார்கள் என்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.இளமையிலேயே எனக்கு இனம் தெரியாத ஈர்ப்பு ராஜாஜியிடம் ஏற்பட்டது. 
ராஜாஜிக்கும், காந்திஜிக்கும் உள்ள உறவுமுறை சம்பந்தி என்ற போதிலும், அந்த உறவுமுறையைத் தாண்டி ராஜாஜியிடம் காந்திஜி பெரும் மதிப்புக் கொண்டிருந்தார். தமது "மனச் சாட்சியின் காவலர்' என்றே அறிவித்தவர், காந்திஜி.
காந்திஜியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ராஜாஜியைக் குறித்து, 1954-இல் அவருடைய பிறந்த நாளையொட்டி, நான் அறிந்த தமிழில் ஒர் கட்டுரை எழுதி அனுப்பினேன். ஆனால், நானே எதிர்பாராத வகையில் என் கட்டுரையைப் படித்து மகிழ்ந்ததாக எனக்குத் தம் கைப்பட ராஜாஜி கடிதம் எழுதித் தெரிவித்தார்.
ஒரு கட்டத்தில், ம.பொ.சியின் இலக்கியச் சொற்பொழிவுகளும், சிரிக்கச் சிரிக்கப் பேசி மக்களை மெய்மறக்கச் செய்த சின்ன அண்ணாமலையின் நகைச்சுவைப் பேச்சு
களும் என்னை மிகவும் கவர்ந்தன.
நாளடைவில் ம.பொ.சி., சின்ன அண்ணாமலை ஆகியோருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்கிற ஆசை என் உள்ளத்தில் எழுந்தது.
1933-ஆம் ஆண்டு காந்திஜி சென்னைக்கு வருகை புரிந்தபோது, இராயபுரம் ராபின்சன் பூங்காவில் நடைபெற்ற கூட்டத்தில், வடசென்னை காந்திஜி வரவேற்புக் குழுவின் செயலாளர் என்ற முறையில், மாலை சூட்டி வரவேற்றார் என்ற போதிலும், ம.பொ.சி. முறைப்படி காந்திஜியின் 1946-ஆம் வருட சென்னை விஜயத்தின்போது, ராஜாஜி காந்திஜிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
இம்மாதிரியான தகவல்களை நான் அறிந்துகொள்ள நேர்ந்த தருணத்தில் 1955-ஆம் ஆண்டின் முற்பகுதியில் "குமுதம்' இதழானது "இவரே என் தலைவர்' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியை அறிவித்திருந்தது. கட்டுரையை எழுதுவதற்காக மேலும் பல செய்திகளைத் திரட்டினேன்.
குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டுரையை எழுதி "குமுதம்" இதழுக்கு அனுப்பினேன்; கட்டுரைப் போட்டியில் ம.பொ.சி. குறித்து நான் எழுதிய கட்டுரைக்குப் பரிசுத்தொகை கிடைத்தது. இந்தச் செய்தியை நான் கடிதம் மூலம் ம.பொ.சிக்கு தெரிவித்தேன். 
கடிதத்தைப் பெற்ற ம.பொ.சி. கட்டுரை எழுதியதற்கு மகிழ்ச்சி பாராட்டி 2-8-1955-இல் கடிதம் எழுதினார். 
ராஜாஜி , சின்னஅண்ணாமலையை காந்திஜிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். காந்திஜி நடத்திய "ஹரிஜன்'" பத்திரிகையைத் தமிழில் நடத்த காந்திஜியிடம் சிபாரிசும் செய்தார்.
இத்தனை சிறப்புகளையும் கொண்ட, சின்னஅண்ணாமலையின் அன்புக்கு நான் பாத்திரமானேன். என்னைப் பதிப்பாளனாக ஆக்கிய பெருமையும் சின்னஅண்ணாமலையே சாரும்.
மேகலை பதிப்பகம் என்பதாக நான் புத்தக நிறுவனத்தை நிறுவி, 1961-ஆம் அண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்ட முதல் நூல் "என்னை ஆளாக்கிய சின்னஅண்ணாமலை' மேடைகளில் தம்முடைய சொற்பொழிவுகளினிடையில் சொல்லிய கதைகளைக் கொண்ட சிரிப்புக் கதைகள் என்பது தான்!
இந்த நூலுக்கு முன்னுரை எழுதிய ம.பொ.சி. நானே பலமுறை நினைத்திருக்கிறேன், நண்பர் சின்னஅண்ணாமலை சொல்லும் கதைகளை யெல்லாம் ஒரு நூலாக்கினால் நல்லதென்று. எனது எண்ணத்தை நிறைவேற்றி இருக்கிறார் மேகலைப் பதிப்பக பி.எஸ்.வி. பதிப்பகத்தின் சார்பில் இப் பணியில் ஈடுபட்ட பி.எஸ்.விக்கு என் மனமார்ந்த பாராட்டு, என்று எழுதி என் பணிக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

என்னுரையில் சின்னஅண்ணாமலை என்னைத் தமிழார்வமும், நாட்டுப் பற்றும் கொண்ட இளைஞர் என்று குறிப்பிட்டுவிட்டு, இந் நூலை வெளியிட்டிருக்கும் மேகலைப் பதிப்பகத்து உரிமையாளர் பி.எஸ்.வி. சிறு வயதிலிருந்து, என் வழியில் வளர்ந்து வருகிறவர். அதனால் நான் செய்யும் எந்தக் காரியமும் அவருக்குப் பெரிதாகத் தெரிகிறது. ஆகவேதான், நான் பல கூட்டங்களில் சொன்ன கதைகளை அவரே சேகரித்து இந்த அழகிய நூலை வெளியிட்டிருக்கிறார் என்று எழுதி என்னைப் பெருமைப்படுத்தினார். 

சில ஆண்டுகள் கழிந்தபின் 1979-ஆம் ஆண்டு நான் பாரதியின் கட்டுரைகளில் ஒருசிலவற்றைத் தொகுத்து "ஊருக்கு நல்லது' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டேன். நூலுக்கான அணிந்துரையைச் சின்ன அண்ணாமலை வழங்கினார்.

1962 டிசம்பர் 11-ஆம் நாளை மகாகவி பாரதியின் 81-ஆவது பிறந்த நாளாகச் சிறப்பாகக் கொண்டாடத் தமிழக அரசு முடிவு செய்தது.

என் அளவில், பாரதி விழாக் கொண்டாட்டத்தின்போது, அம் மகாகவியின் மகிமைகளை விளக்கிக் காட்டும் நூல் ஒன்றை வெளியிடத் திட்டமிட்டேன்.

இந்த முயற்சியில் ஈடுபட்டபோது நான் தமிழ் அறிஞர்களையும், பாரதியுடன் தொடர்பு கொண்டவர்களையும், அரசியல் தலைவர்களையும் நேரிடையாகச் சந்தித்தேன்; ஒரு சிலருடன் கடிதம் மூலமும் தொடர்பு கொண்டேன்.

நான் முதன்முதல் சந்தித்தது ராஜாஜி அவர்களைத்தான். நூலுக்கான தலைப்பாகத் "தமிழகம் தந்த மகாகவி' என்று தானமாக வழங்கிய வரும் ராஜாஜி ஆவார்.
"தமிழகம் தந்த மகாகவி'" என்கிற தொகுப்பு நூல்தான் என்னுடைய பாரதிப் பணியின் தொடக்க முயற்சி.

என்னுடைய தொடக்கக் கால முதல் முயற்சியே பலருடைய பாராட்டுதல்களைப் பெற்றது. முதல் பிரதியை ராஜாஜியிடம் நேரில் சென்று வழங்கினேன்.

நூல் பிரதியைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சி தெரிவித்த ராஜாஜி தம் கருத்தாகப் பின்னிட்டு ஒர் கடிதமும் எழுதினார்; கடிதத்தைப் படித்துப் பார்த்து வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றதாகவே உணர்ந்தேன்.

சுத்தானந்த பாரதி நூலை வெளியிட்டு என் பணியின் சிறப்பைப் பாராட்டிப் பேசினார். நூலின் முதல் பிரதியைப் பாரதியின் பேத்தி லலிதா பாரதி பெற்றுக் கொண்டார்.

காந்திஜியின் தமிழ் நாட்டு விஜயத்தின்போது சந்தித்தவர்களில் , வெ. ராமலிங்கம் பிள்ளையும் ஒருவர்; இவர் காந்தியக் கவிஞர் என்றும், நாமக்கல் கவிஞர் என்றும், பின்னாளில் அரசவைக் கவிஞர் என்றும் போற்றப்பட்டவர். அவரிடமிருந்தும் பாராட்டைப் பெறும் பாக்கியம் செய்தவன், நான். நாமக்கல்லில் வாசம் செய்துவந்த கவிஞரின் அனுமதி பெற்று அவருடைய பாரதி பற்றிய கவிதையை என் நூலில் பதிப்பித்தேன்.

நூலை அவருக்கு அனுப்பியவுடன் எனக்குத் தெரிவித்த பாராட்டு என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

தாங்கள் அனுப்பிய "தமிழகம் தந்த மகாகவி" என்ற நூலைப் படித்துப் பார்த்துப் பெருமகிழ்ச்சியடைந்தேன்.

நூல் மிக்கத் திறமையுடன் தொகுக்கப்பட்டிருக்கிறது. அச்சும் அழகாக அமைந்திருக்கிறது. தங்களை மனமார வாழ்த்துகின்றேன்." 

கம்பனில் ஊறித் திளைத்தவரும், 1921-ஆம் ஆண்டு காந்திஜி செட்டிநாட்டுப் பகுதியில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டபோது, அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்தவரும் - பிற்காலத்தில் "கம்பன் அடிப்பொடி'" என்ற சிறப்புப் பெயரால் அறியப்பட்டவரும், காந்திஜியின் அழைப்பை ஏற்றுச் சிறை புகுந்தவருமான காரைக்குடி சா. கணேசன் 1978-ஆம் ஆண்டில் திருத்திய பதிப்பாக - மறு பிரசுரமாக - வெளியிட்ட "தமிழகம் தந்த மகாகவி'" நூலுக்குக் கட்டுரையை வேண்டிப் பெற்றேன்.
கம்பன் அடிப்பொடி சா. கணேசன் , என் வேண்டுகோளை ஏற்று, "கவிஞர் போற்றிய கவிஞர் - கம்பர்" என்ற தலைப்பில் கட்டுரையை எழுதி அனுப்பினார்; நூல் வெளிவந்ததும் அவருக்கான பிரதியை அனுப்பி வைத்தேன்.
கம்பன் அடிப்பொடி சா. கணேசன் மனமார - வாய்குளிர வாழ்த்தி எனக்குக் கடிதம் எழுதினார். 
காந்திஜிக்குப் பணிவிடைகள் புரிந்த கம்பன் அடிப்பொடியின் வாழ்த்தைப் பெற நான் என்ன தவம் செய்தேனோ? தெரியவில்லை.
பழனி என்ற ஊரின் பெயரைச் சொன்னாலே, அந்தக் காலத்துத் தேச பக்தர்களும், சிறை சென்ற தியாகச் செம்மல்களும் சட்டென்று நினைவுகூறும் பெயர் தியாகச் செம்மலான பி.எஸ்.கே. லக்ஷ்மிபதி ராஜு பெயரைத்தான்.
காந்திஜியின் கட்டளைகளை வேத வாக்கியங்களாகக் கொண்டு செயல்பட்ட லக்ஷ்மிபதி ராஜு 1930-ஆம் ஆண்டு முதற்கொண்டே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்; சிறைச்சாலைக்குச் சென்றவர்.

1946-ஆம் ஆண்டு தமிழகச் சுற்றுப்பயணத்தில் காந்திஜி பழனிக்கும் விஜயம் செய்த தருணத்தில் லக்ஷ்மிபதி ராஜு தம் தலைமையில் துடிப்புள்ள இளைஞர்களைக் கொண்ட தொண்டர் படையை நிறுவி, பழனி நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்த பெருமைக்கும் உரியவர்.

1981-ஆம் ஆண்டு எனக்கு இவருடைய தொடர்பு கிடைத்தது. பின்னிட்டு நான் 1985-ஆம் ஆண்டு "சுதேசியத்தின் வெற்றி'" என்பதாகப் பாரதியின் ""இந்தியா''" பத்திரிகையில் பிரசுரமாகியிருந்த சுதேசி இயக்கச் சார்புள்ள கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டபோது, லக்ஷ்மிபதி ராஜு எனக்கு வாழ்த்துரை வழங்கினார்.

நூலின் தொகுப்பாசிரியர் சீனி. விசுவநாதன் ஏற்கெனவே பல நல்ல நூல்களைத் தொகுத்தளித்த சிறப்புக்குரியவர். குறிப்பாக, அவையெல்லாம் பாரதி நூல்களே. அதே வழியில் சற்றும் வழுவாமல், பாரதியின் "இந்தியா" இதழ்களினின்றும் சுதேசியச் செய்திகளைத் திரட்டி, தொகுத்துத் தந்திருப்பது பாராட்டத்தக்கது.

இந்த நூல் இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்க வேண்டும்; ஆங்கிலத்திலும் வெளிவரவேண்டும். இது என் ஆசை.

தியாக வரலாற்றைப் பல மொழி பேசும் மக்களும் அறிய வாய்ப்பாக மொழிபெயர்ப்பு முறை பலன் தரும் என்று குறிப்பிட்டார். 

தீரர் சத்தியமூர்த்தியின் மகள் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி "வாசகர் வட்டம்' என்பதாகப் புத்தக நிறுவனத்தை நிறுவி, நல்ல நல்ல நூல்களைத் தயாரித்துப் பிரசுரம் செய்து வந்தார். தணிகாசலம் தெருவில் அமைந்திருந்த இல்லத்தின் ஒரு பகுதியைப் பதிப்பக அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார்.

தியாகசீலரின் புதல்வி என்று நான் அறிந்திருந்த நிலையில், காந்திஜியின் தமிழகச் சுற்றுப்பயணத்தின்போது, ஹரிஜன் தொழிற்பள்ளிக்குத் தாராளமாக நிதி உதவி செய்யவேண்டும் என்று காந்திஜி விடுத்த வேண்டுகோளை ஏற்று, லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி தம் கையில் அணிந்திருந்த தங்க வளையல்களைக் கழற்றி காந்திஜியிடம் அளித்தாராம் என்று என் நண்பர் சொல்லக் கேட்டுப் பிரமித்துப் போனேன். அன்றைய தினத்திலிருந்து லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டேன்.

டாக்டர் நல்லிகுப்புசாமி செட்டியாரின் யோசனையை ஏற்று நான் பாரதியின் படைப்புகளைக் காலவரிசையில் பதிப்பிக்க முற்பட்டேன்.

டாக்டர் நல்லிகுப்புசாமி செட்டியாரைத் தலைவராகக் கொண்டுள்ள பிரம்மகான சபாவின் ஆதரவில், 11-12-2006 இல் நடைபெற்ற பாரதியின் 125-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில், காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகளின் ஏழாம் தொகுதி வெளியிடப்பட்டது.

பரந்த மனப்பான்மையும், தியாக உள்ளமும் கொண்ட லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு நான் மேற்கொண்ட பாரதிப் பணியைப் பாராட்டிப் பேசினார்; ஆக, எனது சென்னை வாழ்க்கையில், பாரதிப் பணிகளில் ஈடுபட்ட காரணத்தால், காந்திஜியுடன் நெருங்கிப் பழகியவர்கள், அவருடன் இணைந்து தேச சேவை கைங்கரியத்தில் ஈடுபட்டவர்கள், அவருடைய ஆசிகளைப் பெற்றவர்கள் ஆகியோருடன் பழகி, ஆசிகளைப் பெற முடிந்தது.

அவர்களில் எவரும் இப்போது உயிருடன் இல்லை. ஆனால், அந்தப் பெரியவர்களின் ஆசை முகத்தையும், நினைவு முகத்தையும் என் நெஞ்சம் மறக்கவில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com